நேர்காணல்கள் வழி விரியும் உலகம்
ந. முருகேசபாண்டியன்
எல்லாருக்கும் பிறரிடம் கேட்பதற்கு நிரம்பக் கேள்விகள் கைவசம் உண்டு. கேள்விகள் கேட்பவரும் பதில் அளிப்பவரும் ஆன நேர்காணல் பொதுநிலையில் சமூகப் பதிவாகிறது. பேட்டியளிப்பவர் பெரியவரா? கேள்வி கேட்கிறவர் பெரியவரா? என்ற கேள்வி இங்கு நிலவுகின்றது. நேர்காணலைப் பொறுத்தவரையில் முன் தயாரிப்புடன் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குத் தரப்படும் பதில்களும் முக்கியமானவை. பெரும்பாலான நேர்காணல்களில் பேட்டியளிப்பவர் பற்றிய பிம்பத்தைப் பேட்டியெடுப்பவர்தான் கட்டமைக்கிறார்; சில வேளைகளில் சொதப்பல் பேட்டியையும் ஒப்பேற்றும் நகாசு வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார். சிறுபத்திரிகை சார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் காத்திரமாக வெளியாகின்றன. இத்தகைய நேர்காணல்களை முக்கியமாகக் கருதி செயற்படும் பத்திரிகையாளர்களில் அப்பணசாமி குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பதாண்டுகளாக இடதுசாரி இலக்கியப் பின்புலத்தில் செயற்படும் அப்பணசாமி, பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்குத் தரப்பட்ட பதில்களும் ‘பதில்களில் மட்டும் இல்லை விடை’ என நூல் வடிவம் பெற்றுள்ளது.
அப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்கள் வழமையான ‘கேள்வி - பதில்’ என்ற வடிவத்துக்கு அப்பால் பல இடங்களில் உரையாடலாக விரிந்துள்ளது. பேட்டியளிப்பவரிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்வது அப்பணசாமியின் இயல்பு அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளைப் பேட்டியளிப்பவரிடம் கேட்டுப் பதில்களைப் பதிவாக்கியுள்ளார். அதே வேளையில் பேட்டியளிப்பவரின் மேதமை குறித்த அப்பணசாமியின் மரியாதை, கேள்விகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலக்கியம், நாடகம், கல்வி, திரைப்படம், இசை, சமூகவியல் சார்ந்து தீவிரத்தன்மையுடன் செயல்படுகிறவரின் பன்முகத்தன்மைகளைப் பதில்களின் மூலம் பதிவாக்கியுள்ள அப்பணசாமியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
பாலேந்திரா, ச. முருகபூபதி, நாசர், சே. ராமானுஜம், ஆகிய நால்வரின் நாடக ஈடுபாடு, நாடக முயற்சி குறித்த நேர்காணல்கள் ஆழமானவை. நிகழ்கலையான நாடகம் தமிழில் ஏன் வழக்கொழிந்து வருகின்றது என்ற தேடல் ஒரு புறம்; ஏதேனும் நாடக உலகில் சாதனை செய்ய முடியும்/ செய்திருப்பதாக நம்பும் நாடக்காரர்களின் ஆதங்கம் இன்னொருபுறம் என விரியும் பரப்பில், அப்பணசாமியின் கேள்விகள் நாடகக்கலைக்கு ஆதரவாகத் தோன்றுகின்றன. ஈழத்தில் நடைபெற்றுள்ள நவீன நாடக முயற்சிகளையும் அவற்றுக்கு மக்களிடம் அச்சு ஊடகம், மக்களிடம் இருந்த செல்வாக்கு குறித்தும் பாலேந்திராவின் பேச்சுகள் வியப்பைத் தருகின்றன. நாடக அகாதமி, ஃபோர்டு பவுண்டேசன் பணம் தந்தால்தான் நவீன நாடகம் போடமுடியும் எனக் கையேந்தி நிற்கும் தமிழக நாடகக்காரர்களின் கேவலநிலை வெறுப்பைத் தருகின்றது.
பிரபலமான திரைப்பட நடிகரானாலும், நாடகம் குறித்து நாசர் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்துக்குரியன. நடிப்புப் பயிற்சி மூலம் வளமடையும் நடிகனின் நடிப்புத்திறன் கூர்மையாக வெளிப்படும் என்ற நாசரின் பேச்சு, ஒப்பனைகள் அற்று யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது.
சடங்கு, பாவனை, உடல் மொழி மூலம் வெளியையும் காலத்தையும் ச. முருகபூபதியின் பேச்சு, அவருடைய நாடகம் பற்றிய புரிதலை எளிமையாக விளக்கியுள்ளது. பூபதியின் நாடகத்துடன் ஒன்ற இயலாத பார்மையாளரின் மனநிலை குறித்த அவரது கணிப்பு முக்கியமானது.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நாட்டு விடுதலைப் போராளி, சமூக சேவகர் எனப் பல்லாண்டு காலமாக அறியப்பட்டு வருகிறார். அந்த அடையாளத்தைச் சிதைத்து அப்பணசாமி வெளிப்படுத்தும் கிருணம்மாள் பன்முக ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்குகிறார். தஞ்சை மாவட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட கூலி விவசாயிகளான தலித்துகளுக்கு நிலம் வேண்டி அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றிய தகவல்கள் இதுவரை யாரும் அறியாதவை. ‘நிலவுடமை’ என்ற மையத்தில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதமான உரிமையும் இல்லாத நிலையில், அன்றாடங்காய்ச்சிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளுக்கு நிலம் அளிப்பதன் மூலம் சமூக இழிவிலிருந்து நீங்க முடியும் என்ற தொலைநோக்குப்பார்வை, கிருஷ்ணம்மாளைச் செயலூக்கம் மிக்கவராக்குகிறது.
ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் ஆகியோரின் நேர்காணல்கள், மரபு வழிப்பட்ட போக்கிலிருந்து விலகி, தமிழ்ச்சமூகத்தைப் புதிய கோணத்தில் ஆராய முற்பட்டுள்ளன. கருத்து வேற்பாடுகளுக்கு இடமளித்தாலும் பேராசிரியர்களின் நோக்கங்கள் மேலானவை.
‘கல்வியில் தாழ்ந்த தமிழ்நாடு’ என ஆதங்கப்படும் கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணனின் நேர்காணல், அளவில் சிறியதெனினும், இளைய தலைமுறையினரின் மீதான சமூக அக்கறையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.
நேர்காணல்களை வாசித்து முடிக்கும்போது அப்பணசாமியின் கேள்விகள், வழக்கமான போக்கிலிருந்து மாறுப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடியும். தமிழ்ச் சமூகம் குறித்து ஆதங்கப்படும் ஆளுமைகளின் நேர்காணல்கள் தமிழர் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரமாக உள்ளன.
-பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்கள்)
அப்பணசாமி,
அப்பணசாமி,
போதிவனம் வெளியீடு,
12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.
பக்: 240; விலை: ரூ 120/-
நன்றி: உயிர் எழுத்து - தமிழ் இலக்கிய மாதல், ஜூன் 2012 இதழ்.