சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வெள்ளி, 12 ஜூலை, 2013

தலித் அரசியல் வாசிப்பில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்

தலித் அரசியல் 
வாசிப்பில் 
முக்கியம் பெரும் 
இரண்டு புத்தகங்கள்
1957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட  பெறவில்லை.  அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுத் தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்' வரலாற்றுப் பதிவும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த கூடுதல் வாசிப்புக்கு உதவுகிறது. தலித் விடுதலைக்கான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படும் காலகட்டத்தில் இவ்விரு  புத்தகங்களும் முக்கியத்துவம் பெருகின்றன. 


முதுகுளத்தூர் கலவரம் பள்ளர்களுக்கு எதிராக மறவர்கள் நடத்திய கலவரம். 1957 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேவர் கை நீட்டிய வேட்பாளருக்கு வாக்களிக்காத பள்ளர்கள், நாடார்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படுகிறது. குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்லவேளையாக இம்முறை பாதிக்கப்பட்ட பள்ளர்களுக்காக வாதாட சமூக உரிமைப்  போராளி இம்மானுவேல் இருந்தார். இதனால் பள்ளர்கள் பலமாக இருந்த பகுதிகளில்  மோதல்கள் பலமாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இம்மானுவேல் இருந்தார். இன்னும் காங்கிரஸ் எம். எல். ஏக்களும், அதிகாரிகளும் இருந்தனர். பிரச்சனைக்குரிய இரு சமூகத்தவரும் சமாதானமாகப் போகவேண்டும் என்றுதான் ஆட்ட்சியர் கூறினார். யார் மீது தவறு என்பதைக்கூட சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனநிலை, குறிப்பாக மறவர் சமூகத்தவரின் மனநிலை எப்படி இருந்தது என்றால் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல், முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்ல தேவருக்கும், இம்மானுவலுக்குக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.

 " கூட்டறிக்கை விடுவதென்று யோசனை கூறப்பட்டது. தேவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஹரிசன சார்பில் இம்மானுவேலும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அறிக்கையில் கையொப்பமிடுவதை ஆட்சேபித்தார். காங்கிரஸ்காரர்களோடு கூட்டாக, தான் எதுவும் செய்தால் அவர்கள் தம் கழுத்தை அறுத்துவிடுவார்கள் என்றார். அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கும் இம்மானுவேலுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ஒரே வாசகமுள்ள தனித்தனி அறிக்கைகளில் தனித்தனியாய் கையெழுத்திடலாம் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார். அதற்கும் தேவர் ஆட்சேபித்தார். ஆனால், 'கையெழுத்திகிறீரா, இல்லையா?' என்று கலெக்டர் கடுமையாகக் கேட்டதன்பேரில் தேவர் கயெழுத்திட்டார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளே, மறுநாள் 11ம் தேதி (செப்டம்பர், 1957) இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடியில் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்தில் இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்." (முதுகுளத்தூர் கலவரம், பக்: 57) 

சமாதானக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முத்துராமலிங்கத் தேவர்,  "இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடுத்த நாள்தான் இம்மானுவேல் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இம்மானுவேல் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே முதுகுளத்தூர் கலவரமாக விசுவரூமமெடுத்துள்ளது. இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட நாளிற்கு மறுநாள் பரமக்குடி அருகில் உள்ள அருங்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. மறவர்களும், பள்ளர்களும் வாழும் இவ்வூரில் அன்று கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மறவர்கள் கோரினர். இதற்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. ஒரு பெண் உள்பட ஐந்து பள்ளர்கள் உயிரிழந்தனர். பள்ளர்களும் எதிர்த்துத் தாக்கினர். இதில் 5 மறவர்கள் இறந்தனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 58)  தொடர்ந்து "இம்மானுவேலைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலில் மறைந்திருப்பதாக போலிசுக்கு 14 ஆம் தேதி காலையில் தகவல் கிடைத்தது. .இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆயுதப்படைக்கும் மறவர்களுக்கும் நடந்த மோதலில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர். (கீழ்த் தூவல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் நடந்துகொண்ட முறை மனித நாகரிகமற்ற செயல். அங்கிருந்த மறவர்களின் கண்களையும், கைளையும் கட்டி ஓடவிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.) தொடர்ந்து கலவரம் கிராமம் கிராமமாகப் பரவியது. 18 ஆம் தேதியன்று வீரம்பல் கிராமத்தில் இருந்த பள்ளர் இன மக்கள் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மறவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நடத்திய துப்பாக்கிச் சூடில் பலர் உயிழந்துள்ளனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 60). நிராயுதபாணிகளான தலித்துகள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை மிகவும் அவலமானது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலித்துகளுக்கு இத்தகைய வன்கொடுமைகள்தான் இந்திய வரலாற்றில் பதில்களாக அமைகிற்து என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்திக்கூறியது. 

