சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வியாழன், 29 டிசம்பர், 2011

என்றென்றைக்குமான உண்மை என ஒன்று இல்லை. - அசோகமித்திரன்

சோகமித்திரன் பற்றி எண்ணும்போதெல்லாம் நினைவுக்கு வருபவர் எனது இலக்கிய ஆசான் மறைந்த ஜோதி விநாயகம். 1980-களின் முற்பகுதி. மலையாகக் குவிந்துள்ள உலக இலக்கியங்களில் வாசிக்கத் தக்கவைகளை ஒரு அன்னப்பறவை போல பிரித்தெடுத்து அறிமுகப்படுத்தியவர் ஜோதி விநாயகம். விளாத்திகுளம். அவரது அறையில் ஒரு பகற்பொழுதில் அவர் அசோகமித்திரன் பற்றிக்  கூறினார்: ஑தமிழில் அதிகம் கவனிக்கப்படாதவர். பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவரது கதைகள் தமிழில் மிகவும் முக்கியமானவை. அவர் கதைகளில் காணப்படும் எள்ளல்தாம்யா  அசோகமித்திரன்.ஒ அதற்கு முன்பே அசோகமித்திரனின் சிறுகதைகளை வாசித்துள்ளதால் எனக்கும் அதே அபிப்பிராயம் இருந்தது.

அதனால் தான் சென்னைக்கு வந்த உடன் நான் எழுதிய இரண்டு கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துக்கொண்டு அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றேன். எழுத்தை நம்பிச் சென்னைக்குப் பிழைக்க வந்திருக்கிறேன் எனத் தெரிந்ததும் திட்டி அனுப்பினார். என் கதையை எங்கே வாசித்துப் பார்க்கப் போகிறார் என்ற சந்தேகம் இருந்தாலும் நான் கையெழுத்துப் பிரதிகளைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களில் அக்கதைகள் அவரிடமிருந்து திரும்பி வந்தன. அத்துடன் கதைகளைப் பற்றிய அவரது அபிப்பிராயங்களையும் கடிதமாக எழுதியிருந்தார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. (எனது சென்னை வாழ்க்கையில் சிறுகதை எழுதுவதே மறந்து விட்டது. வாசிப்புக்கும் நேரம் கிடையாது.)

அது முதல் இருபத்து நான்கு ஆண்டுகளாகப் பரிச்சயம். யாரையும் தேடிச் சென்று பழகும் வழக்கம் எனக்கு இல்லை. ஆகவே அவ்வப்போது நிகழ்வுகளில் சந்திப்பது. பத்திரிகைகளில் வேலை பார்க்கும்போது அவரிடம் கதை வாங்கிப் போடுவது பிடித்த விஷயம். இதனாலெல்லாமா இலக்கியம் வளர்ந்துவிடும் என்ற அதைரியத்துடனேயே கதை தர சம்மதிப்பார்.

ஒரு முக்கியத்துவம் பெற்ற புனைவிலக்கியவாதியிடம் கட்டுரைத் தொடருக்காக அணுகுவது சற்று நெருடலானது. சென்னை பற்றி அவரால் ஒரு சிறந்த சித்திரத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி கேட்டு எழுதி வாங்கிப் போட்டேன். சென்னை பற்றி இத்தனை வாரங்கள் எழுதப் போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. அவ்வாறு வெளிவந்த தொடர்தான் ஑சென்னை சுவடுகள்ஒ. இது பற்றி அவரே சொல்லிக் கேட்பதுதான் சுவாரசியமானதாக இருக்கும்.

அதே ஆறாம்திணையில் ஒரு குறும் பேட்டி. நேரில் கேட்க சங்கோஜப்படக்கூடிய கேள்விகளை, அவர் மீதான கடும் விமர்சனங்களை ஆறு, ஏழு கேள்விகளாக எழுதிக் கொடுத்து பதில் கேட்டேன். கேள்விகளைப் படித்துப் பார்த்துத் துணுக்குற்றாலும் பதில் எழுதித் தந்தார்.

திருச்சி எஸ். ஆர். வி பள்ளி கடந்த ஆண்டு வாழ்நாள் சாதனை விருதினை அசோகமித்திரனுக்கு வழங்கி மதிப்பு பெற்றது. அதேமேடையில் எனக்கு படைப்பூக்க விருது வழங்கியது. ஒரேமேடையில் அசோகமித்திரனுடன் அமர்ந்து விருதுபெற நேர்ந்ததை அபூர்வ ஒருங்கிணைவாகக் கருதுகிறேன்.

இந்த நெருக்கம்தான் அவரை நேர்காணல் செய்து தரும்படி கேட்டவுடன் உடனே சம்மதிக்கத் தூண்டியது. இந்த நேர்காணலிலும் பல கேள்விகள் அவருக்கு உவப்பாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். தனக்கே உரிய நெடிய அனுபவங்களினூடாக பதில்களை அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்தும் அவர் கூறிய கருத்துகளில் இருந்தும் மேற்கோள்களுடன் கேட்கப்பட்டவை.
- அப்பணசாமி
?தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் வசித்து வருகிறீர்கள். எனக்காகத் தாங்கள் எழுதித் தந்த 'சென்னைச் சுவடுகள்' சென்னை பற்றிய ஒரு மறக்க முடியாத சித்திரத்தை உலகுக்கு அளித்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு இடத்தில் 'இப்போதுள்ள ஜனநெருக்கடியும், போட்டியும் எப்போதுமிருந்ததில்லை' என்று கூறியிருந்தீர்கள். இப்போது சென்னை எப்படி உள்ளது?

!இப்ப ரெண்டு வருஷமா வெளியில போகல. ஆனால் போக்குவரத்து நெரிசல்  ரொம்ப அதிகமா இருக்கிறது. சைதாப்பேட்டையில் இருந்து இங்கே (வேளச்சேரி) வர முக்கால் மணி நேரம் ஆகிறது. ஐந்து கிலோ மீட்டர்தான். போட்டி இருக்கான்னு சொல்ல முடியல. என்னைப் பார்க்க பத்திரிகையாளர்கள் எல்லாம் வராங்க. அவங்க இதை சந்தோஷமாத்தான் சொல்றாங்க. அதனால முன்னசொன்ன அபிப்பிராயம் இருக்கே அதுவே சரியோ, இல்லையோன்னு சந்தேகமா இருக்கு.

?இதை வளர்ச்சியா பார்க்கிறீங்களா?

!: இல்லை வளர்ச்சியா பாக்கல. நெறைய மாறுதல்கள் இருக்கு. இப்ப 'ஆனந்த விகடன்' எடுத்துக்கிட்டீங்கன்னா அது 1940-களில் ஒரு டெக்ஸ்ட் புக் மாதிரி இருந்தது. அப்ப எனக்கு எட்டு, ஒன்பது வயசு இருக்கும். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிச்சிருந்தது. அதுல யுத்தம் பற்றிய செய்திகள் வரும். வரலாறு, புவியியல் தொடர்பா நெறைய செய்திகள் இருக்கும். வரலாறு ஒரு மாதிரி. ஆனால் இந்த ஜியாக்ரபி இருக்கே எந்தெந்த நாடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ஒரு நாள் போலந்து, அப்புறம் இட்டாலி, ஜெர்மன் இப்படி பல நாடுகள் மீது போர் நீளும்போதெல்லாம் அதைப் பற்றிய செய்திகள் இருக்கும். இது எனக்கு பாடப்புத்தகம் மாதிரி இருந்தது. நாம நெனைக்கறதுக்கு மேல நம்மை வளர்த்துக்க முடிஞ்சது. இப்ப உள்ள 'ஆனந்த விகடன்' பத்தி அப்படிச் சொல்ல முடியுமா? இதை வளர்ச்சி என்பீர்களா? மாறுதல் என்பீர்களா? நான் உருவானதே பத்திரிகைகளில்தான். எந்தப் பத்திரிகையா இருந்தாலும், அப்போ கதை நன்னா இருக்கோ இல்லையோ ஒரு அச்சுப்பிழையைப் பார்க்க முடியுமா? இப்போ அச்சுப்பிழை இல்லாத பக்கங்களே இல்லை. இதை எல்லாப் பத்திரிகைக்கும் சொல்கிறேன். சொன்னா இத ஒத்துக்க மாட்டாங்க.

? take it for granted?

!ஆமா. என்னவெல்லாமும் வரலாம்ங்கற மாதிரி. அது போலத்தான் சென்னை நகரத்தின் வளர்ச்சியும். இப்ப இங்கேயிருந்து சிம்சன் போகணும்னா எம்.ஆர்.டி.எஸ்.ஸில் முக்கால் மணி நேரத்தில் போகலாம். ஆனால் ஒரு பஸ் ஏறி இறங்கணும். காரில் போனா ஒன்றரை மணி நேரம் ஆகும். பிக்பாக்கெட் போன்ற அசௌகர்யம் கருதி காரில்தான் போகிறார்கள். அதனால மாற்றங்களும், விபத்துகளும் கலந்ததாக இருக்கு.

? தற்போதைய தமிழ்ச் சூழலில் பிடிவாதமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவன் முழு நேர எழுத்தாளனாக வாழ முடியாது. அதாவது எழுத்தை மட்டுமே நம்பி ஒருவன் நேர்மையாக வாழ முடியாத நிலை உள்ளது. அவன் compromise செய்துதான் வாழ வேண்டியுள்ளது. எதுவரை?
இப்ப பத்திரிகையாளர்கள் இருக்காங்க, நெறைய சம்பாதிக்கிறாங்க. அவங்க  எழுதவே வேண்டியதில்ல. எழுதக்கூடியவங்கதான். ஆனால் எழுதித்தான் வந்தாங்க. அதனால் சினிமாவுக்குப் போறாங்க. இப்ப எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போயிருக்காங்க. அவங்க எழுத்துல மாறுதல்கள் இருக்கு. அது என்னைவிட வாசகர்களுக்கு நன்னா தெரியறது. அவங்கெல்லாம் இப்ப பிளாக்கில்தான் எழுதறாங்க.  எஸ். ராமகிருஷ்ணன் கதை முன்னெல்லாம் படிக்கிற மாதிரி இருக்கும். இப்பெல்லாம் அவர் பாட்டுக்கு டிஸ்கிரைப் பண்ணிண்டே போறார். சமீபத்துல அவரோட கதை ஒண்ணு படிச்சேன். அதைக் கதைன்னு சொல்லறதா, கட்டுரைன்னு சொல்லறதான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது நல்ல ஆற்றல் உள்ளவங்களே இப்படித்தான் ஆயிடறாங்க. ஏதோ ஒரு இடத்துல திசை மாறிப் போயிடறது.

?அதே சமயத்தில் எழுத்தை மட்டுமே நம்பிக் காலம் தள்ள முடியுமா என்பதுதான் கேள்வி.

!முடியாது, முடியாது. அது ஒரு காலம் இருந்தது. அப்பக்கூட புதுமைப்பித்தன் 'தினமணி'யில இருந்த காலம்தான் அவர் சந்தோஷமா இருந்த காலம். 

?பக்கத்து மாநிலங்களில் கூட எழுத்தை நம்பிக் குறைந்தபட்சக் கவுரவத்தோடு வாழ முடியும்ங்கிற நிலைமை உள்ளதா சொல்றாங்க..

! கிடையாது. எங்கேயும் கிடையாது. கர்நாடகா மாநிலத்துல பைரப்பான்னு ஒருத்தர் இருக்காரு. ஑வம்சவிருக்ஷாஒன்னு ஒரு அற்புதமான நாவல் எழுதியிருக்காரு. அது சினிமாவாக் கூட வந்திருக்கு. அவர் ஒரு இங்கிலீஷ் புரபசர். அப்புறம் யு.ஆர்.அனந்தமூர்த்தி. அவர் சரியான எழுத்தாளர். அடுத்து இந்தியாவோட பிரசிடெண்டாக் கூட ஆயிடுவாருன்னு நெனைக்கிறேன். அவரும் ஒரு வாத்தியார். இங்கிலீஷ் வாத்தியார். அது மாதிரி திருவனந்தபுரத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர். ஑மாத்ரு பூமிஒன்னு பெரிய்ய பத்திரிகையில் ஆசிரியரா முப்பது - நாப்பது வருஷமா வேலையில் இருந்தார். இது இல்லாம நீங்க சொல்றா மாதிரியும் நேர்ந்திருக்கலாம். அது விதிவிலக்குதான். ஆனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா தமிழில் மட்டும்தான் எழுத்தாளனுக்கு மோசமான நிலைமை அப்படின்னு இல்ல. எல்லா இடத்திலயும் இருக்கு. ஆனா நல்லா முன்னுக்கு வந்துட்ட பிற்பாடு வேண்டுமானால் சில எழுத்தாளர்கள் நல்லா இருக்காங்க. வாசுதேவன் நாயருக்கு எட்டு வருஷமா ராயல்டியே வருசம் ரெண்டு இலட்சம் வருதாம். எனக்கு பதினைந்தாயிரம் கூட வர மாட்டேங்குது.

?உங்க புத்தகங்களே வருஷம் இவ்வளவு புத்தகங்கள் விக்குதுன்னு சரியான கணக்கு
கொடுக்கறாங்கன்னு நம்பறீங்களா?

!அது முழுமையான நம்பகத்தன்மைன்னு சொல்ல முடியாது. எப்பக் கேட்டாலும் உங்க புத்தகம் விக்கவே இல்லம்பாங்க. அதே சமயத்துல ராயல்டி ரொம்பவும் எதிர்பார்க்க முடியுயாது. ஏன்னா இது அவ்வளவு அத்தியாவசியமான வாசிப்பு இல்ல.

?சிற்றிதழ்களின் முழு ஆதரவு கொண்டதாகவும், மூடிய-அகவயப்பட்ட தன்மை கொண்டதாகவும் நவீன தமிழ் இலக்கியம் இருந்தது. அந்த நிலைமை இன்று நீடிக்கவில்லை அல்லவா? வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தங்களுடைய நீண்ட நெடிய அனுபவத்தில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

!மாறியிருக்குன்னு பார்க்கிறீங்களா? எனக்கு அப்படித் தெரியல. இப்ப தமிழ் நல்லா எழுதறாங்க. முன்ன மாதிரி வேற வார்த்தைகள் கலக்கறதில்ல. ஆனால் வடிவம் வருவதில்லை. முன்ன கு.ப.ரா. போன்றவர்கள் உருவ நேர்த்தியுடன் எழுதினார்கள். இப்ப வடிவம் பற்றிய பிரக்ஞை அதிகமா இல்லைன்னுதான் தோன்றது. இப்ப எழுதறவங்களுக்கு அது அதிகம் தேவைப்படவில்லை. இப்ப அவசியமா பேசப்படற ஒரு அரசியல் விஷயத்துக்கு என்ன வடிவம் தேவைப்படறது. சும்மா ஒரு செய்தியை ஒரு பக்கம் எழுதினாப் போதும். கவிதைகளைப் பற்றி அதிக அபிப்பிராயம் இல்லை. இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இப்ப வடிவத்துக்கு முக்கியத்துவம் தேவைப்படலை. அப்படியும் (வடிவ நேர்த்தியுடனும்) இனி எழுதப்படலாம். எழுதப்படும்.

?ஒரு வசதிக்காக 'ழ', 'பயணம்' வரையான காலகட்டத்தை வரையறையாகக் குறித்துக் கொள்ளலாம். இக் காலகட்டத்தில் வெளியான படைப்புகள் வடிவம் சார்ந்தும், அழகியல் நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அக உலகுக்கு வெளியிடப்பட்டன. அதன் பிறகான காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகளை அதன் தொடர்ச்சியாகப் பார்க்கிறீர்களா?

!அவை இந்தச் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. நானும் அப்படித்தான் பார்க்கிறேன். அவற்றில் சிலது வெற்றி பெருகிறது. வெற்றி- தோல்விங்கிறதுல எப்பவுமே சதவீதம் இருக்கும். வளர்ச்சியாப் பார்க்கிறதுன்னா அது சமூகத்தின் பங்களிப்பு.

?இதை எந்த அளவுக்குத் திருப்தியாக உணர்கிறீர்கள்?

!திருப்தின்னா, இதுவே இறுதி இல்லை. இன்னமும் வரும். இதை ஒரு ஆர்வத்தோட நாம பார்க்கணும். வெறுப்போட இந்த மாறுதல்கள் நடக்கக்கூடாதுன்னு நாம பாக்கறதில்ல. அப்போதான் சங்கடம் வரும். இப்ப தெருவுல கிரிக்கெட் விளையாடறாங்க. பால் வீட்டுக்குள்ள வந்து விழுது. சத்தம் போடறோம். மைதானத்துக்குப் போறாங்க. அங்க நூறு பிரச்சனைகள். இப்படி எத்தனையோ சங்கடங்களைத் தாண்டிதான் ஒரு மேதை வர்றான். இப்ப இந்தியன் டீம்ல பந்து போடற அஸ்வின் தி. நகர் தாமோதரன் தெருப் பையன். அவங்க அப்பா பேரு ஑லெவன்ஒ ரவி. அப்போ தெருவில் ஐந்தாறு ரவி இருந்தாங்க. அவங்க வீட்டு நம்பர் பதினொன்று. அதனால ஑லெவன்ஒ ரவின்னு கூப்பிடுவாங்க. அந்த 'லெவன்' ரவியோட பையன் அஸ்வின். எங்க பையன்கள் எல்லாம் சேர்ந்துதான் விளையாடுனாங்க. நன்னாவே ஆடுனாங்க. ஆனால் அவனாலதான் தாண்டி வர முடிஞ்சுது. அந்த மாதிரியான ஒரு தெருவில இருந்து பௌலர் ஒருவர் வர முடியும்னு எதிர்பார்க்க முடியாது. அது மாதிரிதான். ஆனால் இந்த மாதிரியான வளர்ச்சி, மாறுதல்களில் முரண்பட்டுட்டோ ம்னா துக்கம்தான்.

?ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விதான் இதுவும்: 'பொதுவாகவே தங்கள் எழுத்து, பலருக்கும், அது நல்ல எழுத்தா, இல்லையா என்று உணர முடியாத சிக்கல் இருக்கிறது' என்ற கருத்து குறித்த ஒரு கேள்விக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு பதில் கூறியிருக்கிறீர்கள். இன்றும் அதே  நிலை உள்ளதா? இப்போது அது பற்றி தங்கள் கருத்து என்ன?
! இப்பவும் இருக்கும். நெறைய பேருக்கு நல்ல எழுத்தா, இல்லையா? நல்ல எழுத்து இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனா இது நல்ல எழுத்துன்னு நெனைக்கறவங்களும் இருக்காங்க. இப்படித்தான் எழுதணும்னு நெனைக்கறவங்களும் இருப்பாங்க. ஆனா இந்தச் சந்தேகமும் இருக்கும். கவிதைக்கு ஷேக்ஸ்பியரைத்தான் மகா உன்னதமாச் சொல்வாங்க. எனக்கு இந்தப் பத்தாண்டுகளா ஷேக்ஸ்பியரை நெறைய படிக்கறப்போ, அவரிடம் இலக்கிய மேதைமையைத் தவிர கெட்டிக்காரத்தனம்தான் தெரியறது. எல்லா கதாபாத்திரங்களும் ரொம்ப நன்னா பேசறாங்க. எல்லா பாத்திரங்களும் கொட்டேஷன்ல பேசறாங்க. எல்லாரும் மேற்கோள் சொல்றாங்க. எல்லாரும் பழமொழிகள் சொல்றாங்க. அவர் அந்தக் காலத்துல நாடகமா இதைப் போட்டாரு. அப்போ வரிக்கு வரி இது மாதிரி இருந்தாத்தான் அப்ளாஸ் வரும். ஆனா அவரைத்தான் கவிதைக்கு முதல்னு வச்சிண்டிருந்தோம். இப்போ இதுல எனக்கு சந்தேகம் வந்துடுத்து. அது மாதிரியான சந்தேகங்கள் என் மீதும் இருக்கலாம்.
?வட்டார வழக்கு இலக்கியம் பற்றிக் கூறும்போது ஑நிஜம் போன்றதுதான் இலக்கியம். நிஜமே
இலக்கியமல்லஒ என்று கூறியிருந்தீர்கள். அதாவது இலக்கியத்தில் வட்டார வழக்கு ஒரு பகுதிதான். வட்டார வழக்கே இலக்கியமாகி விடாது என்று விளக்கியிருந்தீர்கள். தற்போது தலித் இலக்கியமோ, விளிம்பு நிலை மக்கள் இலக்கியமோ அதன் வட்டார வழக்கு மொழியைச் சாராமல் அதன் வெற்றி சாத்தியமாகி இருக்காது அல்லவா?

! ஜோ.டி.குரூஸ்னு ஒருத்தர் 'ஆழி சூழ் உலகு'ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரும் ரொம்பக் கஷ்டப்பட்டு எழுதியிருக்கார். நானும் கஷ்டப்பட்டுப் படிச்சேன். நன்னாத்தான் இருக்கு. இல்லேன்னு சொல்லல. ஆனா எவ்வளவு பேருக்கு இதை வாசிக்க இயலும். அதாவது ஒரு இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுன்னா, பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்துல கொடுக்கணும். முழுக்கவும் வட்டார வழக்குல இருந்தா கஷ்டம். அதுல வண்ணநிலவனுக்கு நல்ல பாலன்ஸ் கிடைச்சிடுத்து. 'கடல் புரத்தில்' நாவலில் செம்படவர்களின் வாழ்க்கையை நன்றாகக் கொடுத்திருந்தார். அதை வாசிக்கறதுல பெரிய சங்கடம் எதுவும் இல்ல. அப்படியே அவங்க பேசற மாதிரி, செய்யற மாதிரி எழுதணும்னா கஷ்டம்தான். ஑ஆழி சூழ் உலகுஒ நாவலாவது 800 பக்கம்தான். இப்ப 'கொற்கை'ன்னு ஒண்ணு எழுதியிருக்கார். அது 1400 பக்கம். (சிரிக்கிறார்.) வாசிப்புப் பழக்கம் கொண்டவர்களுக்கே கஷ்டமாக இருந்தால்... மக்களுக்குப் போய்ச் சேர வேண்டாமா? அதுதான் வட்டார வழக்குல சங்கடம்... வட்டார வழக்கு ரொம்பத் தாங்க முடியாதபடிக்கு இருக்கக்கூடாது.

?ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது அதே சொல்லாடல்களை அப்படியே பயன்படுத்தும்போதுதானே அதன் ஆற்றல் வெளிப்படுது?

!அதெல்லாம் இல்லை. இருநூறு, முன்னூறு வருஷமா ஆங்கில இலக்கியத்துல, பிரெஞ்சு இலக்கியத்துல நெறைய எழுதியிருக்காங்க. மரியோ வர்கோஸ் லோஜா என்று பெரு  எழுத்தாளர். இந்த வருஷம் அவருக்கு நோபல் பரிசு கிடைச்சிருக்கு. அவர் பிரேசில் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கார். அதை நான் படிச்சேன். அடித்தட்டு மக்கள் வாழ்க்கை பற்றி அதில் எழுதியிருப்பார். ஒரு கிராமம். அதில் யாருமே இருக்க மாட்டாங்க. தண்ணீருக்காக எங்க எல்லாமோ போயிருப்பாங்க. அவங்களோட ஒவ்வொரு கஷ்டத்தையும் அப்படியே எழுதியிருப்பார்.

?அதையெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பாகத்தானே நாம் வாசிச்சிருக்க முடியும். மூலமொழியில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இன்னும் வீரியமுள்ளதாகத்தானே இருக்கும்?
!இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வர்றது வட்டார வழக்கும் ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம். அதுவே இலக்கியம் என்பதை ஏற்க முடியாது. இரண்டாவது ஒரு படைப்பு என்பது எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக, பகிர்ந்து கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் போய்ச் சேரும் வகையில் இருக்க வேண்டும்.

? கி.ரா. போன்றவர்கள் எல்லோரையும் போய்ச் சேர்ந்திருக்கிறார்களே?

!கி.ரா. பொதுமொழி கலந்து எழுதுபவர். அவரது எழுத்து முழுவதும் வட்டார வழக்காகவே இருக்காது.

?'இலக்கிய அனுபவம் ஒரு approximation-தான்' என்றும் கூறியிருந்தீர்கள்?

!இருக்கலாம். எல்லாமே approximation தான். knowledge-ம் approximation தான். இப்ப அரசர்களைப் பற்றி படிக்கிறோம். அது முழுமையானதா? மதுரை திருமலை நாயக்கர் மஹால் போனீங்கன்னா எல்லாமே பிரமாண்டமா இருக்கும். ஆனால் அவ்வளவு பெரிய அரண்மனையில் கக்கூஸ் கிடையாது. நெறைய அரண்மனைகளில் இருக்காது. இதெல்லாம் எந்த வரலாற்றிலும் சொல்லப்படலை. அதனால எதையும் முழுமைன்னு சொல்ல முடியாது.

? மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பது குறித்துப் பேசுகிறார்களே, அதுவா?

!அது இன்னும் ஏராளமா வரணும். இதுக்கு முன்னாடி முதல்வரா இருந்தாரே அவர் எப்பப் பாத்தாலும் சோழன்,சோழன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. சோழன் மட்டும் வரலாறு இல்ல. சோழன் மட்டும் தமிழ்நாடு இல்ல. இதெல்லாம் வரணும். ஆனால் எழுத்தாளன்தான் கொண்டு வரணும்னு சொல்லக்கூடாது. அது சமூகவியல் சம்பந்தப்பட்டது.

? இதில் நாட்டார் வழக்காற்றியலுக்கு முக்கியப் பங்கு இருக்கு இல்லையா?

!எதுக்குதான் முக்கியத்துவம் இல்லை. பாட்டுன்னா ஏழெட்டு ராகம்தான் இருக்கு. ஆனால் ஃபோக் சாங்ஸ்(Folk Songs) எவ்வளவு இருக்கு. அதுதான் அவங்க வாழ்க்கையைத் தள்ளிண்டு வந்திருக்கு. அதுகூட இல்லன்னா ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும். அதெல்லாம் கலெக்ட் பண்ணணும். பஞ்சாபில இதை நெறைய செஞ்சிருக்காங்க. அதுக்கு ஒரு நெருக்கடி வரணும். அது இங்க இல்ல. நாம யுத்தத்தையே சந்திச்சது இல்ல. இங்க பார்ட்டிஷன்(Partision) கிடையாது. ராஜின்னு பஞ்சாப் பெண் எழுத்தாளர். ஒரு கதை எழுதியிருப்பாள். தலைப்பே 'என் அப்பாவுக்கு என்ன நேர்ந்தது?' என்பதுதான். காணாமல் போன அப்பாவை அறுபது வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பற்றிய கதை. இந்த மாதிரியான நெருக்கடியை நாம் சந்திச்சதில்லை. வாச்சாத்தி மாதிரி பன்மடங்கு கொடூரங்கள் அங்கே நடந்திருக்கு.

?'நல்ல படைப்பு கவனிக்கப்படாததும் மோசமான படைப்பு கொண்டாடப்படுவதும்தான்' எழுத்தாளனின் பிரச்சனை என்றீர்கள். இப்போதும் அதே நிலைதானா? 

!நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. கொண்டாடுவதும் கொண்டாடாம இருப்பதும் அவனவன் இஷ்டம்.                                                                                                                                                                          

? ஆனால் மோசமான படைப்பு கொண்டாடப்படுவது என்பது மோசம்தானே?

!அது கஷ்டம்தான். ஒரு காலத்தில் எனக்கு வடமொழிக்காரங்களோட நெறைய பழக்கம் இருந்தது. நான் அடிக்கடி அவங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் மோசமான படைப்புகள்தான் இங்கேயிருந்து அவங்க மொழிக்குப் போயிருக்கு. அதனால எனக்கு எழுத்தாளனா மரியாதை தந்ததில்லை. மற்றபடி உபசரிப்பு நன்னாத்தான் இருக்கும். ஆனால் எழுத்தாளனா என்னைத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. ரொம்ப ரொம்பச் சாதாரண படைப்புகள்தான் அவங்களுக்குப் போயிருக்கு. அதுக்கு அவங்க என்ன செய்ய முடியும்? இப்பவும் அந்த நிலைமைதான் இருக்கோ என்னவோ? 

? உங்களுக்கும் அந்த நிலைமை-படைப்பைக் கொண்டாடாத நிலைமை, ஏற்பட்டுள்ளதா?

!எனக்கு - நான் மதிக்கிற படைப்புகள் பேசப்பட்டதுன்னு சொல்ல முடியாது. இதுமாதிரி நிறைய விடுபடல்கள் இருக்கு. 

?அதனால் மன வருத்தம் உள்ளதா?

! இப்ப எனக்கு வயசு எண்பது ஆயிடுச்சு. இனிமே இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுப் பிரயோஜனம் இல்லை.

?அவ்வாறு கவனிக்கப்படாத படைப்பாளிகள் ஒன்றிரண்டு பெயர்கள்?

!முன்னாடி சா.கந்தசாமியை நெனச்சுண்டு இருந்தேன். இப்ப கந்தசாமி கூட நெறைய பரிசுகள் வாங்கிண்டாரு. 'கலைமாமணி' கூட வாங்கிண்டாரு. கவிஞர்கள் ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் இவங்கள்லாம் கவிதைக்காக உயிரைக் கொடுக்கறவங்க. அவங்க சரியாக் கவனிக்கப்படலை. வைத்தீஸ்வரன் இந்த நாட்டை விட்டே போயிட்டார். இவங்க பாணியைப் பயன்படுத்தினவங்கதான் வானம்பாடிக் கவிஞர்கள். சமூக விமர்சனத்தைக் கவிதை வடிவில் செய்ய முடியுமான்னு செய்து காட்டியவர் நம்ம ஞானக்கூத்தன். அதுதான் ஆரம்பம். அதுக்குப் பிறகுதான் வானம்பாடி. ஆனால் வானம்பாடி கவிஞர்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு இவர்கள் இருவரும் கவனிக்கப்படவில்லை.

?தலித், விளிம்பு நிலை மற்றும் பெண்ணிய எழுத்து முன்னிலை பெற்ற பின்னரான சம காலத்தில் 'எழுத்து என்பது செயல்பாட்டுடன் இணைந்த நடவடிக்கையாகவும், கோட்பாடு சார்ந்ததாகவும்'  மாறியுள்ளது. இந்த எழுத்துகளை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

!அந்த (மதிப்பீடு செய்யற) அளவுக்கு வரல்ல. இன்னும் நெறைய வரணும். ஒண்ணு ரெண்டு எழுத்தை வைச்சுக்கிட்டுச் சொல்ல முடியாது. இப்ப தோப்பில் முகமது மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. நெறைய எழுதியிருக்கார். முஸ்லீம் சமூக வாழ்க்கையை ரொம்ப நன்னா எழுதறார். சல்மா எழுத்தை அந்த அளவுக்குச் சொல்ல முடியாது. பாமாவும் கிறிஸ்துவ வாழ்க்கை முறை குறித்து சிறப்பா எழுதியிருக்காங்க. அவங்க எடுத்துண்ட பிளாட் அந்த மாதிரி. தமிழ் 'கருக்கு' நாவலை விட ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் ரொம்ப நன்னா இருந்தது. அதுல இன்னும் நகாசு வேலைகள் நன்னா பண்ணியிருப்பா. மத்தவங்களப் பத்தி இப்ப சொல்ல முடியாது. இன்னும் நெறைய எழுதணும். அவங்க எழுத்தப் பகிர்ந்து கொள்ள இன்னமும் ஆட்கள் இருப்பதில்லை. அதான் கஷ்டம்.

?எழுத்து-இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் cultural activism-த்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே?

!cultural activism மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இலக்கியத்தில் cultural activism எல்லாம் இருக்கறதில்ல. நாடகத்துல இருக்கலாம். பாட்டுல இருக்கலாம். பத்திரிகைகளில் கூட இது சாத்தியம். மேடைப்பேச்சுல சொல்லலாம். இந்த உபன்யாசம்னு சொல்றாங்கள்ல. படைப்பு இலக்கியத்தில் அது சாத்தியமே இல்லை. என்ன அற்புதமான ரிஃபார்மிஸ்ட் (Reformist) நாவல் எழுதினாலும் இருபது வருஷத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. படைப்பிலக்கியத்தில் அது காலத்தைத் தாண்டி நிக்கறதில்ல.

? தற்போதைய சூழலில் எழுத்தாளன் என்பவன் யார்?

!இதுக்கு வரையறை எல்லாம் சொல்ல முடியாது. தனக்கும் சமூகத்துக்குமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவன் எழுத்தாளன். அதேசமயம் அவனது நோக்கம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதான புரிதலுடன் மட்டுமே இருக்க வேண்டும். பகிர்தல் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லேன்னா எதையும் எழுத வேண்டிய அவசியமே இல்ல. சமூகப் பிரதிபலிப்புகளையும், அனுபவங்களையும் நன்றாகப் பகிர்ந்து கொள்பவன் நல்ல எழுத்தாளன். நன்றாகப் பகிர்ந்துகொள்ள இயலாதவன் நல்ல எழுத்தாளன் அல்ல.

? தனது சாதி, குடும்பம், அலுவலகம், சொந்தச் சூழல் சார்ந்து தன்னிலையில் பார்ப்பது மட்டும் எழுத்தாகுமா? இன்று பல்வேறு விழுமியங்கள் அரசியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முன்னெழுந்துள்ளன. இக்கண்ணோட்டங்களையும் உள்ளடக்கி அந்தப்பக்கமும் பார்த்து எழுதுவதுதானே நேர்மையாக இருக்க முடியும்? அது சமூகத்தின் அனைத்து உட்கூறுகளையும் குறுக்குவெட்டாகப் பார்க்க வேண்டியுள்ளது அல்லவா? அதாவது அந்தக் காலத்தில் தி.ஜானகிராமன் 'மோகமுள்' எழுதியதைப் போல கிராமத்தை, சமூகத்தைத் தன்னிலையில் இருந்து மட்டும் பார்த்து எழுதுவது தற்காலத்தில் சரியா?

!இதைக் கடமையாகக் கொள்ள முடியாது. அவனுக்குத் தோன்றினால் எழுதுவான். அவனை வற்புறுத்த முடியாது. ஒரு நேர்மையானவன் அவ்வாறு சொல்லமாட்டான். எனக்கு டி-ஷர்ட் போட்டுக்கறது பிடிக்கலைதான். அதுக்காக அதை மற்றவங்க மேல திணிக்க முடியாதில்லையா?

?இடைக்காலத்தில் கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என இரு கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கலை கலைக்காகவே கோட்பாடு கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டது. தாங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்?

! என்ன குழப்பம் இது? எப்பவுமே அப்படி ஒண்ணு இருந்தது இல்லயே, ஐயா.

? வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் இதில் முன்னிலையில் இருந்தார்கள் அல்லவா?

! அவங்கெல்லாம் எழுத்தாளர்களே இல்லையே!

? அவங்கதான் மதிப்பீடுகளை உருவாக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

!: அந்த மதிப்பீடுகளுக்கு நீங்க இடம் கொடுத்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. உங்க தலையெழுத்து அது. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்கிற அபிப்பிராயங்களில் இன்னுமா நீங்க இருக்கீங்க. இதெல்லாம் எழுபது, எண்பது வருசங்களுக்கு முன்னால பேசப்பட்ட விஷயம். மார்க்சிஸ்டுகளுக்கு அப்ப அது தேவையாகப் பட்டது.

? பன்னாடுகள் தழுவிய சமகால இலக்கியங்கள் இன்று அரசியல், அதாவது வெளிப்படைத்தன்மை சார்ந்ததாகவே உள்ளன. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு உலகங்கள் சமகாலப் படைப்புகளை முன்னெடுத்துச் செல்வதாக உள்ளன. இதனால் உலகப் போர்களால் உருவான மேற்குலகு இசங்கள் existentialism போன்றவை irrelevant ஆகி விட்டன இல்லையா?

!ஆமாம். மாறிக்கிட்டு இருக்கிறது. லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் 20 வருஷங்களுக்கு முன்னர் ஃபேஷனாக இருந்தது. இப்ப இல்ல. இப்ப என்ன நெலமைன்னா, இலக்கியம் இப்ப எங்கேயும் பேசப்படும் பொருளா இல்லை. இலக்கியம் என்பது வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

?மக்கள் அனைவரும் காலைல எழுந்ததும் இலக்கியம் படிச்சிட்டுதான் வாழ்க்கையை மாத்திக்கிறாங்கன்னு சொல்லல. மக்கள் எல்லோருமே இலக்கியம் படிச்சிக்கிட்டு இருக்காங்கன்னும் சொல்லல. இலக்கியம் என்பது சின்ன வட்டம்தான். அதில் முன்னர் மேற்குலகு இலக்கியங்களை விதந்தோதக்கூடிய நிலை இருந்தது. இப்போ அது மாறி இருக்கிறது. இன்று இலக்கிய நடவடிக்கை என்பது ஏதோ ஒரு விதத்தில் அடையாளம் சார்ந்து, இன ஒதுக்கல், போர்த்திணிப்பு, ஒடுக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிரானதாக மாறி இருப்பதைக் குறித்து அறியத்தான்.

! இங்கே தமிழில் அதற்கான நெருக்கடி எதுவும் இருக்கறதா நான் நெனைக்கல.

?முன்னர் இலக்கியத்தில் அரசியல் என்பது அசூயையாகப் பார்க்கப்பட்டது. கோட்பாடு சார்ந்த கலை, இலக்கிய நடவடிக்கைகள் வெறுக்கப்பட்டன. இலக்கியம் உன்னதமாகப் பார்க்கப்பட்டது. இன்று ஒரு படைப்பாளி தன்னை non - political என்று கூறிக் கொள்ள இயலுமா?

!எழுத்தாளனும் தனி நபர்தான். எழுத்தாளர்னு ஒரு ஜாதி இல்லை. அரசியல் தீவிரம் இப்ப இல்லைன்னுதான் நெனைக்கிறேன். மேலும் சில வருடங்களாக நான் வெளியே அதிகம் போவதில்லை. அதைப் பற்றி யோசிக்கிறதும் என் வேலை இல்லை.

?கம்யூனிச எதிர்ப்புப் பிரசாரத்தை நோக்கமாகக் கொண்ட M.R.A.(Moral Re armament) குழு பற்றிக் கூறியிருந்தீர்கள். அது போல யு.எஸ்.ஐ.எஸ், அலையன்ஸ் பிரான்சிஸ், மாக்ஸ்முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், பன்னாட்டுக் கலாசார உறவு அமைப்பு போன்றவைகளும் ஆரம்பத்தில் இதே நோக்குடன்தான் தமிழ் எழுத்தாளர்களை வளைத்துப் போட்டனர் என்பது உண்மைதானே?

!அது - கோல்ட் வார்(Cold War) சமயத்துலதான் இதெல்லாம் இருந்தது. இப்ப அது இர்ரெலவண்ட். பேசினா யாருக்கும் புரியக்கூட புரியாது. அந்தச் சமயத்தில சில பேர் பயன்படுத்தினாங்க. யு.எஸ்.ஐ.எஸ், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரிட்டிஷ் கவுன்சில், மாக்ஸ்முல்லர் பவன் எல்லாம் தங்கள் நாட்டின் வாழ்க்கையை நமக்குத் தெரியப்படுத்த விரும்பினாங்க. இதுல பயன் அடைந்தது பணக்காரங்கதான். மற்றபடி அந்த நாட்டுக்கு ரெண்டு தடவை போய் வர்றதுல என்ன லாபம் வந்துடப் போகுது? நான் எழுதுற எழுத்துக்கு இங்கே பெரிய வாசகர்கள் கிடையாதுங்கறதை நான் ரொம்ப நாளைக்கு முன்னமே தெரிஞ்சுதான் எழுதுறேன். அது மாதிரிதான் எல்லா இடத்திலயும். prophets never hailed in his own nation ன்னு சொல்லுவாங்க. உதாரணமா நமக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெர்க்மென் சினிமா ஒன்றுகூட, ஒரு காட்சி கூட அவர்கள் நாட்டில் ஒழுங்கா ஓடினது இல்லை.

?நவீன தமிழ் இலக்கியத்தில் சில 'புனிதப்பசுக்கள்' அடையாளம் காட்டப்பட்டு அவர்களை விமர்சிப்பது கலை உணர்வுக்கு அப்பாற்பட்டதாக இன்னமும் பார்க்கப்படுகிறதே?

!தற்கால இலக்கியத்தில் யாரும் புனிதப்பசு கிடையாது. புனிதப்பசுன்னா வால்மீகியும், வியாசரும்தான். தற்கால இலக்கியத்தைப் பொறுத்தவரை விமர்சனமே இங்கு போதுமான அளவு இல்லைங்கறதுதான் உண்மை.

? நீங்களே கூட புதுமைப்பித்தனை, ஑அவர் ஒன்றும் புனிதப்பசு அல்லஒ என்று கூறியிருந்தீர்கள். அந்த உரிமை பிற புனிதப்பசுக்களுக்குக் கிடையாதா?

!அவருடைய சில கதைகள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. தேவையேயில்லாத விமர்சனங்கள் சிலவற்றில் அவர் ஈடுபட்டதும் எனக்குப் பிடிக்கல.

?'நான் கிறிஸ்துவனாகவோ, பௌத்தனாகவோ பிறந்திருந்தால் அந்தந்த மதத்து வழிகளைப் பின்பற்றியிருப்பேன்' என கூறியுள்ளீர்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எந்த மதத்தில் பிறக்க விரும்புவீர்கள்?

!எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.

?ஒருவன் எந்த மதத்தில் பிறந்தானோ அந்த மதத்தைத் தான் பின்பற்றியாக வேண்டுமா? மதம் பிறப்போடு சம்பந்தப் பட்டதுதானா?

!ஆமாம். அப்பா மதம்தானே நமக்கு. ஆனால் இது என்றென்றைக்குமான கொள்கை இல்லை. ஏன் கிறிஸ்துவர்கள் மதம் மாறவில்லையா? 'உலகில் அரபு நாடுகளைத் தவிர, மற்ற நாடுகள் அனைத்திலும் உள்ள முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள்தான்' என்று நைபால் சொல்லியிருக்கிறார்.

?பிறந்த பின்னர் ஒருவன் தனது மதத்தை மாற்றிக் கொள்ளக்கூடாதா?

! இந்து மதம் தவிர மற்ற மதங்களில் இது எளிதாக நடக்காது.

?இந்து மதத்தில் நிலவும் தீண்டாமை, சாதி ஒதுக்கல் போன்றவற்றால்தானே மதத்தைத் துறக்கிறார்கள்.

! இந்து மதம் மட்டும் இல்ல, எல்லா இடத்திலேயும் இது இருக்கு. உலகம் பூராவும் தெருவுக்குத் தெரு துவேஷம் இருக்கு. மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகள் இருக்கு. இந்து மதத்தை மட்டும் சொல்றது சும்மா. இதெல்லாம் என்றென்றைக்குமான உண்மைகள் அல்ல. எல்லாமும் மாறக்கூடியவை. மாறாத உண்மை என்னவென்றால் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவதுதான்.

?அதுவும் வாய்ப்புகள் உருவானால் மாறக்கூடியதுதானே! 'யூதர்களைப் போல நாடற்றவர்களாக உள்ளோம்' என எழுதினீர்கள். அப்படி என்ன நிலைமை இங்கு ஏற்பட்டு விட்டது?

!அதெல்லாம் நெனைவே இல்ல. புத்தக வெளியீட்டு விழான்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. சினிமா புத்தகம் ரெண்டு வெளியிடச் சொன்னாங்க. அங்க கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அப்துல் ரகுமான் எல்லாம் பேசினாங்க. என்னை உட்கார வைச்சுக்கிட்டு மூணு பெர்சண்ட், மூணு பெர்சண்ட்டுனு சொல்லி அவமானப்படுத்துனாங்க. எனக்கு ரொம்ப இழிவா இருந்துச்சு. அதுக்குப் பிறகும் விடலை. எனக்கு அவமானகரமான சூழ்நிலையை உருவாக்கிட்டாங்க. நான் என்ன பண்றது?

?'இலட்சியவாத' இலக்கியங்களைவிட மேற்கத்திய இலக்கியத்தைச் சிலாகிப்பவர். தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் ஆதரவு. இதுதான் உங்கள் அரசியலா?

! எனக்கு ஒரு ஆதரவும் கிடையாது.

?'சுதேசமித்திரன்ஒ நாளிதழில் பத்தி எழுத நேர்ந்தபோது கூட திமுக எதிர்ப்பு எழுத்தைத்தான் எழுதினீர்கள்.

!பத்திரிகை அப்படி. தி.மு.க.வை விமர்சிக்கவே வேண்டாம். அவங்க பேசறதை அப்படியே எழுதினாப் போதும். விழுந்து விழுந்து சிரிக்கலாம். அது அந்தக் காலம். ரெண்டு மாசம்தான். அதுக்குள்ள பத்திரிகையே நின்னுடுச்சு.

?சுமார் நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படத் துறையுடன் நெருங்கி வாழ்ந்தீர்கள். உலகத் திரைப்படங்களோடும் பெரிய பரிச்சயம் இருந்தது. ஏன் திரைப்பட முயற்சியில் இறங்கவில்லை?

!ஆரம்பம் முதலே அதில் நாட்டம் இல்லை. காரணமே தெரியாம காத்துக் கிடக்கணும். அதுல பல பேரு காணாமப் போயிருக்காங்க. மேலும் என் எழுத்து சினிமாவுக்கு உகந்தது இல்லைங்கறது எனக்கே நல்லாத் தெரியும்.

?தற்போது பின்னோக்கிப் பார்க்கும்போது இந்த வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதா? என்ன மாதிரி?

!அந்த மாதிரி regret எதுவும் எனக்கு இல்லை. இதுவரை வாழ்ந்தாச்சு. கடைசியில் பிறருக்குச் சங்கடம் இல்லாமல் போகணும். அவ்வளவுதான்.

?மறக்க முடியாத தருணங்கள்?

! துக்ககரமான தருணங்கள் தாம்.

? மறக்க இயலாத நபர்கள்?

! சிறு வயதிலேயே இழந்துவிட்ட அம்மா, அப்பா, சகோதர- சகோதரிகள்.

?  மறக்க முடியாத இலக்கிய ஆளுமைகள்? 

! சார்லஸ் டிக்கன்ஸ்

?மறக்க முடியாத படைப்புகள்?

! சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது. இசங்கள் வருவதற்கு முன்பே எழுதிய எழுத்து.

? தமிழில்?

!உதிரி, உதிரியாக நிறைய உள்ளன. 

ன்றி
 காலம் 
 அக்டோபர் - நவம்பர் 2011 
அசோகமித்திரன் சிறப்பிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக