இன்று சின்னக்குத்தூசியின் பிறந்த நாள். சின்னக்குத்தூசி என்றுமே தமக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதை விரும்பியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது பிறந்தநாள் எது என்பது சபையில்கூடும் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலமாகவே தெரியாமல்தான் இருந்தது. அவரது பிறந்த நாள் எது எனக் கேட்டால் என்னென்னவோ சொல்லுவார். ஆனால் பிறந்தநாள் எது என்பதைச் சொல்லமாட்டார். ”அந்தக்காலத்துல யார் சார் இதெல்லாம் குறிச்சு வச்சாங்க” என்பார்.“நீங்க யாருட்டயாவது கேட்டீங்கன்னா எம்ப்டன் குண்டு போட்டான்ல அதுக்கு இரண்டு வருசம் முன்னால இருக்கும்னு சொல்லுவாங்க. அப்ப வருசம் மாசம்னா யாருக்குத் தெரியும். அந்த சமயத்துல பெய்த பெருமழை, புயல் என முக்கிய சம்பவங்கள் அல்லது தங்கள் ஊரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்தாம் மக்களுக்கு அடையாளமாக இருந்தது” என்பதையும் விளக்கிச் சொல்வார். ஆனால் பிறந்த தேதியை மட்டும் அவரிடமிருந்து பிடுங்க முடியாது. எப்படியோ ஒருநாள் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அதிகாலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மாலை அணிவித்து, புலவர் (கலி பூங்குன்றன்) வீட்டில் காபி பலகாரம் சாப்பிடுவேன் என்று மட்டும் கூறினார். அப்போதும் தேதியைச் சொல்லமாட்டார். ஆனால் ஒருவருசம் மாட்டிக் கொண்டார். அன்று காலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மரியாதை செய்துவிட்டு வந்தபோது மாட்டிக்கொண்டார். அன்று அவரது பிறந்தநாள் -ஜூன் 15. வழக்கம்போல வெட்கம் நிறைந்த குழந்தைச் சிரிப்பு. அதன்பிறகு தகவல் எல்லாருக்கும் கசிந்தது. சில ஆண்டுகள்தாம். அப்போதும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில்கூட கொண்டாட அனுமதித்ததில்லை.
அத்தகைய எளிய பண்பாளருக்கு- அவர் பிறந்த பின்னர் இந்த 80 ஆண்டுகளில் கடந்த இரண்டாண்டுகளாகத்தான், அதுவும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது பிறந்த நாள் வெளி உலகம் அறிய கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 22இல் அவர் மறைந்தபிறகு வந்த ஜூன் 15 இல் அவரது பிறந்தநாள். அன்று நடந்த பொது நிகழ்ச்சியில் அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்படும். ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அவரது பிறந்தநாள் அன்று நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபடி விருதாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலநாட்கள் முன்பே சென்னை தேவ நேயப்பாவாணர் அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. அப்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடவில்லை. உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் எல்.எல்.ஏ அலுவலர்கள் இதுபற்றித் தகவல் அறிந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்றுவருவதற்கு முன்பாகவே அரங்கத்துக்கு அவசரமாகப் பூட்டுப் போட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்களாம்! கடைசியில் நிகழ்ச்சி தரையிலேயே மிகவும் வீரியத்துடன் நடந்துள்ளது. சின்னக்குத்தூசியின் நண்பர்களும் அன்பர்களும் ஏராளமாகக் கூடி உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்துள்ளனர். திட்டமிட்டபடி அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த அளவு உணர்வுக் கொந்தளிப்பு இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கும். தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தி நிகழ்ச்சியை முழு வெற்றிபெறச் செய்துள்ளது அரசு. இதற்கு அதிமுக அரசுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
சின்னக்குத்தூசியார் தமது வாழ்நாளின் கடைசி முப்பத்தைந்து ஆண்டுகள் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரை திமுக என்ற சிமிழுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. அவர் பரந்து விரிந்த ஆளுமை. அவரது அறிவு மனிதம் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளும், இடதுசாரிக் கொள்கைகளும் கலந்த வார்ப்பு. மறைந்த சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுந்தர ராமசாமி முதல் தற்கால இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக விமர்சகர்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்மீது மரியாதை உள்ளவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் விலக்காகக் கூறமுடியாது. அவர் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து.
நக்கீரன் கோபால் முன்முயற்சியால் இது நடக்கிறது என்பதற்காக அரசு இவ்வாறு நடந்து கொண்டது என்றால் அது ஜனாநயக விரோதமானது. ஒருவர் திமுக சார்பானவர் அல்லது திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதற்காக தேவநேயப் பாவாணர் கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அரசு இடையூறாக இருக்க முடியாது. திமுக பிரமுகர் வீட்டுத் திருமணங்களுக்கு அரசு சமூகக் கூடங்களைத் தர மாட்டார்களா?
நிச்சயமாக இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. இலக்கிய நிகழ்ச்சிதான். இதில் அரசை விமர்சித்துப் பேசப்பட்டிருக்கலாம். அதில் என்ன தவறு? அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமைதானே. தமது வாழ்நாள் முழுவதும் சமூக விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தவர்தானே சின்னக்குத்தூசி.
எனவே, நீதிமன்ற உத்தரவைக்கூட பெரிதுபடுத்தாமல் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்த அதிமுக அரசு கண்டனத்துக்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக