சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 29 நவம்பர், 2014

தமிழ் சாப்ளின் கலைவாணர் 3

நாட்டுக்கொரு நல்ல கோமாளி!


அந்தக் காலத்தில் கூட எல்லாப் படங்களுக்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள். பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகள், காட்சிகள் இருந்தால் அது சென்சார் செய்யப்பட்டுவிடும். பொதுவாக கிளப் டான்ஸ் உள்ள படங்கள், இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்கள், ஆபாச அங்க அசைவுகள் உள்ள படங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அந்த மாதிரிப் படங்களின் வால்போஸ்டர்களைப் பார்ப்பதுகூட குற்றம். அப்படியே தெரியாமல் போய்விட்டாலும் ஸ்பாட் சென்சார் அவ்வப்போது அமலுக்கு வரும். அதுபோன்ற காட்சிகள் வரும்போது அந்தக் காட்சி முடியும் வரை கண்ணைப் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். ‘திற’ என உத்தரவு வந்தால்தான் கண்ணைத் திறக்க வேண்டும். ‘மாயமோதிரம்’ என்ற படம் பார்க்கும்போது அவ்வாறு பலமுறை கண்ணை மூடிக்கொள்ள நேர்ந்தது நினைவில் இருக்கிறது. இதுமாதிரி நகைச்சுவைக்காட்சிகளுக்கும் கண்ணை மட்டுமல்ல காதுகளையும் பொத்திக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக் காலத்திலும்கூட, அந்தக் காலத்துக்கு ஏற்ப வசனங்கள் விரசமாக இருப்பதுண்டு. அதில் விதிவிலக்கு கலைவாணர்- மதுரம் நடித்த காட்சிகள்.

இரட்டை அர்த்த வசனங்கள், நகைச்சுவை என்ற பெயரில் விரசமான காட்சிகள், அங்கஹீனங்களைக் கேலி செய்வது போன்றவை பாய்ஸ் கம்பெனிகள் காலத்திலும் இருந்தது. ஸ்பெஷல் நாடகங்களில் பஃபூன் காமடி இதற்காகவே பிரபலம். பேசும்படங்கள் வந்தபோது அதிலும் அப்படியே தொற்றிக்கொண்டது. தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் நகைச்சுவைக் காட்சிகள் எப்படி இருந்தன? இந்தக் கேள்விக்கு வெ. சாமிநாதசர்மா எழுதியுள்ள ‘நமது பிற்போக்கு’ என்ற புத்தகத்தில் விடையைக் காணலாம்.

“இன்றைய காட்சிகளில் சம்பாஷனைகளும், பாட்டுகளும் எவ்வளவு தாழ்வான நிலையை அடைந்திருக்கின்றன என்பதைப் பற்றி விஸ்தரித்துக் கூற நமது எழுதுகோல் கூசுகிறது. சம்பாஷணைகளிலும், பாட்டுகளிலும்தான் ஒரு கம்பீரம் இல்லையென்று சொன்னால் பெயர் கொடுப்பதில்கூட ஒரு கம்பீரம் இருக்கக்கூடாதா? படங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; பெயர்களில் ஒரு கவுரவம் இருக்க வேண்டாமா? ‘அம்மாஞ்சி’, ‘மிளகாய்ப்பொடிபார்ஸ்’, ‘செல்லாக்காசு’! அடக் கடவுளே! இவையெல்லாம் என்ன பெயர்கள்? நாம்தான், உலக அரசியல் நாணயச் செலாவணி மார்க்கெட்டிலே செல்லாக்காசுகளாக இருக்கிறோமே! இந்த அவமானம் போதாதா? சினிமாக்களில்கூட நாம் செல்லாக்காசுகளாக முத்திரையிட்டுக் கொள்ள வேண்டுமா? கிழட்டுப் பிராமணன் ஒருவன் தனது இரண்டாம் தாரத்துக்குத் தலைவாரி முடிப்பது; அல்லது அவன் மனைவி அவனுக்கு அன்னம் படைப்பது; அல்லது குறத்தி குறி சொல்லுவது; அல்லது வண்ணான் வண்ணாத்தி காட்சி; இவையெல்லாம் ஹாஸ்ய ரசம்”

அப்போதெல்லாம் சினிமா விமர்சனமும் எவ்வளவு முதிர்ச்சியாக இருந்தது என்பதற்கும் இது சாட்சியாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றியதில் கலைவாணருக்கு முக்கியப் பங்கு உண்டு. உண்மையில் இதில் அவர்தான் டிரெண்ட் செட்டர். தனக்கென தனியான அடையாளத்தை வகுத்துக் கொள்கிற வரை அவரும் தொடக்க கால தமிழ் சினிமா குறித்து வெ.சாமிநாத சர்மா விவரித்துள்ள மாதிரியான நகைச்சுவைக் காட்சிகளில் தான் நடித்துவந்தார். அதற்கு ‘சந்திரகாந்தா’ ஒரு உதாரணம். இதில் கலைவாணர் நடித்த கேரக்டர் பெயர் ‘முனியன்’. அவருக்கு ஜோடியாக பி.சுசீலா (பின்னணிப் பாடகி அல்ல) நடித்தார். அவரது கேரக்டர் பெயர் ‘அம்பட்ட சுப்பி’.

முதல் படங்களில் நடித்தபோதே சினிமா கலையை நன்றாகப் புரிந்துகொண்டார். சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகள் ஒரு இணை திரைக்கதை என்பதை உணர்ந்துகொண்டார். உதாரணமாக, ’முதல்தேதி’ படத்தில் ஒண்ணாம் தேதி சம்பளத்தை நம்பிவாழும் வங்கிக் குமாஸ்தாவாக சிவாஜி கணேசனும் அவர் கொண்டுவரும் குறைந்த சம்பளத்தில் சிக்கணமாகக் குடும்பம் நடத்தும் மனைவியாக அஞ்சலிதேவியும் நடித்துள்ளனர். இந்த பிரதான கதைக்கு கலைவாணரும் மதுரமும் ஒரு இணை கதையைக் கூறுவார்கள். லட்சாதிபதியின் மாப்பிள்ளையான கலைவாணர் சும்மா பெறுமைக்காக வேலைக்குப் போகிறவராகவும், அவரது ஊதாரி மனைவியாக மதுரமும் நடித்திருப்பார்கள்.

இதுகலைவாணர் - மதுரம் தொடங்கிவைத்த டிரண்ட் தான்! 1939இல் வெளிவந்த ‘திருநீலகண்ட’ரில் எம்.கே.டி பாகவதரும் சரஸ்வதியும் சொல்லும் கதைக்கு இணையான கதையை கலைவானர் உருவாக்கி தானும் மதுரமும் நடித்திருந்தனர். இப்படத்திலிருந்து காமெடிக்கு தனி டிராக் எழுதும் பழக்கம் தொடங்கியது.

கலைவாணர் ஒரு பிலிம் மெக்காணிக்கும் கூட. இப்போது ஒரு படத்தைத் தயாரித்து, ரிலீஸ் செய்து படு தோல்வி அடைந்தாலும்கூட, கலைவாணரிடம் கொண்டுவந்தால் போதும். அதை எப்படிச் சரி செய்யவேண்டுமோ அப்படிச் சரிசெய்து விடுவார். உதாரணமாக, 1947 இல் வெளியான ‘பிரம்மரிசி விஸ்வாமித்ரா’ சரியாக ஓடவில்லை. பின் கலைவாணரிடம் வந்தார்கள். சகடன், யோகன் என இரு பாத்திரங்களை உருவாக்கி (சகட யோகம்!) தானும் மதுரமும் நடித்துக்கொடுத்தார்கள். படம் மீண்டும் 1948 தொடக்கத்தில் மீண்டும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதேபோல ‘சோகமேளர்’, ‘குடும்ப விளக்கு’ போன்ற படங்களும் என். எஸ். கே மெக்காணிக் பட்டறையில் ரிப்ப்ர் செய்யப்பட்டபின்னரே வெற்றியடைந்தது.

மற்ற படங்களிலும் நகைச்சுவைக்காட்சிக்கான கதை வசனம் மட்டுமல்லாமல் காட்சிகளையும் அவர்தான் இயக்குவாராம். படத்துக்கான ஒப்பந்தமே அவ்வாறுதான் போடப்பட்டது எனக் கூறுவதுண்டு. எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.

1941 இல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் அலிபாபாவாக கலைவாணரும் மார்ஜீயானாக மதுரமும் நடித்திருந்தனர். ஆங்கிலப்படத்துக்கு நிகராகத் தயாரிக்கப்பட்டதாக அந்தக்காலத்தில் இப்படம் பெயர் பெற்றது.

1938 இல் வெளியான ‘தட்சயக்ஞம்’ புராணப் படத்தில் ரதி - மன்மதனாக மதுரமும் கலைவாணரும் நடித்தனர். இதில் ரதி - மன்மதன் குறித்து காலம் காலமாகக் கூறப்பட்ட புராணிகத்தை உடைத்து நொறுக்குகிறார்கள். மன்மதன் அழகனல்ல - பறட்டைத்தலையன். ரதியை ஒரு கிழவனுக்கு மணமுடித்துக்கொடுக்கிறார்கள். கிழவனால் சுகம் பெற முடியாத ரதி இளைஞனான பறட்டைத் தலையன் மன்மதனை நாடுகிறாள்.

அதேபோல .... படத்தில் ஒரு பாட்டு. அதில் நாக்கில் கலைவாணி குடியிருக்கிறாள் என்றால், மல-ஜலம் கழிப்பது எவ்வாறு? எனக் கேள்வி கேட்பார்கள்?

மாணிக்கவாசகர் படத்தில் ‘இது தர்ப்பைப் புல் இல்லங்கானும்! எழுதுகோல்! தொலைச்சுப் புடுவேன், தொலைச்சு, ஜாக்கிரதை’ என புரோகிதரிடம் கூறுகிறார்.

1940 இல் கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் தயாரித்த படம் ‘நவீன விக்ரமாதித்தன்’ பட்டி - விக்கிரமாதித்தன் கதையை கலைவாணர் நவீனப்படுத்தியிருப்பார். கதை எழுதியதோடு நவீன விக்கிரமாதித்தனாக நடித்தார். இந்தப் படத்துக்குள்ளேயே இன்னொரு படம்; இன்னொரு கதை. அது ‘ புத்திமான் பயில்வான்’ இதன் கதியும் கலைவாணர்.

’புத்திமான் பலவான்’ என்ற கொள்கையுடன் வாழும் சோம்பேறி சின்னான் - அவன் ஏழை  மனைவி செல்லியாக என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்.

இப்படத்தில் இப்படத்தில் எம். ஆர். சுவாமிநாதனிடம் அடி வாங்கிக்கொண்டு கலைவாணர் வருவார். ஆனால் மதுரத்திடம் தாந்தான் அவடை அடிச்சது போலப் பேசுவார்.

“அப்படி வேற நினைச்சியா? எனக்குப் பொல்லாத கோபம் வந்திருச்சி. அவ்வளவுதான் நான் கைய அப்படி மடக்கி அவன் கன்னத்துக்கு நேரா குறிபாத்து இப்படிக் கொண்டு பேனேன். அதற்குள் (தன் மூக்கைக் காண்பித்து) இங்க குடுத்தான். அதோட சுதாரிச்சுக்கிட்டேன். (மாடு போல தலையக் குணிந்து) அப்படியே வயத்துல குத்தீரலாமுனு நினைச்சு குனிஞ்சேன். (முதுகைக் காண்பித்து) இங்க குத்தினான். என்னடா?ன்னு நிமுந்தேன். அவ்வளவுதான் (வயித்தக் காண்பித்து) இங்க குத்தினான். சீ இவ்வளவுதானா நீ என கத்திய விரிச்சுக் குத்தப் போனேன். இங்க குடுத்தான். சரி இனிவிட்டா ஆபத்துன்னு எழுந்திருச்சேன். ஒரே ஓட்டம்.

தன்னால் ஒரு அடிகூடத் திரும்பக்கொடுக்க முடியாவிட்டாலும் தன் மனைவியிடம் ஜம்பமாக, முகத்தை ஏதோ பயில்வான் மாதிரி வைத்துக்கொண்டு, கைகளை முறுக்கி மனைவி செல்லியிடம் பிரஸ்தாபிக்கும்போது அவர் கண்கள் மட்டும் அவரது அப்பாவித்தனததைக் காட்டிக்கொடுக்கும்.

இதேபோல, பி யூ சின்னப்பா நடித்த உத்தம புத்திரன் படத்தில் என் எஸ் கே வைணவப் பிராமணர் வேடத்தில் நடிப்பார். ஆத்தங்கரையில் குளித்து முடித்து திருமண் (உடம்பில் நாமம்) இட்டுக்கொண்டிருக்கும்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த புல்லுக்கட்டுக்காரி வருவாள். அவளிடம் வம்பிழுத்துக்கொண்டே தமது இச்சையை வெளிப்படுத்துவார். அதற்குள் அவ்வப்போது ஆள்கள் ஆத்துக்கு வந்துகொண்டிருப்பார்கள், உடனே திருமந்திரம் பாடுவதுபோல பாசங்கு செய்வார். ஒருவழியாக அப் பெண்ணை சாயந்தரம் ‘குளித்து சுத்தமாக; வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வரச் சொல்லுவார். அதற்குள் மனைவியிடம் வேண்டுமென்றே சண்டை இழுத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். ஒரே மகனிடமும் காசு கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். அழுதுகொண்டே அப்பா வீட்டுக்குச் செல்லும் மாமியிடம் புல்லுக்கட்டுக்காரி விஷயத்தைச் சொல்லி அழுவாள். புருசனின் திட்டத்தைப் புரிந்துகொண்டே மனைவி, தானே புல்லுக்கட்டுக்காரிபோல போவாள். புல்லுக்கட்டுக்காரி என நினைத்து அசடு வழியும் என் எஸ் கே மனைவியிடம் வசமாக மாட்டிக்கொள்வார்.


இங்கு கூறப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலான படங்கள் 1944க்கு முந்தவை. 1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டுசிறைக்குச் செல்கிறார். அவருடன் பாகவதர், ராமுலு ஆகியோரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 1947 இல் சிறைமீண்டு மீண்டும் திரைவானில் கலக்குகிறார். அப்படங்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.

நகைச்சுவைக்கு அடையாளமாக ஆச்சரியக் குறி இடுவது. கலைவாணர் பேசினால் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஆச்சரியக் குறிதான்! அது அவருக்குத்தான் பொருந்தும்!

நகைச்சுவை என்பது கலைவாணரின் மொழி; வாழ்க்கை; சுவாசம்!

லட்சுகிகாந்தன் கொலைவழக்கில் இரண்டறை ஆண்டுகள் கழித்து பாகவதரும் கலைவாணரும் விடுதலை யாகிறார்கள். பாகவதர்  நேராக தமக்கு விருப்பமாக முருகன் கோயில் செல்கிறார். அதன்பிறகு அவருக்கு யாரையும் பார்க்க விரும்பவில்லை. தனிமையில் இருக்கிறார். ஆனால், கலைவாணர் உடனடியாக மக்களிடம் சென்றார்’ தனது சிறை அனுபவங்களை மக்களிடம் பேசினார். சிறையில் என்னென்ன மாதிரியான கைதிகளைப் பார்த்தார். கைதிகளின் நிலைமை, அவர்களது வாழ்க்கை ஆகியவற்றை நகைச்சுவையாகக்கூறினார். மக்கள் சிரித்தனர்; கைதட்டி ரசித்தார்கள். இதோ தொடர்ந்து பேசுகிறார்:

”இப்போ நீங்க சிரிச்சீங்களே அது போதாது, நல்லா குலுங்கக் குலுங்கச் சிரிக்கணும்! ஆனா நீங்க இங்க சிரிச்சது எப்படி இருந்தது தெரியுமா? லெனின் கிராடுல ஹிட்லர் சிரிச்ச மாதிரி இருந்துச்சு! நான் வேண்டுறது அந்தச் சிரிப்பே இல்ல, அது மரணச் சிரிப்பு!...  ஒரு நாட்டுக்கு உணவு, உடை எல்லாம் அப்புறம்தான்...  முதல்ல சிரிப்பு வேணும்!.. .. ஒரு மருத்துவர் சொல்லியிருக்காரு.. நல்லா சிரிச்சுட்டா நோய் வராதாம்! சிரிப்பு ஒரு மருந்து!..  அதனால நீங்க சிரிக்கச் சிரிக்க எனக்கு ஆனந்தம்! நான் வந்தேனோ இல்லையோ நீங்க சிரிச்சிட்டீங்க! அது எனக்குப் பெருமை!.. சிரிக்க வைப்பது ஒரு தொண்டு! அப்படீன்னா நான் தேசத்துக்கு ஒரு தொண்டு செய்த மாதிரி! மாதிரி என்ன மாதிரி? தொண்டுதான் செய்யறேன்! ..

“மனிதன் எதிலே சிறந்தவன்? புலி - மனிதனைவிட ரொம்ப அழகா இருக்கு! குரங்கு - நம்மைவிட நல்லா நடக்குது! குருவி - நம்மை விட நல்லா கூடு கட்டுது! மனிதன் உயர்ந்தவன் என்றால் அழகால் அல்ல.. நடையால் அல்ல.. திறமையால் அல்ல.. சிரிப்பால்! ... மற்ற பிராணிகளுக்கு சந்தோஷம் மட்டும் உண்டு! ஆனால் சிரிக்கத் தெரியாது!

“நாய்கூட ஆனந்தத்திலே வால் ஆட்டுது, ஆனா சிரிக்காது! மனிதன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும். அது எங்கே இருந்து வருது? நல்ல மனசுல இருந்து! .. அதனால நீங்க சிரிச்சா எனக்கு சந்தோஷம்! என்னைப் பார்க்கிறபோது மட்டுமல்ல, என்னை நினைக்கிற போதும்கூட சிரிங்க! சிரிங்கோ!” 

தமிழ் சாப்ளின் கலைவாணர் 2

2
டிரண்ட் செட்டர்


கலைவாணர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியது 1935. முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘சதி லீலாவதி’, முதலில் வெளிவந்த படம் ‘மேனகா’.

சதி லீலாவதி படம் ஏற்கனவே நாடக உலகில் பெறும் வெற்றி பெற்ற ‘பதிபக்தி’ என்ற நாடகக் கதை. எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த நாடகக் கொட்டகையில் 365 நாட்கள் தொடந்து நடந்ததாம். அக்கதையை  அதே பெயரில் சினிமாவாகத் தயாரித்தார் நேஷனல் மூவிடோன் சிதம்பரம் செட்டியார். எம். கந்தசாமி முதலியார் )எம். கே. ராதாவின் தந்தை) கதை வசனம் எழுதி மேடை நாடகமாகத் தயாரித்து அளித்திருந்த நாடகம் அது. இதன் திரை வடிவத்தை ஜித்தன் பானர்ஜி, அல்டேகர் ஆகிய இரட்டையர் இயக்கினர்.

நாடக வடிவில் அதன் அமோக வெற்றியால் அதே கதையைப் படமாக்க மருதாசலம் செட்டியார் என்பவருக்கும் ஆசை வந்ததாம். நேராக எம்.கந்தசாமி முதலியாரிடம் வந்தார். ஆனால் அதன் உரிமையை ஏற்கனவே நேஷனல் மூவிடோனுக்கு விற்றுவிட்ட விவரத்தைச் சொன்னார். செட்டியாருக்கு அங்கிருந்து வெறுங்கையுடன் போக மனசில்லை. அப்போதுதான், ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘சதி லீலாவதி’ கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினார். படித்தால் ஆச்சரியம். அதே கதை. வாசனிடம் உரிமை பெற்று ’சதி லீலாவதி’ படம் தயாரானது. டைரக்‌ஷன் எல்லீஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கர். எம்.கே. ராதா இதில் கதாநாயகன். ’சதி லீலாவதி’ மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் அதன் கதை உரிமை எனக்குத்தான் என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தமிழ் சினிமாவில் கதை உரிமை கோரி தொடங்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். வாசன் வெற்றி பெற்றார். இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுக்குச் சிறிய வேடம் தரப்பட்டது.

‘மேனகா’ வும் எம். கந்தசாமி முதலியார் தயாரித்த நாடகம்தான். டி.கே.எஸ் சகோதரர்கள் குழு நடித்து இதனைப் பிரபலப்படுத்தியது. சகோதர்களே படத்திலும் நடித்தனர். இதில் வில்லத்தனமான காமெடி கேரக்டர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு. தமிழ்ச்சினிமாவில் முதல் காமடி வில்லனும் இவர்தான் போலும்! அவரும் தாசி கமலமாக டி.கே.சண்முகமும் நடிக்கும் காட்சிகள் நாடகத்தின் ஸ்பெஷல் ஐட்டம். அதற்காகவே படத்திலும் கிருஷ்ணன் புக் செய்யப்பட்டார். தாசி கமலமாக டி.விமலா என்ற நடிகை நடித்தார். இதில் விரச வில்லனாக நடித்த கிருஷ்ணனைப் பார்த்து ‘அணைய வாரும் துரையே’ எனப் பாட விமலா மறுத்து விட்டாராம். அது ‘அருகில் வாரும் துரையே’ என மாறியது.  இதற்குப் பழி வாங்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருவரும் நெருக்கமாக நடித்த கட்டிலறைக் காட்சியும் இதில் இடம் பெற்றது. அதில் நெருக்கமாக நடிக்கும்படி டைரக்டர் சாண்டோ தூண்டினார். ஆனால் அப்படி நடிக்க சும்மானாச்சும் மறுத்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அதற்கு அவர் கூறிய காரணம் “நான் பதிவிரதன்!” என்பது. அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை. “பதிவிரதை” என்று சொல்கிறார்கள் அல்லவா, அதுபோல ’பதிவிரதன்!’ என்றார். “ஒரே கணவனோடு வாழ்பவர் பதிவிரதை என்று கூறப்படுவது போல நான் பதிவிரதன். அதாவது ஏகபத்தினி விரதன். மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டு நடிக்க மாட்டேன்” என்றார். அவர
து குறும்பைப் புரிந்துகொண்ட டைரக்டர் அவரைச் சமாதானம் செய்தார். படம் சூப்பர் ஹிட்.

ஏறத்தாழ, தமிழ்ச்சினிமாவின் முதல் சமூகக்கதைப்படங்களும் இவைதான். குறிப்பாக, சதிலீலாவதி, மேனகாவின் வெற்றிக்குப்பிறகுதான் சமூகக் கதைகளைத் திரைப்படமாக்கும் துணிச்சல் வந்தது. அந்த வகையில் எம் . கந்தசாமி முதலியார், டி. கே.எஸ் சகோதரர்கள், என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் டிரண்ட் செட்டர்களாக அமைந்தனர். மட்டுமல்லாமல், தமிச்சினிமாவை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் என்.எஸ் கே தான்! அவர் அளவுக்கு முயற்சிகளை மற்றவர்களும் கையாண்டிருந்தால் தமிழ்ச் சினிமாவின் வரலாறு மேலும் மெருகூட்டப்பட்டதாக இருந்திருக்கும். இதுகுறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

1936 இல் வெளிவந்த மிருச்சகடி’யில்தான் கலைவாணரும் மதுரமும் முதல்முறையாக ஜோடியாக நடித்தனர். அதேஆண்டு பாகவதர் - தேவசேனா நடித்தபடம் - சத்யசீலன். இதில் கலைவாணர் - மதுரம் ஜோடி நடித்த ‘பொம்மி கல்யாணம்’ துண்டுப்படமாக எடுக்கப்பட்டு பிரதான படத்துடன் இணைத்துக் காண்பிக்கப்பட்டது.

இதுபோல ஹாலிவுட்டிலும் துண்டுப்படங்கள் பிரபலமடைந்திருந்தன. துண்டுப்படங்களுக்கு என ரசிகர்கள் உருவாகி திரையரங்குகளில் டிக்கெட் வாங்கவரிசையில் காத்திருந்தனர். துண்டுப்படங்கள் வெற்றியால் பின்னர் அவை முழுநீளப்படங்களில் இணைத்துக்காட்டப்பட்டதாகக் கூறுவதுண்டு. இதில் நகைச்சுவைப்படங்கள் அதிகம். மேற்கத்திய மரபில் வித - விதமான நகைச்சுவைகள் மேடைக்கலைகளாகப் புகழ்பெற்றிருந்ததால் இதில் ஒன்றும் விந்தை இல்லை. ஆனால், இது தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் அதை கலைவாணர் கையாண்டதுதான்.
கலைவாணர் செய்ததுபோல தனித் துண்டுப்பட
மாகத் தயாரித்து இணைக்கும் துணிச்சல் இங்கு யாருக்கும் இதுவரை வந்ததில்லை. தொடர்ந்து கலைவாணர் துண்டுப்படங்களுக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. உஷா கல்யாணம் படத்தில் ‘கிழட்டு மாப்பிள்ளை’ படம் காட்டப்பட்டது. இதன் வெற்றி பிரமிப்பாக இருந்தது. அதனால் எட்டு ஆண்டுகள் கழித்துத் தயாரிக்கப்பட்ட ‘ஜோதிமலர்’ படத்துடனும் ‘கிழட்டு மாப்பிள்ளை’ இணைத்துக் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டில் எம். ஆர். ராதா கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜசேகரன்’ படத்தில் கலைவாணர் - மதுரம் ஜோடி வழங்கிய ‘ஏமாந்த சோனகிரி’ படம் இணைத்துக் காண்பிக்கப்பட்டது. இதே ஆண்டு வெளியான ‘பக்த துளசிதாஸ்’ படத்தில் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் கலைவாணருக்கு ஜோடி மதுரமல்ல, அங்கமுத்து. கோயில் பட்டராக கலைவாணரும், மனைவியாக அங்கமுத்துவும் கலக்கினார்கள். தாசியிடம் செல்லும் கோவில்பட்டரால் அவதிப்படுகிறார் அங்கமுத்து.

இதே ஆண்டில் வந்து வெற்றிபெற்ற படம் ‘அம்பிகாபதி’. பாகவதர் - சந்தான லட்சுமி இணை. இதிலும் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் இணை இல்லை. இதில் கலைவாணர் ஏற்ற பாத்திரம் குடிகாரன் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டு அலையும் வேடம். ஆனால் கண்ணியமான சித்தரிப்பு. இப்படம் கலைவாணருக்கு பெரும் பெயர் வாங்கித்தந்தது. இயக்கம் எல்லிஸ் ஆர் டங்கன். அடுத்த ஆண்டு ஒரே படம்- ‘தட்சயக்ஞம்’. இதில் ரதி - மன்மதனாக கலைவாணர் ஜோடி நடித்தனர். இதில் கலைவாணர் அடிக்கடி பேசும் வசனம்: ‘நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்.’ இதுதான் தமிழ்த் திரை உலகில் முதல் பஞ்ச் டயலாக். இது பெரும் வெற்றி அடைந்ததால் கலைவாணர் தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசினார்.

அவரது பிரபல பஞ்ச் டயலாக்குகள்:

‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’
‘அடிப்பியோ, ஙொப்பம்மவனே, சிங்கம்டா!”
‘ஐயோடா!’
‘என் ஆச்சர்யம்!’
‘பரமசிவன்கி பார்வதி கங்காதோ பத்தினிஹை! எனக்கு ஒண்ணும் நஹி ஹே! க்யாகர் காணா பகவான்!’
‘இது ஒரு பேச்சா?’

இவரைத் தொடர்ந்து கே. சாரங்கபாணி, கே. ஏ. தங்கவேலு, பி. டி. சம்பந்தம், சி எஸ் பாண்டியன். கே ஆர் செல்லம். டி பி முத்துலட்சுமி ஆகியோரும் பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிட்டனர். இன்றும் அது தொடர்கிறது!

அசோக்குமார் படத்தில் கலைவாணர் பேசிய பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம், இதில் நாட்டு வைத்தியரின் மகனாக வருவார்.  இவருக்கு நாட்டு வைத்தியம் வராது. அதனால் இவரை வைத்தியர் ஒதுக்கிவைத்திருப்பார். ஆனால் அப்பா இல்லாத நெரத்தில் இவரே நோயாளிகளுக்குத் தப்புத்தப்பாக மருந்து கொடுப்பார். அப்போதெல்லாம்

‘இவரு சொன்னா சொன்னதுதான்.’ என்று சொல்லிவிட்டு ‘எவரு?’ எனக்கேப்பார். மாத்திரை இடைவெளி விட்டு தன்னைக்காட்டி ‘இவரு!’ என்பார். இந்த பஞ்ச் டயலாக் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம். தன்னைப்பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் ‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’ என்று கூறிக்கொள்வதுண்டு.

அப்புறம் சாகுந்தலம். இதில் மீன் படவர்களாக கலைவாணரும், டி எஸ் துரைராஜும் மாமன் மச்சானாக நடிப்பார்கள். ஆற்றில் துஷ்யந்தன் தவறவிட்ட மோதிரத்தை விழுங்கிய மீன் இவர்கள் வலையில்தான் சிக்கும், அந்த மீனை அறுக்கும்போது அதன் வயிற்றில் இருக்கும் மோதிரத்தை விற்று இருவரும் பங்குபோட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு, சண்டைபோட்டு அரசிடம் மாட்டிக்கொள்வார்கள்.

இதில் கலைவாணர் பேசும் பஞ்ச் டயலாக் : ‘அடிப்பியோ. ஙொப்பம் மகனே. சிங்கம்டா!’ வசனம்தான் வீரமாக இருக்கும். ஆனால் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். அழுதுகொண்டே ‘அடிப்பியோ..’ தேம்பல் ‘ஙொப்பம்மகனே..’ அழுகை ‘.. சிங்கம்டா..’ கதறல்.. அடி விழ, விழ தேம்பல், அழுகை, கதறல் அதிகரிக்கும். ஆனால் சிங்கம் அழுதுகொண்டே கர்ஜிக்கும்!

இவ்வாறு தனது செல்வாக்கு அதிகரித்ததால் கலைவாணர் தமக்கென ஒரு தனி படக் கம்பெனி தொடங்கினார். கம்பெனியின் பெயர்: அசோகா பிலிம்ஸ். அவருக்குள் முகிழ்த்திருந்த கொள்கை முதிர்ச்சியை விளக்குவதாக இப் பெயர் இருக்கிறது. கோவையில் இயங்கிய ‘அசோகா பிலிம்ஸ்’ கம்பெனி ’நவீன விக்கிரமாதித்தன்’, ‘சந்திர ஹரி’, இழந்த காதல்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘புத்திமான் பலவான்’ போன்றவைகளாகும்.

இக் காலகட்டத்தில் கலைவாணர் - மதுரம் இல்லையென்றால் அது படமேயில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதே ஆண்டில் ‘ஆனந்தாஸ்ரமம்’ படத்தில் மன்னனை எதிர்த்துப் போராடும் கிராமக் குடிகளாக நடித்தனர். அடுத்து வந்த ஜோதிராமலிங்கம் பிள்ளை படத்தில் ஜமீன்தாரின் மைத்துனர் பூவலிங்கம் பிள்ளையாக வந்து வெள்ளையம்மாள் என்ற ஏழை தாழ்த்தப்பட பெண்ணை திருமணம் செய்பவராக நடித்தார்.

தொடர்ந்து மாணிக்க வாசகர். திருநீலகண்டர், பிரஹலாதா ஆகிய படங்கள். இவற்றையடுத்து வந்த படம் ‘சிரிக்காதே’. ‘ஒண்ணில் நாலு காமிக் படம்’ என்ற அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. அதாவது அடங்காப்பிடாரி, புலிவேட்டை, யமவாதனை, மாலைக்கண்ணன், போலிச்சாமியார். இதுகுறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கதைச்சுருக்கம்”

“ஒரு பெண்ணைக் கையைப்பிடித்து இழுத்த ’போலிச்சாமியார்’ பூசை வாங்குகிறார் நன்றாக; பெண்டாட்டி வேதனை பொறுக்காது ‘யமவேதனை’யை நாடிச் செல்கிறான் ஒருவன்; ‘அடங்காப்பிடாரி’ போட்ட அட்வர்டைஸ்மெண்ட் காரணமாக ஒரு பெண்ணுக்கு நூறு மாப்பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள்; மாலைக்கண்ணன் பீரங்கிக் செவிடரோடு மாலை வேளையில் மாமனார் வீடு போகிறார். ‘சிரிக்காத பேர் இதைப்பார்க்காத பேர்.” போலிச்சாமியாரில் கலைவாணர் - மதுரம், கே எஸ் சங்கர் ஐயர் நடித்தனர். தொடர்ந்து 1944 வரை நடித்த படங்கள் எல்லாமே ஓஹோதான். மணிமேகலை, சகுந்தலை, பூலோகரம்பை, அசோக் குமார், இழந்தகாதல், சந்திர ஹரி, ஹரிச்சந்திரா, நவீன தெனாலிராமன், பிருதிவிராஜன், மணோன்மணி, கண்ணகி, சிவகவி, ஜோதிமலர், மங்கம்மா சபதம், பாக்கியலட்சுமி, ஜகதலப்பிரதாபன், பிரபாவதி, ஹரிதாஸ்... பட்டியல் இன்னும் நீள்கிறது. இவையெல்லாம் அன்றைய சூப்பர் டூப்பர் ஸ்டார்கள் நடித்தபடங்கள்.

இப்போது வரும் படங்களின் நகைச்சுவைக்காட்சிகளில் பெருமான்மையானவை அந்தக் கால கலைவாணர் நகைச்சுவையின் பாதிப்போ திருட்டோ இல்லாமல் இருப்பதில்லை. கலைவாணரின் இன்னும் சில முக்கியத்துவங்களை அடுத்த இதழில் பார்க்கலாம். அதற்குமுன்..


தமிழ் சாப்ளின் கலைவாணர் 1

இன்று தமிழ் சாப்ளின் கலைவாணர் பிறந்த நாள்.அண்மையில் ‘இளைய தலைமுறை’ என்ற இதழில் ‘தமிழ் சாப்ளின்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் தொடங்கினேன். ஆனால் சில இதழ்களோடு நின்றுவிட்டது. நம்பர் தமிழ் சாப்ளின் கலைவாணர் குறித்து மட்டும் அதில் மூன்று வாரங்கள் எழுதினேன். அவற்றை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன். 


1

பாசிடிவ் கிருஷ்ணன்


தமிழ் சாப்ளின்களில் நம்பர் ஒன் நிச்சயமாக நம்ம கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்தான். நான்கூட இந்தத் தொடரை வித்தியாசமாக தமிழ் சினிமாவின் காலவரிசைப்படி சீனியாரிட்டிபடி வரிசையாக எழுதலாம் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் மனம் வரவில்லை. ஆனால் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் கலைவாணர்தான். கிளவுன், பபூன் என நகைச்சுவை நடிகர்கள் மலிவான விரசமான வசனங்களைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அங்க ஹீனங்களைப் பகடி செய்வதே நகைச்சுவை என்ற மட்டமான புரிதல் நிலவிய காலத்தில் நகைச்சுவையை மிகவும் நாகரிகமான நிலைக்கு மாற்றியமைத்தவர்; அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்ட கலைவாணர். தமிழக நகைச்சுவை உலகின் பிள்ளையார் சுழி அவர்தான். 

நான் மிகவும் சின்ன வயதில் பார்த்த படம்- ’மதுரை வீரன்’. எம்ஜிஆர் நடித்துள்ளார் என்பதற்காகத்தான் அடம் பிடித்து அந்தப் படத்துக்குப் போனேன். தரை டிக்கெட்தான். தரையில் உக்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது நிறைய கஷ்டம். முன்னால் உட்கார்ந்திருப்பவர்களின் தலைதான் தெரியும். இதற்கு ஒரே வழி. அந்தக் காலத்தில் பார்வையாளர்கள் உட்காரும் இடத்துக்கும் திரைக்கும் நடுமே மிகப்பெரிய திண்டு இருக்கும். அதில் குறுக்காக ஒரு மரச்சட்டம் போட்டு அதில் சில கொக்கிகள் இருக்கும். அதில்  ‘தீ’ என்று எழுதப்பட்ட வாளிகள் தொங்கும். அதில் மணல் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் எச்சில் துப்பவும், புகைத்து முடித்த பீடி, சிகரட்டுத் துண்டுகளைப் போடவுமே அது பயன்பட்டுக்கொண்டிருக்கும். 

எம்ஜிஆர்,  சிவாஜி ரசிகர்களுக்கு அந்த மேடைதான் சிம்மாசனம். அதில் படுத்துக்கொண்டு, உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு,  ஆடிக்கொண்டு, தங்கள் ஹீரோக்கள் வரும்போதெல்லாம் விசில்களாலும், தீப்பெட்டிக்கட்டுத் தாள்களாலும் தூள் கிளப்பிக் கொண்டு  படத்தை ரசித்துப் பார்ப்பார்கள். தரையில் உட்கார்ந்து என்னால் சரியாகப் பார்க்க முடியாததால் என்னைத் தூக்கிக்கொண்டு முன்னே வந்தனர். அது படம் பார்ப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வசவு நாறியது.  முன்னே வந்து என்னை அந்தச் சிம்மாசனத்தில் தூக்கிப் போட்டார்கள். என் கண் முன்னே பிரமாண்டமாக உயந்து நின்ற திரையை என்னால் நம்பவே முடியவில்லை. எனது இரண்டு கண்களுக்கு வெளியேயும் விரிந்திருந்தது திரை. எம்.ஜி.ஆரும், பாலையாவும் எனக்காகவே சண்டை போட்டார்கள். எம்.ஜி.ஆரும் பானுமதியும் எனக்காகவே சந்தித்துக் கொண்ட மாதிரி இருந்தது. அந்த இருளில் நானும் அவர்களும் மட்டுமே அங்கிருப்பதாக முதல் முதலாக உணர்ந்தேன். 

ஜோசியன் சொன்னான் என்பதற்காக நடுக்காட்டில் அனாதையாகப் போடப்பட்டக் குழந்தையை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளத் தம்பதி (என்.எஸ்.கே - மதுரம்) எடுத்து வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தையே வரே எம்.ஜி.ஆராக வளர்கிறது. வளர்ந்த இளைஞர் எம்.ஜி.ஆரை இளவரசி பானுமதி காதலிக்கிறார். மன்னர் தடுக்கிறார். அரண்மனைக் காவலையும் மீறி எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்துவிடுகிறார். அப்போது எம்ஜிஆரின் அம்மாவை (மதுரம்) ‘அத்தை’ என அழைப்பார் பானுமதி. உடனே,  என்.எஸ்.கே டைமிங்காக ‘அத்தே, நீ கண்டிப்பா செத்தே, செத்தே’ என்பார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனைத் தேடி அந்த நாட்டு இளவரசி காதலிப்பதாகச் சொல்லி ஓடிவந்ததால் என்ன ஆகுமோ என ரசிகர்கள் பதற்றத்தில் இருக்கும்போது சர்காஸ்டிக்காக என்.எஸ்.கே அடிக்கும் கமெண்ட் ரசிகர்களுக்கு ஒரு ரிலீஃப். இதுபோல அலட்டிக்கொள்ளாமல், மிகக் குறைந்த கோடுகளில் ஒரு ஓவியத்தை வரைந்துவிடும் தேர்ந்த ஓவியன் போன்று அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகள் நகைச்சுவை வழங்கியவர்கள் என்.எஸ்.கே- மதுரம் இருவரும். 

அந்தச் சின்ன வயசில் அந்தக் காமெடி எனக்கும் புரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ரைமிங்காக ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வீட்டுக்கு என் அத்தை வந்தார்கள். நான் ‘அத்தே’ என்றேன். உடனே எங்க அப்பா ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அதில் இரட்டை அர்த்தம் (சிலேடை) இருந்தது. ஆனால் விரசம் கிடையாது. அதை அனைவருமே ஒளிவு மறைவின்றி ரசித்தார்கள். இதுதான் கலைவாணரின் ஸ்பெஷாலிடி. 

இதே மதுரை வீரனில் மற்றொரு காட்சி! கலைவாணரும் மதுரமும் எம்ஜிஆரைப் பார்க்க மதுரைக்கு வைகை ஆற்றைக் கடந்து போகிறார்கள். அப்போது, மதுரம் “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லையே?” என்கிறார். உடனே. “ வை அண்டான்னானா? குண்டான்னானா? ‘வை’, ‘கை’ ன்னுதானே சொன்னான்!” என்று கலைவாணர் சொல்வார்.
புகைப்படம் நன்றி: நல்லதம்பி என் எஸ் கே

ஏறக்குறைய சாப்ளினை ஒப்புநோக்கக்கூடிய வகையில் அவரது நகைச்சுவை இருந்தது. இருவருமே சமகாலத்தவர்கள். இருவரது நகைச்சுவையிலும் ஒரு சமூக விமர்சனம் உள்ளீடாக இருக்கும். சமூக அவலங்களின் மீதான வலியில் இருந்து வெடித்துக் கிளம்புவதாக அவர்கள் காமெடி இருக்கும். சொல்லப்போனால் சாப்ளினுக்குப் பிறகு நூறு சதவீதமும் சமுக அக்கறையோடு நகைச்சுவையை வாரி வழங்குவதில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற நகைச்சுவைக் கலைஞன் உலக அளவிலேயே என்.எஸ்.கே. ஆகத்தான் இருப்பார் என நினைக்கிறேன். அதற்குக் காரணம் சாப்ளின் போன்றே கலைவாணரும் ஆளுமை நிறைந்தவர். 

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தது நாகர்கோயில் அருகில் உள்ள ஒழுகினசேரி கிராமம். அங்கு சுடலைமுத்துப் பிள்ளைக்கும் இசக்கியம்மாளுக்கும் மகனாக 1908 நவம்பர் 29 அன்று பிறந்தார். அது அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. அங்கு நான்காம் வகுப்பு வரை படிக்கத்தான் அவரது குடும்ப வறுமை அனுமதித்தது. அதன்பிறகு வேலைக்குப் போகத் தொடங்கினார். சிறு வயதிலேயே பல வேலைகள் பார்த்தார். அதில் அவருக்குப் பிடித்த வேலை. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் வேலை. இடைவேளை நேரத்தில் சோடா விற்பார். மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு நாடகங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். நாடகங்கள் இல்லாத நாட்களில் மற்ற பையன்களை அழைத்துக் கொண்டு கோயில் திடலில் அப்படியே நடித்துக் காண்பிப்பார். பாடல்களை அப்படியே பாடுவார். மற்றவர்களும் பாடவேண்டும். தவறு இருந்தால் திருத்துவார். அதுமட்டுமல்ல சில காட்சிகளை டைரக்டும் செய்வார். 

இப்படியாக அவர் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தபோது அவரது உறவினர் ஒருவர் ஒழுகினசேரி வந்தார். பையன் நாடகக் கொட்டகையே கதி என்று கிடப்பதையும், மற்ற நேரங்களில் கோயில் மைதானத்தில் பாடிக்கொண்டிருப்பதையும் பார்த்தார்; அவர் அங்குவந்ததும் அது மாதிரியான பையன்களைப் பிடித்துப் போவதற்குத்தான். அவர் டி.கே.எஸ் சகோதரர்கள் ஆரம்பிக்க இருந்த புதிய பாய்ஸ் கம்பெனிக்கு ஆள் பிடிக்க வந்தவர்தான். உடனே கிருஷ்ணனைக் கவ்விக் கொண்டுபோய் விட்டார். தனது 17ஆவது வயதில் டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சேர்ந்தார். 

துன்பத்தை மறைக்கும் சிரிப்புக் கலையை இயல்பாகவே கற்றிருந்தார். ஒரு நாள் நாடகக் கம்பெனியில் சங்கரன் அண்ணாச்சி (டி.கே.எஸ். சகோதரர்களில் மூத்தவர்) என்.எஸ்.கே. வுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பாட்டு சரியாக வரவில்லை. அந்தக் காலத்திலெல்லாம் ரிகர்சலில் ஒழுங்காகச் செய்யவில்லையென்றால் முதுகு பழுத்துவிடும். அல்லது நிமிட்டாம்பழம் கிடைக்கும். நிமிட்டாம்பழம் என்றால் தொடையில் கிள்ளுவது. சதையே பிய்ந்து ரத்தம் வருவது போல கிள்ளுவார்கள். என்.எஸ்.கே. வுக்கும் நிமிட்டாம் பழம் கிடைத்தது. வலி தாங்க முடியாமல் அழுதார்; ஆனால் அழுதாலும் பாடிக்கொண்டேதான் அழ வேண்டும். அவர் அழுதுகொண்டே பாடியது மற்ற சிறுவர்களுக்குக் கேலியும் கிண்டலுமாக இருந்தது. சங்கரன் அண்ணாச்சிஅந்தப் பக்கம் சென்றதும் கிண்டல் இன்னும் அதிகரித்தது. இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்று கிருஷ்ணன் யோசித்தார். நிமிட்டாம்பழத்தின் தாக்கம் இன்னமும் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தார். இதையே பாஸிடிவ் அப்ரோச்சுடன் பிளேட்டைத் திருப்பிப் போட்டார். எல்லாரும் அடி வாங்கியதுக்காக சங்கரன் அண்ணாச்சியைத் திட்டுவார் என்றுதான் எதிர்பார்த்தனர். 

ஆனால், "டேய்! ஏண்டா சிரிக்கிறீங்க. அண்ணாச்சிதானே அடிச்சாரு. பரவால்ல. இந்தப் பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிகிட்ட அவரும் அடி வாங்கித்தானே இருப்பாரு? நானும் இனிமே இப்படி எத்தனையோ பேர அடிக்கத்தான போறேன். இதுக்குப் போயி சிரிக்கிறீங்களே” என்று கூறினார். இதைக் கேட்டதும் சக தோழர்களும் சிரித்தனர். இவ்வாறு சக நண்பர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு பகடியும் இருந்தது. அந்தக் கிண்டல் பார்வைதான் அவரது வாழ் முறையாக இருந்தது. வாழ்க்கை, நாடகம், சினிமா அனைத்துக்கும் இதுதான் அவரது ஃபார்முலா. சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் துயரம் நேரும் சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே பகடி செய்து கொள்வது. அப்போது சோகமும், துயரமும் லேசாகி விடுகிறது. மனிதகுல வரலாற்றில் நகைச்சுவையின் பங்கும் அதுதானே! கலைவாணர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வெற்றி பெற்றார்.

டி.கே.எஸ் சகோதரர்களின் பால சண்முகானந்தா சபாவில் எம். ஆர். சுவாமிநாதன்தான் நகைச்சுவை வேந்தராகக் கோலோச்சி வந்தார். அவரும் பிறவி நகைச்சுவைக் கலைஞர். அவரைப் பற்றி தனிக் கட்டுரையாகப் பார்க்கலாம். அவர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நேரடியாகப் பாடம் கற்றவர். அவர் எங்கு சென்றாலும் சகல மரியாதையும் தரப்பட்டது, இருந்தாலும் அவரிடம் ஒரு கெட்ட குணம். எப்போது நாடகக் கம்பெனியை விட்டு ஓடிப் போவார் என்பது தெரியாது. இது டி.கே.எஸ் சகோதரர்களுக்கும் தெரிந்தே இருந்தது. அந்தச் சமயத்தில்தான் என்.எஸ்.கே வந்து சேர்ந்தார். அவரது காமெடி சென்ஸைக் கவனித்த டி.கே.சண்முகம் ‘எம்.ஆர்.சுவாமிநாதன் அண்ணாச்சியின் காமெடி பார்ட்டுகளை மனப்பாடம் செய்து வைக்கும்’படி அடிக்கடி கிருஷ்ணனுக்குச் சொல்லி வந்தார். எதிர்பார்த்தபடி அந்த நாளும் வந்தது. அன்று ‘மனோகரா’ நாடகத்தில் வசந்தனாகப் பைத்தியக்காரன் வேடத்தில் நடிக்க வேண்டிய சுவாமிநாதனை ஆளைக் காணோம். டி.கே.சண்முகம் சிபாரிசில் அந்த வேடம் கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் அந்த வேடத்தில் வெளுத்து வாங்கினார். அன்றுதான் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற நகைச்சுவை அரசு பிறந்தார். அன்று முதல் கம்பெனியின் அனைத்து காமெடி வேடங்கள் மட்டுமல்ல, புதிய நாடகங்களில் அவருக்காகவே காமெடி பாத்திரங்களை, ஸ்பெஷலாகத் தயாரிக்கும் நிலையும் உருவானது. இதற்குக் காரணம் சுவாமிநாதன் அண்ணாச்சியும், டி.கே.சண்முகமும் தான் என்பதை கிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தன்னை வளர்த்த கலைக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவராகப் பணியாற்றினார். 

கலைவாணர் வழங்கிய கொடையை எப்படியும் ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிடமுடியாது. அடுத்தவாரமும் கலைவாணர் ஆள்வார்.