இம் மொழிபெயர்ப்புச் சிறுகதை கூடங்குளம் போராட்டக் காரர்களுக்குச் சமர்ப்பனம்.
கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.
ஹிரோமி கவாகாமி
ஆங்கிலம் வழி தமிழாக்கம்: அப்பணசாமி
[ஹிரோமி கவாகாமி, தற்காலத்தின் முக்கிய ஜப்பான் மொழி எழுத்தாளர். கடவுள் ஆசிர்வதிப்பார் (காமி-சாமா)- 2011 அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை. இது ஜப்பான் ஃபுகிசாமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது. உண்மையில் கவகாமி 'கடவுள் ஆசிர்வதிப்பார்' (காமி- சாமா ) என்ற தலைப்பில் 1993 இலேயே ஒரு சிறுகதை எழுதியிருந்தார். விபத்துக்குப் பிறகு காமி- சாமா 2011 என திருத்தி எழுதினார். அணு உலை விபத்தால் துயருற்றிருந்த ஜப்பான் மக்களுக்கு இது ஆறுதலாயிருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. ஜப்பான் மொழியில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு: டெட் கூஸென் மற்றும் மோடோயுகி ஷிபாடா.
இக் கதை குறித்து கவாகாமி கூறியுள்ளது: ஜப்பானில் ஏராளமான கடவுள்கள் உள்ளனர். காற்றின் கடவுள், நீரின் கடவுள், ஒளியின் கடவுள், மலைகளின் கடவுள், வயல்களின் கடவுள், கிணறுகளின் கடவுள், கழிவறைகளின் கடவுள் என ஜப்பான் நிலப்பரப்பு முழுவதும் கடவுள்கள் உள்ளனர். இக் கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுவே காமி - சாமா எழுதக் காரணம். இக் கதையில் கரடிதான் கடவுள்.பின்னர் அணு உலைச் சம்பவம் நடந்தபின் காமி- சாமா 2011 ஆக அதைத் திருத்து எழுதினேன். இக் கதை கற்பனைதானே. உண்மைச் சம்பவங்கள் இல்லையே என விமர்சிக்கிறார்கள். இக் கதையில் வருபவை உண்மைச் சம்பவம் என நான் கூறவில்லை. அதுபற்றிய அறிவியல் தகவல்களும் எனக்கு முழுமையாகப் புரியாது. ஆனால் எனக்கு ஒரு கோபம் இருக்கிறது. மிகச் சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை இப்படி ஏன் சீர்குலைந்தது என்ற கோபம் எனக்கு உள்ளது. இறுதியில் இக் கோபம் என் மீதே குற்றம் சாட்டியது. இன்றைய ஜப்பானுக்குக் காரணம் நானல்லாமல் வேறு யார்? என்ற கேள்வி எதிரொலித்தது. ]
ஆற்றங்கரை வரை நடந்துவரலாம் என கரடியார் என்னை அழைத்தார். ஆற்றங்கரை இருபது நிமிட நடைதூரத்தில் இருந்தது. இதற்கு முன்பு ஒருமுறை வசந்தகாலம் தொடங்குவதற்கு முன்பாக அப்பாதையில் சுள்ளான்களைப் பார்ப்பதற்காக நடந்திருக்கிறேன், ஆனால், அப்போது கதிரியக்கத் தற்காப்பு உடைகளை அணிந்திருந்தேன். இப்போது மிகவும் வெப்பமாக இருந்தது. 'சம்பவம்' நடந்தபிறகு இப்பாதுதான் முதல் முறையாக மிக மெல்லிய, தோல் தெரியும்படியான சாதாரண உடையை மிக்க மகிழ்ச்சியுடன் உடுத்தியிருந்தேன். என்னுடைய மதிய உணவை முழங்கால் வரையான பூட்ஸுக்குள் போட்டு எடுத்துவந்திருந்தேன். அது ஒருமாதிரியான நடை: சலிப்பைப் போக்கிக்கொள்வதற்கான பெரு நடைக்கும்
மாலை நேர ஓய்வுநடைக்கும் இடைப்பட்டது.
அவர் ஒரு, நன்றாக வளர்ந்த கட்டுமஸ்தான ஆண் கரடி. 305 ஆம் எண் அபார்ட்மெண்டுக்கு அப்போதுதான் வந்திருக்கிறார். என்னோடதிலிருந்து கீழ்ப் பக்கத்தில் மூன்று கதவுகள்தான் தள்ளி இருக்கிறது. எங்களுக்குள் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வதற்காக பக்கத்து வீட்டுக்காரர்களான எங்கள் மூவருக்கும் நூடுல்ஸ் தந்து பழக்கம் பிடிக்கும் பழைய வழக்கங்களைக் கரடியார் இன்னமும் கடைப்பிடித்தார். அப்புறமும் ஏதாவது கொடுப்பதற்காக என்ற பெயரிலும் வந்துசெல்லும் இம்மாதிரியான பழக்கங்களை இக்காலத்தில் காணமுடிவதில்லை. அப்புறம் எங்களது தபால்கட்டுகளையும் எடுத்து வந்து கொடுத்தார். எல்லாருமே தம்மை விரும்பவேண்டும் என அவர் நினைப்பதாக எண்ணினேன். அப்புறம் நீங்களும் ஒரு கரடிபோன்றே நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.
அவர் நூடுல்ஸுடன் என் அபார்ட்மெண்டில் வந்து நின்றபோது நாங்கள் இனியும் அன்னியர்களாக நீடிக்கமுடியாது என்பதைக் கண்டுகொண்டாம்.
கதவில் பொறிக்கப்பட்டிருந்த என் பெயர்ப்பலகையைப் பார்த்து "நீங்கள் எக்ஸ் என்ற நகரத்தில் இருந்துதானே வந்திருக்கிறீர்கள், இல்லையா?" என்று கேட்டார். "ஆமா," என்று பதிலளித்தேன். "அங்க இருந்துதான்." உடனே ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து பேசத் தொடங்கினார். 'சம்பவம்' நிகழ்ந்த சமயத்தில் அவர் ஒரு மீட்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு உள்ளூர் நகரவாசி ஒருவர் பெரும் உதவிகள் செய்துள்ளார். அவரது சித்தப்பா ஒருவரின் பெயரின் பிற்பகுதி எனது பெயருடன் பொருந்தியிருந்தது. உடனே, எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து ஆராயத்தொடங்கினோம். கடைசியாக அந்த உதவி செய்தவரின் சித்தப்பாவும் எனது அப்பாவும் ஒன்றுவிட்ட சித்தப்பா- பெரியப்பா மகன்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாக (செகண்ட் கசின்ஸ்) இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தோம். இதுவும் மங்கலான சித்திரமாகத்தான் தெரிந்தது. ஆனால், அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே ஏதொ 'பூர்வ பந்தம்' இருப்பதுபோல கரடியார் என்மீது அன்பைக்கொட்டத் தொடங்கிவிட்டார். அவர் அவ்வளவு பாந்தமாகப் பழகிய முறையில் இருந்து அவர் பழங்காலப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர் என்பதுபோலத்தான் தெரிந்தது.
***
இவ்வாறு கரடியாரும் நானும் சாலையில் இறங்கி எங்கள் நடைப் பயணத்தைத் தொடங்கினோம். விலங்குகள் உலகம் பற்றி நான் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அதனால் ஆசியக் கருப்புக் கரடி வகையா, அரக்குக் கரடி வகையா அல்லது மலேய சூரியக் கரடியா என்பதை என்னால் சொல்லமுடியவில்லை. அதை அவரிடமே கேட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் கடுமையாக இருந்துவிடுமோ என அச்சமாகவும் இருந்தது. அவரது பெயர்கூட எனக்குத் தெரியாது. "நான் உங்களை என்ன பெயர் சொல்லி அழைக்கட்டும்" என நான் கேட்டதும் ஒரு நிமிசம் யோசித்து, சுற்றிமுற்றிப் பார்த்து வேறு கரடியார் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கூறியது: "இப்போதுவரை நான் எனக்கென ஒரு பெயர் இல்லாமல்தான் இருக்கிறேன். இங்கும் வேறு கரடி இல்லாததால் ஒரு பெயர் எனக்கு உண்மையிலேயே அவசியம் என்றும் நினைக்கவில்லை. "நீங்கள்" என்றே அழைப்படுவதையே நான் விரும்புகிறேன். ஆனால் அதை சீன எழுத்துகளைக் கொண்டு எழுதுவதை தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். உண்மையில் நீங்கள் என்னை உங்கள் விருப்பப்படி எப்படி வேணாலும் அழைக்கலாம். அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன்."
ஆமாமாம். இது ரொம்பப் பழமையான கரடிதான். பேச்சின் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆர்வமா முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஒரு காலத்தில் வயல்வெளிகளாக இருந்த நிலத்தின் ஊடாக ஆற்றுக்குச் செல்லும் சாலை இருந்தது. கதிரியக்க நச்சு அகற்றுதலுக்காக வந்தவர்கள்தாம் அங்கு விளந்திருந்த அனைத்து நெற்பயிர்களையும் தற்செயலாகப் பார்த்தனர். எப்படியிருந்தாலும் இப்போது அந்த பூமி மினுமினுக்கும் கூம்புத்தூன்களால் நிறைந்துள்ளது. அங்கு அவ்வளவு வெப்பம் இருந்தபோதும் வேலை பார்த்தவர்கள் கதிரியக்கத் தற்காப்பு உடைகளிலேயே இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தண்ணீரால் நனையாத முகமூடிகள் இடுப்புவரை நீண்டிருந்தது. 'சம்பவம்' நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட இப்பகுதிக்குள் நுழைவது முழுமையாகத் தடுக்கப்பட்டிருந்தது; சாலைகளில் காணப்பட்ட ஆழமான வெடிப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில்தான் சரளைக்கல் சாலை புதிதாகத் திறந்துவிடப்பட்டிருந்தது. கிரவுண்ட் ஜீரோ (அணு உலைப் பகுதி) மூடப்பட்டிருந்தும்கூட ஆச்சரியமளிக்கும் வகையில் கணிசமான கார்கள் எங்களைக் கடந்து சென்றன. அவர்கள் நெருங்கி வரும்போது தயங்கி வேகத்தைக் குறைத்து அப்படியே விலகி அரைவட்டமாகச் சுற்றிக்கொண்டுதான் சென்றனர். வேறு ஒரு நாதிகூட வெறும்காலால் நடக்கவில்லை.
"நாம் தற்காப்பு உடை அணியாததால் அவர்கள் இவ்வாறு விலகிச் செல்கிறார்களாக இருக்கலாம்" என்றேன். கரடியார் நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒரு கர் சத்தம் மட்டும் எழுப்பினார். நான் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதை அதில் புரிந்துகொள்ள முடியவில்லை. "இந்த வருசத்தின் ஆரம்பத்திலிருந்தே அதிக அளவிலான கதிரியக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான சிறப்புக் கவனங்களை மேற்கொண்டு வருகிறேன், எனது உடலில் இதுவரை சேர்ந்துள்ள கதிரியக்க அளவைப் பார்த்தால் இன்னமும் கொஞ்ச கதிரியக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியும். மேலும் இப்பகுகுதியில் நாம் அதிகக் காற்றை எதிர்பார்க்க இயலாது என்று ஸ்பீடி (தெ சிஸ்டம் பார் பிரிடிக்சன் ஆப் என்விரோன்மெண்டல் டோஸ் இன்பர்மேசன்) கணித்திருக்கிறது."
எனது வெளிப்படையான விளக்கத்துக்கு ஒரே குலுக்கலோடு மட்டும் கரடியார் நிறுத்திக்கொண்டார். கரடியார் காலால் நடக்கும்போது லயத்துடன் எழும் சரக் சத்தம் தவிர அப் பகுதியில் வேறு எந்தச் சத்தமும் எழவில்லை.
ரெம்பவும் உஷ்ணமாக இருக்கா என நான் கேட்டேன்.
"இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். இந்த சரள் பாதையில் நடப்பதுதான் சோர்வாக இருக்கிறது, மற்றபடி ஓ.கே தான். ஆறும் அவ்வளவு தூரம் இல்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி. அது உங்களின் அன்புதான்.. உங்களுக்கு ரெம்ப வெப்பமா இருந்தா தோள் மேல நடக்கலாம். என் உடம்பு உங்க உடம்பவிட ரெம்பப் பெரிசு. அதனால் உங்களவிட மிக அதிகமான கதிரியக்கத்த என்னால தாங்கமுடியும். இதுக்கு என்ன அர்த்தமுன்னா கதிரியக்க அளவு அதிகமா உள்ள இடத்துலகூட என்னால வெறும் காலால் நடக்க முடியும்.. அது இந்த சூடான பாதையைவிட குளிரா இருக்கும். நாம போவமா?"
அவர் இப்படி என்னை உபசரித்தார். நான் பெரிய தொப்பி அணிந்திருந்தேன். அதனால் வெப்பத்தில் இருந்து என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே வேண்டாம் என்றேன். உண்மையில் அவர்தான் சரள் பாதையில் இருந்து விலகிச் செல்ல விரும்பியிருக்கலாம். இருவரும் அமைதியாக நடந்தோம்.
ஆற்றில் தண்ணீர் செல்லும் இழக்கமான சத்தம் அடிக்கடி கேட்டது. நாங்களும் நடையை எட்டிப்போட்டதால் ஆறு சீக்கிரமே வந்துவிட்டது. ஆற்றங்கரையில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தண்ணிக்கு ரெம்பப் பக்கத்தில் இரண்டு மனிதர்கள் நின்றுகொண்டிருந்தனர். 'சம்பவம்' நடப்பதற்கு முன்பு என்றால் இந்த இடம் மிகவும் ரம்மியமானதாக இருக்கும். மக்கள் நீந்திக்கொண்டும் மீன் பிடித்துக்கொண்டும் இருப்பார்கள். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பகுதி முழுவதுமே ஒரு குழந்தையைக் கூட காண முடிவதில்லை.
நான் கொண்டு வந்த பையை கீழே வைத்துவிட்டு, துண்டால் முகத்தை தேய்க்கத் தொடங்கினேன். கரடியாருக்கு நாக்குத் தள்ளிவிட்டது. மெதுவாக மூச்சு வாங்கினார். நான் அங்கே நிற்பதைப் பார்த்து அந்த இரண்டு மனிதர்களும் எங்களை நோக்கி வந்தனர். இருவருமே தற்காப்பு உடை அணிந்திருந்தனர். ஒருவன் முழங்கை வரை நீளமான கையுறை அணிந்திருந்தான். மற்றவன் சன்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தான்.
"அது ஒரு கரடி, இல்லே.." என சன்கிளாஸ் கண்ணாடி கூறினான்.
"அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கையுறைக்காரன் கூறினான்.
"கரடிகள் ஸ்டிரோண்டியம், புளுட்டாணியக் கதிரியக்கம்கூட தாங்கும்."
"நீ என்ன நினைக்கிறே? அவை கரடிகள்தாம்."
"ஆமா. அதனால அவை கரடிகளாகத்தான் இருக்கணும்."
"யா.. அவைகள் கரடிகள்தாம்."
அவர்கள் இங்கும் அங்குமாக சில தடவைகள் நகர்ந்து நகர்ந்து பார்த்தனர். கண்னாடிக்காரன் திருட்டுத்தனமாக எனது முகத்தைப் பார்த்தான். ஆனால் கரடியை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். நீளக் கையுறைக்காரன் அவ்வப்போது தன் கைகளைக் கரடியின் வயிற்றில் படரவிட்டு ரோமத்தைப் பிடிங்கினான். இறுதியாக "அதனால் இது கரடிதான்" என மீண்டும் ஒரு தடவை சொல்லிக்கொண்டு முதுகைத் திருப்பிக்கொண்டனர்.
"நல்லவேளை," என அவர்கள் சென்ற பிறகு ஆசுவாசமடைந்தார் கரடியார். "அவர்கள் நல்லாவே புரிந்துகொண்டார்கள் என நினைக்கிறேன்."
நான் எதுவும் சொல்லவில்லை.
"எனது உடலில் அனுமதிக்கத் தக்க கதிரியக்க அளவு மனிதர்களைவிட ஓரளவுக்கு அதிகமாக இருக்கலாம், அதனால ஸ்டிரோண்டியம், புளுட்டாணிய கதிரியக்கத்தை எனது எனது உடல் ஏற்றுக்கொள்ளும் என அர்த்தமில்லை, உங்களுக்கு இது தெரியுமா? கடவுளே! அவர்கள் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்? "
அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே, கரடியார் வேகமாக தண்ணிக்குச் சென்றுவிட்டார்.
அங்கு குட்டி, குட்டி மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன. நதியின் குளிர்ச்சி என் முகத்தில் வீசியது. ஒவ்வொரு மீனும் மிகக் குறுகிய பகுதிக்குள்ளேயே தண்ணிப்போக்கிலும், எதிர்த்தும் நீந்திக்கொண்டதை மிக நெருக்கமாகவே என்னால் பார்க்க முடிந்தது. அதனால் நதியே நீளமான, குறுகிய செவ்வக வடிவக் குட்டை போலத் தெரிந்தது. இத்தகையை குட்டைகள் தனது கரையையும் கொண்டிருந்தன. கரடியாரும் தண்ணீரை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் என் கண்ணில் பட்ட அதே விஷயங்கள்தாம் அவருக்கும் தெரிந்ததா? ஒரு வேளை ஒரு கரடியின் கண்களுக்குத் தண்ணீருக்கு அடியில் உள்ள உலகம் வேறுமாதிரியாகத் தெரியலாம். திடீரென யாரோ தண்ணீருக்குள் குதிக்கும் சத்தம் கேட்டது. கரடியார்தான் தண்ணீருக்குள் சீறிப் பாய்ந்தார். நதியின் குறுக்காகப் பாதித் தூரம் சென்றதும் நீந்துவதை நிறுத்தி, தனது வலது காலை நீரோட்டத்துக்குள் செலுத்தி ஒரு மீனை இழுத்தார். அது கரையோரத்தில் நாங்கள் பார்த்த மீன்களைவிட மூன்றுமடங்கு பெரியது.
"நிச்சயமாக இது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். பந்தயம் வச்சிக்கலாமா?" கரையில் ஏறியதும் கரடியார் கேட்டார். "எனது கால்கள் தாமாகவே முன்னேறியது. நல்ல வலுவான அளவு, இல்லையா?"
அந்த மீனை நான் நன்றாகப்பார்க்கும்வகையில் தூக்கிக்காட்டினார். அதன் செதில்கள் சூரியஒளியில் மின்னின. முன்னர் வந்த அதே இரண்டு மனிதர்கள் எங்கள் திசையைக் காட்டி ஏதோ ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டிருந்தனர். கரடியார் வெற்றிப் புன்னகை செய்தார்.
"இவை பெரும்பாலும் ஆற்றின் அடியில் வளரும் பாசிகளையே உணவாகக் கொள்ளும்" என்றார். "ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கேயும்ஏராளமான சீசியம் (கதிரியக்கம்) சேகரிக்கப்பட்டிருக்கும்."
கரடியார் தனது பையைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு துணி மூட்டையை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சிறிய கத்தியையும், காய்கறி நறுக்கும் பலகையையும் உருவினார். மிகவும் நேர்த்தியாக மீனை நறுக்கி, துண்டுகளாக வெட்டினார். பின்னர், தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரால் நன்றாகக் கழுவினார். அவற்றின்மீது கல் உப்பைத் தாராளமாகத் தூவி ஒரு பெரிய இலை மீது வைத்தார்.
"திரும்பும்போதும் அது சாப்பிடத் தயாராக இருக்கும், வீட்டுக்குப் போகும்போது சாப்பிடலாம்" என்றார். "ஆனால் நீங்கள் இதைச் சாப்பிடவில்லையென்றால் நாம் இருவரும் இங்கு வந்து சென்றதன் நல்ல நினைவாக, இப்பயணத்தின் நினைவுச் சின்னமாக இந் நினைவுகள் இருக்கும்."
இக் கரடியார் ஒவ்வொன்றையுமே எவ்வளவு சிறப்பாகச் சிந்திக்கிறார் என ஆச்சரியத்தோடு எண்ணினேன்.
ஒரு பெஞ்சின்மீது ஒரு துணியை விரித்து அதன்மீது உட்கார்ந்து ஆற்றைப் பார்த்தபடி நாங்கள் கொண்டு வந்த மதிய உணவை வெளியே எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கரடியார் ப்ரெஞ்ச் ரொட்டித் துண்டுகளை எடுத்து அதனுள் இறைச்சிச் சாஸ் மற்றும் முள்ளங்கிகளை வைத்து கடித்துத் தின்றது. நானோ சோற்று உண்டைக்கட்டியின் நடுவே ஊறுகாய் வைத்து எடுத்து வந்திருந்தேன். சாப்பிட்ட பிறகு எங்களுக்கு ஆளுக்கொரு ஆரஞ்ச் இருந்தது. அது ஒரு சுகமான உணவு.
சாப்பிட்டு ஆனதும் "நான் உங்கள்து ஆரஞ்ச் பழத்தைஉறித்துத் தரவா?" என்று கேட்டார். நான் அதை அவரிடம் கொடுத்தேன். சுளைகளை என்னிடம் தந்து அவரும் தன்னியல்பில் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்.
கரடியார் சென்று மீனைப் பார்த்துவிட்டு கத்தி, பலகை, கோப்பை அனைத்தையும் தாம் கொண்டுவந்திருந்த பாட்டில் தண்ணீரால் கவனமாகக் கழுவினார். காய்ந்ததும் அவரது பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து என்னிடம் தந்தார்.
"தயவுசெய்து படுக்கும்போது இதை தலைக்கு வைத்துக் கொள்ளுங்கள், நாம் வந்தே இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. மேலும் கதிரியக்கமும் குறைவாகத்தான் இருக்கிறது, அதே சமயம்.. நானும் ஒரு சிறு நடை செல்ல வேண்டும். அதற்கு முன்பாக உங்களுக்கு நன் ஆராரோ.. பாடட்டுமா?" என ஆர்வமுடன் கேட்டார்.
எந்தப் பாட்டும் இல்லாமலே நான் தூங்கிவிடுவிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டேன். அவர் அதிருப்தி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நொடியே தனது நடையைத் தொடங்கியிருந்தார்.
நான் கண் விழித்தபோது மரங்களின் நிழல் நீண்டிருந்தது. கரடியார் பெஞ்சில் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மெலிதாக குறட்டை விட்டுக்கொண்ட்ருந்தார். அவர் மீது ஒரு துண்டுகூட போர்த்தப்படவில்லை. எங்கள் இருவரைத் தவிர அப் பகுதி சூன்யமாக இருந்தது. அந்த இரண்டு மனிதர்களை இப்போது எங்குமே காணோம். துண்டை கரடியார் மீது போர்த்திவிட்டு உப்பிடப்பட்ட மீன் பக்கமாகச் சென்றேன். ஒரு மீன் இருந்த இடத்தில் இப்போது மூன்று மீன்கள் இருந்தன.
***
"என்ன அருமையான பயணம்" அபார்ட்மெண்ட் 305 முன் நின்றுகொண்டு கரடியார் கூறினார். தன் பையில் இருந்து கதிரியக்கம் அளவிடும் கருவியை (ஜீசெர் கவுண்டர்) வெளியே எடுத்து அவர் உடல் மீது ஓடவிட்டு, என் உடல்மீதும் ஓடவிட்டார். நன்கு அறிந்த அதே பீப் ஒலியைக் கேட்டேன். "இதுபோன்று மீண்டும் செய்ய நேரும் என நம்புகிறேன்."
நான் ஆமோதித்தேன். உப்பு மீன் மற்றும் அனைத்துக்கும் கரடியாருக்கு நன்றி தெரிவிக்க முயன்றும் அவர் அதை ஏற்கவில்லை.
"அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை" என்றார்.
"அப்புறம், பிறகு..." என நான் விடைபெற முயன்றேன்.
"நல்லது" கூச்சத்துடன் மறுத்தார்.
அவர் செல்வார் என நான் காத்திருந்தேன். அவர் காலை நகர்த்தியபடியே நின்று கொண்டிருந்தார்.மனம்போக மறுத்தது. உண்மையிலேயே மிகவும் அற்புதமான கரடியார். அவர் தொண்டையில் இருந்து ஆழமான சத்தம் கேட்டது. அவர் பேசும்போது முற்றிலும் மனிதக் குரல் கேட்டது. ஆனால் இருமும் போதும் செருமும் போதும் அல்லது சிரிக்கும்போதும் உண்மையான கரடி போல இருந்தது.
"நாம் தழுவிக் கொண்டால் ஒன்றும் தப்பில்லையே?" அவர் இறுதியாகக் கேட்டார். "நான் எங்கிருந்து வந்தேனோ அங்கு, பிரியும் நேரத்தில் இப்படிச் செய்தால் மிகவும் நெருக்கமாக உணர்வோம். இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, வேண்டாம்."
நான் சம்மதித்தேன். உண்மையில் கரடிகள் குளிப்பதில்லை என்பதால் அவரது உடலில் அதிகக் கதிரியக்கம் இருக்கக்கூடும். நாட்டின் இப்பகுதியில்தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது தொடக்கத்தில் இருந்தே எனது முடிவு என்பதால் என்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை.
கரடியார் ஓரடி முன்னால் வந்து இரு கைகளையும் அகல விரித்து எனது தோள்களைத் தழுவினார். அவரது கன்னத்தை என் கன்னத்தின் மீது வைத்து அழுத்தினார். கரடியின் வாசனையை என்னால் உணரமுடிந்தது. மறு கன்னத்தையும் என் மறு கன்னத்தின் மீது அழுத்தினார். மீண்டும் என்னை முழுமையாகத் தழுவினார். நான் எதிர்பார்த்ததைவிட அவரது உடல் குளிர்ச்சியாக இருந்தது.
"எனக்கு வாய்த்த மிகவும் அபூர்வமான காலம் இது. எங்கோ தொலை தூரத்துக்கு பெரும்பயணம் சென்று வந்ததுபோல உணர்கிறேன். கரடியர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஓ, ஆமாம். உப்பு மீன் நன்றாக வரவில்லை. சாப்பிட விரும்பவில்லை என்றால் நாளை அதை நீங்கள் வீசிவிடலாம்."
என் அபார்ட்மெண்டுக்குள் சென்றதும் சுற்றப்பட்டிருந்த உப்புமீனை ஷூ ஸ்டாண்ட் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். தலைமுடி, உடல் எல்லாம் கவனமாகக் கழுவித் துடைத்துவிட்டு படுக்கச் செல்லும் முன் நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். ஒவ்வொரு இரவும் போல அன்று நான் பெற்ற கதிரியக்கத்தின் அளவு குறித்த என் மதிப்பீட்டைப் பதிவுசெய்தேன்: வெளி உடல் மீது முப்பது மைக்ரோ- சீவெர்ட்டுகள்; உடலின் உள் பாகங்கள் கிரகித்தது பத்தொன்பது. ஆண்டுமுழுவதும் இதுவரை மொத்தமாக வெளி உடலுக்கு 2,900 மைக்ரோ - சீவெர்ட்டுகள்; உள் பாகங்கள் 1,780 மைக்ரோ- சீவெர்ட்டுகள். கரடியார் எவ்வளவு கதிரியக்கம் பெற்றிருப்பார் என்ற சித்திரத்தை வரைய முயன்றேன். அது என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எப்படி இருந்தாலும் அது ஒரு அருமையான நன்னாள்.
நன்றி:
தீராநதி இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக