சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-1

அப்பணசாமி
 இந்தியாவின் தற்போதைய அணு ஆற்றல் கொள்கையை எதிர்த்தும், சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரர் கோரியுள்ளது போன்ற சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறைகள் செயல்படும் நாடுகளில் இருந்து சில முன்னுதாரணமான அமைப்புகள் குறித்து பரிந்துரைக்குமாறு கூறியுள்ளது. இது தொடர்பாக, இந்தியாவின் அணு ஆற்றல் துறை வல்லுனர் ஏ. கோபாலகிருஷ்ணன் பிரான்ஸ், கனடா, யு.எஸ் நாடுகளில் செயல்படும் அணு ஆற்றல் கண்காணிப்பு அமைப்புகளை முன்னுதாரணமான ஒழுங்குமுறை அமைப்புகளாகப் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்த கட்டுரைத் தொடர் ஒன்றையும் வெளியிட்டு  வருகிறார். தற்போது கூடங்குளத்தில் ஏற்படுத்தப்பட உள்ள அணு உலைகள் குறித்து மக்கள் பெரும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் அதை ஒட்டி கோபாலகிருஷ்ணன் கூற்றுகளைப் பொருத்திப் பார்க்கும் வகையில் எழுதிய கட்டுரை இது.
1
இந்தியாவில் அணு ஆற்றல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக என்ற பெயரில், தற்போது நடைமுறையில் உள்ள அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்துக்குப் (ஏ.ஈ.ஆர்.பி) பதிலாக அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரமுனையம் (நியூக்ளியர் சேப்டி ரெகுலேட்டரி அதாரிடி- என்.எஸ்.ஆர்.ஏ஢) என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இது தொடர்பான என்.எஸ்.ஆர்.பி சட்ட முன் வரைவு 2011 கடந்த செப்டம்பர் 7 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்றக்குழு முன் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் (அமெரிக்காவை இனி யுஎஸ் என்றே கூறுவோம்) தாசானு தாசனாகவே தமது முகத்தை வேகமாக மாற்றிக்கொண்டு வரும் இந்திய அரசின் புதிய சட்டத்தின் மீது பலவேறு சந்தேகங்களை எழுப்பி, உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசின் தலையீடு இன்றிச் சுதந்தரமாக இயங்குக் அணுக் கதிர் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துருவும் ஒன்று. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா 'இது தொடர்பாக பொது விசாரணை நடத்தப்படவேண்டும். மேலும், நாடாளுமன்றம் இந்த மசோதாவைப் பரிசிலிக்கும் அதேநேரத்தில், உலகில் அரசு தலையீடு இன்றி சுதந்தரமாகச் செயல்படும் சில முன்னுதாரணமான ஒழுங்குமுறை அமைப்புகளை நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறது. அடுத்த விசாரனையை ஒரு மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம் அதற்குள் பரிந்துரைகள் அளிக்கப்பட்டால் அவற்றைப் பரிசீலித்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பாக அமையும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (டிச.6) கூறியுள்ளது.

உலக வல்லரசான யுஎஸ் நாட்டின் அணுஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் - யுஎஸ் என்.ஆர்.சி 


அணு ஆற்றல் ஆணையம் (ஏஈசி) என்ற அமைப்புதான் 1974வரை அமெரிக்காவில் அணு ஆற்றல் தொடர்புடைய அனைத்து ராணுவ மற்றும் சிவில் திட்டங்களுக்குப் பொருப்பு வகித்த ஒரே முகமையாகும். ஆனால், அதே அண்டில் ஏஈசிக்குப் பதிலாக அணு ஆற்றல் ஒங்கமைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இது அரசு தலையீடுகள் இன்றி, சுதந்தரமான, தன்னிச்சையாக அணுத்திட்டங்களைப் பார்வையிடும் அதிகாரங்கள் உள்ளிட்ட வலுவான பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாகும். இது எனர்ஜி ரீ ஆர்கனைசேசன் சட்டம், 1974-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

அணுக் கதிர் இயக்கப் பொருள்கள் மற்றும் கதிரியக்க வசதிகள் ஆகியவை பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கும், (யு.எஸ்) நாட்டின் பொதுப்பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கும், சுற்றுச்சூலியல் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்காதா என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முதன்மையான பொருப்புகள் இந்த என்.ஆர்.சிக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அணுக்கதிரியக்க அமைப்புகளுக்கான தரப்படுத்துதலை நிர்ணயிப்பது, விதிகளை உருவாக்குவது, தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மறுபரிசீலனைகளை மேற்கொள்வது, உரிமங்கள், அனுமதிகள் மற்றும் அங்கிகாரங்கள் வழங்குவது, பரிசோதனைகள் மற்றும் புலனாய்வுகள், செயல் அனுபவங்களை வார்த்தெடுப்பது மற்றும் உறுதிப்படுத்துதல் ஆய்வுகளை மேற்கொள்வது ஆகிய பணிகள் வாயிலாக இந்த என்.ஆர்.சி செயல்படுகிறது. காத்திரமான கள ஆய்வுகள் மற்றும் அமலாக்கச் செயல்பாடுகளை என்.ஆர்.சி பராமரிப்பதுடன்,
அது விதிமீறல்களைப் புலனாய்வு செய்வதுடன் அமலாக்கச் செயல்பாடுகளுக்கும் முன்கை எடுக்கிறது. நீதிமன்றத் தடையாணை பெறுவது போன்ற நீதித்துறைத் தீர்வுகளைப் பெறும் நடவடிக்கைகளில் தன்னியல்பாக ஈடுபடும் அதிகாரம் இந்த என்.ஆர்.சிக்கு இருக்கிறது. அத்துடன் ஏற்பட்ட, ஏற்படும் இழப்புகளுக்கான அபராதங்கள் மற்றும் தண்டங்களை என்.ஆர்.சி மதிப்பிடுகிறது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகளை என்.ஆர்.சி மேற்கொள்ளும். இறுதியாக, பெரும் அணுக் கதிரியக்க நிகழ்வுகள் மற்றும் ஆபத்துகள் நேரும்போது அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தன் கண்டுபிடிப்புகளை யு.எஸ் நாடாளுமன்றத்துக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்யும் அதிகாரம் இந்த என்.ஆர்.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

என். ஆர். ஓ

என்.ஆர்.சி 5 ஆணையர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 3 பேருக்கு மேல் ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. செனட்சபையின் அறிவுறை மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அதிபர் இந்த ஆணையர்களை நியமிக்கிறார். இவர்கள் யுஎஸ் குடிமகன்களாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆணையரும் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். இக் காலகட்டத்தில் அந் நபர் வேறு எவ்விதமான பணிகளிலும், பொருப்புகளிலும் இடம்பெறமுடியாது. இவர்களில் ஒருவரை என்.ஆர்.சியின் தலைவராக (தலைமை ஆணையர் போன்றது?) அந்நாட்டு அதிபர் நியமிக்கிறார். இவர் என்.ஆர்.சியின் முதன்மை நிர்வாக அலுவலராகவும், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளராகவும் செயல்படுகிறார். கடமைகளை நிறைவேற்றாமை, திறமையின்மை மற்றும் தவறான நடத்தை போன்ற காரணக்காக மட்டுமே இந்த ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும், அவ் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உண்டு. அதனையும் செனட் சபை அங்கிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் முன்மொழியப்பட்டுள்ள அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரமுனைய (என்.எஸ்.ஆர்.ஏ) சட்டத்தின் கூறுகள் இதற்கு மாறாக உள்ளன. பிரதமர் தலைமையில் செயல்படும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக் கவுன்சிலால் இறுதி செய்யப்படும் நபர்களே இதன் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவார்களாம். அவர்கள் அரசால் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள். தவிரவும், தலைவர் உட்பட எவரையும் அற்பக் காரணத்துக்குக்கூட பணி நீக்கம் செய்ய முடியும். மேலும் இந்த முக்கியப் பணி நியமனங்கள் அல்லது பணி நீக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமோ, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியதன் தேவையோ இந்த சட்ட முன்மொழிவில் கூறப்படவில்லை. அதவாது இந்த அதிகார முனையத்தின் தலைவராக இருந்தாலும்கூட ஆளும்கட்சி அல்லது உயர் அதிகார மையத்தின் விருப்பத்துக்கேற்பவே செயல்படவேண்டிய மறைமுக மிரட்டல் இதில் தொக்கி நிற்பதை நன்றாகவே உணர முடிகிறது.

ஆனால், யுஎஸ்சைப் பொருத்தவரை எதிர்கால அணுக் கதிரியக்கக் கொள்கைகளைத் திட்டமிடல் மற்றும் தயாரிப்புப் பணிகளும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்கும் அதிகாரமும் என்.ஆர்.சி கொண்டுள்ளது. இவைதவிரவும், என்.ஆர்.சியின் தனிப்பட்ட, நிர்வாக, அமைப்புமைய, வரவு-செலவுச் செயல்பாடுகள் அனைத்துக்கும் என்.ஆர். சியின் தலைவரே பொருப்பு ஏற்கவேண்டும். முடிவுகள் மேற்கொள்வதில் சமமான அதிகாரங்களும், பொருப்புகளும் ஒவ்வொரு ஆணையருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் அனைத்து ஆணையர்களும் கலந்து கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று ஆணையர்களாவது கலந்து கொள்ளாமல் ஆணையத்தைக் கூட்ட முடியாது.  ஒரு சில மூத்த அதிகாரிகள் அல்லது சில அலுவலகங்களாவது அன்றாடம் ஆணையத் தலைவர் அல்லது ஆணையத்திடம் நேரடியாகச் சந்தித்துச் செயலறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் வகுக்கப்பட்டுள்ளது. அங்கு, புதிய அணு உலைகளுக்கான பிரிவு (இந்த புதிய அணு உலைகளுக்கான என்.ஆர்.சி அலுவலகம் என்.ஆர்.ஓ அலுவலகம் என அழைக்கப்படுகிறது.) அன்றாடம் என்.ஆர்.சி ஆணையத்திடம் அன்றாடம் செயலறிக்கை தாக்கல் செய்ய கடமைப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பெரும் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பது அது அன்னிய நாடுகளின் அணுக் கதிர் உலைகளை இறக்குமதி செய்வதில் ஆர்வமாக இருக்கிறது என்பதுதான். ஆனால் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து பரிசோதித்துப்பார்ப்பதில் ஏஈஆர்பியை ஈடுபடுத்தும் ஆர்வம்கூட இந்திய அரசிடம் இல்லை. ஆனால் உலக வல்லரசான யு.எஸ்சில் ஆணையத்தின் அன்றாட நேரடிக் கண்காணிப்பில் புதிய உலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கோ அதில் ஆர்வம்கூட இல்லை. இக் கட்டுப்பாடுகளை இந்திய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், தன் குடிமக்கள் நலன் பேணுவதில் உலக வல்லரசும், மூன்றாம் உலக நாடும் எவ்வாறு நேர் எதிர்மறையான அணுகுமுறையில் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே உச்ச உதாரணமாக முடியும்.

என்.ஆர்.ஓ 2006இல்தான் உருவாக்கப்பட்டது. யு.எஸ் அல்லது வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்ட அணுக்கதிர் உலைகள், அவை யு.எஸ் மண்ணுக்கு புது வகையாக இருந்தால், அவை யு.எஸ் மண்ணில் இறக்கப்படுவதற்கு முன்னமேயே, உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கப்படுவதற்கு முன்னமேயே அதன் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தவேண்டிய பொருப்பு இந்த என்.ஆர்.ஓவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அணு உலைகள் நிறுவப்படுவதைப் பொருத்தவரை, அது நிறுவப்படும் உள்ளூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளை வடிவமைப்பது என்.ஆர்.ஓவின் பொருப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூலியல் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கான திட்டமிடுதலும் இந்த அலுவலகத்துக்கேயான பொருப்பு ஆகும். இதன் முதல்நடவடிக்கை, எந்த வகையான அணு மின்நிலையம் அமையப்போகிறதோ அதற்கான தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பினை அங்கிகரிப்பதற்கான 'வடிவமைப்புச் சான்றிதழ்'அளிப்பது ஆகும். மேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பை அங்கிகரிப்பதில் சுயேட்சையாகச் செயல்படுவது அல்லது அணுமின்நிலையக் கட்டுமானம் மற்றும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமளியளிப்பது போன்ற படிப்படியான தொடர் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்பே பொருப்பாகும். ஒரு புதிய அணு மின் நிலையத்துக்கான 'வடிவமைப்புச் சான்றிதழ்' கோரி விண்ணப்பிக்கும்போதே ஒரு நிறுவப்பட்டுள்ள அணு உலை மாதிரியின் இறுதிநிலை
பாதுகாப்பு அறிக்கையில் பொதுவாக என்னவெல்லாம் எதிர்பார்க்கப்படுமோ அத்தகவல்களுக்கு இனையான அனைத்தையும் புதிய அணு மின் நிலையத்தின் உற்பத்தியாளர்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அந்த விண்ணப்பத்தில் இடர் வாய்ப்புகளுக்கான விரிவான ஆய்வறிகையும் அபாயகரமான விபத்துகள் ஏற்படுதுவதைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளின் மாதிரியும் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும். ஐரோப்பிய பிரசரைஸ்ட் அணு உலைகள் (ஈபிஆர்) வடிவமைப்பாளரான அரிவா (எ.ஆர்.ஈ.வி.ஏ) எனும் பிரான்ஸ் நிறுவனம் அண்மையில் யுஎஸ்சில் ஈபிஆர் அணு மின்நிலையம் அமைக்க விரும்பியது. இதே காலத்தில் பின்லாந்து, பிரான்ஸ் மற்றும் சைனா போன்ற நாடுகளிலும் அணு உலைகளை அமைக்க ஒப்பந்தமிட்டது. இந் நாடுகளில் எல்லாம் தற்போது கட்டுமானப் பணிகள் பலவேறு கட்டங்கள் முன்னேறியிருக்க யு.எஸ்சில் இன்னமும் 'வடிவமைப்புச் சான்றிதல்' பெறும் நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. 2012 இறுதியில்கூட என்.ஆர்.சி ஒப்புதல் பெறமுடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. யுஎஸ் என்.ஆர்.சி விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த பின்னரே அங்கு ஆரிவா தனது கட்டுமானப்பணியைத் தொடங்கமுடியும்.ஆனால் நமது மாண்புமிகு பிரதமோ கடந்த 2007-08 ஆம் ஆண்டில் ஜெயிதாபுர் அணுமின்நிலையத்துக்காக இதுபோன்ற ஆறு ஈபிஆர் அணு உலைகளைக் கொள்முதல் செய்ய தன்னிச்சையான அரசியல் முடிவெடுத்துள்ளார். இந்திய- யுஎஸ் அணு உடன்பாடு கையெழுத்தாவதில் பிரான்ஸ் அரசு செய்த உதவிக்குப் பிராயச்சித்தமாகவே நமது மாண்புமிகு பிரதமர் இந்த வர்த்தகத்தை வாரி வழங்கியுள்ளார். இது குறித்து ஏஈஆர்சியிடம் தெரிவிக்கவோ, ஆலோசிக்கவோகூட இல்லை என்பதே இதில் சோகமான செய்தியாகும். அதாவது இப்புதிய அணு உலைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துகூட ஆய்வு மேற்கொள்ள ஏஈஆர்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இம்முடிவை மேற்கொள்வதில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாண்புமிகு மன்மோகனும் அவரது அரசும் கடுகளவுகூட அக்கறை கொள்ளவில்லை.

