சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கவிதை

மவுனத்தின் விரிசல் 

நீண்ட உரையாடலுக்குப்
பின்னான மவுனம்
அர்த்தமிழக்கச் செய்துவிட்டது 
சொற்களை..
ஒவ்வொரு நொடியும் நீடித்து
சுருண்டு உருண்டு 
விகசிப்பதன் மூலம்
அழுத்திக்கொண்டேயிருக்கிறது
மவுனத்தின் கனம்..
பெரும் கதறலாகவோ, வெடிச் சிரிப்பாகவோ
எக்கனமும் பிளந்து
தோல்வியும் அபத்தமுமாக
சொற்களை
அர்த்தமாக்கிவிடக் காத்திருக்கிறது
மவுனத்தின் விரிசல்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மௌனம் மரணமாகுமா?

எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து…
அப்பணசாமி


”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ் கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தேன். வயதுமுதிர்ந்த நிலையில் அவர் மரணத்தின் மீதான விருப்பினைக் கொண்டிருந்தார். மிகவும் யதார்த்தவாதியான அவர் தனது முதிர்வை உணர்ந்து மரணம் குறித்து விவாதிக்க விரும்பியதை நண்பர்கள் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். எதையும் ஆழமான விசாரணைக்குட்படுத்தும் ஆற்றல் கொண்ட அவருக்கு இது சற்று அவமரியாதையாக இருந்தது. இதை அறிந்திருந்த என்னிடம் அன்று உரையாடலைத் தொடங்கினார். நானும் ஆர்வமுடன் பங்கேற்றேன்.

”மரணம் என்பது சர்வவியாபகமானது. நாமறிந்த வரைக்கும் அது பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மனிதன் மட்டுமே ஆதியிலிருந்து இதன் மீது விசனம் கொண்டவனாக இருக்கிறான். நவீன இலக்கியத்தில் இது அறிவுப்பூர்வமாக விவாதிக்கப்படுகிறது. தாஸ்தயேஸ்வ்ஸ்கி, டால்ஸ்டாய் முதல் சார்த்தர், காஃப்கா வரை இதையிட்டுப் படைப்புகள் வாயிலாக விசாரணை செய்துள்ளனர். எனக்கும் அது குறித்த உரையாடல்களும் விசாரணையும் உவப்பானதாக இருந்திருக்கிறது.

”மனிதன் தன் குறித்த சில தேர்வுகளை முடிவு செய்துகொள்ளும் உரிமை கொண்டவனாக இருக்கிறான், சார். இந்த வகையில் தமிழில் நகுலனின் ‘வாக்குமூலம்’ எனக்கு உவப்பான நாவல், சார். அதில் மனிதனின் ஆயுளை அறுபது ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதன் பலாபலன்களை அவர் ஆராய்கிறார். இதை உடனே மனிதகுலம் முழுமைக்குமான அரச கட்டளையாக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதாகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு கலைஞனும் அவ்வாறு மனப்பூர்வமாக  எண்ணமாட்டான். நகுலன் என்ற தனிப்பட்ட மனிதரின் நீண்ட நெடிய தனிமை வாழ்க்கை அவரது கலை மனதில் தொடர்ந்து அலைக்கழித்த எண்ணச் சலனங்களை விசாரணைக்கு உட்படுத்தியதே ‘வாக்குமூலம்’ நாவலாக வெளிப்பாடு அடைந்திருக்கும். நமக்கும் அந்த விசாரணை ஆசுவாசப்படுத்துமானால் அசை போடலாம். முதிர்ந்து கனியாகும் பருவம் குறித்த பக்குவத்தை இது அளிக்குமானால் அது நம்மை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
”இதே போல, உண்மையைப் பட்டவர்த்தனமாக உனர்த்தும் படைப்புகளுக்கு மரணமும் விதிவிலக்கல்ல. டால்ஸ்டாயின் ‘நீதிபதியின் மரணம்’ குறுநாவலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை என்னிடம் உருவாக்கியது சார்” என்றேன்.
வழக்கத்துக்கு மாறாக, அவர் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இருவருமே பகுத்தறிவாளர்கள் என்ற நிலையில் இந்த உரையாடல் எனக்கே வித்தியாசமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் தோன்றியது. பகுத்தறிவாளர்கள் உரையாடலுக்கு எதுதான் விலக்காக முடியும்?

“சார், எஸ். சம்பத் தெரியுமா? சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா?” என்றார். “ஆமாம் சார். அந்த நாவலை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். அது வெளியான காலத்திலிருந்து இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இது சாவு குறித்த ஒரு உரையாடல். பொதுவாக நாற்பதுகளை நெருங்கும் ஒருவர் கொஞ்சம் முன்பாகவோ கொஞ்சம் பின்பாகவோ சாவு குறித்துச் சிந்திக்கவே நேர்கிறது. சிலருக்கு சிறுவயது முதலேகூட இது குறித்த விசனம் ஏற்படலாம். கடைசியில் இது மன அழுத்தத்தின் விளைவாக உணரப்பட்டுச் சில நாள்கள் மாத்திரைகளை உட்கொள்வதால் அமுக்கப்படலாம். ஒரு சராசரி வாழ்க்கைக்கு இதுவே உகந்தது. ஆனால், தொடர்ந்த தேடல் கொண்ட ஒரு கலாஆளுமைக்கு இது ஒரு விஷயமாகிறது. மனிதன் இது குறித்து ஈராயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து வருவதால் அதன்மீது தாமும் எண்ணங்களைச் செலுத்த கலா ஆளுமை தூண்டுகிறது. இது மெட்டா பிஸிக்கலாக இருந்தாலுமே ‘எல்லாம் மாயை’ என்ற அனர்த்தத்துக்குச் செல்லாத வரை நாம் அதை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும், சார். சாவு குறித்த அதிமுக்கியமான தத்துவ முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் தினகரன் என்ற கதாபாத்திரம் வழியாக நாவலை எழுதிச் செல்லும் எஸ். சம்பத், நாவல் நெடுக, வாழ்வின் உயிர்ப்பான காட்சிகளையும், வண்ணங்களையும் அதே உயிர்ப்புடன் சித்திரப்படுத்தி இருப்பதுதான் நாவலின் சிறப்பு, சார்” என்றேன்.

வழக்கத்துக்கு மாறாக, பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவர், எஸ். சம்பத் மட்டுமல்லாமல் ஆத்மாநாம் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் நீண்ட அறிமுக உரை நிகழ்த்தி, இருவருமே அற்பாயுளில் போய் விட்டதால் தமிழிலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு குறித்தும் தனது ஈடுபாட்டோடு கூடிய வருத்தத்தையும் தெரிவித்தார். அதுதான், சார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகத் தமது மனம் பக்குவப்பட்டிருப்பதை உணர்த்த விரும்பிய அவாவுக்கு நண்பர்கள் இடம் தராது சென்டிமெண்டாக அணுகியதே அவரது வருத்தமாக இருந்தது. இப்போது அது தீர்ந்து அவரது முகத்தில் மின்னியது.

1980-களின் தொடக்கத்தில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அப்போது புதியதாக வெளிவந்த இரண்டு நாவல்கள் அதற்கு இணையாக எனக்குள் செல்வாக்கு செலுத்தின. ஒன்று ’இடைவெளி’, மற்றொன்று ’நாளை மற்றுமொரு நாளே’. அப்போது எக்ஸிஸ்டென்சியலிச சிந்தனைகளின் தாக்கமும் சார்த்தர், காம்யு, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் செல்வாக்கும் ஏற்பட்டிருந்த காலம். ’இடைவெளி’ நாவல் என்னை ஈர்த்ததற்கு அது சாவு குறித்த தத்துவ விசாரணையை மேற்கொண்டதால் மட்டுமல்ல, ’இடைவெளி’ என்ற அதன் தலைப்பும் நாவலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்த விதமும்தான். ஏனெனில், இடைவெளி சுருங்குவது தொடர்பான சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சி விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்த விளையாட்டை ’இடைவெளி’ நாவல் உற்சாகப்படுத்தியது. அது விபத்துகள் குறித்த ஆராய்ச்சி. அதாவது பெர்முடேசன் காம்பினேசன் அடிப்படையிலும் இயற்கையின் தேர்வு விதி அடிப்படையிலும் எவ்வாறு விபத்துகள் நேர்கின்றன என்பதே எனது ஆராய்ச்சி விளையாட்டாக இருந்தது. அப்போதெல்லாம் நிறையப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததால் பயணங்களின்போது இந்த விளையாட்டில் ஈடுபடுவது உவப்பானதாக இருந்தது. ஒரு வளைவில், திருப்பத்தில், சந்திப்பில், நெடிய சாலையில், சாலை குறுகும் தருணத்தில் எல்லாம் இந்த விளையாட்டு உற்சாகம் கொள்ளும். ஒரு புள்ளியில் எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்பதைப் பொறுத்தே விபத்துகளின் விகிதாசாரம் அமைவதாக உணர்ந்தேன். நாளிதழ்களில் விபத்து குறித்த செய்திகளை வாசிக்கும்போது உருவாகும் படபடப்பை இது தணிக்கும். ஒரு புள்ளியில் எத்தனை சாலைகள் கடக்கிறதோ அதன் 0.00000001 சதவீதத்துக்கும் குறைவாகவே விபத்துகள் நடப்பதாக அறிய முடிந்தது. இது பெர்முடேசன் காம்பினேசனில் பல்வேறு அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இடைவெளி சுருங்குவதே விபத்தின் பாதிப்பையும் உயிரிழப்பையும் தீர்மானம் செய்கிறது என நம்பினேன். இதே போன்ற ஒரு விவாதம் ’இடைவெளி’ நாவலிலும் வந்ததால் முதல் வாசிப்பில் உற்சாகம் கொண்டேன்.

இரண்டாவதாக, எக்ஸிஸ்டென்சியலிச (இருத்தலியல்வாத) எழுத்தாளர்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாகப் போரின் பேரழிவு, மனித எத்தனங்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட வாழ்வின் மீதான விரக்தி, தற்கொலை உணர்வு ஏதோ ஒருவகையில் சாவு குறித்த எண்ணங்களைக் கிளறுவதாக இருந்தது. இந்த வகையில் காம்யுவின் ’அன்னியன்’ என்னைப் பல மாதங்கள் அலைக்கழித்தது. இதன் தொடர்ச்சியாக எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்க நேர்ந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. என்னவோ ஒருவகையான மனக் கிளர்ச்சியை அந்த வாசிப்பு என்னுள் உருவாக்கியது. அதனால்தான் அதன் வசீகரம் முப்பதாண்டுகளாகியும் இன்னமும் தீர்வதாகயில்லை.

நாவல் வாசித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. என்னை வசீகரித்த தமிழ் ஆளுமைகளைத் தேடித் தேடிச் சந்தித்தபோது ஆத்மாநாம், எஸ். சம்பத் ஆகியோர் காலம் ஆகி வெறுமையை உருவாக்கியிருந்தனர். அவர்களோடு பழகிய ’வயல்’ மோகனிடம் அவர்களின் இயல்பு குறித்து விசாரித்தேன்: 

’’சம்பத் கனத்த உருவம் கொண்டவர். மிகவும் ஆர்வமானவர். கனத்த உருவத்துக்கு விரோதமான சுறுசுறுப்போடு செயல்படுவார். வியர்வை சட்டையை நனைக்கும் வேகத்தோடு நடந்து வருவார். நீண்டகாலம் இருக்க மாட்டோம் என்பதை முன்னரே அறிந்துதான் அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டாரோ என்னவோ!”

‘இடைவெளி’ நாவலின் மையக் கதாபாத்திரம் ’தினகர’னும் சற்று கனத்த உருவம். நிதானமாகச் செயல்படும் பாத்திரமாக இருந்தாலும் சிந்தனை வேகம் கொண்டு செயல்பட்டு, சம்பத்தின் பிரதிபிம்பமாகவும் கொள்ளச் செய்கிறது.

சண்முகத்தைப் போன்றே தினகரன் முன் வாழ்க்கையும் தில்லியை மையமாகக் கொண்டிருக்கிறது. இருவரும் தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவருமே அய்யங்கார். மற்றும் இதர விழுமியங்களையும் பார்க்கும்போது இதனை அவரது தன் வரலாற்று நாவலாகவும் கொள்ள இடம் இருக்கிறது.
“இந்த நாவல் சாவு என்கிற பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான்” என முன்னுரையில் கூறுகிறார் சம்பத். பசி, காமம், பயம் ஆகியவற்றையே மனிதனின் ஆதார விஷயங்களாகக் காணும் இருத்தலியல்வாதிகளின் செல்வாக்கு சம்பத்தினிடம் மேலோங்கி இருந்ததன் காரணமாகவே சாவு குறித்த விசாரணையை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும். “சாவு என்னைப் பாதித்த விதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய்விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!’ இந்த ஒரு எண்ணம் என்னைச் சின்ன வயசிலேயே தொற்றியிருக்க வேண்டும்” என சம்பத் முன்னுரையில் கூறியது போலவேதான் தினகரனும் நாவலில் கூறுகிறார். மேலும், “நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்துப் பேசி விவாதித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லாரும், ... புத்தக எல்லைக்குள் வாழ்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறை கூற விழையவில்லை” என்று சம்பத் கூறுகிறார். அவரது நாவலில் தினகரனும் தனது சாவு குறித்த தேடலுக்கு விடை காண கால்நடை மருத்துவரை அணுகித் தோல்வி அடைகிறார். அதற்கு அவரைக் காரணமாக்காமல் மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்.

’அடிப்படை விஷயங்களில்’ உழல்பவரான தினகரன் மீது டால்ஸ்டாயும், தாஸ்த்யேவ்ஸ்கியும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ”சாவின் வாயிலிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தாஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாகச் சொல்லியிருப்பார் என்று தினகரன் எதிர்பார்த்தார்”. ஆனால், சாவைப் பற்றி தத்துவார்த்தமான முடிவு எதையும் தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லை என்பது தோல்விதான் என்றாலும் “அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம் இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கண்டு அதில் முழுத் தீவிரமாக” ஈடுபட்டதுதான் என்கிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையின் அனர்த்தமான நீட்சியாகத் தற்கொலை பற்றியும் தினகரன் சிந்திக்கிறார். ஒரு பெண் (கல்பனா) விஷயமாக அவர் தற்கொலை முடிவெடுத்து மொட்டைமாடி மீது நிற்கிறார். அப்போது, “ஒரு கணத்திற்கு, கீழே அதலபாதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மௌனம் தேங்கியிருந்தது” என உணர்கிறார். ”அப்போது அவருக்கு ஏற்பட்ட ”அனுபவத்தை என்ன பெயரிட்டு அழைப்பது?” “தன்னை முற்றிலும் காலியாக்கிக் கொண்ட பிறகு மூளையில், உடம்பில் எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை” சாவுக்கும் அப்பாற்பட்டதாக நினைத்து, தற்கொலை சாவு குறித்த விசாரணைக்குத் தீர்வல்ல எனக் கைவிடுகிறார்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது உயிரும் தினகரனிடம் முறையிடுகிறது. அவர் அங்கு நின்றபோது, ’தரை பால் போல் பொங்கி அவர் நின்ற விளிம்பு வரை மேலெழுந்து’ வந்ததாகக் கண்ட மனக்காட்சியை உயிரின் குறியீடாக எதிர்நிலையில் சம்பத் முன்வைக்கிறார். தொடர்ந்து சாவு குறித்த விசாரணை அவரைப் பித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ஏற்கனவே இது போன்றதொரு அனுபவத்தால் திடுக்குற்றிருந்த தினகரனின் மனைவி பத்மா இம்முறை மேலும் துணுக்குறுகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு மேலும் சிக்கலாகிறது. இது போன்ற நேரங்களில் கூச்சல், கைகலப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நினைக்க மறுநாள் காலையில் காப்பி போட்டுக்கொண்டு அவளையும் குழந்தைகளையும் எழுப்பும் அளவுக்கு தினகரன் அவர்கள் மீதும் பித்தாக இருக்கிறார். உடல் இச்சை அவருள் ஏற்படுத்தியிருந்த வலுவான தாக்கத்தின் நீட்சியாகக் கண்டு தினகரன் திடுக்கிடவும் தவறவில்லை.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உடல்கள் மீது அவர் கொண்டிருந்த இச்சையையும் செயல்பாடுகளையும் அவர் பட்டவர்த்தமான வெளிப்படுத்துவதால் அவர் மனைவி கொள்ளும் சீற்றமும் வெளிப்படுத்தும் ரௌத்திரமும் வாழ்நாள் பிணக்காக நீடித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ‘அடிப்படை விஷயங்களில்’ உழலுவதால் பொருளாயத வாழ்க்கையையும் தவற விடுவதைத் தினகரன் அறிந்தே இருந்தாலும் அவர் மீள இயலாத அளவுக்கு அமிழ்ந்து போகிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையில் அமிழ்ந்த பிறகு பத்மா மிகவும் பயந்து போகிறாள். இது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்ததனால் ஏற்பட்ட பித்து அல்ல. அதைவிட அபாயகரமானது என நம்புகிறாள். முதலில் மற்றொரு பெண் உடல் குறித்த இச்சையாக இருக்கும் என நினைத்துப் போரிட முயல்கிறாள். பின்னர் இது ’வேறு ஒன்று’ என்பதை உணர்ந்து பேரச்சம் கொண்டு ‘நேக்கும் குழந்தைகளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா?’ எனக் கெஞ்சுகிறாள். சாவு குறித்த விசாரணையைத் தற்கொலையை நோக்கிய எத்தனமாகப் பொருளாயத மனம் கண்டு அஞ்சுகிறது. அடிப்படை விஷயங்களில் உழலும் தினகரன் வாழ்தலையும் இதனையும் துல்லியமாக வேறுபடுத்திக் காண்கிறார். பெரும் பொருளாயத இழப்பு, அவர் காது கேட்கவே அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக உலகோர் பேசுவது போன்றவை தவிர பெரிய பாதிப்புகளில்லை என்பது தினகரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இது தினகரனின் தத்துவ மனம் என்றால் இதனைப் படைப்புரீதியாகக் கட்டமைப்பதில் எஸ். சம்பத்தின் கலைமனம் அற்புதமாக, வியக்கத்தக்க அளவில் வெற்றி கொள்கிறது. இல்லையானால், சாவு குறித்த ஓர் விசாரணையில் வாழ்வு குறித்த இத்தனை வண்ணமயமான, உயிர்ப்புள்ள ஜீவ வர்ணனைகள் ஏன் இடம் பெற வேண்டும்?

திருவல்லிக்கேணியில் தன் பெரியப்பா வீட்டு மொட்டை மாடியில் காலையில் ஏழு மணிக்குக் கண்விழிக்க நேர்ந்தபோது வானத்தில் சூரியனின் தங்க ரேகைகள் இன்னமும் அகலாமல்’ இருப்பது தினகரனுக்கு உவப்பளிக்கிறது. இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கட்டான் ஆடுவதாகத் தோன்றுகின்றன: ”சற்றே வலுத்துப் போன காற்றில் தென்னங்கீற்றுகள் ‘ஜே.ஜே’ எனக் கோஷமிடுகின்றன. அந்தக் கோஷத்தையும் மீறி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும் மட்டைகளும் பிரிந்து, பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரங்களைக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்கின்றன”.

அதேபோல, பணமே, பொருளே முதன்மையாகக் கொண்டு வாழும் உயர், நடுத்தர வர்க்கத்தினரை எள்ளலுடனும் உணவக சர்வர், பழவண்டி வியாபாரி, சாலையோர சூதாட்டக்காரன் ஆகிய விளிம்புநிலை மக்கள் மீது கருணையுடனும் அணுகுகிறார்.
இருந்தும் சாவு குறித்த விசாரணையின்போது பித்துநிலை கொள்கிறார். அலுவலகத்தில் தமது ஆராய்ச்சி விளையாட்டில் நிம்மதியாக ஈடுபடுவதற்காகத் தமது பதவிக்கும் தகுதிக்கும் குறைவான ‘மெக்கானிக்கலான’ ஒரு வேலையைச் சில மாதங்கள் கேட்டுப் பெறுவது, ஓட்டலில் ஒரு டீயை மணிக்கணக்கில் குடிப்பது, தன்னை அறியாமல் ஒரு மணி நேரமாக நாணயத்தைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பது, பழ வண்டிக்காரனிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கி இரண்டு சுளைகளை இரண்டு நிமிடமா இரண்டு மணி நேரமா என்பதை உணராமல் தெருவிலேயே நின்று தின்பது, பெரியப்பாவின் உயிர் பிரிவதை இரவு முழுவதும் விழித்திருந்து கண் கொட்டாமல் பார்ப்பது, மின்விசிறியில் தூக்குக்கயிறை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தியானம் செய்வது ஆகிய நடவடிக்கைகளால் மனைவி, குழந்தைகள், மேலதிகாரிகள், சக அலுவலர்கள், ஓட்டல் சர்வர், பழ வண்டிக்காரன் மற்றும் சுற்றத்தார் அவரைப் பைத்தியக்காரன் எனக் கூறுகின்றனர்.

எதற்காகவும் தனது பித்துநிலையைக் கைவிட விரும்பாமல் தொடர்ந்து சாவு குறித்த சிந்தனையில் ஈடுபடுகிறார். அலுவலகத்திலும், கடல் குளியலிலும், சாலைகளில் நடக்கும்போதும் மனைவியின் உடலில் இயங்கும்போதும் கனவிலும் நனவிலும் அது தொடர்கிறது. இதற்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்குமா என குதிரை ரேஸுக்குப் போகிறார். சாலையோரச் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசிக்கிறார். தனது பெரியப்பாவின் இறுதி நிமிடங்களுக்காகத் தூங்காமல் காத்திருக்கிறார்.

இவ்வாறாக, சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம்; சாவு என்பவர் கண்காணிப்பாளர்; சாவு என்பது பிரபஞ்சரீதியில் காத்திருப்பது என்றெல்லாம் ஆய்ந்து இடைவெளி என்ற முடிவை நோக்கி தினகரன் நகர்கிறார்.

இறுதியாக, தனது மனைவி பத்மாவின் உதவியுடன் அறையில் துக்குக் கயிறைக் கட்டி அதைப் பார்த்தபடி (தியானம்!?) நீண்ட நேரம் இருக்கிறார்.

இடைவெளிதான். வாழ்விலும் சாவிலும் இடைவெளிதான் இயங்குகிறது. வாழ்வில் உயிருக்கு அனுசரணையான இடைவெளியாகவும் சாவில் முரண்பட்ட இடைவெளியாகவும் இயங்குகிறது என்பதைக் கண்டடைகிறது. முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கு நிரந்தரமானது. அது ஒன்று மற்றொன்றாக மாறி பரிமாண வளர்ச்சியாகவும் அதே நிலையிலும் வைக்கிறதே இடைவெளி வாழ்விலும் சாவிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். இதோ தினகரன் கணிப்பு:

“வாழ்வு என்பதைப் பற்றிய என்னுடைய கணிப்பு இதுதான். எந்தப் பொருளும் அது உயிர்மயம்தான். ...அதில் ... முன்னமேயே இடைவெளி இருந்தால் அதை உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது முரண்படுகிறது. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி.

”இப்போது அவருள் இன்னொரு கேள்வி எழுகிறது.

”ஏன் இப்படி நடக்கிறது?

“தெரியாது!

“அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? ...

“அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பல்வேறு இயற்கை விதிகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது...”

”இடைவெளியே... சாவே உன்னை வணங்குகிறேன்.
....
....
”மண்டியிடு” என்றது சாவு.
“மானசீகமா? உடம்பாலும் கூடவா?”
“மானசீகமாகப் போதும்!”
“அவர் மண்டியிட்டார்.”

இப்படி ஒரு கீழைய ஆன்ம நிலையில் நாவல் முடிகிறது. பொருளாதாரத் தேடல் உட்பட மனிதனின் அறிவியல், ஆன்மிக, தத்துவத் தேடல்களெல்லாம் மரணம் குறித்ததாக, மரணத்தை வெல்வது குறித்ததாக இருந்து வருகிறது. பொதுவாக, மரணம் குறித்த மேற்கத்தியக் கண்ணோட்டம் என்பது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதாக உள்ளது. கீழைய தத்துவ மரபு மரணத்தை முக்தியாக, வீடுபேறாக, பெரு விடுதலையாகப் பார்க்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் கிழக்கும் மேற்கும் மோதலாகி நவீன சிந்தனைகள் உருவாகியதைப் போலவே சாவு குறித்தும் கிழக்கும் மேற்கும் நெருங்கி, நெருங்கி - நெரித்து, நெரித்து மோதலாகிப் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இதன் நீட்சியாகவே எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலைக் காண முடியும். இங்கே, கிரேக்கமும், பௌத்தமும் சாவை ஒப்பீட்டளவில் யதார்த்தமாகக் காண்பது கவனிக்கத்தக்கது. நவீன சிந்தனைகளும் கூட இதையொட்டியே இயங்க முடியும். வாழ்வு என்பது ஒரு முடிவை நோக்கிச் செல்வது; சாவு என்பது வாழ்வை முழுமையாக்குவது. சாவுக்குப் பின் ஒருவன் தனது சிந்தனைகளை மட்டுமே விட்டுச் செல்கிறான். மேலும் அதில் எந்தவித மாற்றங்களைச் செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். அவன் எதை வாழ்ந்தானோ அதுவே நிசர்னமாகிறது. இவ்வாறு அவன் வாழ்வு சாவால் முற்றுப்பெறுவதுடன் முழுமையும் அடைகிறது.

எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அவன் முதிர்ந்து கனியும்போது மெட்டாபிஸிக்கல் எண்ணங்கள் யாரானாலும் தவிர்க்க இயலாததாகிறது. குறைந்தபட்சம், முன்னர் நிலவிய தீவிர வறட்டுப் பொருள் முதன்மைக்கோட்பாடு முன்பு இருந்த தீவிரத்தில் இருந்து தணியவே, அதன் வறட்டுத்தனத்தில் இருந்து நீங்கும் அளவுக்காவது தணியத்தான் செய்கிறது.

எஸ். சம்பத்தைப் பொறுத்தவரை, அவரே கூறுவது போல பசி, காமம், பயம், சாவு போன்ற அடிப்படை விஷயங்களில் உழல்பவர் அல்லது உழன்றவர். குறிப்பாக, சாவு குறித்த ஆராய்ச்சி விளையாட்டைத் தீவிரமாக விளையாடியவர். கடுமையான நோய் வடிவில் காலம் அவர் வாழ்வில் விளையாடி விட்டது துரதிருஷ்டவசமானது.

முன்னர் பார்த்தபடி சாவு குறித்த கீழைய மற்றும் மேற்கத்திய தத்துவ முடிவுகள் மோதலுக்கு உள்ளாதலில் தாக்கம் அவரில் தீவிரம் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேற்கத்திய பொருளாயதக் கண்ணோட்டத்தின் பிடியிலிருந்து சாவை விடுவிக்க முயலும் சம்பத், மறுபக்கத்தில் சாவை சாவுக்குப் பின்பும் நீடிக்கச் செய்யும் கீழைய தத்துவ முயற்சிகளில் இருந்தும் அறுத்து எறிகிறார். முக்தி, வீடுபேறு, மறுபிறப்பு போன்ற சங்கிலிகளில் இருந்து அதனை விடுவித்து சாவைச் சுயமாக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார். சாவு தானாகவே நிகழ்கிறது என்ற உண்மையின் மூலம் இதனை நிரூபிக்கிறார்.

“அங்கு (மேற்கில்) சமயமும் ஒரு பொருளாதாரத் தத்துவத்தின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது” என்று கூறும் சம்பத், “எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தச் சமுதாயம்தான், இந்தியச் சமுதாயம்தான், கடைசியாக மனித இனத்தைப் பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறது” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். கடந்த முப்பது ஆண்டு கால தத்துவ வளர்ச்சி அதாக இல்லாதபோதும் உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான சாவு குறித்த விசாரணை மெட்டாபிஸிக்கல் அணுகுமுறையாக நீடிப்பது தவிர்க்க இயலாததாகிறது.

சாவு என்பது ஒவ்வொரு உயிரியல் வாழ்வையும் நிறைவு செய்யும் விழுமியம். அது முரண்பாடுகளின் பிறப்பாகவும் அழிவாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த உயிர்களும் தப்பிக்க முடியாது. ஜடப் பொருள்கள் கூட அழிவிலிருந்து தப்பிக்க இயலாது. உயிர் வாழ்வதற்குச் சாதகமான இடைவெளியில் இருந்து அதற்கு முரண்பட்ட இடைவெளியை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு முரண் முற்றிய நிலையில் சாவு தானாக நிகழ்கிறது என்கிறார். சகல உயிர்களுக்கும் இயல்பான வழி இது என்பதால் இதை ஏற்பது சிக்கல் அல்ல.

ஆனால், மனிதனைப் பொறுத்தவரை அறிவு குறுக்கீடு செய்கிறது. இங்கு சாவு தானாக நிகழ்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மனித அறிவால் அறிவியல் உருவாகி எண்ணற்ற மனித உயிர்களின் மரணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டாலும் கூட. மனித ஆணவத்தால் சாவு இலட்சக்கணக்கில் முன் தேதியிட்டு நிகழ்ந்து கொண்டிருப்பதை, சாவு தானாக நிகழ்கிறது என ஏற்க முடியவில்லை. தற்கொலையைக் கூட விட்டு விடலாம். ஏனென்றால், வாழ்க்கை என்பது எந்த வகையிலும் யாசகமல்ல. இந்த ஈகை மனதிற்கு எதிரான போராட்டத்தின் தோல்வியே தற்கொலையைத் துணிச்சலாகத் தேர்வு செய்கிறது.

எஸ். சம்பத் இந் நாவலை 1983 - 84 காலகட்டத்தில் எழுதினார். அதன் பின்னர் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில், என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது.
ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் தாமாகவா போயின?
இந்திரா காந்தி உயிர் பறிக்கப்பட்டதும், அதே நாளில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் தாமாகவா நிகழ்ந்தன?

தண்டகாரண்ய காடுகளில் சல்வா ஜுடும் என்ற பெயரில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவாசிகளின் உயிர்கள் தாமாகவா வெளியேறின?

ஈராக்கில், ஆஃப்கனில், குரேஷியாவில், போஸ்னியாவில், சிரியாவில், யேமனில், லெபனானில், பாலஸ்தீனத்தில், சூடானில், காங்கோவில், எகிப்தில் என உலகம் முழுவதும் அற்பாயுளில் பறிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான உயிர்கள் தாமாக வெளியேறியிருக்குமா என்ன?

இக்கேள்விகளும் இந்த நாவலை வாசித்த பின் எழாமலில்லை.
-நன்றி: கல்குதிரை இளவேனிற்கால இதழ் ஏப்ரல் 2014

வியாழன், 12 ஏப்ரல், 2012

கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.


இம் மொழிபெயர்ப்புச் சிறுகதை கூடங்குளம் போராட்டக் காரர்களுக்குச் சமர்ப்பனம். 


கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.


ஹிரோமி கவாகாமி

ஆங்கிலம் வழி தமிழாக்கம்: அப்பணசாமி


[ஹிரோமி கவாகாமி, தற்காலத்தின் முக்கிய ஜப்பான் மொழி எழுத்தாளர். கடவுள் ஆசிர்வதிப்பார் (காமி-சாமா)- 2011 அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை. இது ஜப்பான் ஃபுகிசாமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது. உண்மையில் கவகாமி 'கடவுள் ஆசிர்வதிப்பார்' (காமி- சாமா ) என்ற தலைப்பில் 1993 இலேயே ஒரு சிறுகதை எழுதியிருந்தார். விபத்துக்குப் பிறகு காமி- சாமா 2011 என திருத்தி எழுதினார். அணு உலை விபத்தால் துயருற்றிருந்த ஜப்பான் மக்களுக்கு இது ஆறுதலாயிருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. ஜப்பான் மொழியில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு:  டெட் கூஸென் மற்றும் மோடோயுகி ஷிபாடா. 

இக் கதை குறித்து கவாகாமி கூறியுள்ளது: ஜப்பானில் ஏராளமான கடவுள்கள் உள்ளனர். காற்றின் கடவுள், நீரின் கடவுள், ஒளியின் கடவுள், மலைகளின் கடவுள், வயல்களின் கடவுள், கிணறுகளின் கடவுள், கழிவறைகளின் கடவுள் என ஜப்பான் நிலப்பரப்பு முழுவதும் கடவுள்கள் உள்ளனர். இக் கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுவே காமி - சாமா எழுதக் காரணம். இக் கதையில் கரடிதான் கடவுள்.பின்னர் அணு உலைச் சம்பவம் நடந்தபின் காமி- சாமா 2011 ஆக அதைத்  திருத்து எழுதினேன். இக் கதை கற்பனைதானே. உண்மைச் சம்பவங்கள் இல்லையே என விமர்சிக்கிறார்கள். இக் கதையில் வருபவை உண்மைச் சம்பவம் என நான் கூறவில்லை. அதுபற்றிய அறிவியல் தகவல்களும் எனக்கு முழுமையாகப் புரியாது. ஆனால் எனக்கு ஒரு கோபம் இருக்கிறது. மிகச் சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை இப்படி ஏன் சீர்குலைந்தது என்ற கோபம் எனக்கு உள்ளது. இறுதியில் இக் கோபம் என் மீதே குற்றம் சாட்டியது. இன்றைய ஜப்பானுக்குக் காரணம் நானல்லாமல் வேறு யார்? என்ற கேள்வி எதிரொலித்தது. ]


ஆற்றங்கரை வரை நடந்துவரலாம் என கரடியார் என்னை அழைத்தார். ஆற்றங்கரை இருபது நிமிட நடைதூரத்தில் இருந்தது. இதற்கு முன்பு ஒருமுறை வசந்தகாலம் தொடங்குவதற்கு முன்பாக அப்பாதையில் சுள்ளான்களைப் பார்ப்பதற்காக நடந்திருக்கிறேன், ஆனால், அப்போது கதிரியக்கத் தற்காப்பு உடைகளை அணிந்திருந்தேன். இப்போது மிகவும் வெப்பமாக இருந்தது. 'சம்பவம்' நடந்தபிறகு இப்பாதுதான் முதல் முறையாக மிக மெல்லிய, தோல் தெரியும்படியான சாதாரண உடையை மிக்க மகிழ்ச்சியுடன் உடுத்தியிருந்தேன். என்னுடைய மதிய உணவை முழங்கால் வரையான பூட்ஸுக்குள் போட்டு எடுத்துவந்திருந்தேன். அது ஒருமாதிரியான நடை: சலிப்பைப் போக்கிக்கொள்வதற்கான பெரு நடைக்கும் 
மாலை நேர ஓய்வுநடைக்கும் இடைப்பட்டது. 

அவர் ஒரு, நன்றாக வளர்ந்த கட்டுமஸ்தான ஆண் கரடி. 305 ஆம் எண் அபார்ட்மெண்டுக்கு அப்போதுதான் வந்திருக்கிறார். என்னோடதிலிருந்து கீழ்ப் பக்கத்தில் மூன்று கதவுகள்தான் தள்ளி இருக்கிறது. எங்களுக்குள் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வதற்காக பக்கத்து வீட்டுக்காரர்களான எங்கள் மூவருக்கும் நூடுல்ஸ் தந்து பழக்கம் பிடிக்கும் பழைய வழக்கங்களைக் கரடியார் இன்னமும் கடைப்பிடித்தார். அப்புறமும் ஏதாவது கொடுப்பதற்காக என்ற பெயரிலும் வந்துசெல்லும் இம்மாதிரியான பழக்கங்களை இக்காலத்தில் காணமுடிவதில்லை. அப்புறம் எங்களது தபால்கட்டுகளையும் எடுத்து வந்து கொடுத்தார்.  எல்லாருமே தம்மை விரும்பவேண்டும் என அவர் நினைப்பதாக எண்ணினேன். அப்புறம் நீங்களும் ஒரு கரடிபோன்றே நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அவர் நூடுல்ஸுடன் என் அபார்ட்மெண்டில் வந்து நின்றபோது நாங்கள் இனியும் அன்னியர்களாக நீடிக்கமுடியாது என்பதைக் கண்டுகொண்டாம். 

கதவில் பொறிக்கப்பட்டிருந்த என் பெயர்ப்பலகையைப் பார்த்து "நீங்கள் எக்ஸ் என்ற நகரத்தில் இருந்துதானே வந்திருக்கிறீர்கள், இல்லையா?" என்று கேட்டார்.  "ஆமா," என்று பதிலளித்தேன். "அங்க இருந்துதான்." உடனே ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து பேசத் தொடங்கினார். 'சம்பவம்' நிகழ்ந்த சமயத்தில் அவர் ஒரு மீட்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு உள்ளூர் நகரவாசி  ஒருவர் பெரும் உதவிகள் செய்துள்ளார். அவரது சித்தப்பா ஒருவரின் பெயரின் பிற்பகுதி எனது பெயருடன் பொருந்தியிருந்தது. உடனே, எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து ஆராயத்தொடங்கினோம். கடைசியாக அந்த உதவி செய்தவரின் சித்தப்பாவும் எனது அப்பாவும் ஒன்றுவிட்ட சித்தப்பா- பெரியப்பா மகன்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாக (செகண்ட் கசின்ஸ்) இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தோம். இதுவும் மங்கலான சித்திரமாகத்தான் தெரிந்தது. ஆனால், அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே ஏதொ 'பூர்வ பந்தம்' இருப்பதுபோல கரடியார் என்மீது அன்பைக்கொட்டத் தொடங்கிவிட்டார். அவர் அவ்வளவு பாந்தமாகப் பழகிய முறையில் இருந்து அவர் பழங்காலப் பழக்க வழக்கங்களைக்  கொண்டவர் என்பதுபோலத்தான் தெரிந்தது.  

***
இவ்வாறு கரடியாரும் நானும் சாலையில் இறங்கி எங்கள் நடைப் பயணத்தைத் தொடங்கினோம்.  விலங்குகள் உலகம் பற்றி நான் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அதனால் ஆசியக் கருப்புக் கரடி வகையா, அரக்குக் கரடி வகையா அல்லது மலேய சூரியக் கரடியா என்பதை என்னால் சொல்லமுடியவில்லை. அதை அவரிடமே கேட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் கடுமையாக இருந்துவிடுமோ என அச்சமாகவும் இருந்தது. அவரது பெயர்கூட எனக்குத்  தெரியாது. "நான் உங்களை என்ன பெயர் சொல்லி அழைக்கட்டும்" என நான் கேட்டதும் ஒரு நிமிசம் யோசித்து, சுற்றிமுற்றிப் பார்த்து வேறு கரடியார் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கூறியது: "இப்போதுவரை நான் எனக்கென ஒரு பெயர் இல்லாமல்தான் இருக்கிறேன். இங்கும் வேறு கரடி இல்லாததால் ஒரு பெயர் எனக்கு உண்மையிலேயே அவசியம் என்றும் நினைக்கவில்லை. "நீங்கள்" என்றே அழைப்படுவதையே நான் விரும்புகிறேன். ஆனால் அதை சீன எழுத்துகளைக் கொண்டு எழுதுவதை தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். உண்மையில் நீங்கள் என்னை  உங்கள் விருப்பப்படி எப்படி வேணாலும் அழைக்கலாம். அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன்."

ஆமாமாம். இது ரொம்பப் பழமையான கரடிதான். பேச்சின் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆர்வமா முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

ஒரு காலத்தில் வயல்வெளிகளாக இருந்த நிலத்தின் ஊடாக ஆற்றுக்குச் செல்லும் சாலை இருந்தது. கதிரியக்க நச்சு அகற்றுதலுக்காக வந்தவர்கள்தாம் அங்கு விளந்திருந்த அனைத்து நெற்பயிர்களையும் தற்செயலாகப் பார்த்தனர். எப்படியிருந்தாலும் இப்போது அந்த பூமி மினுமினுக்கும் கூம்புத்தூன்களால் நிறைந்துள்ளது. அங்கு அவ்வளவு வெப்பம் இருந்தபோதும் வேலை பார்த்தவர்கள் கதிரியக்கத்  தற்காப்பு உடைகளிலேயே இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தண்ணீரால் நனையாத முகமூடிகள் இடுப்புவரை நீண்டிருந்தது. 'சம்பவம்' நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட இப்பகுதிக்குள் நுழைவது முழுமையாகத் தடுக்கப்பட்டிருந்தது; சாலைகளில் காணப்பட்ட ஆழமான வெடிப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில்தான் சரளைக்கல் சாலை புதிதாகத் திறந்துவிடப்பட்டிருந்தது. கிரவுண்ட் ஜீரோ (அணு உலைப் பகுதி) மூடப்பட்டிருந்தும்கூட ஆச்சரியமளிக்கும் வகையில் கணிசமான கார்கள் எங்களைக் கடந்து சென்றன. அவர்கள் நெருங்கி வரும்போது தயங்கி வேகத்தைக் குறைத்து அப்படியே விலகி அரைவட்டமாகச் சுற்றிக்கொண்டுதான் சென்றனர். வேறு ஒரு நாதிகூட வெறும்காலால் நடக்கவில்லை. 

"நாம் தற்காப்பு உடை அணியாததால் அவர்கள் இவ்வாறு விலகிச் செல்கிறார்களாக இருக்கலாம்" என்றேன். கரடியார் நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒரு கர் சத்தம் மட்டும் எழுப்பினார். நான் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதை அதில் புரிந்துகொள்ள முடியவில்லை. "இந்த வருசத்தின் ஆரம்பத்திலிருந்தே அதிக அளவிலான கதிரியக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான சிறப்புக் கவனங்களை மேற்கொண்டு வருகிறேன், எனது உடலில் இதுவரை சேர்ந்துள்ள கதிரியக்க அளவைப் பார்த்தால் இன்னமும் கொஞ்ச கதிரியக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியும். மேலும் இப்பகுகுதியில் நாம் அதிகக் காற்றை எதிர்பார்க்க இயலாது என்று ஸ்பீடி (தெ சிஸ்டம் பார் பிரிடிக்சன் ஆப் என்விரோன்மெண்டல் டோஸ் இன்பர்மேசன்) கணித்திருக்கிறது." 

எனது வெளிப்படையான விளக்கத்துக்கு ஒரே குலுக்கலோடு மட்டும் கரடியார் நிறுத்திக்கொண்டார். கரடியார் காலால் நடக்கும்போது லயத்துடன் எழும் சரக் சத்தம் தவிர அப் பகுதியில் வேறு எந்தச் சத்தமும் எழவில்லை. 

ரெம்பவும் உஷ்ணமாக இருக்கா என நான் கேட்டேன். 

"இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். இந்த சரள் பாதையில் நடப்பதுதான் சோர்வாக இருக்கிறது, மற்றபடி ஓ.கே தான். ஆறும் அவ்வளவு தூரம் இல்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி. அது உங்களின் அன்புதான்.. உங்களுக்கு ரெம்ப வெப்பமா இருந்தா தோள் மேல நடக்கலாம். என் உடம்பு உங்க உடம்பவிட ரெம்பப் பெரிசு. அதனால் உங்களவிட மிக அதிகமான கதிரியக்கத்த என்னால தாங்கமுடியும். இதுக்கு என்ன அர்த்தமுன்னா கதிரியக்க அளவு அதிகமா உள்ள இடத்துலகூட என்னால வெறும் காலால் நடக்க முடியும்.. அது இந்த சூடான பாதையைவிட குளிரா இருக்கும். நாம போவமா?"

அவர் இப்படி என்னை உபசரித்தார். நான் பெரிய தொப்பி அணிந்திருந்தேன். அதனால் வெப்பத்தில் இருந்து என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே வேண்டாம் என்றேன். உண்மையில் அவர்தான் சரள் பாதையில் இருந்து விலகிச் செல்ல விரும்பியிருக்கலாம். இருவரும் அமைதியாக நடந்தோம். 

ஆற்றில் தண்ணீர் செல்லும் இழக்கமான சத்தம் அடிக்கடி கேட்டது. நாங்களும் நடையை எட்டிப்போட்டதால் ஆறு சீக்கிரமே வந்துவிட்டது. ஆற்றங்கரையில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தண்ணிக்கு ரெம்பப் பக்கத்தில்  இரண்டு மனிதர்கள் நின்றுகொண்டிருந்தனர். 'சம்பவம்' நடப்பதற்கு முன்பு என்றால் இந்த  இடம் மிகவும் ரம்மியமானதாக  இருக்கும். மக்கள் நீந்திக்கொண்டும் மீன் பிடித்துக்கொண்டும் இருப்பார்கள். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்  இந்தப் பகுதி முழுவதுமே ஒரு குழந்தையைக் கூட காண முடிவதில்லை. 

நான் கொண்டு வந்த பையை கீழே வைத்துவிட்டு, துண்டால் முகத்தை தேய்க்கத் தொடங்கினேன். கரடியாருக்கு நாக்குத்  தள்ளிவிட்டது. மெதுவாக மூச்சு வாங்கினார். நான் அங்கே நிற்பதைப் பார்த்து அந்த இரண்டு மனிதர்களும் எங்களை நோக்கி வந்தனர். இருவருமே தற்காப்பு உடை அணிந்திருந்தனர். ஒருவன் முழங்கை வரை நீளமான கையுறை அணிந்திருந்தான். மற்றவன் சன்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தான். 

"அது ஒரு கரடி, இல்லே.." என சன்கிளாஸ் கண்ணாடி கூறினான். 

"அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கையுறைக்காரன் கூறினான்.

"கரடிகள் ஸ்டிரோண்டியம், புளுட்டாணியக் கதிரியக்கம்கூட தாங்கும்."

"நீ என்ன நினைக்கிறே? அவை கரடிகள்தாம்."

"ஆமா. அதனால அவை கரடிகளாகத்தான் இருக்கணும்."

"யா.. அவைகள் கரடிகள்தாம்."

அவர்கள் இங்கும் அங்குமாக சில தடவைகள் நகர்ந்து நகர்ந்து பார்த்தனர். கண்னாடிக்காரன் திருட்டுத்தனமாக எனது முகத்தைப் பார்த்தான். ஆனால் கரடியை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். நீளக் கையுறைக்காரன் அவ்வப்போது தன் கைகளைக் கரடியின் வயிற்றில் படரவிட்டு ரோமத்தைப் பிடிங்கினான். இறுதியாக "அதனால் இது கரடிதான்" என மீண்டும் ஒரு தடவை சொல்லிக்கொண்டு முதுகைத் திருப்பிக்கொண்டனர்.

"நல்லவேளை," என அவர்கள் சென்ற பிறகு ஆசுவாசமடைந்தார் கரடியார். "அவர்கள் நல்லாவே புரிந்துகொண்டார்கள் என நினைக்கிறேன்."

நான் எதுவும் சொல்லவில்லை.

"எனது உடலில் அனுமதிக்கத் தக்க கதிரியக்க அளவு மனிதர்களைவிட ஓரளவுக்கு அதிகமாக இருக்கலாம்,  அதனால ஸ்டிரோண்டியம், புளுட்டாணிய கதிரியக்கத்தை எனது எனது உடல் ஏற்றுக்கொள்ளும் என அர்த்தமில்லை, உங்களுக்கு இது தெரியுமா? கடவுளே! அவர்கள் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்? "

அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே, கரடியார் வேகமாக தண்ணிக்குச் சென்றுவிட்டார்.

அங்கு குட்டி, குட்டி மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன. நதியின் குளிர்ச்சி என் முகத்தில் வீசியது. ஒவ்வொரு மீனும் மிகக் குறுகிய பகுதிக்குள்ளேயே தண்ணிப்போக்கிலும், எதிர்த்தும் நீந்திக்கொண்டதை மிக நெருக்கமாகவே என்னால் பார்க்க முடிந்தது. அதனால் நதியே நீளமான, குறுகிய செவ்வக வடிவக் குட்டை போலத் தெரிந்தது. இத்தகையை குட்டைகள் தனது கரையையும் கொண்டிருந்தன. கரடியாரும்  தண்ணீரை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் என் கண்ணில் பட்ட அதே விஷயங்கள்தாம் அவருக்கும் தெரிந்ததா? ஒரு வேளை ஒரு கரடியின் கண்களுக்குத் தண்ணீருக்கு அடியில் உள்ள உலகம் வேறுமாதிரியாகத் தெரியலாம். திடீரென யாரோ தண்ணீருக்குள் குதிக்கும் சத்தம் கேட்டது. கரடியார்தான் தண்ணீருக்குள் சீறிப் பாய்ந்தார். நதியின் குறுக்காகப் பாதித் தூரம் சென்றதும் நீந்துவதை நிறுத்தி, தனது வலது காலை நீரோட்டத்துக்குள் செலுத்தி ஒரு மீனை இழுத்தார். அது கரையோரத்தில் நாங்கள் பார்த்த மீன்களைவிட மூன்றுமடங்கு பெரியது. 

"நிச்சயமாக இது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். பந்தயம் வச்சிக்கலாமா?" கரையில் ஏறியதும் கரடியார் கேட்டார். "எனது கால்கள் தாமாகவே முன்னேறியது. நல்ல வலுவான அளவு, இல்லையா?"

அந்த மீனை நான் நன்றாகப்பார்க்கும்வகையில் தூக்கிக்காட்டினார். அதன் செதில்கள் சூரியஒளியில் மின்னின. முன்னர் வந்த அதே இரண்டு மனிதர்கள் எங்கள் திசையைக் காட்டி ஏதோ ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டிருந்தனர். கரடியார் வெற்றிப் புன்னகை செய்தார். 

"இவை பெரும்பாலும் ஆற்றின் அடியில் வளரும் பாசிகளையே உணவாகக் கொள்ளும்" என்றார். "ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கேயும்ஏராளமான சீசியம் (கதிரியக்கம்) சேகரிக்கப்பட்டிருக்கும்."

கரடியார் தனது பையைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு துணி மூட்டையை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சிறிய கத்தியையும், காய்கறி நறுக்கும் பலகையையும் உருவினார். மிகவும் நேர்த்தியாக மீனை நறுக்கி, துண்டுகளாக வெட்டினார். பின்னர், தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரால் நன்றாகக் கழுவினார். அவற்றின்மீது கல் உப்பைத் தாராளமாகத் தூவி ஒரு பெரிய இலை மீது வைத்தார். 

"திரும்பும்போதும் அது சாப்பிடத் தயாராக இருக்கும், வீட்டுக்குப் போகும்போது சாப்பிடலாம்" என்றார். "ஆனால் நீங்கள் இதைச் சாப்பிடவில்லையென்றால் நாம் இருவரும் இங்கு வந்து சென்றதன் நல்ல நினைவாக, இப்பயணத்தின் நினைவுச் சின்னமாக இந் நினைவுகள் இருக்கும்."

இக் கரடியார் ஒவ்வொன்றையுமே எவ்வளவு சிறப்பாகச் சிந்திக்கிறார் என ஆச்சரியத்தோடு எண்ணினேன்.

ஒரு பெஞ்சின்மீது ஒரு துணியை விரித்து அதன்மீது உட்கார்ந்து ஆற்றைப் பார்த்தபடி நாங்கள் கொண்டு வந்த மதிய உணவை வெளியே எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கரடியார் ப்ரெஞ்ச் ரொட்டித் துண்டுகளை எடுத்து அதனுள் இறைச்சிச் சாஸ் மற்றும் முள்ளங்கிகளை வைத்து கடித்துத் தின்றது. நானோ சோற்று உண்டைக்கட்டியின் நடுவே ஊறுகாய் வைத்து எடுத்து வந்திருந்தேன். சாப்பிட்ட பிறகு எங்களுக்கு ஆளுக்கொரு ஆரஞ்ச் இருந்தது. அது ஒரு சுகமான உணவு.

சாப்பிட்டு ஆனதும் "நான் உங்கள்து ஆரஞ்ச் பழத்தைஉறித்துத் தரவா?" என்று கேட்டார். நான் அதை அவரிடம் கொடுத்தேன். சுளைகளை என்னிடம் தந்து அவரும் தன்னியல்பில் அவசர அவசரமாகச் சாப்பிட்டார். 

கரடியார் சென்று மீனைப் பார்த்துவிட்டு கத்தி, பலகை, கோப்பை அனைத்தையும் தாம் கொண்டுவந்திருந்த பாட்டில் தண்ணீரால் கவனமாகக் கழுவினார். காய்ந்ததும் அவரது பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து என்னிடம் தந்தார். 

"தயவுசெய்து படுக்கும்போது இதை தலைக்கு வைத்துக் கொள்ளுங்கள், நாம் வந்தே இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. மேலும் கதிரியக்கமும் குறைவாகத்தான் இருக்கிறது, அதே சமயம்.. நானும் ஒரு சிறு நடை செல்ல வேண்டும். அதற்கு முன்பாக உங்களுக்கு நன் ஆராரோ.. பாடட்டுமா?" என ஆர்வமுடன் கேட்டார். 

எந்தப் பாட்டும் இல்லாமலே நான் தூங்கிவிடுவிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டேன். அவர் அதிருப்தி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நொடியே தனது நடையைத் தொடங்கியிருந்தார். 

நான் கண் விழித்தபோது மரங்களின் நிழல் நீண்டிருந்தது. கரடியார் பெஞ்சில் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மெலிதாக குறட்டை விட்டுக்கொண்ட்ருந்தார். அவர் மீது ஒரு துண்டுகூட போர்த்தப்படவில்லை. எங்கள் இருவரைத் தவிர அப் பகுதி சூன்யமாக இருந்தது. அந்த இரண்டு மனிதர்களை இப்போது எங்குமே காணோம். துண்டை கரடியார் மீது போர்த்திவிட்டு உப்பிடப்பட்ட மீன் பக்கமாகச் சென்றேன். ஒரு மீன் இருந்த இடத்தில் இப்போது மூன்று மீன்கள் இருந்தன. 
***
"என்ன அருமையான பயணம்" அபார்ட்மெண்ட் 305 முன் நின்றுகொண்டு கரடியார் கூறினார். தன் பையில் இருந்து கதிரியக்கம் அளவிடும் கருவியை (ஜீசெர் கவுண்டர்) வெளியே எடுத்து அவர் உடல் மீது ஓடவிட்டு, என் உடல்மீதும் ஓடவிட்டார். நன்கு அறிந்த அதே பீப் ஒலியைக் கேட்டேன். "இதுபோன்று மீண்டும் செய்ய நேரும் என நம்புகிறேன்."

நான் ஆமோதித்தேன். உப்பு மீன் மற்றும் அனைத்துக்கும் கரடியாருக்கு நன்றி தெரிவிக்க முயன்றும் அவர் அதை ஏற்கவில்லை.

"அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை" என்றார். 

"அப்புறம், பிறகு..." என நான் விடைபெற முயன்றேன். 

"நல்லது" கூச்சத்துடன் மறுத்தார். 

அவர் செல்வார் என நான் காத்திருந்தேன். அவர் காலை நகர்த்தியபடியே நின்று கொண்டிருந்தார்.மனம்போக மறுத்தது. உண்மையிலேயே மிகவும் அற்புதமான கரடியார். அவர் தொண்டையில் இருந்து ஆழமான சத்தம் கேட்டது. அவர் பேசும்போது முற்றிலும் மனிதக் குரல் கேட்டது. ஆனால் இருமும் போதும் செருமும் போதும் அல்லது சிரிக்கும்போதும் உண்மையான கரடி போல இருந்தது. 

"நாம் தழுவிக் கொண்டால் ஒன்றும் தப்பில்லையே?" அவர் இறுதியாகக் கேட்டார். "நான் எங்கிருந்து வந்தேனோ அங்கு,  பிரியும் நேரத்தில் இப்படிச் செய்தால் மிகவும் நெருக்கமாக உணர்வோம். இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, வேண்டாம்."  

நான் சம்மதித்தேன். உண்மையில் கரடிகள் குளிப்பதில்லை என்பதால் அவரது உடலில் அதிகக் கதிரியக்கம் இருக்கக்கூடும். நாட்டின் இப்பகுதியில்தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது தொடக்கத்தில் இருந்தே எனது முடிவு என்பதால் என்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை.

கரடியார் ஓரடி முன்னால் வந்து இரு கைகளையும் அகல விரித்து எனது தோள்களைத் தழுவினார். அவரது கன்னத்தை என் கன்னத்தின் மீது வைத்து அழுத்தினார். கரடியின் வாசனையை என்னால் உணரமுடிந்தது. மறு கன்னத்தையும் என் மறு கன்னத்தின் மீது அழுத்தினார். மீண்டும் என்னை முழுமையாகத் தழுவினார். நான் எதிர்பார்த்ததைவிட அவரது உடல் குளிர்ச்சியாக இருந்தது. 

"எனக்கு வாய்த்த மிகவும் அபூர்வமான காலம் இது. எங்கோ தொலை தூரத்துக்கு பெரும்பயணம் சென்று வந்ததுபோல உணர்கிறேன். கரடியர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஓ, ஆமாம். உப்பு மீன் நன்றாக வரவில்லை. சாப்பிட விரும்பவில்லை என்றால் நாளை அதை நீங்கள் வீசிவிடலாம்."

என் அபார்ட்மெண்டுக்குள் சென்றதும் சுற்றப்பட்டிருந்த உப்புமீனை ஷூ ஸ்டாண்ட் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். தலைமுடி, உடல் எல்லாம் கவனமாகக் கழுவித் துடைத்துவிட்டு படுக்கச் செல்லும் முன் நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். ஒவ்வொரு இரவும் போல அன்று நான் பெற்ற கதிரியக்கத்தின் அளவு குறித்த என் மதிப்பீட்டைப் பதிவுசெய்தேன்: வெளி உடல் மீது முப்பது மைக்ரோ- சீவெர்ட்டுகள்; உடலின் உள் பாகங்கள் கிரகித்தது பத்தொன்பது. ஆண்டுமுழுவதும் இதுவரை மொத்தமாக வெளி உடலுக்கு 2,900 மைக்ரோ - சீவெர்ட்டுகள்; உள் பாகங்கள் 1,780 மைக்ரோ- சீவெர்ட்டுகள். கரடியார் எவ்வளவு கதிரியக்கம் பெற்றிருப்பார் என்ற சித்திரத்தை வரைய முயன்றேன். அது என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எப்படி இருந்தாலும் அது ஒரு அருமையான நன்னாள். 

நன்றி: 
தீராநதி இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 2012