சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

செவ்வாய், 22 மே, 2012

‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’


cinnakuthusi-

எனது வாழ்க்கையின் துயரமான நேரங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு உரமாக இருந்தீர்கள். கடந்த ஆண்டு மிகவும் துயரமான தருணங்களைச் சந்தித்தபோதும் நீங்கள் இருந்தீர்கள்.
ஆனால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
கடைசியாக உங்களை மருத்துவமனையில் சந்தித்தபோதுகூட அன்றும் வழக்கம்போல நமக்குள்
மரணம் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. நானும் மரணம் குறித்த கதைகளை பரிகாசமாகக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் சந்தித்த அவஸ்தை உங்களைக் கலங்கச் செய்தது. அப்போதும் ‘எங்களையெல்லாம் அனுப்பீட்டுதான் சார் நீங்க போவீங்க. கலைஞர் இருக்கும்வரை உங்களை யாரும் அசைக்க முடியாது’ என்றேன். உங்கள் முகத்தில் நூறு வால்ட்ஸ் பல்ப் மின்னியது. அதை நாங்கள் நம்பினோம்.
அதேபோல பெரும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன். அதன்பிறகு உங்களைப் பார்க்க வரமுடியவில்லை. அதன்பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.. கடைசியாக அலைபேசியில் நலம் விசாரித்த உங்களது குரல் இன்னும் எனது நாடி நரம்புகளுக்குள் அதிர்வலைகளாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
‘சார், எப்படி இருக்கீங்க’ என்றேன். ‘நான்தான் உங்களைக் கேக்கணும்...’ என்றுகூறிய உங்களால் அதற்கு மேல் பேச இயல்வில்லை. சிறிய மவுனத்துக்குப் பின் இணைப்பைத் துண்டித்தேன். அப்போது நீங்கள் பேச முயன்ற வார்த்தைகளை உங்களை நேரில்பார்த்து கேட்டு விடுவேன் என்றுதான் உறுதியாக நம்பினேன். அது நிராசையாகவே போய்விடும் என அப்போது கனவிலும் நினைக்கவில்லை.
எனது வாழ்க்கையில் மிகவும் துயரமான காலத்தில் நீங்கள் இல்லாதது எனக்குப் பெரும் கோபம்தான், சார்! நீங்கள் இருந்தால் இப்போது எனக்கு ஒரு வழி செய்திருப்பீர்கள். பொறுப்பான தந்தையைப்போல எனது புனர்வாழ்வுக்கு வழி காட்டியிருப்பீர்கள். இப்போது அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது.
இப்போது நீங்கள் இல்லாதது எனக்குக் கோபம்தான்!
25 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் சிம்மாசனத்துக்கு எதிர் ஸ்டூலில் நான் அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் நமக்குள் ஒரு விளையாட்டு ஆரம்பித்துவிடும். அது தந்தைக்கும் மகனுக்குமான விளையாட்டு. ‘அப்ப, கிளம்பறேன் சார்’ என்பேன். ஆனால் போக மாட்டேன். அதற்குள் வேறு பேச ஆரம்பித்து விடுவீர்கள். வாய் பிளந்து உக்கார்ந்திருப்பேன். மீண்டும் ‘சரி, அப்ப, கிளம்புறேன்’ என்பேன். அதன் இலக்கணப் பிழையைப் பரிகாசம் செய்வீர்கள்.
‘கிளம்புறீங்களா. கிளப்புறீங்களா? எதைக் கிளப்புறீங்க’ என்பீர்கள். ‘புறப்படுகிறேன்’ எனச் சொல்வதுதான் சரி என்பதை உணர்த்துவீர்கள். மீண்டும், ‘சரி, கிளம்பறேன்’. ‘மூணு தரவாயிருச்சு. இன்னும் எத்தனை தடவை கிளப்புவீங்க’ இப்படியாக நமக்குள் ஒரு ஒப்பந்தம். ஐந்து தடவைக்குமேல் கிளப்பக்கூடாது என. அதன் பிறகு ஐந்து தடவைக்கு மேல் ‘கிளம்புறேன்’சொன்னதில்லை.
இதோ ஐந்து தடவையல்ல ஐநூறாவது தடவையாக ‘அப்ப கிளம்பறேன் சார்’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன். எதிரே காலியான சிம்மாசனம்.
‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’
இன்று பத்திரிகை உலக பிதாமகர் சின்னக்குத்தூசி முதலாம் நினைவு நாள்

வியாழன், 3 மே, 2012


ஏன் இந்த மவுனம்..


என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?



நான் ஒரு பெண் என்பதாலா?


ஒரு குழந்தை என்பதாலா?
ஒரு கம்பீரமான ஆண் இல்லை என்பதாலா?


கவர்ச்சிகரமான பெண் இல்லை என்பதாலா?


உங்கள் வெட்டிக் குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதாலா?


நீங்கள் அழகாயிருந்தால் வலியவந்து பேசாததினாலா?


என் கைகளைப் பிடித்து முறுக்கி
என் அலைபாயும் கண்களையும் அலட்சியப்படுத்தி
வாட் இஸ் யுவர் நேம் பேபி என்ற 
உங்கள் அற்பக்கேள்விக்குக் கடைசிவரை 
பதிலளிக்க மறுத்ததாலா?


என் பிஞ்சு உடலில் உங்கள் 
மூச்சுக்காற்று கூறிய காமக்கதைகளை
யாரிடமும் சொல்லிவிடுவேன் என்பதாலா?


உங்களுடைய இன்றைய சேமிப்பைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது
அற்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதாலா?


எந்த ஒரு பால் இனத்திலும் சேர்த்தியில்லை என்பதாலா?


எந்தவொரு பிரச்சனையிலும் இரண்டு பக்கத்தையும் பார்க்கிறேன் என்பதாலா?


நான் ஒரு ஐயர்/ ஐயங்கார் இல்லை என்பதாலா?


நான் ஒரு தேவர் இல்லை/ வேளாளர் இல்லை/ முதலியார், படையாச்சி இல்லை/ எந்த சாதியும் இல்லை என்று சொல்லுவதாலா?


என்னுடைய இடைச்சாதி அடையாளத்தைத் தொடர்ந்து மறைத்து வருவதாலா?


நான் ஒரு தாராளவாதி என்ற குற்றச்சாட்டினாலா?



முழுமையான உண்மை என ஒன்று இல்லை எனச் சொல்லுவதாலா?


பகுதி உண்மைகளுக்கு மதிப்பளிப்பதாலா?


வர்க்கம் பற்றிப்  பேசும்போது சாதியையும் 


சாதிபற்றிப் பேசும்போது வர்க்கத்தையும் 


குறிப்பிட்டுக் குழப்புவதாலா?


குழப்பமில்லாமல் எதுதான் தெளிவாகும்? 


ஏன் இந்தப் புறக்கணிப்பு?


தயவுசெய்து இந்த மவுனத்தைக் கலையுங்கள்
என் கடைசி நிமிடத்துக்குள்..

அப்பணசாமி

செவ்வாய், 1 மே, 2012

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்


செகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்த இலயலாது. அவர் முன் அமரும்போது மனதின் கசடுகள் அந்த நேரத்துக்காகவாவது அகன்று போகின்றன.” இவை பாலகிருஷ்ணனின் நேரடி வார்த்தைகள் இல்லையென்றாலும் அவர் இவ்வாறுதான் அர்த்தப்படுத்துகிறார் என்பதுதான் எனது மனப்பதிவு. இதுதான் இன்றளவும் செகாவை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கூச்சத்தை விட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செகாவையும் என்னையும் தொடர்புபடுத்தி நண்பர் உதயசங்கர் எழுதியுள்ள சிறிய மனப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
-appanasamy

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்

chekhov.nஇப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை! எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா? அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.


கோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.


என்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.


ஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன ? அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.


தீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்பர்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.


அன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860  1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.


அப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் ! பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் ! எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் ! மீண்டும் வருமா !


சேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...


எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)