அணு உலை பாதுகாப்பு குறித்த என்.ஆர்.சி ஆலோசனைக் குழு (ஏசிஆர்.எஸ்)

1972 ஆம் ஆண்டு யுஎஸ் ஃபெடரல்(கூட்டாட்சி) அலோசனைக் குழுக்கள் சட்டத்தின்கீழ் என்.ஆர்சியில் உருவாக்கப்பட்ட ஒரே சட்டப்பூர்வமான ஆலோசனைக் குழு அணு உலை பாதுகாப்பு குறித்த என்.ஆர்.சி ஆலோசனைக் குழு (ஏசிஆர்.எஸ்) தான். இச்சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அமைக்கப்படும் ஆலோசனைக்குழுக்களில் இடம்பெறும் உறுப்பினர்கள் பல்வேறு கருத்தாக்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மிகவும் நடுநிலையான பார்வையும் கண்ணோட்டமும் கொண்டவர்களாகவும் காய்தல் உவத்தல் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சட்டப்பூர்வமான கூறு ஆகும். மேலும், இக்குழுவில் இடம்பெறுபவர்கள் அவர்களை நியமனம் செய்தவர்கள் அல்லது தனிப்பட்ட நலன்கள் கொண்டவர்களின் செல்வாக்குக்கு ஆட்படாதவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இதன் விதிகள் வகுக்கப்படவேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. அக்குழு
தன்னிச்சையான முறையில் தனது தீர்வுகளை வழங்கும் உறுதி படைத்ததாக இருக்க வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது. அரசமைப்புச் சட்டப்படி 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஏசிஆர்எஸ்சில் அறிவியல் மற்றும் பொறியியல் துறை வல்லுனர்களும் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகள், அமைக்கப்பட உள்ள அணு உலைகள் ஆகியவற்றினால் ஏற்படும் பேரிடர் வாய்ப்புகள் குறித்த முன்னுணர்வுகளை இக்குழு அளிக்கும்.
மேலும் புதிய அணு உலைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களைத் தரப்படுத்துதல் குறித்த கருத்துருக்களையும் இக்குழு அளிக்கும். இவற்றைவிட முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த முன்மொழிவுகள் அனைத்தும் வெளிப்படையானவை. பொதுமக்கள் எவரும் இந்த முன்மொழிவுகளை அணுகும் வகையில் இத்தரவுகள் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இக்குழுவின் கூட்டத்தில் பொது மக்கள் எவரொருவரும் கலந்துகொண்டு தனது கருத்தினை வாய்மொழியாகப் பதிவு செய்ய முடியும். இத்தகைய நிலை நமது ஆயுட்காலத்திற்குள்ளாவது இந்தியாவில் ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார் அணு ஆற்றல் துறை வல்லுனர் ஏ. கோபாலகிருஷ்ணன்.

துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற ஆலோசனைக்குழு சட்டம் ஒன்றாவதுகூட நமக்கு இல்லை. இதனால்தான் பக்கச் சார்புள்ள குழுக்களையே அரசு அமைப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பொது மக்கள் பாதுகாப்பை உட்படுத்தியுள்ள இதுபோன்ற விவாகரங்களில்கூட அப்படித்தான் இருக்கிறது. இந்திய அணு ஆற்றல் ஆணையம் இதற்கு மிகச் சிறப்பான உதாரணம். பிரதமர் அலுவலகத்தின் உத்தரவுப்படியும் அவரது விருப்பத்துக்கு ஏற்பவும் செயல்படவேண்டிய மத்திய அரசின் மூத்த செயலாளர்கள் சிலரைக்கொண்டுதான் அது இயங்குகிறது. ஒரு பத்ம விபூசன் கிடைக்கும் என்றால் பிரதமர் வெளியிடும் எக் கண்ணோட்டத்துக்கும் கை தூக்கக்கூடியவர்களாக அல்லது நல்ல சம்பளத்துடன் பாபா நிலைய பேராசிரியர் பதவியோ, ராமன்னா பெல்லோசிப்போ கொடுப்பதனால் தனது கைகளை நிரந்தரமாக தூக்கி வைத்திருக்கக்கூட தயாராக இருப்பவர்களாக உள்ளனர். இத்தகைய அணு ஆற்றல் ஆணையத்தைக் கொண்டுதான் பிரான்ஸ் அணு உலைகளானாலும், யு.எஸ் அணு உலைகளானும் அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்த அச்சம் கிஞ்சித்தும் இல்லாமல் நாம் இறக்குமதி செய்யப்போகிறோம். இது குறித்து 'அணு ஆற்றல் ஒங்குமுறை வாரிய முன்னாள் அதிகாரிகளான எங்களுக்கும்கூட சன்மானம் தரப்படுவதால் எங்களில் பெரும்பான்மையோரும் அணு ஆற்றல் துறைக்கு சாதகமாகப் பேசுபவர்களாக உள்ளோம்' என அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதன் மூலம் இதன் அவல நிலை விளங்குகிறது.

என்.ஆர்.சியின் வெளிப்படையான செயல்பாடு

நல்ல ஒழுங்குமுறைக் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதன் முக்கியக்கூறுகளுக்காக யுஎஸ் என்.ஆர்.சி புகழப்பட்ட போதிலும் பொது மக்கள் பங்கேற்புக்கு அந்த அமைப்பு அளிக்கும் முக்கியத்துவமே கூடுதல் சிறப்பான அம்சமாகும். தமது வலுவான ஒழுங்குமுறை அமலாக்கத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு பொது மக்கள் பங்கேற்பினையே அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமது முடிவுகள் எடுக்கும் நடைமுறைகளில் மக்கள் பங்கேற்க ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு என்பது ஒரு காத்திரமான மக்கள் செயல்பாடு, அது பொது வெளியிலும் மக்கள் கண்ணெதிரிலும் நடைபெறவேண்டும் என்று என்.ஆர்.சி வலுவாக நம்புகிறது என்பதே இதன் பொருள்.

பொதுவாகவே, ஆணையக் கூட்டங்கள் ஆணைய ஊழியர்களுடன் மட்டுமின்றி வெளியாட்கள் பங்கேற்புடனேயே அங்கு நடைபெறுகின்றன. என்.ஆர்.சி தலைமையகத்தில் நடைபெறும் ஆணையக் கூட்டங்களில் பொதுமக்கள் பகுதியினர் கலந்து கொள்வதும், கருத்துகளைக் கூறுவதும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. கூட்டம் நடந்த 2 நாள்களில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அதன் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல பொது விசாரனைகள் நடைபெறுகின்றன. அதன் தேதிகள் பல நாள்கள் முன்பாகவே அறிவிக்கப்படுகின்றன.

என்.ஆர்.சியில் பொது மக்கள் பங்கேற்பு குறித்து இது போன்ற ஏராளமான நடவடிக்கைகளை ஒருவர் கூறிக்கொண்டே போக முடியும். இதோடு இந்தியாவின் அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப்பார்த்தோமானால் அதன் ஆவணங்கள், கூட்டப் பதிவுகள் ஆகிய அனைத்துமே அலுவலக ரகசிய காப்புச் சட்டத்தின்கீழ் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கோ அல்லது பொது விசாரனைக்கோ இந்திய வாரியம் அரிதாகவே ஏற்பாடு செய்கிறது. அமெரிக்காவிலும் கடுமையான ரகசியக் காப்புச் சட்டம் அமலில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதற்கெல்லாம் அப்பால்தான் என்.ஆர்.சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. பொதுமக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் வந்துவிடாது என அது உறுதியாக நம்புகிறது. இந்தியா இதை நோக்கி வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்று ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

தொடரும்
பிரான்ஸ்VSஇந்தியா
கனடாVS இந்தியா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக