சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

புதன், 28 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும் - 3III
இந்தியாVS கனடா
கனடா நாட்டில் 18 அணு மின் நிலையங்கள் இயங்குகின்றன. அந்நாட்டின் மொத்த மின் தேவையில் 15% அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகின்றன. இவை தவிர ஆய்வுக்கான 8 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 2 அணு உலைகள்  அரசு நிறுவனமான அடாமிக் எனர்ஜி கனடா லிமிடெட் சார்பிலும் மற்றவை கனடா நாட்டின் பல்கலைக் கழகங்கள் சார்பிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை.

1946 முதலாகவே கனடாவில் அணு ஆற்றல் கட்டுப்பாட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது முதல்  முதலாக அணு குண்டு போடப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அணு ஆற்றல் தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்காக இச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் மே 2000த்தில் கனடா நாட்டின் அணுக் கதிரியக்கம் மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் என்று திருத்தியமைக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் கட்டுப்பாட்டு வாரியமே கனடியன் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஆணையம் (சிஎன்எஸ்சி) ஆகும்.  இந்த அமைப்பே தற்போது கனடாவின் அணு ஆற்றலை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. கனடாவில் அணு ஆற்றலை ஊக்குவிக்கும் அமைப்பாகவும் எதிர்கால ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் அரசு நிறுவனமான அடாமிக் எனர்ஜி கனடா நிறுவனமும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பைப் பராமிக்கும் அமைப்பாக சிஎன்எஸ்சி அமைப்பும் செயல்பட்டுவருகின்றன. இருந்தபோதிலும் சிஎன்எஸ்சி செயல்பாடுகளில் அடாமிக் எனர்ஜி நிறுவனம் தலையிட முடியாதபடி அதனதன் பணிமுறைகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. அதேசமயத்தில் இந்த இரு நிறுவனங்களும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது கதிரியக்கப் பாதுகாப்பு வல்லுனகளால் ஒரு பலவீனமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.


சிஎன்எஸ்சி, ஃபெடரல் அரசின் சுயேட்சையான முகமையாகும். இம் முகமை ஆணையத் தீர்ப்பாயம் மற்றும் ஊழியர் அமைப்பு என இரு அங்கங்களைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சூலியல் தொடர்பான ஒழுங்குமுறைக் கொள்கைகளை நிறுவுவது, ஒழுங்குமுறை அம்சங்களைச் சட்ட வரையறைகளுக்கு உட்படுத்துவது, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொவது ஆகிய பொறுப்புகளைத் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. கதிரியக்கப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு அடிப்படையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை ஊழியர்கள் அமைப்பு கொண்டுள்ளது. இந்த இரு உறுப்புகளும் சிஎன்எஸ்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலருக்குப் பதில்கூறக் கடமைப்பட்டவை. அதேபோல சிஎன்எஸ்சியும் இயற்கை வளங்கள் அமைச்சர் மூலம் கனடா நாடாளுமன்றத்துப் பதில்கூறக் கடமைப்பட்டது.

சிஎன்எஸ்சியின் சுயேட்சைத் தன்மை

ஏழு பேருக்கு மிகாத உறுப்பினர்கள் கொண்ட இவ் ஆணையத்தை அமைச்சரவை ஒப்புதலுடன் தலைமை ஆளுநர் அமைக்கிறார். (இப்பதவி அமைச்சரவைச் செயலர் பதவி போன்றது. கனடா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் இவர் செயல்படுகிறார். அமைச்சரவை முடிவுகள், நிரல்கள் இவரது கையெழுத்துக்குப் பின்னரே வெளியிடப்படுகின்றன.) அவரால் நியமிக்கப்படும் ஏழு நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் ஆணையத் தலைவராகவும், தலைமைச் செயல் அலுவலராகவும் தலைமை ஆளுநராலேயே நியமனம் பெறுகிறார். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். இக்காலகட்டத்தில் ஆணைய உறுப்பினர் மீது எழும் புகார் அடிப்படையில் அவரை நீக்கும் அதிகாரம் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தலைமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு. நாடாளுமன்றத்துக்கு மட்டுமே சிஎன்எஸ்சி பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது என்றபோதும் நாடாளுமன்றத்தின் முன்அனுமதி இல்லாமலேயே  சிஎன்எஸ்சி தலைவரையும் உறுப்பினர்களையும் நீக்கவோ நியமிக்கவோ தலைமை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தேவைப்படும் உத்தரவுகள், வழிகாட்டுதல்களை தலைமை ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் வழங்கமுடியும். இதுபோன்ற வித்தியாசமான தன்மைகளை கனடா சிஎன்எஸ்சி கொண்டுள்ளது. இருந்தபோதும் இந்த நடவடிக்கைகள் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் கொண்டுவரப்படும். இத்தகைய மாறுபட்ட தன்மை குறித்து பரிசீலனை செய்த அனைத்துநாடுகள் அணு ஆற்றல் முகமை (ஐஏஈஏ),  அணுமின் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்பும், அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருந்தபோதிலும் இரண்டு நிறுவனங்களும் ஒரே அமைச்சகத்தால் பிரதிநிதித்துவப்படுவதையும், சிஎன்எஸ்சி அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்த அமைச்சரே தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. மற்ற அம்சங்கள் எப்படியிருந்தபோதிலும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளின் சுயேட்சைத் தன்மையைப் பொருத்தவரை கனடாவைவிட அமெரிக்கா, பிரான்ஸ் அமைப்புகள் சுயேட்சையாக உள்ளதாக ஐஏஈஏ கூறியுள்ளது.

சிஎன்எஸ்சியின் வெளிப்படைத் தன்மை

அணுமின் திட்டங்களால் சுற்றுச்சூலமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுகாதாரக் கேடுகள், அபாயங்கள் குறித்தும், இது தொடர்பாக ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப விவரங்கள் குறித்தும் அனைத்துத் தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என 2000 ஆம் ஆண்டுச் சட்டத்தின் பிரிவு 9(b) கூறுகிறது. கூட்டரசின் நிறுவனம் என்ற வகையில் சிஎன்எஸ்சி அந்நாட்டின் அரசமைப்பின் அடிப்படைகளுக்கு கடமைப்பட்டதாகும். கனடா அரசமைப்பின்படி அரசுத் திட்டங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் (தடை செய்யப்பட்ட இனங்கள் தவிர) அணுகும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அரசின் முடிவுகளை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கவேண்டும். கனடா தகவல் சட்டம் இதை உறுதி செய்துள்ளது. சிஎன்எஸ்சியும் இச்சட்டத்தின்படி அனைத்துத் தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது.


அரசுசாரா அமைப்புகள், உள்ளூர்ச் சமுதாயக் குழுக்கள், தனிநபர்கள், பொதுநல அமைப்புகள், தொழில்முறை மற்றும் அறிவியல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வெளியேயுள்ள பங்காளர்களுடன் சிஎன்எஸ்சி ஆக்கப்பூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அணுமின் வழங்கும் உள்ளூர்ச் சமுதாயங்களின் சங்கம் (கனடியன் அசோசியேசன் ஆஃப் நியூக்ளியர் ஹோஸ்ட் கம்யூனிட்டீஸ்- சிஏஎன்எச்சி) என்ற அமைப்பு கனடாவில் மிகச் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். இதில் அணுக் கதிரியக்க அமைப்புகளும் அவை நிறுவப்பட்டுள்ள உள்ளூர்ச் சமுதாயங்களும் இடம் பெற்றுள்ளன. அப்பகுதிகளின் கதிரியக்கம் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் அவை நிறுவப்பட்டுள்ள பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கிய நகராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகளை பரஸ்பர நலன்கள் அடிப்படையில் விவாதிக்கின்றன. இதையொட்டிய இணையத்தளம் ஒன்றை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது (http://www.canhc.ca). தவிர வருடாந்திர தேசியக் கூட்டங்களையும் தவறாமல் நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்புடன் சிஎன்எஸ்சி நேரடியான தொடர்பு கொண்டுள்ளது. அவ்வப்போது இதன் பிரதிநிதிகளுடன் சிஎன்எஸ்சி தலைவரும் மூத்த அதிகாரிகளும் கலந்துரையாடி வருகிறார்கள். தவிர, சிஎன்எஸ்சியின் இணையத்தளமும் (www.neuclearsafety.gc.ca) அமைக்கப்பட்டுள்ளது. அணுக்கதிரியக்கத் தகவல்களை வழங்கும் இணையத்தளங்களில் உலகிலேயே தனித்தன்மை கொண்ட இணையத்தளம் என இது கூறப்படுகிறது. 1946ஆம் ஆண்டு முதலான ஆண்டு அறிகைகள், வரலாற்றுத் தகவல்கள், செய்தி அறிக்கைகள், அனைத்து சுற்றுச்சூலியல் மதிப்பீட்டு அறிக்கைகள் போன்றவை இதில் பதிவிறக்கம் பெற்றுள்ளன. இதுதவிர இந்த இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள ஆவணங்கள் மீது பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்துள்ள கருத்துரைகள், மறுப்புகள், விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே பராமரிக்கப்படுகின்றன.

ஃபுகுஷிமாவுக்குப் பின்

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரிடரால் அங்குள்ள ஃபுகுஷிமாவில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் வெடிப்பும் கதிரியக்கக் கசிவும் அதிகமாக ஏற்பட்டது. இதன் பாதிப்புகளைக் கண்ணுற்ற ஒவ்வொரு நாடும் தத்தமது அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆழமான மறுபரிசீலனைகளில் இறங்கியுள்ளன. இந்தியாவும் தனது அணுமின்கழக நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை வாரியம் மூலம் இங்குள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கைகள் வெளியிட்டது. ஆனால் இந்த ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? அதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? அதற்குக் கால வரம்பு ஏதும் நிர்னயிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. இதே சூழலை கனடா எவ்வாறு கையாண்டது என்ற அணுகுமுறையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வெளிப்படைத்தன்மையில் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்ற வேறுபாட்டினை அறியமுடியும் என்கிறார் ஒழுங்குமுறை வாரிய முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன்.


அணுக் கதிரியக்க விபத்து நிகழ்ந்த மார்ச் 11 அன்றே அந் நிகழ்வு குறித்த அனைத்ந்த் தகவல்களையும் சிஎன்எஸ்சி இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. தவிரவும் ஃபுகுஷிமாவில் நிறுவப்பட்ட பிட்பிள்யூஆர் வகை அணு உலைகளுக்கும் கனடாவில் நிறுவப்பட்டுள்ள காண்டு வகை அணு உலைகளுக்கும் உள்ள தொழில்நுட்ப வேறுபாடுகள் என்ன? இவ் வேறுபாடுகளால் ஃபுகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற நிகழ்வுகள் இங்கு ஏற்பட ஏன் வாய்ப்புகள் இல்லை? என்ற தகவல்களையும் வெளியிட்டு மக்களின் அச்சத்தைப் போக்கியது.

பல்வேறு நகரங்கள் மற்றும் ஊர்களின் அன்றாட கதிரியக்க அளவுகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டு ஏன் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட கசிவு ஜப்பான் மக்களைப் பாதித்தது? அத்தகைய அளவால் கனடா மக்களுக்கு ஏன் பாதிப்பில்லை? என்ற தகவல்களையும் வெளியிட்டுள்ளது. ஃபுகுஷிமா விபத்து குறித்து ஆய்வு செய்ய ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட்டது. வழக்கம்போல இக்கூட்ட விவாதங்களும் அங்கு விவாதிக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

ஏப்ரல் 20 அன்று ஃபுகுஷிமா பாதிப்பு மீதான  டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்ட விவரத்தை ஆணயம் வெளியிட்டது. இடையே ஜூன் 23 அன்று ஆணையத்தின் வருடாந்திர பணி அறிக்கையை இணையத்தில் ஏற்றியது. அதில் கனடா நாட்டின் அணு மின் நிலையங்கள் அனைத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெளியிட்டதோடு அவை குறித்து எழும் சந்தேகங்களைக் கூறுமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.


ஆகஸ்டு 9 அன்று, கனடா அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க வெளிநிலை ஆலோசனை மறுஆய்வுக் குழு (எக்ஸ்டர்னல் அட்வைசரி ரிவ்யூ கமிட்டி) அமைக்கப்பட்டது. கனாடா பின்பற்றிவரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் போதுமானதா? அந் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த வகையில் உள்ளதா? என்பதை விரிவாக ஆய்வு செய்வதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கனடாவின் அணு ஆற்றல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எதையும் சேராத நொழில்நுட்ப பொறியாளர்களும் வல்லுனர்களும் சுதந்தரமாகச் செயல்படும் பொறியாளர்களும் வல்லுனர்களுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அக்டோ பர் 28 அன்றும் ஃபுகுஷிமா டாஸ்க் போர்ஸின் அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதை வெளியிடும்போதே, இது குறித்து மேலும் ஆய்வு செய்து. அதுபோன்ற அணு விபத்துகள் கனடாவில் நிகழ வாய்ப்பு உள்ளதா என்பதைக் கூறுமாறு அனைத்துநாடுகள் அணு ஆற்றல் முகமை(ஐஏஈஏ)யை கேட்டுக்கொள்ளமுடிவு செய்துள்ளதாக சிஎன்எஸ்சி தானாக முன்வந்து அறிவித்தது. டாஸ்க் போர்ஸ் அறிக்கை பிப்ரவரி (2012) 15 அன்று ஆணையக் கூட்டத்தில்தான் விவாதிக்கப்பட உள்ளது. அது ஒரு பொது நிகழ்வாக நடைபெறும். முன்னதாக, அந்த அறிக்கை மீது பொதுமக்கள் தங்கள் சந்தேகங்கள், கேள்விகளை நவம்பர் தொடக்கத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, அதற்கான பதில்கள் டிசம்பர் முதல் தேதிக்குள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய கேள்விகள், பதில்கள் அனைத்தையும் தொகுத்து பிப்ரவரி 15 ஆணையக்கூட்டத்துக்குள் கூட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஆணைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் அடுத்த ஆகஸ்டில் அணுக் கதிரியக்க பாதுகாப்பு குறித்த மாநாடு வியன்னாவில் நடைபெறவுள்ளது. அதில் ஃபுகுஷிமா நிகழ்வில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விரிவான அறிக்கையாகச் சமர்பிக்கவுள்ளதாக ஆணையம் ஏற்கனவே அறிவித்திருப்பது நினைவுகொள்ளத்தக்கது.


ஒரு நாடு அணுக் கதிரியக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டும் என்பதற்கு கனடா ஆணையமே சிறந்த உதாரணம் என்கிறார் ஏ.கோபாலகிருஷ்ணன். காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் சமகால நிகழ்வு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து பொதுவெளியில் தகவலகளை அளித்ததன் மூலம் கனடா மற்ற நாடுகளைவிட உயந்த நிலையில் தன்னை வைத்துக்கொண்டுள்ளது.
. . . . .
 . . . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக