சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சென்னை 376

இதுவும் சென்னை முகம்

பொதுவாக, சென்னையில் மனிதர்கள் ஈரம் அற்றவர்கள், நடு ரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்துகிடந்தாலும், நாம் பார்வைப்பொருள் மட்டும் தான்; உதவிக்கு ஒரு நாதிகூட வராது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.

1980கள் மத்தியில் ஈரோடு மாவட்டம் பவானியில் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். பவானி கோட்ட வளர்ச்சி –பிடிஓ- அலுவலகத்தில் எனது மூத்த சகோதரர் பணியாற்றினார். வீடு, பவானி –சித்தோடு சாலையிலுள்ள ராயப்பாளையம் கிராமம். இந்தக் கிராமம் முழுவதும் கிணறு தோண்டும் தொழிலை மேற்கொள்ளும் ஒட்டர்கள் சமூகம். அருமையான மனிதர்கள். அவர்களுக்கு நியாயம் தவிர வேறு தெரியாது. 

சில மாதங்களில் பவானிக்கே வீடு மாறினோம். நாங்கள் குடியேறிய சில நாள்களில், ஹவுஸ் ஓனர் வீட்டில் ஒரு துயர சம்பவம். அந்த வீட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதி சென்னை போயிருக்கிறார்கள். அங்கு மயிலாப்பூர் பகுதியில் எதிர்பாராமல் சாலை விபத்தில் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவிக்கு ஒரு நாதியும் வராததால் ஸ்பாட்- டெட். இச் செய்தி அந்தக் குடும்பத்தை எப்படிப் புறப்பட்டது என்பதைக் கண்டேன்.

இதனால் சென்னை நகரம் மீதான எனது கொலைவெறி மேலும் அதிகமானது. சென்னை - மனிதர்கள் வாழும் ஊரே இல்லை எனத் தீர்மானமாக இருந்தேன்
ஆனால், விதி அதே பவானியிலிருந்து சென்னைக்கு அதுவும் அதே மயிலாப்பூருக்கு விரட்டியது. 

கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். மேற்கூரியவாறு சென்னை வாழ் மக்களுக்கு ஈரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இரு நேர் எதிர் அனுபவங்கள்.
கண் எதிரே ஒரு உயிர் துடிப்பதையும் ஒரு வேடிக்கைக் காட்சியாகப்பார்த்து கடந்து சென்ற நாகரிகக் கூட்டத்தையும் பார்த்துக்கிறேன். நேர்மாறாகத் தமது வேலையை மறந்து அந்த உயிரைக் காப்பாற்றிய சம்பவங்களையும் பார்த்துக்கிறேன். அது நீங்கள் எங்கு விழுந்துகிடக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

குழாயும் சொக்காயும், டையும், பூடுசும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வர்க்கம் என்றால் அக் காட்சி அன்று லஞ்ச் டைமில் அரட்டைக்கான ஒரு மேட்டர்தான் அது. அதுவே ரிக்‌ஷாக்காரர், பூக்காரம்மா, மீன்காரம்மா, ஆட்டோக்காரர் அருகமையில் இருந்தார்கள் என்றால் நீங்கள் யோகம் செய்தவர்கள்.

என்னால் குறைந்தது நூறு சம்பவங்களையாவது கூறமுடியும். அடிபட்டுக் கிடப்பவர்களை தூக்கி ஓரம் போட்டு சோடா அதுவும் பன்னீர் சோடா வாங்கிக் குடிக்கவைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்து, வீட்டு ஆட்கள் முகவரி அல்லது அருகிலுள்ள போன் நம்பர் வாங்கித் தகவல் சொல்லி, அவர்கள் வரும்வரை காத்திருந்து பதற்றத்தோடு வருபவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது அடிப்பட்டுக் கிடந்தவரின் உறவினர் ‘எவ்வளவு செலவாச்சு’ எனக் கேட்டு பர்ஸைத் திறக்கும்போது ‘பரவால்ல சார், நான் வூந்து கெடந்தால் யாருனாச்சும் செலவளிக்க மாட்டாங்களா, வுடு சாரே’ என அசால்டாகச் சொல்லும்போது விக்கித்து நின்ற நாகரிக வர்க்கத்தை நிறையப் பார்த்திருக்கிறேன்..
இதைவிட நெகிழ வைத்த சம்பவம்.

1990 வாக்கில் அதே மயிலாப்பூரில் இருந்து 12பி யில் முரசொலி அலுவலகத்துக்கு சென்ற ஒரு காலை நேரம். பாண்டிபஜாரில் செக்கிங் ஏறினர். ஒரு பையன் – அவனும் பட்டணம் பிழைக்க அந்தவன். 20-22 வயசு இருக்கும். செக்கிங் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்டான். அழாத குறையாக செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினான். தான் ஒரு இண்டர்வியூவுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் டிக்கெட் எடுக்கவில்லையென்றும் இந்த இண்டர்வியூவில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என நம்புவதாகவும் தயவு செய்து மன்னித்துவிடும்படியும் கெஞ்சியதோடு தனது சான்றிதகழ்களையும் இண்டர்வியூ கடிதத்தையும் காண்பித்தான். இண்டர்வியூ கடிதத்தில் தேதி, நேரம் சரியாக இருந்தது. ஆனால், கடமை உணர்வாளர்களுக்கு இந்த நியாயம் எதுவும் ஏறவில்லை. விதிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினர். ஒன்று அபராதம் செலுத்து; இல்லையானால் ஸ்டேஷனுக்கு வா என்பதுதான் அவர்கள் பதிலாக இருந்தது. ஒட்டு மொத்த பஸ்ஸூம் வேடிக்கை பார்த்தது. ஒரு ஆளுக்காக இத்தனை பேர் சிரமப்படறாளேன்னு முனகல் வேறு. நான் செக்கிங் ஆளுங்களிடம் பேசிப்பார்த்தேன். மசியவில்லை. நாமே அபராதம் கட்டித் தொலைக்கலாம் என்றால் கையில் தம்பிடி கிடையாது. இந்த இக்கட்டமான நிலமையில் பெண்கள் பகுதியில் சீற்றம் பாய்ந்து வந்தது.

‘அதான் அந்த கொய்ந்த சொல்லிக்கினே கீது.. நீ இன்னாமோ கதை பேசிக்கினுகீறியே.. சர்தா விடுப்பா.. கொய்ந்த காசு இல்லாம இன்னா பண்ணும்.. நம்ம எல்லோரும் ரொம்ப யோக்கியமாட்டு நின்னுக்கிணு கீறோம்’னு மீன் விற்கும் பெண்கள் எழுந்து குரல் கொடுக்கத்துவங்கினர். 

அவர்கள் கூறிய நியாயம் புதுமாதிரியாகவும் இருந்தது.

‘பெனால்டி எம்மாம்னு சொல்லு நாங்க அல்லாரும் சேந்து குடுக்குறோம். ஆனாக்க இப்ப நாங்களும் இல்லன்னு வச்சுக்கோ. அந்தக் கொய்ந்தய பரீட்சிக்கு அனுப்ப மாட்டியா. அது பாவம் படிச்சு வேலை இல்லாமல் பட்டனம் வந்து அலையுது. இந்த நிலமயில ஒம் பிள்ளைய நெனச்சுப் பாரு’ என்றனர்,.

செக்கிங் ஆளுங்க அந்தப்பையனை ஒன்றும் செய்யாமல் அவன் போகும் இடத்துக்கு தாமே ஒரு டிக்கெட் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றனர்.
மனித ஈரத்திலும் சார்பு நிலை இருக்கிறது; சாதி இருக்கிறது; வர்க்கம் இருக்கிறது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)

இணையமும் இலக்கியமும்

(இணையத்தில் இலக்கியத்தின் விரிவு குறித்து 2012 இல் வெளியிடப்பட்ட குறிப்புகள்)

எல்லைகள் தாண்டிப் பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமுதாயமும், அதன் பாலாடையான படைப்பாளிகளும், சான்றோர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலகளாவிய தமிழ் நிகழ்வான இந்தத் தமிழினி 2000 உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாம் அமர்வான ‘இணையம்’ தொடர்பான அரங்கில் ‘இணையமும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தொழில் நிமித்தமாக, நேர அவகாசமின்மையால் கட்டுரை தயாரிக்க முடியாமைக்கும், எனவே, எனக்கு அளித்த தலைப்பு தொடர்பாக வாய்மொழியாகப் பேசுவதற்கும் இந்த அவை மன்னித்து அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம், புதுவை மற்றும் இவையல்லாத பிற மாநிலங்கள், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பர்மா, தென் ஆப்பிரிக்கா, இன்னபிற நாடுகள் என விரிந்துள்ள தமிழர்கள் தம் சமுதாய நிகழ்வுகள், படைப்புகள், ஆய்வுகள், அரசியல், சமூகம், அறிவியல், பண்பாட்டுநிகழ்வுகள், வரலாறுகள் என, கடந்த ஒரு நூறாண்டுகள் குறித்த ஆய்வு நடத்தவும், கணக்கெடுக்கவும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தமிழர்களை ஒருங்கிணைத்துச் செய்யப்படும் நிகழ்வு இது. தமிழர்களின் சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கும் வாய்ப்புள்ள இரு அரங்குகள் நிகழ்கின்றன. தமிழர்கள் மீதான சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள், பேராளர்கள் பெரும்பாலும் படைப்பிலக்கிய ஆளுமை கொண்டவர்கள். ஆழமான, விரிந்த ஆய்வு நோக்கும், அலசல்களும் கொண்டவர்கள், பல கண்ணோட்டங்களுடன் கடந்த காலத்தில் தமது சுவடுபதித்தவர்கள்.

இது, அரசு சாராமல், அரசு மட்டுமே செய்யக்கூடிய ஒரு நிகழ்வைத் தமிழ்ச் சமுதாயமே, தனக்குத் தானாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்வு.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தனியார் நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டியது அவசியம்தான். என்னைப் பொறுத்தவரை கலை – இலக்கிய வெளிப்பாடுகளுக்கும், பரவலுக்கும் இன்றைய  தமிழ்ச்சூழல் பாசத்துக்கு நடுவே இதுபோன்ற கொடுக்கல் – வாங்கல்கள் நேர்மையே! தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய பரிமாணங்கள் மாறியிருக்கின்றன. பாளம், பாளமாகப் பிரிந்து கிடந்த தமிழ்த் தீவுகள் மத்தியில் மிக நீண்ட தகவல் இடைவெளி நிலவி வந்தது.

இங்கிருந்து ஈழத்துக்கோ, சிங்கப்பூர் – மலேசியாவுக்கோ ஒரு தகவல் சொல்வது, சேர்வதும் காலங்கடந்ததாக இருந்தது. இடையில் பல அரசுகள்; பலவிதமான அரசுகள். இவற்றுக்குஇடையே கலாசார பரிவர்த்தனை இல்லை; இலக்கிய ஊடாட்டங்கள் இல்லை; கருத்து கொடுக்கல் வாங்கல் இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் இது மேலும் பரிமாணம் கண்டது. தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிய படிப்பாளிகள், கூலிகள் ஒரு பக்கம்; சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், சிதறிவிட்ட அகதிச் சமுதாயமாக உலகம் முழுவதும் பிடுங்கி நடப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மறுபக்கம். இப் புதிய சூழ்நிலையில், ஏற்கனவே நிலவிய தகவல் இடைவெளி குறிப்பாக மேற்கூறிய தமிழ்ச் சமுதாயங்களுக்கு பெரும் சோகமாக அழுத்தியது.
இந்த நேரத்தில் என் தேசம் எப்படி உள்ளது? நான் வாழ்ந்த தெருக்களிலும் வீடுகளிலும் என்ன நடக்கிறது? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் தோழர்களும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்றறியமுடியாத கையறு நிலை.
சிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழகத்தை தமது தாயகமாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்புகள் கொட்டிக்கிடப்பதாக நம்புகிறார்கள். இங்குள்ள வறுமை, ஏழ்மையைவிட பண்பாட்டுச் சுதந்தரம் அவர்களுக்கு உயர்ந்ததாகப் படுகிறது.  எனவே, காலம் கடந்துவந்தாலும் எந்தவொரு தகவலும் அவர்களுக்கு ஆர்வமூட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக வேறு நாடுகளில் பிழைப்பு நடத்தும் இந்தியத் தமிழர்களின் இளைய தலைமுறை தமது தாய்மொழியாம் தமிழை மறந்துவருகிறது. இது அவர்களுக்குக் கவலையெற்படுத்துகிறது.
இப்படி, பல நூற்றாண்டுகளாக நிலவிய காலத் தனிமை ஒரு தகவல் தொழில்நுட்பப்புரட்சி மூலம் தகர்க்கப்படுகிறது. அது இணையம். இதற்கு அரசு சார்பு கிடையாது. அரசியல் சாயம் கிடையாது. யாரும் எங்கும் பயன்படுத்தக்கூடியது. இதன் மையம் யாருக்கும் உடமையானதல்ல என்று கூறப்படுகிறது. உலகமயமாதல் சூழலில் எல்லோர்க்கும் ஏகபோகமாகும் கருவி. இதனை, புலம் பெயர் தமிழர்கள் கண்டுகொண்டனர். இதுவேதான் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இணையம் தமிழில் உலகமயமானதின் காரணி.

தமிழைக்கணினிமயப்படுத்துவதில் புலம்பெயர் சூழல் தமிழர்கள் பெரிதும் பாடுபட்டு வெற்றி கண்டனர். இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழர்கள் ஒரு அரங்கில்கூட முடிந்ததற்கு இணையம் ஒரு உறவுப்பாலமாகச் செயல்பட்டிருக்கிறது. இதனைப் பலரது உரைகள், கட்டுரைகளிலிருந்து அனுபவமாக உணர முடிகிறது.  இணையம் அதன் தன்மையில் இன்று அர்த்தமடைந்திருக்கிறது. இணையம் என்ற இந்தக் கருவி தகவல் ஏகபோகத்துக்கு எதிரானது. தணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. இன்னும் மையப்படுத்துதலுக்கும் எதிரானது. இணைய வெளி அநாதியானது. இங்கு அளவில்லை; அகல எல்லை, சூழல் எல்லை கிடையாது. இதுவரையில் கூறப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் இணைய வெளியில் புகுத்த முடியும் – எழுத்தாக, படமாக, படிமமாக, குரலாக, ஒளியாக.


நிகழ்காலப் பதிவுகளிலும் புதிய பரிமாணங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. எப்படி, காலந்தோறும் ஊடகங்கள் நிகழ்காலப் பதிவில் புதிய பரிமாணங்களையும், புதிய மொழியையும் உருவாக்கி வந்துள்ளதோ அதைப் போல, மேலும் வீரியத்துடன். இவையெல்லாம் இணையக் கருவியின் மக்கள் பயன்கள். குறிப்பாக தமிழுக்கு, தமிழ்ச் சூழலுக்கு உகந்த காரியங்கள். இந்தக் கருவியின் கெட்ட செயல்கள் வேறு, வேறு மொழிகளில் தமது பாதிப்புகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய கருத்துகளின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் தமிழிலக்கியத்தில், இணையத்தின் ஊடாட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். வாய்மொழி, சைகை, கூத்து, பாட்டு, சுவடி, அச்சு எனப் புதிய – புதிய  ஊடகங்கள் வழியாக இலக்கியமும், கலையும் பயணப்பட்டு வந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் நிகழ்ந்துவந்த கலை இலக்கியப் பரிவர்த்தனை, புதிய, புதிய ஊடகங்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களை விரைவில் அடையும் வகையில் மாறியது. இன்று இணையம் ஒரே நொடியில் உலகம் முழுவதும் பரிவர்த்தனை கொள்ள சதா தனது பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது.

குறைந்த பிரதிகள் அல்லது சிறிய குழு மட்டுமே நுகர்வோராக இருந்த காலத்தில், இலக்கண சுத்தமும், உச்சரிப்பு நேர்த்தியும், தாள – லய இசை நினைவுகளுமாக படைப்பு பயணம் கொண்டிருந்தது. இந்த அழுத்தங்கள் மூலம் படைப்பு தன் நேர்த்திகளைப் பாதுகாத்துக்கொண்டது. அது – அதுகோரும் மொழியைக் கொண்டிருந்தது. பின்னர் உரைகள் வந்தன. இலக்கணமும் உரைகள் கொண்டன. அதற்கு வியாக்கியானங்களும் சேர்ந்தன. அது அச்சு ஊடகம் வழியாக விரிந்தது. அச்சில் கவிதை வந்தது. ஓவியம் வந்தது. பல பிரதிகள் கண்டன. புதினமாக நாவல் வந்தது. மொழிக் கலப்பு மாறியது. இலக்கணமறியா கொச்சை மொழி, கூத்திலிருந்து இலக்கியப் படைப்புக்குச் சேர்ந்தது. பிரதிகள் நாடகக்குழுக்களை உருவாக்கின. பல இலக்கியப் படைப்புகள் நாடக மேடைகள் கண்டன.


பின்னர் மலினப் பதிப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பெருந்திரளை அடையும் ஊடகங்கள் வந்தன. அவை அதிகார மையங்களோடு பிணைக்கப்பட்டன. எனவே போலிப் படைப்புகள் குவிந்தன. ஈவு இறக்கமற்ற ஆதிக்கத்தால் மலினப்பட்டாலும் பிரதிகள்கடும் விலையேற்றம் கொண்டன. எனவே, படைப்பு வியாபாரிகளிடம் அடைக்கலம் ஆனது. தகவல் தொடர்பு பரபரப்பை மட்டுமே கவனம் செலுத்தியது.

இதனால் துன்பப்பட்டிருந்தனர் தமிழ் வாச்கர்கள். குறிப்பாக புலம்பெயர் சூழல் தமிழர்கள் தமிழைக் கணினிமயப்படுத்த முயன்றனர். இதன் வெற்றி ’மதுரைத் திட்ட’த்தை அளித்தது. இதில் செயல்பட்டவர்கள் தன்னார்வத்தோடு செயல்பட்டனர். பிரதிபலன்பாராமல் சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற படைப்புகளை இணையத்தில் எற்றினர். இதனால் யாரும் எங்கும் இதனை வாசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒளிவுமறைவற்ற பதிப்பு நிகழ்ந்தது. இதுவே இணையத்துக்கும் இலக்கியத்துக்குமான முதல் ஊடாட்டம் என நினைக்கிறேன். ஆழ்வார்களின் பாசுரங்கள் இணையப்பதிவு பெற்றன. சைவ மரபு நூல்கள், உரைகள், ஆய்வுகள், திருக்குறள், மெய்யறிவு என இது விரிந்தது. தொடர்ந்து தற்கால இலக்கியங்களும் இணையத்தில் பதிவு பெற்றன. பாரதி, பாரதிதாசன் தொடங்கி வைரமுத்து வரை அவரவர் விருப்பத்துக்கு எற்ப இன்று பல முனைகளில் இச் செயல்பாடு விரிவும் வேகமும் அடைந்துள்ளது.

இப்படியான செயல்பாடுகள் கடந்த காலத்துடன் சமநிலை அடையும் அதே நேரத்தில் புதிய படைப்புகளில் இணையம் தனது பாதிப்பைத் தொடங்குகிறது. முந்தைய ஊடகப் பரவலாக்கத்தால் வாசகர்கள் எற்கனவே சலிப்படைந்திருந்தனர். இதனை எதிர் கொள்ளவும் தற்கால வாசக வேகத்துக்கு ஈடுகொடுக்கவும் இணையத்தின் வேக வெளியும் படைப்பாளிக்குப் புதிய சவால்களை வைத்தன.

படைப்பாளி சுயமாக இயங்கக்கூடிய சூழலையும் இணையம் எனும் கருவி சாத்தியப்படுத்துகிறது. தனது படைப்பினை நேரடியாக யாருக்கும் பரிந்துரை செய்யமுடியும். ஒருமுறை கணினி அச்சு செய்துவிட்டால் அந்த ஒரு பிரதியை எத்தனை ஆயிரம் பேருக்கும் மின்னஞ்சம் செய்யலாம். இத் தொழில்நுட்பப் புரட்சி எதிர்காலத்தில் பல்லூடகப் படைப்புகளையும் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்க உள்ளது. இதன் முறையான பதிப்புகள் காலத்தால் அழியாது. தீயில் வேகாது. நீரால் அடித்துச்செல்லப்படாது. ஆனால், மாயக்கிருமிகளிடமிருந்து மட்டும் தப்பிக்க வேண்டியிருக்கிறது.

காட்சிப்படிமமாகவும் மாறும் இந்த எழுத்து, புதுவகை வாசிப்பை அளிக்கும். இதனால் படைப்பாளிகள் புதிய மொழியை உருவாக்குவார்கள். மின் எழுத்து உருவாகும். ஒரு நாவல் என்பது எழுத்தாக மட்டுமாக இல்லாமல், படமாகவும் ஓவியமாகவும் மட்டுமல்லாமல், நகரும் படங்களாகவும் குரலாகவும் மாறி – மாறி உருவமடையமுடியும்.
ஒரு மின் நாவலில் ஒரு இடத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய விவரணை வரும்போது கடந்த கால சினிமா காட்சிகளையோ, கோப்புக்காட்சிகளையோ இணைக்க முடியும்.

ஒரு தேவாரப் பதிகத்தைச் சேர்க்கும்போது பின்னணியில் அப் பாடலை ராகம் சுத்தமாக ஒலிக்கச் செய்ய முடியும்.

இப் படைப்பைப் போலவே இப் படைப்பு மீதான விமர்சனங்களும் சுதந்தரமானவை. இது தொடர்பான எதிர்வினைகள் தணிக்கை செய்ய முடியாததாக இருக்க வேண்டும்.. அதற்கு, படைப்பாளியின் மறுவினையும் உடனே எதிர்பார்க்கப்படும். இது நிகழாதபோது அப் படைப்பாளி இணையவெளியில் சலனமாக மாட்டான். இதனை அடுத்து அடுத்த கட்ட வளர்சியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாத படைப்பை உருவாக்கலாம். ஏன், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே இணையம் வழியாக இணைந்து தங்களது பிரமாண்டமான காவியத்தை எழுதமுடியும். (No Man Writing) கனவு காணுங்கள்.



திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சென்னை 376



நவீன இலக்கிய – நாடக ஆர்வலர்களின் உலகங்கள்….



இப்போதெல்லாம் வீட்டுக்குள் இருந்தே உலகைத் தெரிந்து கொள்கிறோம். தேடு பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும், உலகின் அத்தனை தரவுகளும், தகவல்களும் உங்கள் கணினியின் திரைக்குள் வந்து விழுந்து விடும். அது புத்தகமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் சில நொடிகள் காத்திருந்தால் போதும்.

ஆனால் ஒரு காலத்தில் உலக சினிமாவோ, புத்தகமோ உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களோ அல்லது வெளி மாநில, அயலகக் கலைஞர்களின் இசை, நடன, நாடக நிகழ்வுகள் போன்றவை பெருநகரவாசிகள் மட்டுமே அணுகக்கூடியவையாக இருந்தன.

இலக்கிய ஆர்வமும் கலைத்தாகமும் கொண்ட தமிழனுக்கு 1980-களில் சென்னை மட்டுமே புகலிடமாக இருந்தது. கலை ஆர்வலர்களுக்கு வளர்ந்து வரும் சென்னையின் வேகம் அலர்ஜியாகத்தான் இருந்தது என்றாலும் அறிவுப்பசிக்கு அதே சென்னைதான் புகலிடமாக இருந்தது என்பதால் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது சாத்தியமில்லாததாகத்தான் இருந்தது; இருக்கிறது.

1980-களில் கலை ரசிகர்களின் பாரீஸ் நகரமாக இருந்த சென்னை குறித்த சில காட்சிகள் – எனது அனுபவத்தில்…

நாடுகளுக்கான பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஐசிசிஆர் (கலாசார உறவுகளுக்கான இந்தியக் குழு) என்ற அமைப்பு உலகின் தலைசிறந்த இசைக் குழுக்கள்,  நாடகக் குழுக்கள், நடனக் குழுக்களை அழைத்துப் பெரு நகரங்களில் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்கள்) நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். சில அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் முதலில் வருபவர்களே முன் வரிசையில் அமர முடியும். இதற்கான தகவல்களும் பகிரங்கமாக அறிவிக்கப்படாது. அத் தகவலை முன் கூட்டியே அறிந்தால் எல்டாம்ஸ் சாலையில் இருந்த ஐசிசிஆர் அலுவலகத்தில் கியூவில் நின்று அழைப்பிதழ் பெற்று என்ன தலை போகிற வேலை இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு முன்னதாகவே இருக்கை பிடித்து உன்னத நிகழ்வுகளைப் பார்ப்பார்கள். இதேபோல மாக்ஸ் முல்லர் பவன், அல்லயன்ஸ் பிரான்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில், ரஷ்ய கலாசார மையம் போன்ற தூதரகங்களும் அவர்கள் நாடுகளின் உன்னத சினிமாக்கள், நாடகங்கள், இசை – நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இவற்றையெல்லாம் பார்க்க, அனுபவிக்கக் கொடுத்து வைத்த ஒருவன் உண்மையிலேயே உலக ரசிகனாக ஆகிவிட முடியும். எழும்பூர் மியூசியம் அரங்கு, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வாணி மகால், பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற சபாக்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன.

ஊரிலிருந்து சென்னைக்குப் பஸ் ஏறும் இலக்கியவாதியோ இலக்கிய ஆர்வலரோ சென்னையில் எங்கு தங்குவது என்ற கவலை இல்லாமல் தி.நகரில் இருந்த 14, சாரி தெரு, மயிலாப்பூர், 4, பிச்சுப்பிள்ளைத் தெரு, பெசன்ட் நகர் வண்ணாந்துறையில் இருந்த குகை என்றழைக்கப்பட்ட இடம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் போன்ற இடங்களில் தங்கலாம். வந்த வேலை முடியும் வரை அல்லது ஒரு வேலை கிடைக்கும் வரை டீயோ பன்னோ இருப்பதைப் பகிர்ந்து கொள்ள  நண்பர்கள், தோழர்கள் தயாராக இருந்தனர். (இவை தவிர வேறு சில இடங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும்.) இந்த இடங்கள் அன்றைய சென்னையின் கலாசார அரசியலின் செயல்பாட்டுக் களங்களாகவும் விளங்கின.

திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் 16ஆம் எண் மேன்சனின் 6 ஆம் நம்பர் அறையில் வசித்த சின்னக்குத்தூசி அறை, பிரபஞ்சன் அறை, எஸ். வி. இராஜதுரை வீடு, சென்னை புக் ஹவுஸ், ராசகிளி, வயல், விடியல் அச்சகங்கள் போன்ற இடங்கள் மாலை நேரங்களில் இலக்கிய – கலை ஆர்வலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களாக இருந்தன.

இன்று புகழ் பெற்ற இயக்குனர்களாவும் திரைக்கலைஞர்களாகவும் வளர்ந்துள்ளவர்களில் பலர் 1970-களின் பிற்பகுதியில் தொடங்கி 1980கள், 1990களில் இயங்கிய சென்னை திரைப்படச் சங்கம் (Chennai Film Society) திரையிட்ட உலக சினிமாக்களைப் பார்த்து நவீன சினிமாவை புரிந்துகொண்டவர்கள்தாம்! ஒரு திரைப்படக் கல்லூரிக்கு இணையான பணியை சென்னை திரைப்படச் சங்கம் ஆற்றியிருக்கிறது.  ஃபிரெஞ்சு புதிய அலைப் படங்கள், ஐரோப்பிய நவீன சினிமாக்கள் முதல் லத்தீன் அமெரிக்கச் சினிமாக்கள், கீழைய சீன, ஜப்பானிய, கொரிய இயக்குனர்களின் படங்கள் என சென்னையில் இயங்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது வெளிவரும் சிறந்த உலகப்படங்கள் மட்டுமல்லாது சிறந்த இந்தியப் படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். அது மட்டுமல்லாது விவாதங்களையும் ஏற்பாடு செய்தனர். கோடார்ட், பெர்க்மென், தாக்கோவ்ஸ்கி, அகிரோ குரோசவா, ரித்விக் கட்டக், நகிஷா ஒஷிமா, ஜான் ஆபிரகாம், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சத்யஜித் ரே, அரவிந்தன் போன்ற எண்ணற்ற இயக்குனர்களின் தொகுப்பாக ரெட்ராஸ்பெக்டாக திரையிட்டதால் சலனங்கள் இன்னமும் அடங்கவில்லை. இதெல்லாம் மதுரை தவிர சென்னைக்கு வெளியே அப்போது சாத்தியமில்லை. தமது ஆதர்ஷ இயக்குனர்களின் ரெட்ராக்ஸ்பெக்ட் படங்களைப் பார்க்க வெளியூர்களிலிருந்து வந்து பார்த்துப் பிறவிப்பயன் அடைந்து விட்டதாகச் சென்ற சினிமாக் காதலர்களும் உண்டு.

சென்னையில் இயங்கும் கன்னிமரா பொது நூலகம், மாக்ஸ் முல்லர் பவன் நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை இலக்கிய சங்க நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் மட்டுமல்லாமல் எஸ்.எஸ். கண்ணன் நடத்திய மார்க்ஸ் லைப்ரரி, பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம், அண்ணா அறிவாலய நூலகம், சென்னை பல்கலைக்கழக நூலகம் போன்றவை அறிவுப் பெட்டகங்களாக விள்ங்கின. இவற்றில் ஒன்றிரண்டு நூலகங்கள் தவிர மற்ற நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்க முடியும்.
பேராசை கொண்டு பல நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து தலையணை சைஸ் புத்தகங்களை எடுத்து ஜோல்னா பை தாங்காமல் சுமந்ததால் உருவான தோள் வலி சுகமான சுமை! 80களில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய லேண்ட் மார்க் புத்தகக்கடை நவீன இலக்கியங்களை உடனுக்குடன் அறிமுகம் செய்துவைப்பதில் முக்கியப்பங்காற்றியது.

நவீன நாடகங்களின் சோதனை முயற்சிகள் அரங்கேறும் இடமாக சென்னை இருந்தது. அப்போதெல்லாம் சென்னைக்கு வெளியே நவீன நாடகங்களைப் பார்ப்பது அபூர்வம். 70களில் தொடங்கிய கூத்துப்பட்டறை 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் சென்னை தீவுத்திடலில் இருந்த சிற்றரங்கில் வாரம் தோறும் நாடகங்கள் நடத்தியது. இணையாக வீதி, பரீக்‌ஷா, சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம், ஆடுகளம், ஐக்யா போன்ற குழுக்களும் இயங்கின. தவிர உலகப் புகழ்பெற்ற முக்கிய நாடகக் கம்பெனிகள் இந்தியப் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை நகரை மறப்பதில்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹே மார்க்கெட் தியேட்டர் கம்பெனி உள்ளிட்ட பல நாடகக் குழுக்கள் சென்னையில் நிகழ்த்திய நாடகங்கள் நவீன நாடகத்தின் புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்து தமிழ் நவீன நாடகங்களை செழுமைப்படுத்தின. 
சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கிய லலித் கலா அகாதமி நவீன ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். கலை ஆர்வலர்கள் மாலையில் கூடும் இடமாகவும் லலித் கலா அகாதமி இருந்தது; இருக்கிறது.
ஆனால், முன் சொன்ன பல இடங்கள் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கவிதை

மவுனத்தின் விரிசல் 

நீண்ட உரையாடலுக்குப்
பின்னான மவுனம்
அர்த்தமிழக்கச் செய்துவிட்டது 
சொற்களை..
ஒவ்வொரு நொடியும் நீடித்து
சுருண்டு உருண்டு 
விகசிப்பதன் மூலம்
அழுத்திக்கொண்டேயிருக்கிறது
மவுனத்தின் கனம்..
பெரும் கதறலாகவோ, வெடிச் சிரிப்பாகவோ
எக்கனமும் பிளந்து
தோல்வியும் அபத்தமுமாக
சொற்களை
அர்த்தமாக்கிவிடக் காத்திருக்கிறது
மவுனத்தின் விரிசல்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மௌனம் மரணமாகுமா?

எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து…
அப்பணசாமி


”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ் கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தேன். வயதுமுதிர்ந்த நிலையில் அவர் மரணத்தின் மீதான விருப்பினைக் கொண்டிருந்தார். மிகவும் யதார்த்தவாதியான அவர் தனது முதிர்வை உணர்ந்து மரணம் குறித்து விவாதிக்க விரும்பியதை நண்பர்கள் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். எதையும் ஆழமான விசாரணைக்குட்படுத்தும் ஆற்றல் கொண்ட அவருக்கு இது சற்று அவமரியாதையாக இருந்தது. இதை அறிந்திருந்த என்னிடம் அன்று உரையாடலைத் தொடங்கினார். நானும் ஆர்வமுடன் பங்கேற்றேன்.

”மரணம் என்பது சர்வவியாபகமானது. நாமறிந்த வரைக்கும் அது பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மனிதன் மட்டுமே ஆதியிலிருந்து இதன் மீது விசனம் கொண்டவனாக இருக்கிறான். நவீன இலக்கியத்தில் இது அறிவுப்பூர்வமாக விவாதிக்கப்படுகிறது. தாஸ்தயேஸ்வ்ஸ்கி, டால்ஸ்டாய் முதல் சார்த்தர், காஃப்கா வரை இதையிட்டுப் படைப்புகள் வாயிலாக விசாரணை செய்துள்ளனர். எனக்கும் அது குறித்த உரையாடல்களும் விசாரணையும் உவப்பானதாக இருந்திருக்கிறது.

”மனிதன் தன் குறித்த சில தேர்வுகளை முடிவு செய்துகொள்ளும் உரிமை கொண்டவனாக இருக்கிறான், சார். இந்த வகையில் தமிழில் நகுலனின் ‘வாக்குமூலம்’ எனக்கு உவப்பான நாவல், சார். அதில் மனிதனின் ஆயுளை அறுபது ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதன் பலாபலன்களை அவர் ஆராய்கிறார். இதை உடனே மனிதகுலம் முழுமைக்குமான அரச கட்டளையாக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதாகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு கலைஞனும் அவ்வாறு மனப்பூர்வமாக  எண்ணமாட்டான். நகுலன் என்ற தனிப்பட்ட மனிதரின் நீண்ட நெடிய தனிமை வாழ்க்கை அவரது கலை மனதில் தொடர்ந்து அலைக்கழித்த எண்ணச் சலனங்களை விசாரணைக்கு உட்படுத்தியதே ‘வாக்குமூலம்’ நாவலாக வெளிப்பாடு அடைந்திருக்கும். நமக்கும் அந்த விசாரணை ஆசுவாசப்படுத்துமானால் அசை போடலாம். முதிர்ந்து கனியாகும் பருவம் குறித்த பக்குவத்தை இது அளிக்குமானால் அது நம்மை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
”இதே போல, உண்மையைப் பட்டவர்த்தனமாக உனர்த்தும் படைப்புகளுக்கு மரணமும் விதிவிலக்கல்ல. டால்ஸ்டாயின் ‘நீதிபதியின் மரணம்’ குறுநாவலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை என்னிடம் உருவாக்கியது சார்” என்றேன்.
வழக்கத்துக்கு மாறாக, அவர் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இருவருமே பகுத்தறிவாளர்கள் என்ற நிலையில் இந்த உரையாடல் எனக்கே வித்தியாசமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் தோன்றியது. பகுத்தறிவாளர்கள் உரையாடலுக்கு எதுதான் விலக்காக முடியும்?

“சார், எஸ். சம்பத் தெரியுமா? சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா?” என்றார். “ஆமாம் சார். அந்த நாவலை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். அது வெளியான காலத்திலிருந்து இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இது சாவு குறித்த ஒரு உரையாடல். பொதுவாக நாற்பதுகளை நெருங்கும் ஒருவர் கொஞ்சம் முன்பாகவோ கொஞ்சம் பின்பாகவோ சாவு குறித்துச் சிந்திக்கவே நேர்கிறது. சிலருக்கு சிறுவயது முதலேகூட இது குறித்த விசனம் ஏற்படலாம். கடைசியில் இது மன அழுத்தத்தின் விளைவாக உணரப்பட்டுச் சில நாள்கள் மாத்திரைகளை உட்கொள்வதால் அமுக்கப்படலாம். ஒரு சராசரி வாழ்க்கைக்கு இதுவே உகந்தது. ஆனால், தொடர்ந்த தேடல் கொண்ட ஒரு கலாஆளுமைக்கு இது ஒரு விஷயமாகிறது. மனிதன் இது குறித்து ஈராயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து வருவதால் அதன்மீது தாமும் எண்ணங்களைச் செலுத்த கலா ஆளுமை தூண்டுகிறது. இது மெட்டா பிஸிக்கலாக இருந்தாலுமே ‘எல்லாம் மாயை’ என்ற அனர்த்தத்துக்குச் செல்லாத வரை நாம் அதை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும், சார். சாவு குறித்த அதிமுக்கியமான தத்துவ முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் தினகரன் என்ற கதாபாத்திரம் வழியாக நாவலை எழுதிச் செல்லும் எஸ். சம்பத், நாவல் நெடுக, வாழ்வின் உயிர்ப்பான காட்சிகளையும், வண்ணங்களையும் அதே உயிர்ப்புடன் சித்திரப்படுத்தி இருப்பதுதான் நாவலின் சிறப்பு, சார்” என்றேன்.

வழக்கத்துக்கு மாறாக, பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவர், எஸ். சம்பத் மட்டுமல்லாமல் ஆத்மாநாம் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் நீண்ட அறிமுக உரை நிகழ்த்தி, இருவருமே அற்பாயுளில் போய் விட்டதால் தமிழிலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு குறித்தும் தனது ஈடுபாட்டோடு கூடிய வருத்தத்தையும் தெரிவித்தார். அதுதான், சார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகத் தமது மனம் பக்குவப்பட்டிருப்பதை உணர்த்த விரும்பிய அவாவுக்கு நண்பர்கள் இடம் தராது சென்டிமெண்டாக அணுகியதே அவரது வருத்தமாக இருந்தது. இப்போது அது தீர்ந்து அவரது முகத்தில் மின்னியது.

1980-களின் தொடக்கத்தில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அப்போது புதியதாக வெளிவந்த இரண்டு நாவல்கள் அதற்கு இணையாக எனக்குள் செல்வாக்கு செலுத்தின. ஒன்று ’இடைவெளி’, மற்றொன்று ’நாளை மற்றுமொரு நாளே’. அப்போது எக்ஸிஸ்டென்சியலிச சிந்தனைகளின் தாக்கமும் சார்த்தர், காம்யு, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் செல்வாக்கும் ஏற்பட்டிருந்த காலம். ’இடைவெளி’ நாவல் என்னை ஈர்த்ததற்கு அது சாவு குறித்த தத்துவ விசாரணையை மேற்கொண்டதால் மட்டுமல்ல, ’இடைவெளி’ என்ற அதன் தலைப்பும் நாவலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்த விதமும்தான். ஏனெனில், இடைவெளி சுருங்குவது தொடர்பான சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சி விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்த விளையாட்டை ’இடைவெளி’ நாவல் உற்சாகப்படுத்தியது. அது விபத்துகள் குறித்த ஆராய்ச்சி. அதாவது பெர்முடேசன் காம்பினேசன் அடிப்படையிலும் இயற்கையின் தேர்வு விதி அடிப்படையிலும் எவ்வாறு விபத்துகள் நேர்கின்றன என்பதே எனது ஆராய்ச்சி விளையாட்டாக இருந்தது. அப்போதெல்லாம் நிறையப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததால் பயணங்களின்போது இந்த விளையாட்டில் ஈடுபடுவது உவப்பானதாக இருந்தது. ஒரு வளைவில், திருப்பத்தில், சந்திப்பில், நெடிய சாலையில், சாலை குறுகும் தருணத்தில் எல்லாம் இந்த விளையாட்டு உற்சாகம் கொள்ளும். ஒரு புள்ளியில் எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்பதைப் பொறுத்தே விபத்துகளின் விகிதாசாரம் அமைவதாக உணர்ந்தேன். நாளிதழ்களில் விபத்து குறித்த செய்திகளை வாசிக்கும்போது உருவாகும் படபடப்பை இது தணிக்கும். ஒரு புள்ளியில் எத்தனை சாலைகள் கடக்கிறதோ அதன் 0.00000001 சதவீதத்துக்கும் குறைவாகவே விபத்துகள் நடப்பதாக அறிய முடிந்தது. இது பெர்முடேசன் காம்பினேசனில் பல்வேறு அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இடைவெளி சுருங்குவதே விபத்தின் பாதிப்பையும் உயிரிழப்பையும் தீர்மானம் செய்கிறது என நம்பினேன். இதே போன்ற ஒரு விவாதம் ’இடைவெளி’ நாவலிலும் வந்ததால் முதல் வாசிப்பில் உற்சாகம் கொண்டேன்.

இரண்டாவதாக, எக்ஸிஸ்டென்சியலிச (இருத்தலியல்வாத) எழுத்தாளர்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாகப் போரின் பேரழிவு, மனித எத்தனங்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட வாழ்வின் மீதான விரக்தி, தற்கொலை உணர்வு ஏதோ ஒருவகையில் சாவு குறித்த எண்ணங்களைக் கிளறுவதாக இருந்தது. இந்த வகையில் காம்யுவின் ’அன்னியன்’ என்னைப் பல மாதங்கள் அலைக்கழித்தது. இதன் தொடர்ச்சியாக எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்க நேர்ந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. என்னவோ ஒருவகையான மனக் கிளர்ச்சியை அந்த வாசிப்பு என்னுள் உருவாக்கியது. அதனால்தான் அதன் வசீகரம் முப்பதாண்டுகளாகியும் இன்னமும் தீர்வதாகயில்லை.

நாவல் வாசித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. என்னை வசீகரித்த தமிழ் ஆளுமைகளைத் தேடித் தேடிச் சந்தித்தபோது ஆத்மாநாம், எஸ். சம்பத் ஆகியோர் காலம் ஆகி வெறுமையை உருவாக்கியிருந்தனர். அவர்களோடு பழகிய ’வயல்’ மோகனிடம் அவர்களின் இயல்பு குறித்து விசாரித்தேன்: 

’’சம்பத் கனத்த உருவம் கொண்டவர். மிகவும் ஆர்வமானவர். கனத்த உருவத்துக்கு விரோதமான சுறுசுறுப்போடு செயல்படுவார். வியர்வை சட்டையை நனைக்கும் வேகத்தோடு நடந்து வருவார். நீண்டகாலம் இருக்க மாட்டோம் என்பதை முன்னரே அறிந்துதான் அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டாரோ என்னவோ!”

‘இடைவெளி’ நாவலின் மையக் கதாபாத்திரம் ’தினகர’னும் சற்று கனத்த உருவம். நிதானமாகச் செயல்படும் பாத்திரமாக இருந்தாலும் சிந்தனை வேகம் கொண்டு செயல்பட்டு, சம்பத்தின் பிரதிபிம்பமாகவும் கொள்ளச் செய்கிறது.

சண்முகத்தைப் போன்றே தினகரன் முன் வாழ்க்கையும் தில்லியை மையமாகக் கொண்டிருக்கிறது. இருவரும் தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவருமே அய்யங்கார். மற்றும் இதர விழுமியங்களையும் பார்க்கும்போது இதனை அவரது தன் வரலாற்று நாவலாகவும் கொள்ள இடம் இருக்கிறது.
“இந்த நாவல் சாவு என்கிற பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான்” என முன்னுரையில் கூறுகிறார் சம்பத். பசி, காமம், பயம் ஆகியவற்றையே மனிதனின் ஆதார விஷயங்களாகக் காணும் இருத்தலியல்வாதிகளின் செல்வாக்கு சம்பத்தினிடம் மேலோங்கி இருந்ததன் காரணமாகவே சாவு குறித்த விசாரணையை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும். “சாவு என்னைப் பாதித்த விதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய்விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!’ இந்த ஒரு எண்ணம் என்னைச் சின்ன வயசிலேயே தொற்றியிருக்க வேண்டும்” என சம்பத் முன்னுரையில் கூறியது போலவேதான் தினகரனும் நாவலில் கூறுகிறார். மேலும், “நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்துப் பேசி விவாதித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லாரும், ... புத்தக எல்லைக்குள் வாழ்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறை கூற விழையவில்லை” என்று சம்பத் கூறுகிறார். அவரது நாவலில் தினகரனும் தனது சாவு குறித்த தேடலுக்கு விடை காண கால்நடை மருத்துவரை அணுகித் தோல்வி அடைகிறார். அதற்கு அவரைக் காரணமாக்காமல் மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்.

’அடிப்படை விஷயங்களில்’ உழல்பவரான தினகரன் மீது டால்ஸ்டாயும், தாஸ்த்யேவ்ஸ்கியும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ”சாவின் வாயிலிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தாஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாகச் சொல்லியிருப்பார் என்று தினகரன் எதிர்பார்த்தார்”. ஆனால், சாவைப் பற்றி தத்துவார்த்தமான முடிவு எதையும் தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லை என்பது தோல்விதான் என்றாலும் “அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம் இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கண்டு அதில் முழுத் தீவிரமாக” ஈடுபட்டதுதான் என்கிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையின் அனர்த்தமான நீட்சியாகத் தற்கொலை பற்றியும் தினகரன் சிந்திக்கிறார். ஒரு பெண் (கல்பனா) விஷயமாக அவர் தற்கொலை முடிவெடுத்து மொட்டைமாடி மீது நிற்கிறார். அப்போது, “ஒரு கணத்திற்கு, கீழே அதலபாதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மௌனம் தேங்கியிருந்தது” என உணர்கிறார். ”அப்போது அவருக்கு ஏற்பட்ட ”அனுபவத்தை என்ன பெயரிட்டு அழைப்பது?” “தன்னை முற்றிலும் காலியாக்கிக் கொண்ட பிறகு மூளையில், உடம்பில் எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை” சாவுக்கும் அப்பாற்பட்டதாக நினைத்து, தற்கொலை சாவு குறித்த விசாரணைக்குத் தீர்வல்ல எனக் கைவிடுகிறார்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது உயிரும் தினகரனிடம் முறையிடுகிறது. அவர் அங்கு நின்றபோது, ’தரை பால் போல் பொங்கி அவர் நின்ற விளிம்பு வரை மேலெழுந்து’ வந்ததாகக் கண்ட மனக்காட்சியை உயிரின் குறியீடாக எதிர்நிலையில் சம்பத் முன்வைக்கிறார். தொடர்ந்து சாவு குறித்த விசாரணை அவரைப் பித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ஏற்கனவே இது போன்றதொரு அனுபவத்தால் திடுக்குற்றிருந்த தினகரனின் மனைவி பத்மா இம்முறை மேலும் துணுக்குறுகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு மேலும் சிக்கலாகிறது. இது போன்ற நேரங்களில் கூச்சல், கைகலப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நினைக்க மறுநாள் காலையில் காப்பி போட்டுக்கொண்டு அவளையும் குழந்தைகளையும் எழுப்பும் அளவுக்கு தினகரன் அவர்கள் மீதும் பித்தாக இருக்கிறார். உடல் இச்சை அவருள் ஏற்படுத்தியிருந்த வலுவான தாக்கத்தின் நீட்சியாகக் கண்டு தினகரன் திடுக்கிடவும் தவறவில்லை.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உடல்கள் மீது அவர் கொண்டிருந்த இச்சையையும் செயல்பாடுகளையும் அவர் பட்டவர்த்தமான வெளிப்படுத்துவதால் அவர் மனைவி கொள்ளும் சீற்றமும் வெளிப்படுத்தும் ரௌத்திரமும் வாழ்நாள் பிணக்காக நீடித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ‘அடிப்படை விஷயங்களில்’ உழலுவதால் பொருளாயத வாழ்க்கையையும் தவற விடுவதைத் தினகரன் அறிந்தே இருந்தாலும் அவர் மீள இயலாத அளவுக்கு அமிழ்ந்து போகிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையில் அமிழ்ந்த பிறகு பத்மா மிகவும் பயந்து போகிறாள். இது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்ததனால் ஏற்பட்ட பித்து அல்ல. அதைவிட அபாயகரமானது என நம்புகிறாள். முதலில் மற்றொரு பெண் உடல் குறித்த இச்சையாக இருக்கும் என நினைத்துப் போரிட முயல்கிறாள். பின்னர் இது ’வேறு ஒன்று’ என்பதை உணர்ந்து பேரச்சம் கொண்டு ‘நேக்கும் குழந்தைகளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா?’ எனக் கெஞ்சுகிறாள். சாவு குறித்த விசாரணையைத் தற்கொலையை நோக்கிய எத்தனமாகப் பொருளாயத மனம் கண்டு அஞ்சுகிறது. அடிப்படை விஷயங்களில் உழலும் தினகரன் வாழ்தலையும் இதனையும் துல்லியமாக வேறுபடுத்திக் காண்கிறார். பெரும் பொருளாயத இழப்பு, அவர் காது கேட்கவே அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக உலகோர் பேசுவது போன்றவை தவிர பெரிய பாதிப்புகளில்லை என்பது தினகரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இது தினகரனின் தத்துவ மனம் என்றால் இதனைப் படைப்புரீதியாகக் கட்டமைப்பதில் எஸ். சம்பத்தின் கலைமனம் அற்புதமாக, வியக்கத்தக்க அளவில் வெற்றி கொள்கிறது. இல்லையானால், சாவு குறித்த ஓர் விசாரணையில் வாழ்வு குறித்த இத்தனை வண்ணமயமான, உயிர்ப்புள்ள ஜீவ வர்ணனைகள் ஏன் இடம் பெற வேண்டும்?

திருவல்லிக்கேணியில் தன் பெரியப்பா வீட்டு மொட்டை மாடியில் காலையில் ஏழு மணிக்குக் கண்விழிக்க நேர்ந்தபோது வானத்தில் சூரியனின் தங்க ரேகைகள் இன்னமும் அகலாமல்’ இருப்பது தினகரனுக்கு உவப்பளிக்கிறது. இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கட்டான் ஆடுவதாகத் தோன்றுகின்றன: ”சற்றே வலுத்துப் போன காற்றில் தென்னங்கீற்றுகள் ‘ஜே.ஜே’ எனக் கோஷமிடுகின்றன. அந்தக் கோஷத்தையும் மீறி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும் மட்டைகளும் பிரிந்து, பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரங்களைக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்கின்றன”.

அதேபோல, பணமே, பொருளே முதன்மையாகக் கொண்டு வாழும் உயர், நடுத்தர வர்க்கத்தினரை எள்ளலுடனும் உணவக சர்வர், பழவண்டி வியாபாரி, சாலையோர சூதாட்டக்காரன் ஆகிய விளிம்புநிலை மக்கள் மீது கருணையுடனும் அணுகுகிறார்.
இருந்தும் சாவு குறித்த விசாரணையின்போது பித்துநிலை கொள்கிறார். அலுவலகத்தில் தமது ஆராய்ச்சி விளையாட்டில் நிம்மதியாக ஈடுபடுவதற்காகத் தமது பதவிக்கும் தகுதிக்கும் குறைவான ‘மெக்கானிக்கலான’ ஒரு வேலையைச் சில மாதங்கள் கேட்டுப் பெறுவது, ஓட்டலில் ஒரு டீயை மணிக்கணக்கில் குடிப்பது, தன்னை அறியாமல் ஒரு மணி நேரமாக நாணயத்தைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பது, பழ வண்டிக்காரனிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கி இரண்டு சுளைகளை இரண்டு நிமிடமா இரண்டு மணி நேரமா என்பதை உணராமல் தெருவிலேயே நின்று தின்பது, பெரியப்பாவின் உயிர் பிரிவதை இரவு முழுவதும் விழித்திருந்து கண் கொட்டாமல் பார்ப்பது, மின்விசிறியில் தூக்குக்கயிறை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தியானம் செய்வது ஆகிய நடவடிக்கைகளால் மனைவி, குழந்தைகள், மேலதிகாரிகள், சக அலுவலர்கள், ஓட்டல் சர்வர், பழ வண்டிக்காரன் மற்றும் சுற்றத்தார் அவரைப் பைத்தியக்காரன் எனக் கூறுகின்றனர்.

எதற்காகவும் தனது பித்துநிலையைக் கைவிட விரும்பாமல் தொடர்ந்து சாவு குறித்த சிந்தனையில் ஈடுபடுகிறார். அலுவலகத்திலும், கடல் குளியலிலும், சாலைகளில் நடக்கும்போதும் மனைவியின் உடலில் இயங்கும்போதும் கனவிலும் நனவிலும் அது தொடர்கிறது. இதற்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்குமா என குதிரை ரேஸுக்குப் போகிறார். சாலையோரச் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசிக்கிறார். தனது பெரியப்பாவின் இறுதி நிமிடங்களுக்காகத் தூங்காமல் காத்திருக்கிறார்.

இவ்வாறாக, சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம்; சாவு என்பவர் கண்காணிப்பாளர்; சாவு என்பது பிரபஞ்சரீதியில் காத்திருப்பது என்றெல்லாம் ஆய்ந்து இடைவெளி என்ற முடிவை நோக்கி தினகரன் நகர்கிறார்.

இறுதியாக, தனது மனைவி பத்மாவின் உதவியுடன் அறையில் துக்குக் கயிறைக் கட்டி அதைப் பார்த்தபடி (தியானம்!?) நீண்ட நேரம் இருக்கிறார்.

இடைவெளிதான். வாழ்விலும் சாவிலும் இடைவெளிதான் இயங்குகிறது. வாழ்வில் உயிருக்கு அனுசரணையான இடைவெளியாகவும் சாவில் முரண்பட்ட இடைவெளியாகவும் இயங்குகிறது என்பதைக் கண்டடைகிறது. முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கு நிரந்தரமானது. அது ஒன்று மற்றொன்றாக மாறி பரிமாண வளர்ச்சியாகவும் அதே நிலையிலும் வைக்கிறதே இடைவெளி வாழ்விலும் சாவிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். இதோ தினகரன் கணிப்பு:

“வாழ்வு என்பதைப் பற்றிய என்னுடைய கணிப்பு இதுதான். எந்தப் பொருளும் அது உயிர்மயம்தான். ...அதில் ... முன்னமேயே இடைவெளி இருந்தால் அதை உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது முரண்படுகிறது. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி.

”இப்போது அவருள் இன்னொரு கேள்வி எழுகிறது.

”ஏன் இப்படி நடக்கிறது?

“தெரியாது!

“அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? ...

“அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பல்வேறு இயற்கை விதிகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது...”

”இடைவெளியே... சாவே உன்னை வணங்குகிறேன்.
....
....
”மண்டியிடு” என்றது சாவு.
“மானசீகமா? உடம்பாலும் கூடவா?”
“மானசீகமாகப் போதும்!”
“அவர் மண்டியிட்டார்.”

இப்படி ஒரு கீழைய ஆன்ம நிலையில் நாவல் முடிகிறது. பொருளாதாரத் தேடல் உட்பட மனிதனின் அறிவியல், ஆன்மிக, தத்துவத் தேடல்களெல்லாம் மரணம் குறித்ததாக, மரணத்தை வெல்வது குறித்ததாக இருந்து வருகிறது. பொதுவாக, மரணம் குறித்த மேற்கத்தியக் கண்ணோட்டம் என்பது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதாக உள்ளது. கீழைய தத்துவ மரபு மரணத்தை முக்தியாக, வீடுபேறாக, பெரு விடுதலையாகப் பார்க்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் கிழக்கும் மேற்கும் மோதலாகி நவீன சிந்தனைகள் உருவாகியதைப் போலவே சாவு குறித்தும் கிழக்கும் மேற்கும் நெருங்கி, நெருங்கி - நெரித்து, நெரித்து மோதலாகிப் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இதன் நீட்சியாகவே எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலைக் காண முடியும். இங்கே, கிரேக்கமும், பௌத்தமும் சாவை ஒப்பீட்டளவில் யதார்த்தமாகக் காண்பது கவனிக்கத்தக்கது. நவீன சிந்தனைகளும் கூட இதையொட்டியே இயங்க முடியும். வாழ்வு என்பது ஒரு முடிவை நோக்கிச் செல்வது; சாவு என்பது வாழ்வை முழுமையாக்குவது. சாவுக்குப் பின் ஒருவன் தனது சிந்தனைகளை மட்டுமே விட்டுச் செல்கிறான். மேலும் அதில் எந்தவித மாற்றங்களைச் செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். அவன் எதை வாழ்ந்தானோ அதுவே நிசர்னமாகிறது. இவ்வாறு அவன் வாழ்வு சாவால் முற்றுப்பெறுவதுடன் முழுமையும் அடைகிறது.

எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அவன் முதிர்ந்து கனியும்போது மெட்டாபிஸிக்கல் எண்ணங்கள் யாரானாலும் தவிர்க்க இயலாததாகிறது. குறைந்தபட்சம், முன்னர் நிலவிய தீவிர வறட்டுப் பொருள் முதன்மைக்கோட்பாடு முன்பு இருந்த தீவிரத்தில் இருந்து தணியவே, அதன் வறட்டுத்தனத்தில் இருந்து நீங்கும் அளவுக்காவது தணியத்தான் செய்கிறது.

எஸ். சம்பத்தைப் பொறுத்தவரை, அவரே கூறுவது போல பசி, காமம், பயம், சாவு போன்ற அடிப்படை விஷயங்களில் உழல்பவர் அல்லது உழன்றவர். குறிப்பாக, சாவு குறித்த ஆராய்ச்சி விளையாட்டைத் தீவிரமாக விளையாடியவர். கடுமையான நோய் வடிவில் காலம் அவர் வாழ்வில் விளையாடி விட்டது துரதிருஷ்டவசமானது.

முன்னர் பார்த்தபடி சாவு குறித்த கீழைய மற்றும் மேற்கத்திய தத்துவ முடிவுகள் மோதலுக்கு உள்ளாதலில் தாக்கம் அவரில் தீவிரம் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேற்கத்திய பொருளாயதக் கண்ணோட்டத்தின் பிடியிலிருந்து சாவை விடுவிக்க முயலும் சம்பத், மறுபக்கத்தில் சாவை சாவுக்குப் பின்பும் நீடிக்கச் செய்யும் கீழைய தத்துவ முயற்சிகளில் இருந்தும் அறுத்து எறிகிறார். முக்தி, வீடுபேறு, மறுபிறப்பு போன்ற சங்கிலிகளில் இருந்து அதனை விடுவித்து சாவைச் சுயமாக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார். சாவு தானாகவே நிகழ்கிறது என்ற உண்மையின் மூலம் இதனை நிரூபிக்கிறார்.

“அங்கு (மேற்கில்) சமயமும் ஒரு பொருளாதாரத் தத்துவத்தின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது” என்று கூறும் சம்பத், “எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தச் சமுதாயம்தான், இந்தியச் சமுதாயம்தான், கடைசியாக மனித இனத்தைப் பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறது” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். கடந்த முப்பது ஆண்டு கால தத்துவ வளர்ச்சி அதாக இல்லாதபோதும் உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான சாவு குறித்த விசாரணை மெட்டாபிஸிக்கல் அணுகுமுறையாக நீடிப்பது தவிர்க்க இயலாததாகிறது.

சாவு என்பது ஒவ்வொரு உயிரியல் வாழ்வையும் நிறைவு செய்யும் விழுமியம். அது முரண்பாடுகளின் பிறப்பாகவும் அழிவாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த உயிர்களும் தப்பிக்க முடியாது. ஜடப் பொருள்கள் கூட அழிவிலிருந்து தப்பிக்க இயலாது. உயிர் வாழ்வதற்குச் சாதகமான இடைவெளியில் இருந்து அதற்கு முரண்பட்ட இடைவெளியை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு முரண் முற்றிய நிலையில் சாவு தானாக நிகழ்கிறது என்கிறார். சகல உயிர்களுக்கும் இயல்பான வழி இது என்பதால் இதை ஏற்பது சிக்கல் அல்ல.

ஆனால், மனிதனைப் பொறுத்தவரை அறிவு குறுக்கீடு செய்கிறது. இங்கு சாவு தானாக நிகழ்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மனித அறிவால் அறிவியல் உருவாகி எண்ணற்ற மனித உயிர்களின் மரணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டாலும் கூட. மனித ஆணவத்தால் சாவு இலட்சக்கணக்கில் முன் தேதியிட்டு நிகழ்ந்து கொண்டிருப்பதை, சாவு தானாக நிகழ்கிறது என ஏற்க முடியவில்லை. தற்கொலையைக் கூட விட்டு விடலாம். ஏனென்றால், வாழ்க்கை என்பது எந்த வகையிலும் யாசகமல்ல. இந்த ஈகை மனதிற்கு எதிரான போராட்டத்தின் தோல்வியே தற்கொலையைத் துணிச்சலாகத் தேர்வு செய்கிறது.

எஸ். சம்பத் இந் நாவலை 1983 - 84 காலகட்டத்தில் எழுதினார். அதன் பின்னர் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில், என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது.
ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் தாமாகவா போயின?
இந்திரா காந்தி உயிர் பறிக்கப்பட்டதும், அதே நாளில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் தாமாகவா நிகழ்ந்தன?

தண்டகாரண்ய காடுகளில் சல்வா ஜுடும் என்ற பெயரில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவாசிகளின் உயிர்கள் தாமாகவா வெளியேறின?

ஈராக்கில், ஆஃப்கனில், குரேஷியாவில், போஸ்னியாவில், சிரியாவில், யேமனில், லெபனானில், பாலஸ்தீனத்தில், சூடானில், காங்கோவில், எகிப்தில் என உலகம் முழுவதும் அற்பாயுளில் பறிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான உயிர்கள் தாமாக வெளியேறியிருக்குமா என்ன?

இக்கேள்விகளும் இந்த நாவலை வாசித்த பின் எழாமலில்லை.
-நன்றி: கல்குதிரை இளவேனிற்கால இதழ் ஏப்ரல் 2014