சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சென்னை 376

இதுவும் சென்னை முகம்

பொதுவாக, சென்னையில் மனிதர்கள் ஈரம் அற்றவர்கள், நடு ரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்துகிடந்தாலும், நாம் பார்வைப்பொருள் மட்டும் தான்; உதவிக்கு ஒரு நாதிகூட வராது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.

1980கள் மத்தியில் ஈரோடு மாவட்டம் பவானியில் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். பவானி கோட்ட வளர்ச்சி –பிடிஓ- அலுவலகத்தில் எனது மூத்த சகோதரர் பணியாற்றினார். வீடு, பவானி –சித்தோடு சாலையிலுள்ள ராயப்பாளையம் கிராமம். இந்தக் கிராமம் முழுவதும் கிணறு தோண்டும் தொழிலை மேற்கொள்ளும் ஒட்டர்கள் சமூகம். அருமையான மனிதர்கள். அவர்களுக்கு நியாயம் தவிர வேறு தெரியாது. 

சில மாதங்களில் பவானிக்கே வீடு மாறினோம். நாங்கள் குடியேறிய சில நாள்களில், ஹவுஸ் ஓனர் வீட்டில் ஒரு துயர சம்பவம். அந்த வீட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதி சென்னை போயிருக்கிறார்கள். அங்கு மயிலாப்பூர் பகுதியில் எதிர்பாராமல் சாலை விபத்தில் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவிக்கு ஒரு நாதியும் வராததால் ஸ்பாட்- டெட். இச் செய்தி அந்தக் குடும்பத்தை எப்படிப் புறப்பட்டது என்பதைக் கண்டேன்.

இதனால் சென்னை நகரம் மீதான எனது கொலைவெறி மேலும் அதிகமானது. சென்னை - மனிதர்கள் வாழும் ஊரே இல்லை எனத் தீர்மானமாக இருந்தேன்
ஆனால், விதி அதே பவானியிலிருந்து சென்னைக்கு அதுவும் அதே மயிலாப்பூருக்கு விரட்டியது. 

கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். மேற்கூரியவாறு சென்னை வாழ் மக்களுக்கு ஈரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இரு நேர் எதிர் அனுபவங்கள்.
கண் எதிரே ஒரு உயிர் துடிப்பதையும் ஒரு வேடிக்கைக் காட்சியாகப்பார்த்து கடந்து சென்ற நாகரிகக் கூட்டத்தையும் பார்த்துக்கிறேன். நேர்மாறாகத் தமது வேலையை மறந்து அந்த உயிரைக் காப்பாற்றிய சம்பவங்களையும் பார்த்துக்கிறேன். அது நீங்கள் எங்கு விழுந்துகிடக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

குழாயும் சொக்காயும், டையும், பூடுசும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வர்க்கம் என்றால் அக் காட்சி அன்று லஞ்ச் டைமில் அரட்டைக்கான ஒரு மேட்டர்தான் அது. அதுவே ரிக்‌ஷாக்காரர், பூக்காரம்மா, மீன்காரம்மா, ஆட்டோக்காரர் அருகமையில் இருந்தார்கள் என்றால் நீங்கள் யோகம் செய்தவர்கள்.

என்னால் குறைந்தது நூறு சம்பவங்களையாவது கூறமுடியும். அடிபட்டுக் கிடப்பவர்களை தூக்கி ஓரம் போட்டு சோடா அதுவும் பன்னீர் சோடா வாங்கிக் குடிக்கவைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்து, வீட்டு ஆட்கள் முகவரி அல்லது அருகிலுள்ள போன் நம்பர் வாங்கித் தகவல் சொல்லி, அவர்கள் வரும்வரை காத்திருந்து பதற்றத்தோடு வருபவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது அடிப்பட்டுக் கிடந்தவரின் உறவினர் ‘எவ்வளவு செலவாச்சு’ எனக் கேட்டு பர்ஸைத் திறக்கும்போது ‘பரவால்ல சார், நான் வூந்து கெடந்தால் யாருனாச்சும் செலவளிக்க மாட்டாங்களா, வுடு சாரே’ என அசால்டாகச் சொல்லும்போது விக்கித்து நின்ற நாகரிக வர்க்கத்தை நிறையப் பார்த்திருக்கிறேன்..
இதைவிட நெகிழ வைத்த சம்பவம்.

1990 வாக்கில் அதே மயிலாப்பூரில் இருந்து 12பி யில் முரசொலி அலுவலகத்துக்கு சென்ற ஒரு காலை நேரம். பாண்டிபஜாரில் செக்கிங் ஏறினர். ஒரு பையன் – அவனும் பட்டணம் பிழைக்க அந்தவன். 20-22 வயசு இருக்கும். செக்கிங் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்டான். அழாத குறையாக செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினான். தான் ஒரு இண்டர்வியூவுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் டிக்கெட் எடுக்கவில்லையென்றும் இந்த இண்டர்வியூவில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என நம்புவதாகவும் தயவு செய்து மன்னித்துவிடும்படியும் கெஞ்சியதோடு தனது சான்றிதகழ்களையும் இண்டர்வியூ கடிதத்தையும் காண்பித்தான். இண்டர்வியூ கடிதத்தில் தேதி, நேரம் சரியாக இருந்தது. ஆனால், கடமை உணர்வாளர்களுக்கு இந்த நியாயம் எதுவும் ஏறவில்லை. விதிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினர். ஒன்று அபராதம் செலுத்து; இல்லையானால் ஸ்டேஷனுக்கு வா என்பதுதான் அவர்கள் பதிலாக இருந்தது. ஒட்டு மொத்த பஸ்ஸூம் வேடிக்கை பார்த்தது. ஒரு ஆளுக்காக இத்தனை பேர் சிரமப்படறாளேன்னு முனகல் வேறு. நான் செக்கிங் ஆளுங்களிடம் பேசிப்பார்த்தேன். மசியவில்லை. நாமே அபராதம் கட்டித் தொலைக்கலாம் என்றால் கையில் தம்பிடி கிடையாது. இந்த இக்கட்டமான நிலமையில் பெண்கள் பகுதியில் சீற்றம் பாய்ந்து வந்தது.

‘அதான் அந்த கொய்ந்த சொல்லிக்கினே கீது.. நீ இன்னாமோ கதை பேசிக்கினுகீறியே.. சர்தா விடுப்பா.. கொய்ந்த காசு இல்லாம இன்னா பண்ணும்.. நம்ம எல்லோரும் ரொம்ப யோக்கியமாட்டு நின்னுக்கிணு கீறோம்’னு மீன் விற்கும் பெண்கள் எழுந்து குரல் கொடுக்கத்துவங்கினர். 

அவர்கள் கூறிய நியாயம் புதுமாதிரியாகவும் இருந்தது.

‘பெனால்டி எம்மாம்னு சொல்லு நாங்க அல்லாரும் சேந்து குடுக்குறோம். ஆனாக்க இப்ப நாங்களும் இல்லன்னு வச்சுக்கோ. அந்தக் கொய்ந்தய பரீட்சிக்கு அனுப்ப மாட்டியா. அது பாவம் படிச்சு வேலை இல்லாமல் பட்டனம் வந்து அலையுது. இந்த நிலமயில ஒம் பிள்ளைய நெனச்சுப் பாரு’ என்றனர்,.

செக்கிங் ஆளுங்க அந்தப்பையனை ஒன்றும் செய்யாமல் அவன் போகும் இடத்துக்கு தாமே ஒரு டிக்கெட் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றனர்.
மனித ஈரத்திலும் சார்பு நிலை இருக்கிறது; சாதி இருக்கிறது; வர்க்கம் இருக்கிறது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)

இணையமும் இலக்கியமும்

(இணையத்தில் இலக்கியத்தின் விரிவு குறித்து 2012 இல் வெளியிடப்பட்ட குறிப்புகள்)

எல்லைகள் தாண்டிப் பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமுதாயமும், அதன் பாலாடையான படைப்பாளிகளும், சான்றோர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலகளாவிய தமிழ் நிகழ்வான இந்தத் தமிழினி 2000 உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாம் அமர்வான ‘இணையம்’ தொடர்பான அரங்கில் ‘இணையமும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தொழில் நிமித்தமாக, நேர அவகாசமின்மையால் கட்டுரை தயாரிக்க முடியாமைக்கும், எனவே, எனக்கு அளித்த தலைப்பு தொடர்பாக வாய்மொழியாகப் பேசுவதற்கும் இந்த அவை மன்னித்து அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம், புதுவை மற்றும் இவையல்லாத பிற மாநிலங்கள், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பர்மா, தென் ஆப்பிரிக்கா, இன்னபிற நாடுகள் என விரிந்துள்ள தமிழர்கள் தம் சமுதாய நிகழ்வுகள், படைப்புகள், ஆய்வுகள், அரசியல், சமூகம், அறிவியல், பண்பாட்டுநிகழ்வுகள், வரலாறுகள் என, கடந்த ஒரு நூறாண்டுகள் குறித்த ஆய்வு நடத்தவும், கணக்கெடுக்கவும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தமிழர்களை ஒருங்கிணைத்துச் செய்யப்படும் நிகழ்வு இது. தமிழர்களின் சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கும் வாய்ப்புள்ள இரு அரங்குகள் நிகழ்கின்றன. தமிழர்கள் மீதான சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள், பேராளர்கள் பெரும்பாலும் படைப்பிலக்கிய ஆளுமை கொண்டவர்கள். ஆழமான, விரிந்த ஆய்வு நோக்கும், அலசல்களும் கொண்டவர்கள், பல கண்ணோட்டங்களுடன் கடந்த காலத்தில் தமது சுவடுபதித்தவர்கள்.

இது, அரசு சாராமல், அரசு மட்டுமே செய்யக்கூடிய ஒரு நிகழ்வைத் தமிழ்ச் சமுதாயமே, தனக்குத் தானாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்வு.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தனியார் நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டியது அவசியம்தான். என்னைப் பொறுத்தவரை கலை – இலக்கிய வெளிப்பாடுகளுக்கும், பரவலுக்கும் இன்றைய  தமிழ்ச்சூழல் பாசத்துக்கு நடுவே இதுபோன்ற கொடுக்கல் – வாங்கல்கள் நேர்மையே! தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய பரிமாணங்கள் மாறியிருக்கின்றன. பாளம், பாளமாகப் பிரிந்து கிடந்த தமிழ்த் தீவுகள் மத்தியில் மிக நீண்ட தகவல் இடைவெளி நிலவி வந்தது.

இங்கிருந்து ஈழத்துக்கோ, சிங்கப்பூர் – மலேசியாவுக்கோ ஒரு தகவல் சொல்வது, சேர்வதும் காலங்கடந்ததாக இருந்தது. இடையில் பல அரசுகள்; பலவிதமான அரசுகள். இவற்றுக்குஇடையே கலாசார பரிவர்த்தனை இல்லை; இலக்கிய ஊடாட்டங்கள் இல்லை; கருத்து கொடுக்கல் வாங்கல் இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் இது மேலும் பரிமாணம் கண்டது. தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிய படிப்பாளிகள், கூலிகள் ஒரு பக்கம்; சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், சிதறிவிட்ட அகதிச் சமுதாயமாக உலகம் முழுவதும் பிடுங்கி நடப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மறுபக்கம். இப் புதிய சூழ்நிலையில், ஏற்கனவே நிலவிய தகவல் இடைவெளி குறிப்பாக மேற்கூறிய தமிழ்ச் சமுதாயங்களுக்கு பெரும் சோகமாக அழுத்தியது.
இந்த நேரத்தில் என் தேசம் எப்படி உள்ளது? நான் வாழ்ந்த தெருக்களிலும் வீடுகளிலும் என்ன நடக்கிறது? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் தோழர்களும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்றறியமுடியாத கையறு நிலை.
சிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழகத்தை தமது தாயகமாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்புகள் கொட்டிக்கிடப்பதாக நம்புகிறார்கள். இங்குள்ள வறுமை, ஏழ்மையைவிட பண்பாட்டுச் சுதந்தரம் அவர்களுக்கு உயர்ந்ததாகப் படுகிறது.  எனவே, காலம் கடந்துவந்தாலும் எந்தவொரு தகவலும் அவர்களுக்கு ஆர்வமூட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக வேறு நாடுகளில் பிழைப்பு நடத்தும் இந்தியத் தமிழர்களின் இளைய தலைமுறை தமது தாய்மொழியாம் தமிழை மறந்துவருகிறது. இது அவர்களுக்குக் கவலையெற்படுத்துகிறது.
இப்படி, பல நூற்றாண்டுகளாக நிலவிய காலத் தனிமை ஒரு தகவல் தொழில்நுட்பப்புரட்சி மூலம் தகர்க்கப்படுகிறது. அது இணையம். இதற்கு அரசு சார்பு கிடையாது. அரசியல் சாயம் கிடையாது. யாரும் எங்கும் பயன்படுத்தக்கூடியது. இதன் மையம் யாருக்கும் உடமையானதல்ல என்று கூறப்படுகிறது. உலகமயமாதல் சூழலில் எல்லோர்க்கும் ஏகபோகமாகும் கருவி. இதனை, புலம் பெயர் தமிழர்கள் கண்டுகொண்டனர். இதுவேதான் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இணையம் தமிழில் உலகமயமானதின் காரணி.

தமிழைக்கணினிமயப்படுத்துவதில் புலம்பெயர் சூழல் தமிழர்கள் பெரிதும் பாடுபட்டு வெற்றி கண்டனர். இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழர்கள் ஒரு அரங்கில்கூட முடிந்ததற்கு இணையம் ஒரு உறவுப்பாலமாகச் செயல்பட்டிருக்கிறது. இதனைப் பலரது உரைகள், கட்டுரைகளிலிருந்து அனுபவமாக உணர முடிகிறது.  இணையம் அதன் தன்மையில் இன்று அர்த்தமடைந்திருக்கிறது. இணையம் என்ற இந்தக் கருவி தகவல் ஏகபோகத்துக்கு எதிரானது. தணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. இன்னும் மையப்படுத்துதலுக்கும் எதிரானது. இணைய வெளி அநாதியானது. இங்கு அளவில்லை; அகல எல்லை, சூழல் எல்லை கிடையாது. இதுவரையில் கூறப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் இணைய வெளியில் புகுத்த முடியும் – எழுத்தாக, படமாக, படிமமாக, குரலாக, ஒளியாக.


நிகழ்காலப் பதிவுகளிலும் புதிய பரிமாணங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. எப்படி, காலந்தோறும் ஊடகங்கள் நிகழ்காலப் பதிவில் புதிய பரிமாணங்களையும், புதிய மொழியையும் உருவாக்கி வந்துள்ளதோ அதைப் போல, மேலும் வீரியத்துடன். இவையெல்லாம் இணையக் கருவியின் மக்கள் பயன்கள். குறிப்பாக தமிழுக்கு, தமிழ்ச் சூழலுக்கு உகந்த காரியங்கள். இந்தக் கருவியின் கெட்ட செயல்கள் வேறு, வேறு மொழிகளில் தமது பாதிப்புகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய கருத்துகளின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் தமிழிலக்கியத்தில், இணையத்தின் ஊடாட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். வாய்மொழி, சைகை, கூத்து, பாட்டு, சுவடி, அச்சு எனப் புதிய – புதிய  ஊடகங்கள் வழியாக இலக்கியமும், கலையும் பயணப்பட்டு வந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் நிகழ்ந்துவந்த கலை இலக்கியப் பரிவர்த்தனை, புதிய, புதிய ஊடகங்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களை விரைவில் அடையும் வகையில் மாறியது. இன்று இணையம் ஒரே நொடியில் உலகம் முழுவதும் பரிவர்த்தனை கொள்ள சதா தனது பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது.

குறைந்த பிரதிகள் அல்லது சிறிய குழு மட்டுமே நுகர்வோராக இருந்த காலத்தில், இலக்கண சுத்தமும், உச்சரிப்பு நேர்த்தியும், தாள – லய இசை நினைவுகளுமாக படைப்பு பயணம் கொண்டிருந்தது. இந்த அழுத்தங்கள் மூலம் படைப்பு தன் நேர்த்திகளைப் பாதுகாத்துக்கொண்டது. அது – அதுகோரும் மொழியைக் கொண்டிருந்தது. பின்னர் உரைகள் வந்தன. இலக்கணமும் உரைகள் கொண்டன. அதற்கு வியாக்கியானங்களும் சேர்ந்தன. அது அச்சு ஊடகம் வழியாக விரிந்தது. அச்சில் கவிதை வந்தது. ஓவியம் வந்தது. பல பிரதிகள் கண்டன. புதினமாக நாவல் வந்தது. மொழிக் கலப்பு மாறியது. இலக்கணமறியா கொச்சை மொழி, கூத்திலிருந்து இலக்கியப் படைப்புக்குச் சேர்ந்தது. பிரதிகள் நாடகக்குழுக்களை உருவாக்கின. பல இலக்கியப் படைப்புகள் நாடக மேடைகள் கண்டன.


பின்னர் மலினப் பதிப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பெருந்திரளை அடையும் ஊடகங்கள் வந்தன. அவை அதிகார மையங்களோடு பிணைக்கப்பட்டன. எனவே போலிப் படைப்புகள் குவிந்தன. ஈவு இறக்கமற்ற ஆதிக்கத்தால் மலினப்பட்டாலும் பிரதிகள்கடும் விலையேற்றம் கொண்டன. எனவே, படைப்பு வியாபாரிகளிடம் அடைக்கலம் ஆனது. தகவல் தொடர்பு பரபரப்பை மட்டுமே கவனம் செலுத்தியது.

இதனால் துன்பப்பட்டிருந்தனர் தமிழ் வாச்கர்கள். குறிப்பாக புலம்பெயர் சூழல் தமிழர்கள் தமிழைக் கணினிமயப்படுத்த முயன்றனர். இதன் வெற்றி ’மதுரைத் திட்ட’த்தை அளித்தது. இதில் செயல்பட்டவர்கள் தன்னார்வத்தோடு செயல்பட்டனர். பிரதிபலன்பாராமல் சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற படைப்புகளை இணையத்தில் எற்றினர். இதனால் யாரும் எங்கும் இதனை வாசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒளிவுமறைவற்ற பதிப்பு நிகழ்ந்தது. இதுவே இணையத்துக்கும் இலக்கியத்துக்குமான முதல் ஊடாட்டம் என நினைக்கிறேன். ஆழ்வார்களின் பாசுரங்கள் இணையப்பதிவு பெற்றன. சைவ மரபு நூல்கள், உரைகள், ஆய்வுகள், திருக்குறள், மெய்யறிவு என இது விரிந்தது. தொடர்ந்து தற்கால இலக்கியங்களும் இணையத்தில் பதிவு பெற்றன. பாரதி, பாரதிதாசன் தொடங்கி வைரமுத்து வரை அவரவர் விருப்பத்துக்கு எற்ப இன்று பல முனைகளில் இச் செயல்பாடு விரிவும் வேகமும் அடைந்துள்ளது.

இப்படியான செயல்பாடுகள் கடந்த காலத்துடன் சமநிலை அடையும் அதே நேரத்தில் புதிய படைப்புகளில் இணையம் தனது பாதிப்பைத் தொடங்குகிறது. முந்தைய ஊடகப் பரவலாக்கத்தால் வாசகர்கள் எற்கனவே சலிப்படைந்திருந்தனர். இதனை எதிர் கொள்ளவும் தற்கால வாசக வேகத்துக்கு ஈடுகொடுக்கவும் இணையத்தின் வேக வெளியும் படைப்பாளிக்குப் புதிய சவால்களை வைத்தன.

படைப்பாளி சுயமாக இயங்கக்கூடிய சூழலையும் இணையம் எனும் கருவி சாத்தியப்படுத்துகிறது. தனது படைப்பினை நேரடியாக யாருக்கும் பரிந்துரை செய்யமுடியும். ஒருமுறை கணினி அச்சு செய்துவிட்டால் அந்த ஒரு பிரதியை எத்தனை ஆயிரம் பேருக்கும் மின்னஞ்சம் செய்யலாம். இத் தொழில்நுட்பப் புரட்சி எதிர்காலத்தில் பல்லூடகப் படைப்புகளையும் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்க உள்ளது. இதன் முறையான பதிப்புகள் காலத்தால் அழியாது. தீயில் வேகாது. நீரால் அடித்துச்செல்லப்படாது. ஆனால், மாயக்கிருமிகளிடமிருந்து மட்டும் தப்பிக்க வேண்டியிருக்கிறது.

காட்சிப்படிமமாகவும் மாறும் இந்த எழுத்து, புதுவகை வாசிப்பை அளிக்கும். இதனால் படைப்பாளிகள் புதிய மொழியை உருவாக்குவார்கள். மின் எழுத்து உருவாகும். ஒரு நாவல் என்பது எழுத்தாக மட்டுமாக இல்லாமல், படமாகவும் ஓவியமாகவும் மட்டுமல்லாமல், நகரும் படங்களாகவும் குரலாகவும் மாறி – மாறி உருவமடையமுடியும்.
ஒரு மின் நாவலில் ஒரு இடத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய விவரணை வரும்போது கடந்த கால சினிமா காட்சிகளையோ, கோப்புக்காட்சிகளையோ இணைக்க முடியும்.

ஒரு தேவாரப் பதிகத்தைச் சேர்க்கும்போது பின்னணியில் அப் பாடலை ராகம் சுத்தமாக ஒலிக்கச் செய்ய முடியும்.

இப் படைப்பைப் போலவே இப் படைப்பு மீதான விமர்சனங்களும் சுதந்தரமானவை. இது தொடர்பான எதிர்வினைகள் தணிக்கை செய்ய முடியாததாக இருக்க வேண்டும்.. அதற்கு, படைப்பாளியின் மறுவினையும் உடனே எதிர்பார்க்கப்படும். இது நிகழாதபோது அப் படைப்பாளி இணையவெளியில் சலனமாக மாட்டான். இதனை அடுத்து அடுத்த கட்ட வளர்சியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாத படைப்பை உருவாக்கலாம். ஏன், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே இணையம் வழியாக இணைந்து தங்களது பிரமாண்டமான காவியத்தை எழுதமுடியும். (No Man Writing) கனவு காணுங்கள்.



திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சென்னை 376



நவீன இலக்கிய – நாடக ஆர்வலர்களின் உலகங்கள்….



இப்போதெல்லாம் வீட்டுக்குள் இருந்தே உலகைத் தெரிந்து கொள்கிறோம். தேடு பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும், உலகின் அத்தனை தரவுகளும், தகவல்களும் உங்கள் கணினியின் திரைக்குள் வந்து விழுந்து விடும். அது புத்தகமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் சில நொடிகள் காத்திருந்தால் போதும்.

ஆனால் ஒரு காலத்தில் உலக சினிமாவோ, புத்தகமோ உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களோ அல்லது வெளி மாநில, அயலகக் கலைஞர்களின் இசை, நடன, நாடக நிகழ்வுகள் போன்றவை பெருநகரவாசிகள் மட்டுமே அணுகக்கூடியவையாக இருந்தன.

இலக்கிய ஆர்வமும் கலைத்தாகமும் கொண்ட தமிழனுக்கு 1980-களில் சென்னை மட்டுமே புகலிடமாக இருந்தது. கலை ஆர்வலர்களுக்கு வளர்ந்து வரும் சென்னையின் வேகம் அலர்ஜியாகத்தான் இருந்தது என்றாலும் அறிவுப்பசிக்கு அதே சென்னைதான் புகலிடமாக இருந்தது என்பதால் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது சாத்தியமில்லாததாகத்தான் இருந்தது; இருக்கிறது.

1980-களில் கலை ரசிகர்களின் பாரீஸ் நகரமாக இருந்த சென்னை குறித்த சில காட்சிகள் – எனது அனுபவத்தில்…

நாடுகளுக்கான பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஐசிசிஆர் (கலாசார உறவுகளுக்கான இந்தியக் குழு) என்ற அமைப்பு உலகின் தலைசிறந்த இசைக் குழுக்கள்,  நாடகக் குழுக்கள், நடனக் குழுக்களை அழைத்துப் பெரு நகரங்களில் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்கள்) நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். சில அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் முதலில் வருபவர்களே முன் வரிசையில் அமர முடியும். இதற்கான தகவல்களும் பகிரங்கமாக அறிவிக்கப்படாது. அத் தகவலை முன் கூட்டியே அறிந்தால் எல்டாம்ஸ் சாலையில் இருந்த ஐசிசிஆர் அலுவலகத்தில் கியூவில் நின்று அழைப்பிதழ் பெற்று என்ன தலை போகிற வேலை இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு முன்னதாகவே இருக்கை பிடித்து உன்னத நிகழ்வுகளைப் பார்ப்பார்கள். இதேபோல மாக்ஸ் முல்லர் பவன், அல்லயன்ஸ் பிரான்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில், ரஷ்ய கலாசார மையம் போன்ற தூதரகங்களும் அவர்கள் நாடுகளின் உன்னத சினிமாக்கள், நாடகங்கள், இசை – நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இவற்றையெல்லாம் பார்க்க, அனுபவிக்கக் கொடுத்து வைத்த ஒருவன் உண்மையிலேயே உலக ரசிகனாக ஆகிவிட முடியும். எழும்பூர் மியூசியம் அரங்கு, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வாணி மகால், பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற சபாக்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன.

ஊரிலிருந்து சென்னைக்குப் பஸ் ஏறும் இலக்கியவாதியோ இலக்கிய ஆர்வலரோ சென்னையில் எங்கு தங்குவது என்ற கவலை இல்லாமல் தி.நகரில் இருந்த 14, சாரி தெரு, மயிலாப்பூர், 4, பிச்சுப்பிள்ளைத் தெரு, பெசன்ட் நகர் வண்ணாந்துறையில் இருந்த குகை என்றழைக்கப்பட்ட இடம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் போன்ற இடங்களில் தங்கலாம். வந்த வேலை முடியும் வரை அல்லது ஒரு வேலை கிடைக்கும் வரை டீயோ பன்னோ இருப்பதைப் பகிர்ந்து கொள்ள  நண்பர்கள், தோழர்கள் தயாராக இருந்தனர். (இவை தவிர வேறு சில இடங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும்.) இந்த இடங்கள் அன்றைய சென்னையின் கலாசார அரசியலின் செயல்பாட்டுக் களங்களாகவும் விளங்கின.

திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் 16ஆம் எண் மேன்சனின் 6 ஆம் நம்பர் அறையில் வசித்த சின்னக்குத்தூசி அறை, பிரபஞ்சன் அறை, எஸ். வி. இராஜதுரை வீடு, சென்னை புக் ஹவுஸ், ராசகிளி, வயல், விடியல் அச்சகங்கள் போன்ற இடங்கள் மாலை நேரங்களில் இலக்கிய – கலை ஆர்வலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களாக இருந்தன.

இன்று புகழ் பெற்ற இயக்குனர்களாவும் திரைக்கலைஞர்களாகவும் வளர்ந்துள்ளவர்களில் பலர் 1970-களின் பிற்பகுதியில் தொடங்கி 1980கள், 1990களில் இயங்கிய சென்னை திரைப்படச் சங்கம் (Chennai Film Society) திரையிட்ட உலக சினிமாக்களைப் பார்த்து நவீன சினிமாவை புரிந்துகொண்டவர்கள்தாம்! ஒரு திரைப்படக் கல்லூரிக்கு இணையான பணியை சென்னை திரைப்படச் சங்கம் ஆற்றியிருக்கிறது.  ஃபிரெஞ்சு புதிய அலைப் படங்கள், ஐரோப்பிய நவீன சினிமாக்கள் முதல் லத்தீன் அமெரிக்கச் சினிமாக்கள், கீழைய சீன, ஜப்பானிய, கொரிய இயக்குனர்களின் படங்கள் என சென்னையில் இயங்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது வெளிவரும் சிறந்த உலகப்படங்கள் மட்டுமல்லாது சிறந்த இந்தியப் படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். அது மட்டுமல்லாது விவாதங்களையும் ஏற்பாடு செய்தனர். கோடார்ட், பெர்க்மென், தாக்கோவ்ஸ்கி, அகிரோ குரோசவா, ரித்விக் கட்டக், நகிஷா ஒஷிமா, ஜான் ஆபிரகாம், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சத்யஜித் ரே, அரவிந்தன் போன்ற எண்ணற்ற இயக்குனர்களின் தொகுப்பாக ரெட்ராஸ்பெக்டாக திரையிட்டதால் சலனங்கள் இன்னமும் அடங்கவில்லை. இதெல்லாம் மதுரை தவிர சென்னைக்கு வெளியே அப்போது சாத்தியமில்லை. தமது ஆதர்ஷ இயக்குனர்களின் ரெட்ராக்ஸ்பெக்ட் படங்களைப் பார்க்க வெளியூர்களிலிருந்து வந்து பார்த்துப் பிறவிப்பயன் அடைந்து விட்டதாகச் சென்ற சினிமாக் காதலர்களும் உண்டு.

சென்னையில் இயங்கும் கன்னிமரா பொது நூலகம், மாக்ஸ் முல்லர் பவன் நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை இலக்கிய சங்க நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் மட்டுமல்லாமல் எஸ்.எஸ். கண்ணன் நடத்திய மார்க்ஸ் லைப்ரரி, பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம், அண்ணா அறிவாலய நூலகம், சென்னை பல்கலைக்கழக நூலகம் போன்றவை அறிவுப் பெட்டகங்களாக விள்ங்கின. இவற்றில் ஒன்றிரண்டு நூலகங்கள் தவிர மற்ற நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்க முடியும்.
பேராசை கொண்டு பல நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து தலையணை சைஸ் புத்தகங்களை எடுத்து ஜோல்னா பை தாங்காமல் சுமந்ததால் உருவான தோள் வலி சுகமான சுமை! 80களில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய லேண்ட் மார்க் புத்தகக்கடை நவீன இலக்கியங்களை உடனுக்குடன் அறிமுகம் செய்துவைப்பதில் முக்கியப்பங்காற்றியது.

நவீன நாடகங்களின் சோதனை முயற்சிகள் அரங்கேறும் இடமாக சென்னை இருந்தது. அப்போதெல்லாம் சென்னைக்கு வெளியே நவீன நாடகங்களைப் பார்ப்பது அபூர்வம். 70களில் தொடங்கிய கூத்துப்பட்டறை 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் சென்னை தீவுத்திடலில் இருந்த சிற்றரங்கில் வாரம் தோறும் நாடகங்கள் நடத்தியது. இணையாக வீதி, பரீக்‌ஷா, சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம், ஆடுகளம், ஐக்யா போன்ற குழுக்களும் இயங்கின. தவிர உலகப் புகழ்பெற்ற முக்கிய நாடகக் கம்பெனிகள் இந்தியப் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை நகரை மறப்பதில்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹே மார்க்கெட் தியேட்டர் கம்பெனி உள்ளிட்ட பல நாடகக் குழுக்கள் சென்னையில் நிகழ்த்திய நாடகங்கள் நவீன நாடகத்தின் புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்து தமிழ் நவீன நாடகங்களை செழுமைப்படுத்தின. 
சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கிய லலித் கலா அகாதமி நவீன ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். கலை ஆர்வலர்கள் மாலையில் கூடும் இடமாகவும் லலித் கலா அகாதமி இருந்தது; இருக்கிறது.
ஆனால், முன் சொன்ன பல இடங்கள் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


சனி, 29 நவம்பர், 2014

தமிழ் சாப்ளின் கலைவாணர் 3

3 

நாட்டுக்கொரு நல்ல கோமாளி!


அந்தக் காலத்தில் கூட எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள். பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகள், காட்சிகள் இருந்தால் அது சென்சார் செய்யப்பட்டுவிடும். பொதுவாக கிளப் டான்ஸ் உள்ள படங்கள், இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்கள், ஆபாச அங்க அசைவுகள் உள்ள படங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அந்த மாதிரிப் படங்களின் வால்போஸ்டர்களைப் பார்ப்பதுகூட குற்றம். அப்படியே தெரியாமல் போய்விட்டாலும் ஸ்பாட் சென்சார் அவ்வப்போது அமலுக்கு வரும். அதுபோன்ற காட்சிகள் வரும்போது அந்தக் காட்சி முடியும் வரை கண்ணைப் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். ‘திற’ என உத்தரவு வந்தால்தான் கண்ணைத் திறக்க வேண்டும். ‘மாயமோதிரம்’ என்ற படம் பார்க்கும்போது அவ்வாறு பலமுறை கண்ணை மூடிக்கொள்ள நேர்ந்தது நினைவில் இருக்கிறது. இதுமாதிரி நகைச்சுவைக்காட்சிகளுக்கும் கண்ணை மட்டுமல்ல காதுகளையும் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக் காலத்திலும்கூட, அந்தக் காலத்துக்கு ஏற்ப வசனங்கள் விரசமாக இருப்பதுண்டு. அதில் விதிவிலக்கு கலைவாணர்- மதுரம் நடித்த காட்சிகள்.

இரட்டை அர்த்த வசனங்கள், நகைச்சுவை என்ற பெயரில் விரசமான காட்சிகள், அங்கஹீனங்களைக் கேலி செய்வது போன்றவை பாய்ஸ் கம்பெனிகள் காலத்திலும் இருந்தது. ஸ்பெஷல் நாடகங்களில் பஃபூன் காமடி இதற்காகவே பிரபலம். பேசும்படங்கள் வந்தபோது அதிலும் அப்படியே தொற்றிக்கொண்டது. தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் நகைச்சுவைக் காட்சிகள் எப்படி இருந்தன? இந்தக் கேள்விக்கு வெ. சாமிநாதசர்மா எழுதியுள்ள ‘நமது பிற்போக்கு’ என்ற புத்தகத்தில் விடையைக் காணலாம்.

“இன்றைய காட்சிகளில் சம்பாஷனைகளும், பாட்டுகளும் எவ்வளவு தாழ்வான நிலையை அடைந்திருக்கின்றன என்பதைப் பற்றி விஸ்தரித்துக் கூற நமது எழுதுகோல் கூசுகிறது. சம்பாஷணைகளிலும், பாட்டுகளிலும்தான் ஒரு கம்பீரம் இல்லையென்று சொன்னால் பெயர் கொடுப்பதில்கூட ஒரு கம்பீரம் இருக்கக்கூடாதா? படங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; பெயர்களில் ஒரு கவுரவம் இருக்க வேண்டாமா? ‘அம்மாஞ்சி’, ‘மிளகாய்ப்பொடிபார்ஸ்’, ‘செல்லாக்காசு’! அடக் கடவுளே! இவையெல்லாம் என்ன பெயர்கள்? நாம்தான், உலக அரசியல் நாணயச் செலாவணி மார்க்கெட்டிலே செல்லாக்காசுகளாக இருக்கிறோமே! இந்த அவமானம் போதாதா? சினிமாக்களில்கூட நாம் செல்லாக்காசுகளாக முத்திரையிட்டுக் கொள்ள வேண்டுமா? கிழட்டுப் பிராமணன் ஒருவன் தனது இரண்டாம் தாரத்துக்குத் தலைவாரி முடிப்பது; அல்லது அவன் மனைவி அவனுக்கு அன்னம் படைப்பது; அல்லது குறத்தி குறி சொல்லுவது; அல்லது வண்ணான் வண்ணாத்தி காட்சி; இவையெல்லாம் ஹாஸ்ய ரசம்”

அப்போதெல்லாம் சினிமா விமர்சனமும் எவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது என்பதற்கும் இது சாட்சியாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றியதில் கலைவாணருக்கு முக்கியப் பங்கு உண்டு. உண்மையில் இதில் அவர்தான் டிரெண்ட் செட்டர். தனக்கென தனியான அடையாளத்தை வகுத்துக் கொள்கிற வரை அவரும் தொடக்க கால தமிழ் சினிமா குறித்து வெ.சாமிநாத சர்மா விவரித்துள்ள மாதிரியான நகைச்சுவைக் காட்சிகளில் தான் நடித்துவந்தார். அதற்கு ‘சந்திரகாந்தா’ ஒரு உதாரணம். இதில் கலைவாணர் நடித்த கேரக்டர் பெயர் ‘முனியன்’. அவருக்கு ஜோடியாக பி.சுசீலா (பின்னணிப் பாடகி அல்ல) நடித்தார். அவரது கேரக்டர் பெயர் ‘அம்பட்ட சுப்பி’.

முதல் படங்களில் நடித்தபோதே சினிமா கலையை நன்றாகப் புரிந்துகொண்டார். சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகள் ஒரு இணை திரைக்கதை என்பதை உணர்ந்துகொண்டார். உதாரணமாக, ’முதல்தேதி’ படத்தில் ஒண்ணாம் தேதி சம்பளத்தை நம்பிவாழும் வங்கிக் குமாஸ்தாவாக சிவாஜி கணேசனும் அவர் கொண்டுவரும் குறைந்த சம்பளத்தில் சிக்கணமாகக் குடும்பம் நடத்தும் மனைவியாக அஞ்சலிதேவியும் நடித்துள்ளனர். இந்த பிரதான கதைக்கு கலைவாணரும் மதுரமும் ஒரு இணை கதையைக் கூறுவார்கள். லட்சாதிபதியின் மாப்பிள்ளையான கலைவாணர் சும்மா பெறுமைக்காக வேலைக்குப் போகிறவராகவும், அவரது ஊதாரி மனைவியாக மதுரமும் நடித்திருப்பார்கள்.

இதுகலைவாணர் - மதுரம் தொடங்கிவைத்த டிரண்ட் தான்! 1939இல் வெளிவந்த ‘திருநீலகண்ட’ரில் எம்.கே.டி பாகவதரும் சரஸ்வதியும் சொல்லும் கதைக்கு இணையான கதையை கலைவானர் உருவாக்கி தானும் மதுரமும் நடித்திருந்தனர். இப்படத்திலிருந்து காமெடிக்கு தனி டிராக் எழுதும் பழக்கம் தொடங்கியது.

கலைவாணர் ஒரு பிலிம் மெக்காணிக்கும் கூட. இப்போது ஒரு படத்தைத் தயாரித்து, ரிலீஸ் செய்து படு தோல்வி அடைந்தாலும்கூட, கலைவாணரிடம் கொண்டுவந்தால் போதும். அதை எப்படிச் சரி செய்யவேண்டுமோ அப்படிச் சரிசெய்து விடுவார். உதாரணமாக, 1947 இல் வெளியான ‘பிரம்மரிசி விஸ்வாமித்ரா’ சரியாக ஓடவில்லை. பின் கலைவாணரிடம் வந்தார்கள். சகடன், யோகன் என இரு பாத்திரங்களை உருவாக்கி (சகட யோகம்!) தானும் மதுரமும் நடித்துக்கொடுத்தார்கள். படம் மீண்டும் 1948 தொடக்கத்தில் மீண்டும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதேபோல ‘சோகமேளர்’, ‘குடும்ப விளக்கு’ போன்ற படங்களும் என். எஸ். கே மெக்காணிக் பட்டறையில் ரிப்ப்ர் செய்யப்பட்டபின்னரே வெற்றியடைந்தது.

மற்ற படங்களிலும் நகைச்சுவைக்காட்சிக்கான கதை வசனம் மட்டுமல்லாமல் காட்சிகளையும் அவர்தான் இயக்குவாராம். படத்துக்கான ஒப்பந்தமே அவ்வாறுதான் போடப்பட்டது எனக் கூறுவதுண்டு. எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.

1941 இல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் அலிபாபாவாக கலைவாணரும் மார்ஜீயானாக மதுரமும் நடித்திருந்தனர். ஆங்கிலப்படத்துக்கு நிகராகத் தயாரிக்கப்பட்டதாக அந்தக்காலத்தில் இப்படம் பெயர் பெற்றது.

1938 இல் வெளியான ‘தட்சயக்ஞம்’ புராணப் படத்தில் ரதி - மன்மதனாக மதுரமும் கலைவாணரும் நடித்தனர். இதில் ரதி - மன்மதன் குறித்து காலம் காலமாகக் கூறப்பட்ட புராணிகத்தை உடைத்து நொறுக்குகிறார்கள். மன்மதன் அழகனல்ல - பறட்டைத்தலையன். ரதியை ஒரு கிழவனுக்கு மணமுடித்துக்கொடுக்கிறார்கள். கிழவனால் சுகம் பெற முடியாத ரதி இளைஞனான பறட்டைத் தலையன் மன்மதனை நாடுகிறாள்.

அதேபோல .... படத்தில் ஒரு பாட்டு. அதில் நாக்கில் கலைவாணி குடியிருக்கிறாள் என்றால், மல-ஜலம் கழிப்பது எவ்வாறு? எனக் கேள்வி கேட்பார்கள்?

மாணிக்கவாசகர் படத்தில் ‘இது தர்ப்பைப் புல் இல்லங்கானும்! எழுதுகோல்! தொலைச்சுப் புடுவேன், தொலைச்சு, ஜாக்கிரதை’ என புரோகிதரிடம் கூறுகிறார்.

1940 இல் கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘நவீன விக்ரமாதித்தன்’ பட்டி - விக்கிரமாதித்தன் கதையை கலைவாணர் நவீனப்படுத்தியிருப்பார். கதை எழுதியதோடு நவீன விக்கிரமாதித்தனாக நடித்தார். இந்தப் படத்துக்குள்ளேயே இன்னொரு படம்; இன்னொரு கதை. அது ‘ புத்திமான் பயில்வான்’ இதன் கதியும் கலைவாணர்.

’புத்திமான் பலவான்’ என்ற கொள்கையுடன் வாழும் சோம்பேறி சின்னான் - அவன் ஏழை  மனைவி செல்லியாக என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்.

இப்படத்தில் இப்படத்தில் எம். ஆர். சுவாமிநாதனிடம் அடி வாங்கிக்கொண்டு கலைவாணர் வருவார். ஆனால் மதுரத்திடம் தாந்தான் அவடை அடிச்சது போலப் பேசுவார்.

“அப்படி வேற நினைச்சியா? எனக்குப் பொல்லாத கோபம் வந்திருச்சி. அவ்வளவுதான் நான் கைய அப்படி மடக்கி அவன் கன்னத்துக்கு நேரா குறிபாத்து இப்படிக் கொண்டு பேனேன். அதற்குள் (தன் மூக்கைக் காண்பித்து) இங்க குடுத்தான். அதோட சுதாரிச்சுக்கிட்டேன். (மாடு போல தலையக் குணிந்து) அப்படியே வயத்துல குத்தீரலாமுனு நினைச்சு குனிஞ்சேன். (முதுகைக் காண்பித்து) இங்க குத்தினான். என்னடா?ன்னு நிமுந்தேன். அவ்வளவுதான் (வயித்தக் காண்பித்து) இங்க குத்தினான். சீ இவ்வளவுதானா நீ என கத்திய விரிச்சுக் குத்தப் போனேன். இங்க குடுத்தான். சரி இனிவிட்டா ஆபத்துன்னு எழுந்திருச்சேன். ஒரே ஓட்டம்.

தன்னால் ஒரு அடிகூடத் திரும்பக்கொடுக்க முடியாவிட்டாலும் தன் மனைவியிடம் ஜம்பமாக, முகத்தை ஏதோ பயில்வான் மாதிரி வைத்துக்கொண்டு, கைகளை முறுக்கி மனைவி செல்லியிடம் பிரஸ்தாபிக்கும்போது அவர் கண்கள் மட்டும் அவரது அப்பாவித்தனததைக் காட்டிக்கொடுக்கும்.

இதேபோல, பி யூ சின்னப்பா நடித்த உத்தம புத்திரன் படத்தில் என் எஸ் கே வைணவப் பிராமணர் வேடத்தில் நடிப்பார். ஆத்தங்கரையில் குளித்து முடித்து திருமண் (உடம்பில் நாமம்) இட்டுக்கொண்டிருக்கும்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த புல்லுக்கட்டுக்காரி வருவாள். அவளிடம் வம்பிழுத்துக்கொண்டே தமது இச்சையை வெளிப்படுத்துவார். அதற்குள் அவ்வப்போது ஆள்கள் ஆத்துக்கு வந்துகொண்டிருப்பார்கள், உடனே திருமந்திரம் பாடுவதுபோல பாசங்கு செய்வார். ஒருவழியாக அப் பெண்ணை சாயந்தரம் ‘குளித்து சுத்தமாக; வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வரச் சொல்லுவார். அதற்குள் மனைவியிடம் வேண்டுமென்றே சண்டை இழுத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். ஒரே மகனிடமும் காசு கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். அழுதுகொண்டே அப்பா வீட்டுக்குச் செல்லும் மாமியிடம் புல்லுக்கட்டுக்காரி விஷயத்தைச் சொல்லி அழுவாள். புருசனின் திட்டத்தைப் புரிந்துகொண்டே மனைவி, தானே புல்லுக்கட்டுக்காரிபோல போவாள். புல்லுக்கட்டுக்காரி என நினைத்து அசடு வழியும் என் எஸ் கே மனைவியிடம் வசமாக மாட்டிக்கொள்வார்.


இங்கு கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலான படங்கள் 1944க்கு முந்தவை. 1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டுசிறைக்குச் செல்கிறார். அவருடன் பாகவதர், ராமுலு ஆகியோரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 1947 இல் சிறைமீண்டு மீண்டும் திரைவானில் கலக்குகிறார். அப்படங்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.

நகைச்சுவைக்கு அடையாளமாக ஆச்சரியக் குறி இடுவது. கலைவாணர் பேசினால் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஆச்சரியக் குறிதான்! அது அவருக்குத்தான் பொருந்தும்!

நகைச்சுவை என்பது கலைவாணரின் மொழி; வாழ்க்கை; சுவாசம்!

லட்சுகிகாந்தன் கொலைவழக்கில் இரண்டறை ஆண்டுகள் கழித்து பாகவதரும் கலைவாணரும் விடுதலை யாகிறார்கள். பாகவதர்  நேராக தமக்கு விருப்பமாக முருகன் கோயில் செல்கிறார். அதன்பிறகு அவருக்கு யாரையும் பார்க்க விரும்பவில்லை. தனிமையில் இருக்கிறார். ஆனால், கலைவாணர் உடனடியாக மக்களிடம் சென்றார்’ தனது சிறை அனுபவங்களை மக்களிடம் பேசினார். சிறையில் என்னென்ன மாதிரியான கைதிகளைப் பார்த்தார். கைதிகளின் நிலைமை, அவர்களது வாழ்க்கை ஆகியவற்றை நகைச்சுவையாகக்கூறினார். மக்கள் சிரித்தனர்; கைதட்டி ரசித்தார்கள். இதோ தொடர்ந்து பேசுகிறார்:

”இப்போ நீங்க சிரிச்சீங்களே அது போதாது, நல்லா குலுங்கக் குலுங்கச் சிரிக்கணும்! ஆனா நீங்க இங்க சிரிச்சது எப்படி இருந்தது தெரியுமா? லெனின் கிராடுல ஹிட்லர் சிரிச்ச மாதிரி இருந்துச்சு! நான் வேண்டுறது அந்தச் சிரிப்பே இல்ல, அது மரணச் சிரிப்பு!...  ஒரு நாட்டுக்கு உணவு, உடை எல்லாம் அப்புறம்தான்...  முதல்ல சிரிப்பு வேணும்!.. .. ஒரு மருத்துவர் சொல்லியிருக்காரு.. நல்லா சிரிச்சுட்டா நோய் வராதாம்! சிரிப்பு ஒரு மருந்து!..  அதனால நீங்க சிரிக்கச் சிரிக்க எனக்கு ஆனந்தம்! நான் வந்தேனோ இல்லையோ நீங்க சிரிச்சிட்டீங்க! அது எனக்குப் பெருமை!.. சிரிக்க வைப்பது ஒரு தொண்டு! அப்படீன்னா நான் தேசத்துக்கு ஒரு தொண்டு செய்த மாதிரி! மாதிரி என்ன மாதிரி? தொண்டுதான் செய்யறேன்! ..

“மனிதன் எதிலே சிறந்தவன்? புலி - மனிதனைவிட ரொம்ப அழகா இருக்கு! குரங்கு - நம்மைவிட நல்லா நடக்குது! குருவி - நம்மை விட நல்லா கூடு கட்டுது! மனிதன் உயர்ந்தவன் என்றால் அழகால் அல்ல.. நடையால் அல்ல.. திறமையால் அல்ல.. சிரிப்பால்! ... மற்ற பிராணிகளுக்கு சந்தோஷம் மட்டும் உண்டு! ஆனால் சிரிக்கத் தெரியாது!

“நாய்கூட ஆனந்தத்திலே வால் ஆட்டுது, ஆனா சிரிக்காது! மனிதன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும். அது எங்கே இருந்து வருது? நல்ல மனசுல இருந்து! .. அதனால நீங்க சிரிச்சா எனக்கு சந்தோஷம்! என்னைப் பார்க்கிறபோது மட்டுமல்ல, என்னை நினைக்கிற போதும்கூட சிரிங்க! சிரிங்கோ!” 

தமிழ் சாப்ளின் கலைவாணர் 2

2
டிரண்ட் செட்டர்


கலைவாணர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியது 1935. முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘சதி லீலாவதி’, முதலில் வெளிவந்த படம் ‘மேனகா’.

சதி லீலாவதி படம் ஏற்கனவே நாடக உலகில் பெறும் வெற்றி பெற்ற ‘பதிபக்தி’ என்ற நாடகக் கதை. எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த நாடகக் கொட்டகையில் 365 நாட்கள் தொடந்து நடந்ததாம். அக்கதையை  அதே பெயரில் சினிமாவாகத் தயாரித்தார் நேஷனல் மூவிடோன் சிதம்பரம் செட்டியார். எம். கந்தசாமி முதலியார் )எம். கே. ராதாவின் தந்தை) கதை வசனம் எழுதி மேடை நாடகமாகத் தயாரித்து அளித்திருந்த நாடகம் அது. இதன் திரை வடிவத்தை ஜித்தன் பானர்ஜி, அல்டேகர் ஆகிய இரட்டையர் இயக்கினர்.

நாடக வடிவில் அதன் அமோக வெற்றியால் அதே கதையைப் படமாக்க மருதாசலம் செட்டியார் என்பவருக்கும் ஆசை வந்ததாம். நேராக எம்.கந்தசாமி முதலியாரிடம் வந்தார். ஆனால் அதன் உரிமையை ஏற்கனவே நேஷனல் மூவிடோனுக்கு விற்றுவிட்ட விவரத்தைச் சொன்னார். செட்டியாருக்கு அங்கிருந்து வெறுங்கையுடன் போக மனசில்லை. அப்போதுதான், ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘சதி லீலாவதி’ கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினார். படித்தால் ஆச்சரியம். அதே கதை. வாசனிடம் உரிமை பெற்று ’சதி லீலாவதி’ படம் தயாரானது. டைரக்‌ஷன் எல்லீஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கர். எம்.கே. ராதா இதில் கதாநாயகன். ’சதி லீலாவதி’ மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் அதன் கதை உரிமை எனக்குத்தான் என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தமிழ் சினிமாவில் கதை உரிமை கோரி தொடங்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். வாசன் வெற்றி பெற்றார். இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுக்குச் சிறிய வேடம் தரப்பட்டது.

‘மேனகா’ வும் எம். கந்தசாமி முதலியார் தயாரித்த நாடகம்தான். டி.கே.எஸ் சகோதரர்கள் குழு நடித்து இதனைப் பிரபலப்படுத்தியது. சகோதர்களே படத்திலும் நடித்தனர். இதில் வில்லத்தனமான காமெடி கேரக்டர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு. தமிழ்ச்சினிமாவில் முதல் காமடி வில்லனும் இவர்தான் போலும்! அவரும் தாசி கமலமாக டி.கே.சண்முகமும் நடிக்கும் காட்சிகள் நாடகத்தின் ஸ்பெஷல் ஐட்டம். அதற்காகவே படத்திலும் கிருஷ்ணன் புக் செய்யப்பட்டார். தாசி கமலமாக டி.விமலா என்ற நடிகை நடித்தார். இதில் விரச வில்லனாக நடித்த கிருஷ்ணனைப் பார்த்து ‘அணைய வாரும் துரையே’ எனப் பாட விமலா மறுத்து விட்டாராம். அது ‘அருகில் வாரும் துரையே’ என மாறியது.  இதற்குப் பழி வாங்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருவரும் நெருக்கமாக நடித்த கட்டிலறைக் காட்சியும் இதில் இடம் பெற்றது. அதில் நெருக்கமாக நடிக்கும்படி டைரக்டர் சாண்டோ தூண்டினார். ஆனால் அப்படி நடிக்க சும்மானாச்சும் மறுத்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அதற்கு அவர் கூறிய காரணம் “நான் பதிவிரதன்!” என்பது. அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை. “பதிவிரதை” என்று சொல்கிறார்கள் அல்லவா, அதுபோல ’பதிவிரதன்!’ என்றார். “ஒரே கணவனோடு வாழ்பவர் பதிவிரதை என்று கூறப்படுவது போல நான் பதிவிரதன். அதாவது ஏகபத்தினி விரதன். மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டு நடிக்க மாட்டேன்” என்றார். அவர
து குறும்பைப் புரிந்துகொண்ட டைரக்டர் அவரைச் சமாதானம் செய்தார். படம் சூப்பர் ஹிட்.

ஏறத்தாழ, தமிழ்ச்சினிமாவின் முதல் சமூகக்கதைப்படங்களும் இவைதான். குறிப்பாக, சதிலீலாவதி, மேனகாவின் வெற்றிக்குப்பிறகுதான் சமூகக் கதைகளைத் திரைப்படமாக்கும் துணிச்சல் வந்தது. அந்த வகையில் எம் . கந்தசாமி முதலியார், டி. கே.எஸ் சகோதரர்கள், என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் டிரண்ட் செட்டர்களாக அமைந்தனர். மட்டுமல்லாமல், தமிச்சினிமாவை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் என்.எஸ் கே தான்! அவர் அளவுக்கு முயற்சிகளை மற்றவர்களும் கையாண்டிருந்தால் தமிழ்ச் சினிமாவின் வரலாறு மேலும் மெருகூட்டப்பட்டதாக இருந்திருக்கும். இதுகுறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

1936 இல் வெளிவந்த மிருச்சகடி’யில்தான் கலைவாணரும் மதுரமும் முதல்முறையாக ஜோடியாக நடித்தனர். அதேஆண்டு பாகவதர் - தேவசேனா நடித்தபடம் - சத்யசீலன். இதில் கலைவாணர் - மதுரம் ஜோடி நடித்த ‘பொம்மி கல்யாணம்’ துண்டுப்படமாக எடுக்கப்பட்டு பிரதான படத்துடன் இணைத்துக் காண்பிக்கப்பட்டது.

இதுபோல ஹாலிவுட்டிலும் துண்டுப்படங்கள் பிரபலமடைந்திருந்தன. துண்டுப்படங்களுக்கு என ரசிகர்கள் உருவாகி திரையரங்குகளில் டிக்கெட் வாங்கவரிசையில் காத்திருந்தனர். துண்டுப்படங்கள் வெற்றியால் பின்னர் அவை முழுநீளப்படங்களில் இணைத்துக்காட்டப்பட்டதாகக் கூறுவதுண்டு. இதில் நகைச்சுவைப்படங்கள் அதிகம். மேற்கத்திய மரபில் வித - விதமான நகைச்சுவைகள் மேடைக்கலைகளாகப் புகழ்பெற்றிருந்ததால் இதில் ஒன்றும் விந்தை இல்லை. ஆனால், இது தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் அதை கலைவாணர் கையாண்டதுதான்.
கலைவாணர் செய்ததுபோல தனித் துண்டுப்பட
மாகத் தயாரித்து இணைக்கும் துணிச்சல் இங்கு யாருக்கும் இதுவரை வந்ததில்லை. தொடர்ந்து கலைவாணர் துண்டுப்படங்களுக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. உஷா கல்யாணம் படத்தில் ‘கிழட்டு மாப்பிள்ளை’ படம் காட்டப்பட்டது. இதன் வெற்றி பிரமிப்பாக இருந்தது. அதனால் எட்டு ஆண்டுகள் கழித்துத் தயாரிக்கப்பட்ட ‘ஜோதிமலர்’ படத்துடனும் ‘கிழட்டு மாப்பிள்ளை’ இணைத்துக் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டில் எம். ஆர். ராதா கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜசேகரன்’ படத்தில் கலைவாணர் - மதுரம் ஜோடி வழங்கிய ‘ஏமாந்த சோனகிரி’ படம் இணைத்துக் காண்பிக்கப்பட்டது. இதே ஆண்டு வெளியான ‘பக்த துளசிதாஸ்’ படத்தில் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் கலைவாணருக்கு ஜோடி மதுரமல்ல, அங்கமுத்து. கோயில் பட்டராக கலைவாணரும், மனைவியாக அங்கமுத்துவும் கலக்கினார்கள். தாசியிடம் செல்லும் கோவில்பட்டரால் அவதிப்படுகிறார் அங்கமுத்து.

இதே ஆண்டில் வந்து வெற்றிபெற்ற படம் ‘அம்பிகாபதி’. பாகவதர் - சந்தான லட்சுமி இணை. இதிலும் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் இணை இல்லை. இதில் கலைவாணர் ஏற்ற பாத்திரம் குடிகாரன் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டு அலையும் வேடம். ஆனால் கண்ணியமான சித்தரிப்பு. இப்படம் கலைவாணருக்கு பெரும் பெயர் வாங்கித்தந்தது. இயக்கம் எல்லிஸ் ஆர் டங்கன். அடுத்த ஆண்டு ஒரே படம்- ‘தட்சயக்ஞம்’. இதில் ரதி - மன்மதனாக கலைவாணர் ஜோடி நடித்தனர். இதில் கலைவாணர் அடிக்கடி பேசும் வசனம்: ‘நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்.’ இதுதான் தமிழ்த் திரை உலகில் முதல் பஞ்ச் டயலாக். இது பெரும் வெற்றி அடைந்ததால் கலைவாணர் தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசினார்.

அவரது பிரபல பஞ்ச் டயலாக்குகள்:

‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’
‘அடிப்பியோ, ஙொப்பம்மவனே, சிங்கம்டா!”
‘ஐயோடா!’
‘என் ஆச்சர்யம்!’
‘பரமசிவன்கி பார்வதி கங்காதோ பத்தினிஹை! எனக்கு ஒண்ணும் நஹி ஹே! க்யாகர் காணா பகவான்!’
‘இது ஒரு பேச்சா?’

இவரைத் தொடர்ந்து கே. சாரங்கபாணி, கே. ஏ. தங்கவேலு, பி. டி. சம்பந்தம், சி எஸ் பாண்டியன். கே ஆர் செல்லம். டி பி முத்துலட்சுமி ஆகியோரும் பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிட்டனர். இன்றும் அது தொடர்கிறது!

அசோக்குமார் படத்தில் கலைவாணர் பேசிய பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம், இதில் நாட்டு வைத்தியரின் மகனாக வருவார்.  இவருக்கு நாட்டு வைத்தியம் வராது. அதனால் இவரை வைத்தியர் ஒதுக்கிவைத்திருப்பார். ஆனால் அப்பா இல்லாத நெரத்தில் இவரே நோயாளிகளுக்குத் தப்புத்தப்பாக மருந்து கொடுப்பார். அப்போதெல்லாம்

‘இவரு சொன்னா சொன்னதுதான்.’ என்று சொல்லிவிட்டு ‘எவரு?’ எனக்கேப்பார். மாத்திரை இடைவெளி விட்டு தன்னைக்காட்டி ‘இவரு!’ என்பார். இந்த பஞ்ச் டயலாக் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம். தன்னைப்பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் ‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’ என்று கூறிக்கொள்வதுண்டு.

அப்புறம் சாகுந்தலம். இதில் மீன் படவர்களாக கலைவாணரும், டி எஸ் துரைராஜும் மாமன் மச்சானாக நடிப்பார்கள். ஆற்றில் துஷ்யந்தன் தவறவிட்ட மோதிரத்தை விழுங்கிய மீன் இவர்கள் வலையில்தான் சிக்கும், அந்த மீனை அறுக்கும்போது அதன் வயிற்றில் இருக்கும் மோதிரத்தை விற்று இருவரும் பங்குபோட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு, சண்டைபோட்டு அரசிடம் மாட்டிக்கொள்வார்கள்.

இதில் கலைவாணர் பேசும் பஞ்ச் டயலாக் : ‘அடிப்பியோ. ஙொப்பம் மகனே. சிங்கம்டா!’ வசனம்தான் வீரமாக இருக்கும். ஆனால் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். அழுதுகொண்டே ‘அடிப்பியோ..’ தேம்பல் ‘ஙொப்பம்மகனே..’ அழுகை ‘.. சிங்கம்டா..’ கதறல்.. அடி விழ, விழ தேம்பல், அழுகை, கதறல் அதிகரிக்கும். ஆனால் சிங்கம் அழுதுகொண்டே கர்ஜிக்கும்!

இவ்வாறு தனது செல்வாக்கு அதிகரித்ததால் கலைவாணர் தமக்கென ஒரு தனி படக் கம்பெனி தொடங்கினார். கம்பெனியின் பெயர்: அசோகா பிலிம்ஸ். அவருக்குள் முகிழ்த்திருந்த கொள்கை முதிர்ச்சியை விளக்குவதாக இப் பெயர் இருக்கிறது. கோவையில் இயங்கிய ‘அசோகா பிலிம்ஸ்’ கம்பெனி ’நவீன விக்கிரமாதித்தன்’, ‘சந்திர ஹரி’, இழந்த காதல்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘புத்திமான் பலவான்’ போன்றவைகளாகும்.

இக் காலகட்டத்தில் கலைவாணர் - மதுரம் இல்லையென்றால் அது படமேயில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதே ஆண்டில் ‘ஆனந்தாஸ்ரமம்’ படத்தில் மன்னனை எதிர்த்துப் போராடும் கிராமக் குடிகளாக நடித்தனர். அடுத்து வந்த ஜோதிராமலிங்கம் பிள்ளை படத்தில் ஜமீன்தாரின் மைத்துனர் பூவலிங்கம் பிள்ளையாக வந்து வெள்ளையம்மாள் என்ற ஏழை தாழ்த்தப்பட பெண்ணை திருமணம் செய்பவராக நடித்தார்.

தொடர்ந்து மாணிக்க வாசகர். திருநீலகண்டர், பிரஹலாதா ஆகிய படங்கள். இவற்றையடுத்து வந்த படம் ‘சிரிக்காதே’. ‘ஒண்ணில் நாலு காமிக் படம்’ என்ற அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. அதாவது அடங்காப்பிடாரி, புலிவேட்டை, யமவாதனை, மாலைக்கண்ணன், போலிச்சாமியார். இதுகுறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கதைச்சுருக்கம்”

“ஒரு பெண்ணைக் கையைப்பிடித்து இழுத்த ’போலிச்சாமியார்’ பூசை வாங்குகிறார் நன்றாக; பெண்டாட்டி வேதனை பொறுக்காது ‘யமவேதனை’யை நாடிச் செல்கிறான் ஒருவன்; ‘அடங்காப்பிடாரி’ போட்ட அட்வர்டைஸ்மெண்ட் காரணமாக ஒரு பெண்ணுக்கு நூறு மாப்பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள்; மாலைக்கண்ணன் பீரங்கிக் செவிடரோடு மாலை வேளையில் மாமனார் வீடு போகிறார். ‘சிரிக்காத பேர் இதைப்பார்க்காத பேர்.” போலிச்சாமியாரில் கலைவாணர் - மதுரம், கே எஸ் சங்கர் ஐயர் நடித்தனர். தொடர்ந்து 1944 வரை நடித்த படங்கள் எல்லாமே ஓஹோதான். மணிமேகலை, சகுந்தலை, பூலோகரம்பை, அசோக் குமார், இழந்தகாதல், சந்திர ஹரி, ஹரிச்சந்திரா, நவீன தெனாலிராமன், பிருதிவிராஜன், மணோன்மணி, கண்ணகி, சிவகவி, ஜோதிமலர், மங்கம்மா சபதம், பாக்கியலட்சுமி, ஜகதலப்பிரதாபன், பிரபாவதி, ஹரிதாஸ்... பட்டியல் இன்னும் நீள்கிறது. இவையெல்லாம் அன்றைய சூப்பர் டூப்பர் ஸ்டார்கள் நடித்தபடங்கள்.

இப்போது வரும் படங்களின் நகைச்சுவைக்காட்சிகளில் பெருமான்மையானவை அந்தக் கால கலைவாணர் நகைச்சுவையின் பாதிப்போ திருட்டோ இல்லாமல் இருப்பதில்லை. கலைவாணரின் இன்னும் சில முக்கியத்துவங்களை அடுத்த இதழில் பார்க்கலாம். அதற்குமுன்..


தமிழ் சாப்ளின் கலைவாணர் 1

இன்று தமிழ் சாப்ளின் கலைவாணர் பிறந்த நாள்.அண்மையில் ‘இளைய தலைமுறை’ என்ற இதழில் ‘தமிழ் சாப்ளின்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் தொடங்கினேன். ஆனால் சில இதழ்களோடு நின்றுவிட்டது. நம்பர் தமிழ் சாப்ளின் கலைவாணர் குறித்து மட்டும் அதில் மூன்று வாரங்கள் எழுதினேன். அவற்றை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன். 


1

பாசிடிவ் கிருஷ்ணன்


தமிழ் சாப்ளின்களில் நம்பர் ஒன் நிச்சயமாக நம்ம கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்தான். நான்கூட இந்தத் தொடரை வித்தியாசமாக தமிழ் சினிமாவின் காலவரிசைப்படி சீனியாரிட்டிபடி வரிசையாக எழுதலாம் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் மனம் வரவில்லை. ஆனால் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் கலைவாணர்தான். கிளவுன், பபூன் என நகைச்சுவை நடிகர்கள் மலிவான விரசமான வசனங்களைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அங்க ஹீனங்களைப் பகடி செய்வதே நகைச்சுவை என்ற மட்டமான புரிதல் நிலவிய காலத்தில் நகைச்சுவையை மிகவும் நாகரிகமான நிலைக்கு மாற்றியமைத்தவர்; அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்ட கலைவாணர். தமிழக நகைச்சுவை உலகின் பிள்ளையார் சுழி அவர்தான். 

நான் மிகவும் சின்ன வயதில் பார்த்த படம்- ’மதுரை வீரன்’. எம்ஜிஆர் நடித்துள்ளார் என்பதற்காகத்தான் அடம் பிடித்து அந்தப் படத்துக்குப் போனேன். தரை டிக்கெட்தான். தரையில் உக்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது நிறைய கஷ்டம். முன்னால் உட்கார்ந்திருப்பவர்களின் தலைதான் தெரியும். இதற்கு ஒரே வழி. அந்தக் காலத்தில் பார்வையாளர்கள் உட்காரும் இடத்துக்கும் திரைக்கும் நடுமே மிகப்பெரிய திண்டு இருக்கும். அதில் குறுக்காக ஒரு மரச்சட்டம் போட்டு அதில் சில கொக்கிகள் இருக்கும். அதில்  ‘தீ’ என்று எழுதப்பட்ட வாளிகள் தொங்கும். அதில் மணல் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் எச்சில் துப்பவும், புகைத்து முடித்த பீடி, சிகரட்டுத் துண்டுகளைப் போடவுமே அது பயன்பட்டுக்கொண்டிருக்கும். 

எம்ஜிஆர்,  சிவாஜி ரசிகர்களுக்கு அந்த மேடைதான் சிம்மாசனம். அதில் படுத்துக்கொண்டு, உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு,  ஆடிக்கொண்டு, தங்கள் ஹீரோக்கள் வரும்போதெல்லாம் விசில்களாலும், தீப்பெட்டிக்கட்டுத் தாள்களாலும் தூள் கிளப்பிக் கொண்டு  படத்தை ரசித்துப் பார்ப்பார்கள். தரையில் உட்கார்ந்து என்னால் சரியாகப் பார்க்க முடியாததால் என்னைத் தூக்கிக்கொண்டு முன்னே வந்தனர். அது படம் பார்ப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வசவு நாறியது.  முன்னே வந்து என்னை அந்தச் சிம்மாசனத்தில் தூக்கிப் போட்டார்கள். என் கண் முன்னே பிரமாண்டமாக உயந்து நின்ற திரையை என்னால் நம்பவே முடியவில்லை. எனது இரண்டு கண்களுக்கு வெளியேயும் விரிந்திருந்தது திரை. எம்.ஜி.ஆரும், பாலையாவும் எனக்காகவே சண்டை போட்டார்கள். எம்.ஜி.ஆரும் பானுமதியும் எனக்காகவே சந்தித்துக் கொண்ட மாதிரி இருந்தது. அந்த இருளில் நானும் அவர்களும் மட்டுமே அங்கிருப்பதாக முதல் முதலாக உணர்ந்தேன். 

ஜோசியன் சொன்னான் என்பதற்காக நடுக்காட்டில் அனாதையாகப் போடப்பட்டக் குழந்தையை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளத் தம்பதி (என்.எஸ்.கே - மதுரம்) எடுத்து வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தையே வரே எம்.ஜி.ஆராக வளர்கிறது. வளர்ந்த இளைஞர் எம்.ஜி.ஆரை இளவரசி பானுமதி காதலிக்கிறார். மன்னர் தடுக்கிறார். அரண்மனைக் காவலையும் மீறி எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்துவிடுகிறார். அப்போது எம்ஜிஆரின் அம்மாவை (மதுரம்) ‘அத்தை’ என அழைப்பார் பானுமதி. உடனே,  என்.எஸ்.கே டைமிங்காக ‘அத்தே, நீ கண்டிப்பா செத்தே, செத்தே’ என்பார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனைத் தேடி அந்த நாட்டு இளவரசி காதலிப்பதாகச் சொல்லி ஓடிவந்ததால் என்ன ஆகுமோ என ரசிகர்கள் பதற்றத்தில் இருக்கும்போது சர்காஸ்டிக்காக என்.எஸ்.கே அடிக்கும் கமெண்ட் ரசிகர்களுக்கு ஒரு ரிலீஃப். இதுபோல அலட்டிக்கொள்ளாமல், மிகக் குறைந்த கோடுகளில் ஒரு ஓவியத்தை வரைந்துவிடும் தேர்ந்த ஓவியன் போன்று அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகள் நகைச்சுவை வழங்கியவர்கள் என்.எஸ்.கே- மதுரம் இருவரும். 

அந்தச் சின்ன வயசில் அந்தக் காமெடி எனக்கும் புரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ரைமிங்காக ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வீட்டுக்கு என் அத்தை வந்தார்கள். நான் ‘அத்தே’ என்றேன். உடனே எங்க அப்பா ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அதில் இரட்டை அர்த்தம் (சிலேடை) இருந்தது. ஆனால் விரசம் கிடையாது. அதை அனைவருமே ஒளிவு மறைவின்றி ரசித்தார்கள். இதுதான் கலைவாணரின் ஸ்பெஷாலிடி. 

இதே மதுரை வீரனில் மற்றொரு காட்சி! கலைவாணரும் மதுரமும் எம்ஜிஆரைப் பார்க்க மதுரைக்கு வைகை ஆற்றைக் கடந்து போகிறார்கள். அப்போது, மதுரம் “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லையே?” என்கிறார். உடனே. “ வை அண்டான்னானா? குண்டான்னானா? ‘வை’, ‘கை’ ன்னுதானே சொன்னான்!” என்று கலைவாணர் சொல்வார்.
புகைப்படம் நன்றி: நல்லதம்பி என் எஸ் கே

ஏறக்குறைய சாப்ளினை ஒப்புநோக்கக்கூடிய வகையில் அவரது நகைச்சுவை இருந்தது. இருவருமே சமகாலத்தவர்கள். இருவரது நகைச்சுவையிலும் ஒரு சமூக விமர்சனம் உள்ளீடாக இருக்கும். சமூக அவலங்களின் மீதான வலியில் இருந்து வெடித்துக் கிளம்புவதாக அவர்கள் காமெடி இருக்கும். சொல்லப்போனால் சாப்ளினுக்குப் பிறகு நூறு சதவீதமும் சமுக அக்கறையோடு நகைச்சுவையை வாரி வழங்குவதில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற நகைச்சுவைக் கலைஞன் உலக அளவிலேயே என்.எஸ்.கே. ஆகத்தான் இருப்பார் என நினைக்கிறேன். அதற்குக் காரணம் சாப்ளின் போன்றே கலைவாணரும் ஆளுமை நிறைந்தவர். 

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தது நாகர்கோயில் அருகில் உள்ள ஒழுகினசேரி கிராமம். அங்கு சுடலைமுத்துப் பிள்ளைக்கும் இசக்கியம்மாளுக்கும் மகனாக 1908 நவம்பர் 29 அன்று பிறந்தார். அது அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. அங்கு நான்காம் வகுப்பு வரை படிக்கத்தான் அவரது குடும்ப வறுமை அனுமதித்தது. அதன்பிறகு வேலைக்குப் போகத் தொடங்கினார். சிறு வயதிலேயே பல வேலைகள் பார்த்தார். அதில் அவருக்குப் பிடித்த வேலை. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் வேலை. இடைவேளை நேரத்தில் சோடா விற்பார். மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு நாடகங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். நாடகங்கள் இல்லாத நாட்களில் மற்ற பையன்களை அழைத்துக் கொண்டு கோயில் திடலில் அப்படியே நடித்துக் காண்பிப்பார். பாடல்களை அப்படியே பாடுவார். மற்றவர்களும் பாடவேண்டும். தவறு இருந்தால் திருத்துவார். அதுமட்டுமல்ல சில காட்சிகளை டைரக்டும் செய்வார். 

இப்படியாக அவர் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தபோது அவரது உறவினர் ஒருவர் ஒழுகினசேரி வந்தார். பையன் நாடகக் கொட்டகையே கதி என்று கிடப்பதையும், மற்ற நேரங்களில் கோயில் மைதானத்தில் பாடிக்கொண்டிருப்பதையும் பார்த்தார்; அவர் அங்குவந்ததும் அது மாதிரியான பையன்களைப் பிடித்துப் போவதற்குத்தான். அவர் டி.கே.எஸ் சகோதரர்கள் ஆரம்பிக்க இருந்த புதிய பாய்ஸ் கம்பெனிக்கு ஆள் பிடிக்க வந்தவர்தான். உடனே கிருஷ்ணனைக் கவ்விக் கொண்டுபோய் விட்டார். தனது 17ஆவது வயதில் டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சேர்ந்தார். 

துன்பத்தை மறைக்கும் சிரிப்புக் கலையை இயல்பாகவே கற்றிருந்தார். ஒரு நாள் நாடகக் கம்பெனியில் சங்கரன் அண்ணாச்சி (டி.கே.எஸ். சகோதரர்களில் மூத்தவர்) என்.எஸ்.கே. வுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பாட்டு சரியாக வரவில்லை. அந்தக் காலத்திலெல்லாம் ரிகர்சலில் ஒழுங்காகச் செய்யவில்லையென்றால் முதுகு பழுத்துவிடும். அல்லது நிமிட்டாம்பழம் கிடைக்கும். நிமிட்டாம்பழம் என்றால் தொடையில் கிள்ளுவது. சதையே பிய்ந்து ரத்தம் வருவது போல கிள்ளுவார்கள். என்.எஸ்.கே. வுக்கும் நிமிட்டாம் பழம் கிடைத்தது. வலி தாங்க முடியாமல் அழுதார்; ஆனால் அழுதாலும் பாடிக்கொண்டேதான் அழ வேண்டும். அவர் அழுதுகொண்டே பாடியது மற்ற சிறுவர்களுக்குக் கேலியும் கிண்டலுமாக இருந்தது. சங்கரன் அண்ணாச்சிஅந்தப் பக்கம் சென்றதும் கிண்டல் இன்னும் அதிகரித்தது. இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்று கிருஷ்ணன் யோசித்தார். நிமிட்டாம்பழத்தின் தாக்கம் இன்னமும் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தார். இதையே பாஸிடிவ் அப்ரோச்சுடன் பிளேட்டைத் திருப்பிப் போட்டார். எல்லாரும் அடி வாங்கியதுக்காக சங்கரன் அண்ணாச்சியைத் திட்டுவார் என்றுதான் எதிர்பார்த்தனர். 

ஆனால், "டேய்! ஏண்டா சிரிக்கிறீங்க. அண்ணாச்சிதானே அடிச்சாரு. பரவால்ல. இந்தப் பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிகிட்ட அவரும் அடி வாங்கித்தானே இருப்பாரு? நானும் இனிமே இப்படி எத்தனையோ பேர அடிக்கத்தான போறேன். இதுக்குப் போயி சிரிக்கிறீங்களே” என்று கூறினார். இதைக் கேட்டதும் சக தோழர்களும் சிரித்தனர். இவ்வாறு சக நண்பர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு பகடியும் இருந்தது. அந்தக் கிண்டல் பார்வைதான் அவரது வாழ் முறையாக இருந்தது. வாழ்க்கை, நாடகம், சினிமா அனைத்துக்கும் இதுதான் அவரது ஃபார்முலா. சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் துயரம் நேரும் சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே பகடி செய்து கொள்வது. அப்போது சோகமும், துயரமும் லேசாகி விடுகிறது. மனிதகுல வரலாற்றில் நகைச்சுவையின் பங்கும் அதுதானே! கலைவாணர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வெற்றி பெற்றார்.

டி.கே.எஸ் சகோதரர்களின் பால சண்முகானந்தா சபாவில் எம். ஆர். சுவாமிநாதன்தான் நகைச்சுவை வேந்தராகக் கோலோச்சி வந்தார். அவரும் பிறவி நகைச்சுவைக் கலைஞர். அவரைப் பற்றி தனிக் கட்டுரையாகப் பார்க்கலாம். அவர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நேரடியாகப் பாடம் கற்றவர். அவர் எங்கு சென்றாலும் சகல மரியாதையும் தரப்பட்டது, இருந்தாலும் அவரிடம் ஒரு கெட்ட குணம். எப்போது நாடகக் கம்பெனியை விட்டு ஓடிப் போவார் என்பது தெரியாது. இது டி.கே.எஸ் சகோதரர்களுக்கும் தெரிந்தே இருந்தது. அந்தச் சமயத்தில்தான் என்.எஸ்.கே வந்து சேர்ந்தார். அவரது காமெடி சென்ஸைக் கவனித்த டி.கே.சண்முகம் ‘எம்.ஆர்.சுவாமிநாதன் அண்ணாச்சியின் காமெடி பார்ட்டுகளை மனப்பாடம் செய்து வைக்கும்’படி அடிக்கடி கிருஷ்ணனுக்குச் சொல்லி வந்தார். எதிர்பார்த்தபடி அந்த நாளும் வந்தது. அன்று ‘மனோகரா’ நாடகத்தில் வசந்தனாகப் பைத்தியக்காரன் வேடத்தில் நடிக்க வேண்டிய சுவாமிநாதனை ஆளைக் காணோம். டி.கே.சண்முகம் சிபாரிசில் அந்த வேடம் கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் அந்த வேடத்தில் வெளுத்து வாங்கினார். அன்றுதான் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற நகைச்சுவை அரசு பிறந்தார். அன்று முதல் கம்பெனியின் அனைத்து காமெடி வேடங்கள் மட்டுமல்ல, புதிய நாடகங்களில் அவருக்காகவே காமெடி பாத்திரங்களை, ஸ்பெஷலாகத் தயாரிக்கும் நிலையும் உருவானது. இதற்குக் காரணம் சுவாமிநாதன் அண்ணாச்சியும், டி.கே.சண்முகமும் தான் என்பதை கிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தன்னை வளர்த்த கலைக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவராகப் பணியாற்றினார். 

கலைவாணர் வழங்கிய கொடையை எப்படியும் ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிடமுடியாது. அடுத்தவாரமும் கலைவாணர் ஆள்வார். 




சனி, 2 நவம்பர், 2013

கல்விச் சுதந்திரம் எங்கே?



பள்ளிகள் தொடங்கி விட்டன. புத்தம் புதிய மலர்களைப் போல குழந்தைகள் புதிய நம்பிக்கையுடன் பள்ளி செல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்குமே கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கும் நாளில்தான் அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. அந்த நாளில்தான் ஒரு வயது அதிகரிக்கிற உணர்வும் ஏற்படுகிறது. அடுத்த வகுப்பு, புதிய வகுப்பறை, புதிய ஆசிரியர்கள், புதிய பாடங்கள் என அச்சடித்த புதிய புத்தகங்களின் வாசனையைப் போல அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. ஆனால், அவர்கள்தாம் நவீன கல்வி வியாபாரத்தின் பகடைக்காய்கள் என்பதையோ, அவர்களைச் சுற்றித்தான் நவீன சதுரங்கம் ஆடப்படுகிறது என்பதையோ அவர்கள் அறிவதில்லை..

அப்பணசாமி

தற்போது ஆரம்பக் கல்வி மீது நான்குமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் மீது தமிழக அரசே இரு முனைத் தாக்குதல்கள் தொடுத்துள்ளது.  முதலாவது தாக்குதல் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கில மொழி வழிக் கல்வி தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு. இரண்டாவது அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை 252.
இந்த இரண்டு அறிவிப்புகளுமே மேலோட்டமாகப் பார்க்கப்படும் போது நல்லதுதானே! அப்போதானே கல்வியின் தரம் உயரும் என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இது போன்ற சிந்தனைகள் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து குறிப்பாக இரண்டாம் தலைமுறைப் பட்டதாரிகளை உருவாக்கும் சூழலில் உள்ள நகர்ப்புறவாசிகளிடமிருந்தே தோன்றுகிறது. கல்வி குறித்த விவாதம் என்பது நகர்ப்புறத்து மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. அது கிராமப்புற மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே. அரசின் இந்த இரண்டு முடிவுகள் குறித்து விவாதிக்கப் புகும் முன் ஊரகப் பகுதிகளில் தொடக்கக் கல்வி குறித்த நிலைகளை நாம் பார்க்கலாம்.
நாடு சுதந்தரமடைந்த போது தமிழ்நாட்டில் இருந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 8000க்குள்தான். அதுவும் கிராமப்புறங்களில் பள்ளிகளைப் பார்ப்பது மிகவும் அரிது. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில்தான் குலக்கல்வி முறை புகுத்தப்பட்டது; புதிய பள்ளிகள் திறக்கப்படவில்லை. அடுத்து காமராஜர் ஆட்சியில் 1954 முதல் 1963 வரையான ஒன்பது ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதுவும் அப்போது பற்றாக்குறையாகத்தான் பார்க்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 50 ஆண்டு காலத்தில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில்தான் சில ஆயிரம்  பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 2001& 2006 காலகட்டத்தில் மட்டும் 4.064 பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதுவும்கூட புத்தாயிரம் ஆண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதன் பலனாக.
அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகள் அடிப்படை வசதிகளை ஏழைகளுக்கு அளிப்பதில் பின் தங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா, 2015 க்குள் நிறைவு செய்ய எட்டு இலக்குகளை நிர்ணயித்தது. அனைவருக்கும் கல்வி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள் மீதான பாகுபாடு நீக்கம் உள்ளிட்ட ஐந்து இலக்குகள் ஆரம்பக் கல்வி தொடர்பாக வருவதால் இந்தியா தனது மானத்தைக் காப்பாற்றக் கொண்டுவந்த சர்வ சிக்ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமாவக் சிக்ஷ அபியான் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் வரவால்தான் இந்தியாவில் தொடக்கக் கல்வி மீண்டும் புத்துயிர் பெற்றது. அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்பது எஸ்.எஸ்.ஏ.யின் இலக்கு. இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் அறியப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் 64846&ல் இன்னமும் ஆரம்பப்பள்ளிகள் கூட இல்லாத குடியிருப்புப் பகுதிகள் (பெரும்பாலும் குக்கிராமங்கள்) சுமார் 300 தான். இருந்தாலும் இன்னமும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக நீடிப்பது ஆயிரக்கணக்கில் தொடர்கின்றன. குறிப்பாக, இன்னமும் ஐந்து விழுக்காடுப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளை எடுத்துக்கொண்டால் இந்த விகிதாசாரம் பல மடங்குகள் அதிகரிக்கும் என்பதை அழுத்திக் கூற வேண்டும்.

தவிரவும், ஊரகப் பகுதிகளில் பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகள்தாம் அதிகமாக உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளின் சராசரி ஆசிரியர் விகிதம் 2.7% என்று அந்த ஆய்வு கூறுகிறது. இன்னமும் கரும்பலகை கூட இல்லாத தொடக்கப் பள்ளிகள் 3% உள்ளன. அதேசமயம், 50 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை கொண்ட பகுதிகள் 35%க்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வகுப்பறைகளில் ஆடு& மாடுகளைப் போல நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை அடைத்துப் போடும் உயர்நிலைப்பள்ளிகள் 2.6%&ம், நடுநிலைப் பள்ளிகள் 2.5%&ம் உள்ளன.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் வகுப்பறைகளுக்கு அழைத்து வருவதற்கு மாநில அரசு படாத பாடு பட்டு வருவது அறிந்ததுதான். இதிலும் ஊக்கம் போதாததாக இருப்பதால் இன்னமும் 6% குழந்தைகள் உரிய பருவத்தில் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர். 2005&2006 கணக்கெடுப்பின்படி அடுத்த ஆண்டில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,11,989ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. (6&14 வயதுக்குட்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,00,08,000.) ஆண் மாணவர் சேர்க்கையை விட பெண் மாணவர் சேர்க்கை அனைத்து நிலைப் பள்ளிகளிலும் 1.3% முதல் 3.3% வரை குறைவாக உள்ளது.
இதனால் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைக் கண்டுபிடுத்து அவர்கள் பள்ளி செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் பள்ளியில் பாதியிலே இடை நிற்பது இன்னமும் நீடிக்கிறது. குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு இடப்பெயர்வு (27,497 குழந்தைகள்), வீட்டுப் பராமரிப்பு ( 21,478 குழந்தைகள்), குழந்தைத் தொழிலாளர்கள் (24,411 குழந்தைகள்) முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலமின்மை, வறுமை போன்றவை குழந்தைகளைப் பள்ளிகளை விட்டே துரத்துகின்றன. இதனால் பள்ளிகளில் சேர்க்கப்பட்டாலும் மேற்கூறிய காரணங்களால் குழந்தைகள் இடை நிற்க நேர்கிறது.


தொடக்கப் பள்ளிகளில் இடை நிற்றல் விகிதம் 3.8% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டாலும் உயர்நிலைப்பள்ளிகளில் 7.58% ஆக அதிகரித்தே உள்ளது. வறுமையின் கோரப் பிடியில் சிக்கும் குடும்பங்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்கள் மற்றும் சிறப்புக் கவனம் கோரும் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் அந்த அவலத்தின் குவி மையமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
பள்ளி சேராக் குழந்தைகள் மற்றும் இடை நிற்றலைப் பொறுத்தவரை வட மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையே நிலவுகிறது. இவை மிகக் குறைந்த எண்ணிக்கை என்பதால் அலட்சியமாக விட்டு விடவும் முடியாது. எழுத்தறிவிக்க ஆங்கொருவன் இல்லையானால் அச் சமூகம் அவமானத்துக்குரியதுதான். இப் பிரச்சனையைப் பொறுத்தவரை கேரளா, கோவா, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவை தமிழகத்தைவிட முன்னிலையில் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
6&14 வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளுக்கு வரவழைப்பதில் தமிழக அரசு 99 சதவீதத்துக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை  விரிவுபடுத்துதல், இலவச நோட்டு& புத்தங்கள், இலவசச் சீருடை, இலவசக் காலணி, பை ஆகிய திட்டங்கள் இதற்குப் பெரும் உதவி செய்துள்ளன. அவர்களை மேனிலைப் பள்ளி வரை கொண்டு வர இலவச சைக்கிள், இலவச மடிக் கணினி ஆகிய திட்டங்கள் உதவி செய்கின்றன.
ஆனால்..
போதுமான ஆசிரியர்கள் நியமனம், போதுமான வகுப்பறைகள், பள்ளிக் கட்டடங்கள் பழுது பார்த்தல், அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்& பெண் என தனித் தனிக் கழிவறைகள், கரும்பலகை உள்ளிட்ட கற்றல் & கற்பித்தல் கருவிகள், சமையல் கூடம் போன்ற வசதிகள் மற்றும் சேவைகளை அளிப்பதில் மிகவும் பின்னடைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. கட்டடமே இல்லாமல் இயங்கும் பள்ளிகள் இன்னமும் உள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது.
சத்துணவு போடுவதும், புத்தகங்கள் வழங்குவதும் மட்டும் கல்வி அளிக்காது. போதுமான ஆசிரியர்களுடன் உரிய வசதிகளும், கல்விச் சேவைகளும் இணைந்தே வழங்கப்படும் போதுதான் அக் கல்வி பயனுள்ளதாகவும், அக் குழந்தைகளை மேனிலைக் கல்விக்குத் தயார்ப்படுத்துவதாகவும் அமையும்.

அடிப்படைக் கல்வியைப் பொறுத்தவரை பால் வேறுபாடு காணப்படுவதில்லை. ஆனால். சாதி இந்துக்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவுக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. பெயரளவுக்குப் பதிவேடுகளில் அவர்கள் பெயரைப் பதிவு செய்து விட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். அக் குழந்தைகள் தங்கள் சேரியில் உள்ள சத்துணவு மையத்தில் மட்டுமே பொழுதைக் கழிக்க நேர்கிறது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அடிப்படைக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கிறது. அடுத்து மேலும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சர்வேயில் அங்குள்ள ஊரகப் பகுதிகளில் 87% மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் 13% மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் பயிலுகின்றனர். அரசுப் பள்ளிகளில் சத்துணவு, புத்தகம், சீருடை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டாலும் தனியார் பள்ளிகளே சிறப்பாகச் செயல்படுவதாகவும், தங்களிடம் பொருளாதார வசதி இல்லாததால்தான் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான அணுகல் நகல் அறிக்கை (2006) இவ்வாறு கூறுகிறது: ‘‘அரசுப் பள்ளிகளுக்கான கட்டணம் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டால் அவர்கள் தனியார் பள்ளிகளை மட்டுமேதான் தேர்வு செய்வார்கள். இது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் சலுகைகளைக் கேள்விக்குறியாக்குகிறது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் படித்தால் தங்கள் குழந்தைகள் கற்றல் திறன் குறைந்தவர்களாகி விடுவர், அதனால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என எண்ணுகின்றனர்.’’
அண்மையில்கூட, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் சட்டமன்றத்தில் பேசும்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது குறைந்து வருகிறது. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5% வரை குறைந்துள்ளது.
அதாவது, அடிப்படையில் சமத்துவம் நிலவ பொதுப்பாடத் திட்டம் அமலில் உள்ள நிலைமையில் கூட மக்கள் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் அங்கு அடிப்படை வசதிகளும், போதுமான ஆசிரியர்களும் உரிய கண்காணிப்பும் இல்லாததுதான்.
இந்த வெளிச்சத்தில் மத்திய& மாநில அரசுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
முன்னர் குறிப்பிட்டதைப் போல, மாநிலக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சட்ட மன்றத்தில் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் மீதான் விவாதத்துக்குப் பதிலளிக்கையில் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தார்.
அரசு கொள்கையில் இடம் பெறாமல், ஆளுநர் உரை, பட்ஜெட்டில் இடம் பெறாமல் அமைச்சர் மானியக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போது அறிவித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த ஆங்கில வழிக் கல்விதான் ஒரே வழி என இந்த அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கூறுபவர் யார் என்றே தெரியவில்லை.
உலகில் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ள அனைத்து வல்லுனர்களுமே தாய் மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. இதுவரை பெரும் சாதனை படைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தவர்கள், தத்துவவாதிகள் மற்றும் சிறந்த நிர்வாகிகள் அனைவருமே தாய் மொழி வழிக் கல்வி பயின்றவர்கள்தாம் என்பதை உதாரணங்களுடன் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், கல்விக்காக இதுவரை அமைக்கப்பட்ட அனைத்துக் கமிஷன்களும் & கோத்தாரி கமிஷன், யஷ்பால் கமிஷன் முதல் முத்துக்குமரன் கமிஷன் வரை & அனைவருக்குமான கட்டாயக் கல்விச் சட்டம் உள்பட தாய்மொழி வழிக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
இதையும் மீறி ஒரு மாற்று மொழியை வலுக்கட்டாயமாகப் புகுத்துவது சந்தேகங்களையே உருவாக்குகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியை இவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? இவர்கள் மொழிக் கல்வியையும் பயிற்று மொழியையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். அதுவும் இன்றைய நவீன உலகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியைக் கற்பது அவசியம். அதுவும் வல்லாதிக்கம் செலுத்தும் ஏகாபத்திய மொழிகளில் பயிற்சி பெறுவது மிகவும் அவசியமாகவும் கூட இருக்கலாம். அது ஆங்கிலம் மட்டுமல்ல; சீனம், கொரியா, ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பயிற்சி பெறுவது இன்னமும் பலனிக்கக் கூடியது. ஆனால் அறிவியல், கணிதம், புவியியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களைத் தாய் மொழியில் பயிலாமல் எவ்வாறு விளங்கிக் கொள்வது? அப்படியே ஆங்கிலத்தில் கற்றுத் தர ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார்களா? அவர்களுமே தாய் மொழி மூலமாகத்தான் தங்கள் பாடங்களை உணர்ந்திருப்பார்கள் என்பதையும் காணத் தவறக்கூடாது.
கிராமப்புறப் பள்ளிகளின் நிலை, மாணவர்களின் நிலை ஆகியவற்றைப் பார்த்தோம். அக் குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பது எத்தகைய வன்முறையாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அங்கு கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் தேவையான வகுப்பறைகள், கரும்பலகைகள், ஆசிரியர்கள், கழிவறைகள் இவைதாம் தேவை. அத்துடன் குழந்தைகளின் ஆங்கில அறிவும் வளர வேண்டுமென விரும்பினால் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற மொழி ஆசிரியர்களும் தேவை. அவர்கள் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆற்றலுடன் பிற பாடங்களைத் தாய் மொழியில் கற்பிப்பவராகவும் இருக்கலாம்.
தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான மொழிக் கல்வி அளிக்க வேண்டும். அதற்காக ஆரம்பக் கல்விக் கொள்கையில் மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதில் தெளிவு இல்லாததால் நாம் இரண்டு மொழிகளையும் இழந்து வருகிறோம். நமது சமுதாயம் தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ‘தங்கிலீஷ்‘ சமுதாயமாகி வருகிறது.
ஆனால், இது போன்ற ஆலோசனைகளை எளிதாக விட்டு விட முடியாது. உலமயமாக்கல் தொடக்கக் கல்வித் துறையைக் கொத்திக் குதறத் தயாராக இருக்கிறது. நாடு முழுவதும் பயிற்று மொழி ஆங்கிலம் என ஆகிவிட்டால் அதற்கு வேலை இன்னும் எளிதாகி விடும். அப்புறம் இருக்கவே இருக்கிறது செயற்கைக்கோள் தொழில்நுட்பம். வகுப்பறைகள் வேண்டாம். ஆசிரியர்கள் வேண்டாம். ஒரு குறு வட்டை ஓட விட்டால் போதும், ஆசிரியரே இல்லாமல் கற்கலாம் என்பார்கள். தாய்மொழியை முற்றிலும் இல்லாமல் ஒழிக்க இதைவிட வேறென்ன வேண்டும்?
அடுத்ததாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை 252 ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்த ஆணையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்வு பெறுபவர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுய நிதிப் பள்ளிகள் அனைத்தும் இதன்படியே தமது ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளும்.
இதற்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இந்த முறையில் இட ஒதுக்கீடு பின் பற்றப்படவில்லை. இதனால் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.  ஆனால், பள்ளிக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்கிறது அரசு. மீண்டும் தரத்தின் பெயரால்தான் இதுவும் நடக்கிறது.
கல்வியின் தரம் நன்றாக இருக்க வேண்டுமானால் அதன் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு அவசியம் தானே! கல்லூரி ஆசியர்களுக்கு இதுபோல நெட், ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகிறதே!! அதுபோல பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தவறு என்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழு (என்.சி.டி.ஈ) உருவாக்கப்பட்டுக் கல்வி ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டது. அது கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் (முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரி ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதால்) ஆசிரியப் பணிக்கான தகுதி இருக்கிறதா என்பதை அறிய யு.ஜி.சி. யின் கீழுள்ள கல்லூரிகளுக்கு நெட் தேர்வும், மாநில அரசுக் கல்லூரிகளுக்கு ஸ்லெட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை என்.சி.டி.ஈ. உருவாக்கி அதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது.
ஆனால், பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்றால் பிளஸ் டூ உடன் ஆசிரியக் கல்லூரி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் என்றால் பட்டப்படிப்புடன் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) தேர்ச்சி பெற்றிருப்பதும் அடிப்படைத் தகுதி ஆகும். அதாவது அடிப்படைத் தகுதியிலேயே கல்வியியல் படிப்பும் இணைக்கப்பட்ட பின் அதில் தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் ஏன் தகுதித் தேர்வு என கல்வியாளர்கள் கேட்கிறார்கள். 
கல்லூரி ஆசிரியர் போன்றே பள்ளி ஆசிரியருக்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று கருதினால் நெட், ஸ்லெட் தேர்வுகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது போல ஆசிரியத் தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டாமா எனக் கேட்கிறார்கள்.



இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் மீண்டும் இதர பிரிவினருக்குச் செல்லும் அபாயம் இருப்பதால் தகுதித் தேர்வு முறையைக் கைவிட வேண்டும்; அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; நிரப்பப்படாமல் பின்னடைவுப் பணியிடங்களாக உள்ள பனியிடங்களை அந்தந்தப் பிரிவினருக்கே வழங்கும் வகையில் சிறப்பு நியமனம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வியாளர்களும், தலித் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதற்கு அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இவர், தமிழ்நாட்டில் பொதுப் பள்ளி முறையே சிறந்தது எனக் கடுமையான மேன்மையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலர் ஆவார்.
அரசுப் பணியிடங்களில் சமூக நீதியை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவை உறுதி செய்கின்றன. பல நீதி மன்றத் தீர்ப்புகளும் இதை வலியுறுத்துகின்றன. சமூக நீதிக்கான முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதே தமிழகம் அளித்த கொடையால்தான். சமூக நீதிக்கான போராட்டம் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டது. அதில் பல கட்ட வெற்றிகள் பெற்று இன்று இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. தற்போதைய முதல்வரே சமூக நீதி காத்த வீராங்கனை எனக் கவுரவிக்கப்பட்டவர்.
இந்த ஒரு குழு அளித்த அறிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது நியாயமா? என்கிறார்கள்.
இன்று கல்வித் துறையில் கொண்டு வரப்படும் எந்த ஒரு நடவடிக்கையானாலும் மத்திய அரசு கொண்டு வந்து அமலில் உள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்துடன் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.



உண்மையில், இச்சட்டம் நல்லதா? அல்லது கெட்ட சட்டமா? என்று கேட்கத் தக்க அளவில்தான் இருப்பதாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகிறார்.

மத்திய அரசு நிறைவேற்றிய இச் சட்டம் அமலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதன் கீழும் தமிழக அரசும் விதிகளை இயற்றி ஓராண்டாக அமலில் உள்ளது.
இதில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவோ, அருகமைப் பள்ளி முறையைக் கறாராக அமல்படுத்தவோ, தாய் மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவோ, கல்வியாளர்கள் பெரிதும் வலியுறுத்தும் குழந்தைகளின் கற்பனைக்கும் படைப்பூக்கத்தும் வடிகால் அமைக்கவோ தெளிவான நிபந்தனைகள் இல்லை என்கிறார்கள், கல்வியாளர்கள்.
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள்தாம் (ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சத்துக்கும் கீழ்) பயன் பெறுகின்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வீட்டுக் குழந்தைகள் இந்த இட ஒதுக்கீட்டுப் பலனை அடைய முடியவில்லை எனப் புலம்புகிறார்கள் பெற்றோர். மேலும், இந்த இட ஒதுக்கீடு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் 80% சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்தாம் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கடந்த 2012 ஜூலை 2 அன்று வழங்கிய தீர்ப்பில் ‘கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு இருப்பிடத்தில் இரண்டு பள்ளிகள் இருந்தால் எந்தப் பள்ளியில் சேர்க்க முடியும் என்பதில் தெளிவு இல்லை. தாம் விரும்பும் பள்ளியில் சேரும் உரிமை முதலில் அக் குழந்தைக்கு இருக்க வேண்டும்‘ என்றார்.
மேலும், கல்வியில் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் இச் சட்டத்தில் வலுவாக இல்லை என்கிறார் பிரின்ஸ். ‘‘(மாநில)‘அரசு எவ்வகையில் விரும்புகிறதோ அவ்வகையில் அனைவருக்குமான கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியை அரசு விரும்புகிற வகையில் விரும்புகிற சட்டத்தின் மூலம் அமல்படுத்தலாம்’ என சட்டம் கூறுகிறது. மாநில அரசு எவ்வாறு விரும்புகிறதோ அந்த வகையில் என்றால், அரசு தனியார் கூட்டைத்தான் விரும்பும்’’ என்கிறார்.
பொதுப்பள்ளிகளின் சிறப்பை அரசு உணரவில்லை என்பதையே இதன் மூலம் உணர முடிகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசு எதை வேண்டுமானாலும் தனியாருக்கு அனுமதிக்கும். ஆனால், தொடக்கக் கல்வியை மட்டும் தன் கண்காணிப்பில் வைத்து இமை போலக் காக்கும். உதாரணமாக, அமெரிக்காவில் தொடக்கக் கல்விக்கான முழுச் செலவையும் அரசு மட்டுமே ஏற்கிறது. 
கனடாவை எடுத்துக்கொண்டால், ஒரு பகுதியைச் சேர்ந்த மாணவன் வேறு பகுதியில் உள்ள பள்ளியில் சேருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அங்கு அருகமைப் பள்ளி முறை கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது. பல மைல் தூரம் புத்தகச் சுமையைச் சுமக்கும் நிலைமை அங்கு கிடையாது. அங்கு தொடக்கக் கல்வி குறித்து ஆலோசனை வழங்க நிரந்தரமான சட்டப்பூர்வ அமைப்புகள் உள்ளன. அதன் செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது.
ஆனால், இங்கு தனியார் பள்ளிகள் மதிப்பெண் பொரித்து எடுக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. நாமக்கல் பகுதியில் இப்பள்ளிகள் அதிகமாக இருப்பதால் கோழிப்பண்ணைகள் போல பள்ளிகளை நடத்தி வருகின்றன. இதுபோன்ற பள்ளியை ராசிபுரத்தில் முதலில் தொடங்கியவர்களின் ஒரு பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தனது கிளையைச் சில ஆண்டுகள் முன்னால் தொடங்கியது.
அது குறித்து அதன் நிர்வாகியிடம் பேசியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் அவர் கல்வியியல் சார்ந்தவர் அல்ல; அவர் ஒரு விலங்குகள் மருத்துவர் என்பது. இரண்டாவது முதலில் தனது குடும்பத்துக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளை நிர்வகித்து வந்தவர்; இப்போது பள்ளியை நிர்வகிக்கிறார். அடுத்தது, தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக, அதாவது பெரிய அளவில் கோழிப் பண்ணைகள் வைப்பதற்காக வளைத்துப் போட்ட 50 ஏக்கர் நிலத்தில்தான் இப்போதைய பள்ளி பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. தமது பள்ளிக்கு மேலும் ஒரு கிளை தேவைப்பட்டது; அது நெடுஞ்சாலை அருகில் இருந்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெற்றோர் வந்து போக வசதியாக இருக்கும் என்பதால் கோழிப்பண்ணைத் திட்டத்தைக் கை விட்டுப் பள்ளியை உருவாக்கினார்கள். அது வீண் போகவில்லை. இப்போது சில ஆண்டுகளிலேயே அப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மூவாயிரம் ஆனது. நான் கேலிக்காக இதைச் சொல்லவில்லை. யாரும் விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
கோழிகள் அதிக முட்டைகள் பொரிக்கச் செய்வதைப் போல மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பொரிக்கச் செய்ய வேண்டும் என்பதால் அம் மருத்துவருக்குப் பள்ளியை நிர்வகிப்பது சுலபமாக இருக்கலாம்.

இதுபோல தமிழகத்தில் பிரபலமாக உள்ள பள்ளிகள் பெரும்பாலும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக இருக்கின்றன. 90 மாணவ& மாணவிகள் தங்கிப் படிக்கிறார்கள். அதாவது அவர்களது காலை நேரம் 6 மணிக்குத் தொடங்குகிறது. நள்ளிரவு வரை அவர்கள் படிப்பு தொடர்கிறது. பள்ளி தொடங்குவதற்கு முன்னும், பின்னும் விடுதிக்கே ஆசிரியர்கள் வந்து தேர்வு நடத்துகிறார்கள். அதன் பிறகு மாணவர்கள் தாமாகப் படிக்க வேண்டும். தமது அறையில் பாடம் படித்தால் கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு முன் கதவை மூடிவிட்டுத் தூங்கினால், விடுதி ஆசிரியர்கள் கதவைத் தட்டி எழுப்பி விடுவர்.
எந்த ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் குறித்து அதிகப் புகார்களை அளிக்கிறாரோ அவரே அப் பள்ளியின் சிறந்த ஆசிரியராவார். இது போன்ற மற்றொரு பிரபல பள்ளியின் முதல்வரின் அறையில் உட்கார்ந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் இது போன்ற 18 புகார்கள். அதில் ஒன்று விநோதமானது. அதாவது அப் பள்ளியின் நுழைவாயிலில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய முடியும். அதிலும் சிறுவர், சிறுமி என தனித் தனி வரிசைகள். அவ்வாறு ஆண்கள் வரிசையில் சென்ற மாணவன் மாணவிகள் வரிசையை மீண்டும், மீண்டும் திரும்பிப் பார்த்தபடி நடந்தான் என்பது ஆசிரியையின் குற்றச்சாட்டு. எவ்வளவு பெரிய ஒழுக்கக்கேடு! அந்த மாணவனிடம் விசாரிக்காமலேயே பெற்றோருக்கு அலைபேசிய முதல்வர் அவரது மகன் பள்ளியில் ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகவும், இதை மேலும் அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.
இது போல தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படும் பல நடவடிக்கைகள் சிறைச்சாலைகளை நினைவு படுத்துவதாக உள்ளன. தமிழ்நாட்டில் பல ஊர்களில் பள்ளிகளையும் கல்லூரிக¬ளையும் திறந்து வரும் நிறுவனப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் விசில் அடித்ததும் அக் குழந்தைகள் சரசரவென ஓடிச் சென்று உள் அரங்கின் சுவர்களில் முகத்தைக் காட்டி, கைகளை உயர்த்தியபடி நிற்க வேண்டும். அடுத்த விசில் சத்தம் கேட்ட உடன்தான் திரும்ப வேண்டும்.
இத்தகைய பள்ளிகள்தான் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. அரசு என்னதான் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் இவர்களிடம் நடப்பதில்லை. பணம் பிடுங்க எத்தனையோ வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. மேலும், இப்போதெல்லாம் கல்விச் சுற்றுலா, கலைச் சுற்றுலா, பொதுப் பணிகள் திட்டம், தலைமைப் பண்புப் பயிற்சிகள், நுண் கலை & வரை கலை& வடிவமைப்புப் பயிற்சிகள், நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள், ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கு இப்போதே தயாரிப்புகள் என நவீனக் கொள்ளையிலும் ஈடு படுகின்றன.
ஆனால், உண்மை நிலவரம் இவர்களுக்கு எதிராக இருப்பதைப் பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. அண்மையில் வெளியான ஆட்சிப் பணித் தேர்வு முடிவுகள் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட இது போன்ற பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல என்பதையே காட்டுகின்றன.
இவ்வளவை மீறி இவர்களுக்குப் பெரிய நெருடலாக இருப்பது பொதுப் பாடத் திட்டம். பெரும்பாலான பள்ளிகள் தற்போதைக்கு இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் பொதுப் பாடத்திட்டமே நடைமுறைக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் இத் தனியார் நிறுவனங்கள் இப்போதே சி.பி.எஸ்.சி பள்ளிகளையும் தொடங்கி வருகின்றன.
ஆனால் மாநிலப் பள்ளி முறையானாலும், மெட்ரிக்குலேஷன் முறையானாலும். சிபிஎஸ்சி அல்லது ஆங்கிலோ & இந்தியன் முறையானாலும் பாடங்கள் ஒன்றுதான். ஆசிரியக் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசியக் குழு (என்.சி.ஈ.ஆர்.டி) தேசியக் கல்வித் திட்டம் & 2005இல் கூறியுள்ளபடி ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்களை விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளது. எந்தக் கல்வி முறையானாலும் இதைத்தான் தமது பாடத் திட்டங்களில் வைத்துள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இதன் அடிப்படையில் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்தை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதியுள்ளது. இப் பாடங்கள் பல வரைவுகளாக இணையத்தில் வெளியிடப்பட்டு மக்கள் எதிர்வினைகளைப் பெற்று மீண்டும் திருத்தப்பட்டு அதன் வரைவு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி மாதிரி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் பின்னூட்டங்களைப் பெற்று இறுதி வடிவம் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதோடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது தரமான பாடம் இல்லை என்றால் வேறு எது தரமான பாடம் என்று சொல்லுங்கள். அல்லது எந்தப் பள்ளிகள் அல்லது புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற துறைசார் வல்லுநர்களையும் கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட குழுக்களை நியமித்துப் பாடங்கள் எழுதியுள்ளன என்பதையாவது காட்டுங்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ்.
நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளை உணரச் செய்வதும் அதைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாட்டை உணர்த்தச் செய்வதும்தான் அடிப்படைக் கல்வியின் நோக்கம். அதனால்தான் பாரதி ‘‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், ஐயோ! என்று போவான்’’ என்று பாடினான்.
இதை ஏற்கும் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுபோன்ற பள்ளிகள் அடிப்படைக் கல்வியின் அடித்தளத்துக்கே வேட்டு வைக்கின்றன என்கிறார். ‘‘1 முதல் 10 வரை படித்து வெளி வரும் மாணவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் விழுமியங்களைத் தெரிந்து கொண்டு வெளிவரவேண்டும் என அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனவா? இந்த நோக்கம் குறித்து, இப்படி அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்து எத்தனை பள்ளிகளின் தாளாளர்கள், தலைவர்களுக்குத் தெரியும்?’’ என்றும் கேட்கிறார்.
தனியார் பள்ளிகள் தாம் இக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அளிக்குமா?
- நன்றி
த சண்டே இந்தியன் ஜீன் 2013 இதழ்-- 

 -