இவ்வாறு பரமக்குடி, முதுகுளத்தூர், சிவகங்கை தாலுகாக்களில் பரவிய கலவரத்தில் "இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 ஹரிஜன்களும், 8 தேவர்களும் கொல்லப்பட்டனர். காவலர்கள் துப்பாக்கு சூட்டிற்கு தேவர் சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் ஹரிஜன்கள் வீடுகள்" (முதுகுளத்தூர் கலவரம், பக்: 117-118). 

முத்துராமலிங்கத்தேவர் மற்றும் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது என்பதை தினகரன் தெளிவாக விளக்குகிறார். கலவரம் தொடங்குவதற்கும் தேவர் பேச்சே தூண்டுதலாக இருந்துள்ளது என்பதை பிற்சேர்க்கைகள் மூலம் விளக்குகிறார், தொகுப்பாளர் இளம்பரிதி. பக்தவச்சலம் சட்டமன்றத்த்தில் தாக்கல் செயத அறிக்கையில், அமைதிக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை இவ்வாறு விளக்குகிறார்:

"இக்கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்பின் சார்பாகப் பேசவந்த திரு. இம்மானுவேல் அவர்களின் பங்கேற்பு குறித்தும், அவரது தலைமைப் பண்பு குறித்தும் திரு. முத்துராமலிங்கத் தேவர் கேள்வி எழுப்பினார். இக்கூட்டத்தில் தேவர் அவர்கள் இம்மானுவேல் அவர்களைப் பார்த்து, தனக்குச் சமமான தலைவனா? என்றும், எத்தனை ஹரிஜனங்கள் இம்மானுவேலைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்றும் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் கூறிய திரு. இம்மானுவேல், "தான் தேவருக்குச் சமமான தலைவனா? இல்லையா? என்பது தன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஹரிஜன மக்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த திரு. முத்துராமலிங்கத் தேவர் தனது தொண்டர்களிடம், "இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளார். இதற்கு அடுத்த நாளே இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்..." .(முதுகுளத்தூர் கலவரம், பக்: 113). 

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்பட்டு வந்தாலும், காலம் காலமாக தலித்துகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்கொடுமையின் தொடர்ச்சி என்பதுதான் உண்மை. தோள் சீலை போராட்டம், கழுகுமலைக் கலவரம், கமுதி வழக்கு, சிவகாசிக் கலவரம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே முதுகுளத்தூர் கலவரத்தைக் காணமுடிகிறது. சாதீய ஒடுக்கல்களை எதிர்த்தவர்களை  ஒடுக்குவது, ஒடுக்கப்பட்டவர்கள் சமூக- பொருளாதார  மேம்பாடடைவதைத் தடைசெய்வது  என்ற பொதுப்பண்பு இச்சம்பவங்கள் அனைத்திலும் வெளிப்படுவதே இதைக் கூறப்போதுமானது.  

தலித்துகளை பஞ்சமர் என்றும், இழி பிறவிகள் என்றும் மனு தர்மவாதிகள் கூறினர். இராமாயணத்தில் வேத மந்திரங்களை ஓதக் கேட்ட சம்புகன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினர். போர்க்களத்தில் பின்பற்றப்படும் வில் வித்தைகளைக் கற்ற தொல்குடி ஏகலைவன் கட்டை விரல் மகாபாரத்தில் வெட்டப்பட்டது. இந்துத்வா வரித்துக் கொண்ட சாதீய சுரண்டல் முறையே வன் கொடுமைகளுக்குக் காரணம். இப்புத்தகத்தில் (முதுகுளத்தூர் கலவரம்) முத்துராமலிங்கத் தேவரிடம் அரசியல் ரீதியான இந்துத்துவா பண்புக் கூறுகள்  இருந்ததை ஆசிரியர் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்: "...மதம் பெரிதா? மனிதன் பெரியவனா? என்றால் இந்து மதம் என் உயிர், முருகன் என் தெய்வம் என்கிறார். ஆனால் அந்தத் தெய்வத்திற்கும் இவர் தெய்வத்திற்கும் சம்பந்தமே இல்லை. சநாதந இந்துவான காந்திஜியை இந்து மத துரோகி என்கிறார். எந்த ஹிந்து காந்தியைக் கொன்றானோ, அந்த ஹிந்து சபைத் தலைவரான கோல்வால்கருக்கு பணமுடிப்பு கொடுக்கப்பட்டபோது, 'காந்தி இந்துமதத் துரோகி, அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்' என்கிறார்" என்று தினகரன் குறிப்பிடுகிறார். (பக்கம் 51)

முதுகுளத்தூர் கலவரம் பற்றி அறிய 'முதுகுளத்தூர் கலவரம்' ஒரு சிறந்த ஆவணம். சமகால வரலாற்று எழுதுதலில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கும் சூழலில், 50 ஆண்டுகளுக்கு முன்பே தமது 'தினகரன்' நாளிதழில் ஆதாரப்பூர்வமாக கலவரத் தகவல்களை எழுதி, புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எனவே, இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை உறிதிசெய்யப்பட்டுள்ளதாகக் கொள்ளமுடியும். முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதியர் நிகழ்த்திய வன்கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக விளக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தினகரன், 'கலவரத்துக்கு வித்திட்ட' ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்ற தகவல், அவரது நேர்மையுள்ளத்தையும், மனித நேயத்தையும் கூர்மையாக உணர்த்துகிறது. 

சாதீய ஒதுக்கல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளபோதும், தலித்துகளின் போராட்ட செயல்பாடுகளை முதல் முறையாக அமைப்பு ரீதியாக ஒருங்கமைத்தவர் இம்மானுவேல் தேவேந்திரன் ஆவார். இம்மானுவேலரை சிறப்பாக அறிமுகப்படுத்தும் புத்தகம் 'சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்.' தமிழவேள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள இப்புத்தகம், தலித் அரசியல் வாசிப்பில் ஒரு முக்கியப் புத்தகமாகும். 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள செல்லூர் என்ற கிராமத்தில் தேவேந்திரர் (பள்ளர்) சாதியைச் சேர்ந்த சேது வாத்தியாருக்கும், ஞானசௌந்தரிக்கும் 09..10.1924 அன்று இம்மானுவேல் பிறந்தார். சேது வாத்தியார் கிறித்துவத்தைத் தழுவி வேதநாயகம் ஆனார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியதால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பள்ளிக் கல்வி முடித்த இம்மானுவேல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறை சென்றுள்ளார். பின்னர் ஆயுதப் பலத்துடன் வெள்ளையரை விரட்டும் எண்ணத்துடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரமுயன்றார். அதற்குள் நேதாஜி இறந்துவிட்டதால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மீண்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவப் பணியில் இருந்து விடுப்பில் திரும்பியபோது  முதல் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்திருந்தது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு வாக்களிக்காத பிற சாதியினர் மீது மறவர்கள் வன்முறையை ஏவி வந்தனர். இதில் பெரிதும் தேவேந்திரர் சாதி தலித்துகள் அதிகம் பாதிக்கப்படனர். இம்மானுவேல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பள்ளர்களின் அச்ச உணர்வைப் போக்கினார். நிலைமை மேலும் மோசமடையவே, இராணுவத்துக்குத் திரும்பாமல் முழு நேர சமூகப்போராளியானார். இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் இம்மானுவேல் தலைமையில் அணிதிரன்டனர். பள்ளர் சமூகத்தினரிடையே சமத்துவ உரிமை ஏற்பட உழைத்தார். தேவேந்திரர் குலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் ஆகியவற்றின் பொருப்புகளை ஏற்றார். குறிப்பாக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடினார். கக்கன் போன்றவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், இம்மானுவேலின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

கட்சி அரசியலையும் பள்ளர்களுக்கு உதவும் நோக்கிலேயே பயன்படுத்தினார் என்று தெரிகிறது. தலித்துகளுக்கு எதிராக தேவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து தலித்துகளைக் காப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். இதனால் பள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் பதிலடி அதிகமாக  இருந்தது. இத்தருனத்தில்தான் இம்மானுவேல் கொலைசெய்யப்பட்டார். 

இம்மானுவேலின் போராட்ட வாழ்க்கையை விரிவாகக் கூறும் இப்புத்தகம், தென் மாவட்டங்களின் சமூகச் கூறுகள் பற்றியும், அவருக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வந்துள்ளது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ஆதித்தமிழர்களான பள்ளர்களும், நாடார்களும், மறவர்களும் நிலங்களிலும், களங்களிலும் ஒன்றுமையாக வாழ்ந்த காலங்களையும், உடமையாளர்கள், ஆதிக்கசக்தியனரால் ஒடுக்கப்பட்ட செய்தியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளது. முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் ' சமூகப் போராளி இம்மாணுவேல் தேவேந்திரன்' ஆகும். 

முதுகுளத்தூர் கலவரம், இம்மானுவேல் சேகரன் வாசிப்புகளின்போது குற்றப்பரம்பரைச் சட்டம் குறித்த வாசிப்பும் தவிர்க்க இயலாததாகிறது. ரேகைப் பதிவுச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம் மறவர், கள்ளர், குறவர், ஒட்டர், வன்னியர் உள்ளிட்ட பல பிற்ப்பட்ட சாதியினரை குற்றப்பரம்பரையாக அரிவித்தது. இச்சட்டத்தின் கீழ்வரும் இச்சாதிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாம் குற்றத்தில் ஈடுபவில்லை என்பதை நிருபிக்க ஒவ்வொரு நாள் இரவிலும் காவல் நிலையம் சென்று ரேகை பதித்து, இரவு முழுவதும் அங்கேயே படுக்க வேண்டும். இச்சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மறவர்கள். இச்சட்டத்தின் கீழ் மறவர்குல மக்கள் கேவலமாக நடத்தப்பட்டனர். பென்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். ஆண்களும் மானமிழந்து வாழ நேர்ந்தது.  மறவர்களின் உயிரும், வாழ்க்கையும் போலிஸ் அதிகாரிகள் பிடியில் இருந்தது. இதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி அச்சட்டத்தை ஒழித்தனர். இத்தகைய பிற்படுத்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவினர் தலித்துகள் என்று வரும்போது இந்து சனாதனவாதிகள் போல் நடந்துகொண்டுள்ளனர்.  தாம் மேலே இருந்து மிதிபட, மிதிபட தமக்கு கீழே இருப்பவர்களை மிதித்தொழிப்பதே வருணாசிரம சுரண்டல் முறை. இதனை அன்னிய ஏகாதிபத்தியமும் நன்குணர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டது. அது சுதந்திர இந்தியாவில் திண்ணியங்களாகவும், மேலவளவுகளாகவும், தென்மாவட்டக் கலவரங்களாகவும் தொடர்கின்றன. இச்சுழலில் மேற்கூறிய இரு புத்தகங்களின் வாசிப்புகள் முக்கியம் பெருகின்றன. 


-அப்பணசாமி. 
நன்றி: புத்தகம் பேசுது 

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவு

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நிணைவுக் கட்டுரை
திராவிட இயக்க, 
பொது உடமை இயக்கத் தாக்கத்தில் 

தமிழ் உணர்வாளர் அவ்வை சண்முகம்


1935, ஏப்ரல் 19, உதகமண்டலம்


”பம்பாய் மெயில்‘ நாடகம் நடந்த மறுநாள் பூங்காவுக்குச் சென்றேன். நாடகக் கம்பெனியின் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். இத்தனை சிரமங்களுக்கு நடுவே நாடகக் கம்பெனியை நடத்திக்கொண்டு போவது சிரமம் என்று பட்டது. கடன்கள் நிறைந்தன. எங்காவது ஓடிப்போவது என்று முடிவு செய்தேன்.  திடீரென்று எங்கிருந்தோ தோழர் ஜீவானந்தம் வந்தார். அவரிடம் மனவேதனையைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் பல விஷயங்களைப் பேசினார். நாட்டிற்காகப் பல இன்னல்களைத் தாங்கிக்கொண்ட பல வீரர்களின் கதைகளைச் சொன்னார். மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உறுதி ஏற்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது. ஜீவா போய்விட்டார். தோழர் ஜீவாவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப்போகத் தீர்மானித்த எனக்கு அறிவுரை கூறித்  திருத்த கடவுளே அனுப்பியதாக எண்ணினேன்."

இவை ‘அவ்வை‘ சண்முகம் என்று அழைக்கப்படும் டி. கே. சண்முகம் தனது சுய வரலாற்று நினைவுக்குறிப்புகளாக எழுதியவை. ஜீவா போன்று பெரியார், அண்ணா, சத்யமூர்த்தி மற்றும் ம. பொ. சிவஞானம் ஆகியோரின் தாக்கங்களும் அவ்வை சண்முகத்தை வார்த்தெடுத்தன. 

கூத்தும் பாட்டுமாய் இருந்த தமிழரின் நிகழ்கலை மரபு ஐரோப்பியர் வருகையின் பாதிப்பாலும், பார்சி நாடகக் கலப்பாலும் மேடை நாடகங்களாயின. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த கூத்துகளில் ஆடிப் பாடிக் கதைசொல்லப்பட்ட புராணக் கதைகள், பிரபலமான பெருந்தெய்வக் கதைகளை நாடகங்களாகி மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தன. இதனால் நவீன தமிழுக்கு உரைநடையும் பாடல்களும் கலந்த புதிய படச் சட்டக மேடை நாடக வடிவம் கிடைத்தது. இந்த வெற்றியைச் சாதித்ததில் தவத்திரு சங்கர தாஸ் சுவாமிகளுக்கு ஒரு பெரும்பங்கு உண்டு. 
மேடையில் டி கே சண்முகம்

அதுமட்டும் அல்ல. அதுவரை தமிழ் மண்ணில் மரபுக்கலைகளில் பேணப்பட்டு வந்த பல தடைக்கற்களை படச்சட்டக வடிவம் அகற்றியது என்றால் மிகையல்ல. முதலாவதாக வழிபாட்டுச் சடங்குகளோடு மிகுதியும் பிணைக்கப்பட்டு இருந்த கதைசொல்லும் நிகழ்கலையை முதல்முறையாக வெளியே கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல் இதற்காக நிலவிவந்த பல கட்டுப்பாடுகளையும் அகற்றியது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும்ஆவரது சக ஸ்பெஷல் நாடகக் கலைஞர்கள் பங்களிப்பு முக்கியமானது ஆகும். இந்தக் கலையை யார் வேண்டுமானாலும் பயிற்சி மூலம் கற்றுக்கொள்ளமுடியும் என்ற நிலையை உருவாக்கியது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய பாய்ஸ் கம்பெனிகள் ஆகும். இதில் 5 வயது முதலான சிறுவர்கள் சேர்ந்து 24 மணி நேரமும் பயிற்சி பெற்று புகழ்பெற்ற கலைஞர்கள் ஆனார்கள். இந்த பாய்ஸ் கம்பெனிகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் மிகப் பிரமாண்டமான ஜனநாயகக் கலை எழுச்சியை ஏற்படுத்தியது. அடித்தட்டு மக்களின் வருகை அதிகரிப்பால்தான் இந்த மேடை நாடகங்கள் படிப்படியாக விடுபட்டு சமூக ஜனநாயக, சீர்திருத்த கருக்களங்களை எடுத்தன என்பது இன்னமும் ஆய்வுக்குட்படுத்தப்படாத விழுமியம்தான். அதானால் ஓரளவுக்கு விடுதலை இயக்கமும் பின்னர் உருவான திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் இந்த படச்சட்டக மேடை வடிவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. 20 ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய பல அரசியல், சமூக, கலை ஆளுமைகள் இந்த மரபில் பயிற்சிபெற்று வளர்ந்தவர்கள்தாம். அந்த மரபின் முதல் மாணவர்களில் முதன்மையானவர்தாம் அவ்வை டி. கே. சண்முகம். 

டி.கே.எஸ் சகோதரர்கள் என அழைக்கப்படும் நால்வரில் அவ்வை சண்முகம் மூன்றாவது சகோதரர். இச் சகோதரர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் பிரதான சீடர்கள். சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலும் நடிகர் பஞ்சம் இருந்தது. இதனால் திடீர் திடீர் என நாடகத்தை நடத்த முடியாமல் ஆனது. நடிகர் பஞ்சத்தைப் போக்க அக்கால நாடக மேதைகள் ஜகன்னாதய்யரும், சுவாமிகளும் கண்டுபிடித்த உபாயம்தான் பாலர் நாடக சபா. இத் அக்காலத்தில் பாய்ஸ் கம்பெனி என அழைக்கப்பட்டது. சுவாமிகள் தொடங்கிய பாய்ஸ் கம்பெனியின் பெயர் தத்துவ மீன லோசனி வித்துவ பால சபை. இரு பாய்ஸ் கம்பெனிகளும் 1918 -ல் தொடங்கப்பட்டது. 


சங்கரதாஸ் சுவாமிகள்
இதற்கான தொடக்ககட்ட வேலைகளில் இறங்கிய சுவாமிகள் ஒரு சமயம் மதுரை வந்தார். மதுரைதான் அக்காலத்தில் நாடகக் கலைஞர்களுக்குத் தலை நகராக இருந்தது. மதுரையில் திருவனந்தபுரம் கண்ணுச்சாமிப் பிள்ளை (டி. எஸ். கண்ணுப்பிள்ளை) என்ற ஸ்பெஷல் நாடக ஸ்திரி பார்ட் நடிகராக இருந்தார். பின்னாட்களில் நாடக ஆசிரியராகவும் உயர்வுபெற்ற பி. எஸ். வேலுநாயர் தொடக்க காலத்தில் நாடகங்களில் உயர் வாய்ப்புகள் பெற உதவியவர் கண்ணுப்பிள்ளை. மதுரை வந்த சுவாமிகளைப் பார்க்க கண்ணுப்பிள்ளை சென்றார். அவருடன் அவரது பையன்களும் சென்றனர். பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணுப்பிள்ளையின் பையன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களது துடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த சுவாமிகள் ‘கண்ணு, இந்தப் பிள்ளைகளை அனுப்பிவிடு. நான் கவனித்துக் கொள்கிறேன்‘ எனக் கேட்டார். தயக்கத்துடன்தான் கண்ணு அனுப்பி வைத்தார். அவர்கள் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் என அழைக்கப்பட்ட டி. கே. சங்கரன். டி. கே. முத்துச்சாமி, டி. கே. சண்முகம், டி. கே. பகவதி ஆகியோர். 

சுவாமிகள் கம்பெனியில் சேரும்போது சங்கரனுக்கு வயது 10, முத்துசாமிக்கு 8, சண்முகத்துக்கு 6, பகவதி கைக் குழுந்தை. பாய்ஸ் கம்பெனி தொடங்கிய பிறகு சங்கரதாஸ் சுவாமிகள் நான்கு ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள் அவரால் பட்டை தீட்டப்பட்டு ஏராளமானவர்கள் உருவாகி விட்டனர். அவர்களில் முதன்மையானவர்கள் டி. கே. எஸ். சகோதரர்கள். கம்பெனியில் அப்போது மிகவும் வயது குறைந்த சிறுவன் சண்முகம். ஆனாலும் அனைத்து கலைகளையும் கற்று சுவாமிகள் மனதைக் கவர்ந்தார். அவருக்காகவே ‘அபிமன்யூ சுந்தரி‘ என்ற நாடகத்தை சுவாமிகள் எழுதித் தந்தார் என்றால் அவரது ஆற்றல் எத்தகையது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பின்னாளில் அவ்வையார் நாடகத்தில் அவ்வையாகச் சிறப்பாக நடித்ததால் ‘அவ்வை‘ சண்முகம் என்றே அழைக்கப்பட்டார். 

இடையில் சிறிது காலம் சுவாமிகளின் கம்பெனியைவிட்டு டி கே எஸ் சகோதரர்கள் விலகி இருந்தபோதும் சுவாமிகள் நோய் வாய்ப்பாட்டு இயங்கமுடியாமல் புதுவையில் முடங்கிப்போனார்கள். அக்காலகட்டத்தில் சுவாமிகளின் கம்பெனியும் முடங்கியது. இதனால் வருந்திய சகோதரர்கள் மீண்டும் சுவாமிகளைச் சேர்ந்து, கம்பெனியை தூக்கி நிறுத்தினர். சுவாமிகள் மறைவு ஒரு தந்தையின் மரணத்தைப்போல நாடகக் கலைஞர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கலைஞர்கள் அழுது அரற்றினர். 

சுவாமிகள் மறைவுக்குப் பின்னர் 1925இல் ஸ்ரீபால சண்முகானந்தா சபா‘ என்ற பெயரில் புதிய நாடகக் கம்பெனியை டி. கே. எஸ். சகோதரர்கள் 1925இல் தொடங்கினர். அடுத்த கால் நூற்றாண்டுகாலம் படச்சட்டக அரங்க முயற்சிகளில் மிகப் பெரும் வெற்றிகளையும், படச்சட்டக அரங்க முயற்சிகளையும் டி. கே. எஸ் சகோதரர்கள் படைத்தனர். எஸ். ஜி. கிட்டப்பா, பி. யூ. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன்,
எம். ஆர். ராதா, சாரங்கபாணி, எஸ். வி. சகஸ்ரநாமம், காளி. என். ரத்தினம், எம். ஆர். சுவாமிநாதன், கே. ஆர். ராமசாமி. டி. வி. நாராயணசாமி, எஸ். எஸ். ஆர், எஸ். வி. சுப்பையா, ஆர். எம். வீரப்பன், புளிமூட்டை ராமசாமி, அசோகன். ஏ. பி. நாகராஜன் போன்றோர் இந்த நாடகக் கம்பெனியில் பயிற்சி எடுத்து புகழ் அடைந்தவர்கள். மட்டுமல்லாமல் எம். ஜி. ஆர், சிவாஜி, கே.பி. சுந்தராம்பாள், டி. எஸ். பாலையா, தங்கவேலு, எம். என். நம்பியார், மனோரமா, எம். என். ராஜம் உள்ளிட்டு 1960கள் வரை தமிழ்ச் சினிமாவில் வெற்றிபெற்ற பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குனர்கள், திரைக்கலைஞர்கள் பாய்ஸ் கம்பெனி வழி பயிற்சி பெற்றவர்கள் என்பது சிறப்பான ஆய்வுக்குரியது ஆகும். தவிர விஸ்வநாததாஸ், கே.பி. ஜானகி அம்மாள், பாலாமணி அம்மாள். ராசாமணி, பாஸ்கரதாஸ், வேலு நாயர், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை போன்ற இந்தவகை மேடை நாடகக்கலைக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பனம் செய்த கலைஞர்களும் அடங்குவர். இவர்கள் வெற்றியைப் பின்பற்றி பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் தீரர் சத்யமூர்த்தி போன்ற அரசியல் தலைவர்களும் இந்தவகை நாடகப் படைப்புகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர். குறிப்பாக சுயமரியாதைக் கருத்துகளும், திமுகவின் தொடக்ககாலக் கருத்துகளும் இந்தவகை நாடகம் வழியாக மக்களைச் சென்றடைந்தன.
டி கே எஸ் சகோதரர்கள் 

நாடகம் என்பது காட்சி ஊடகம் ஆகையால் எழுதப் படிக்கத் தெரியாத மக்களும் புகுத்தறிவு மற்றும் முற்போக்கு கருத்துகளை இந்த வடிவம் மூலம் அடைந்து கொண்டனர். இந்தியாவிலேயே பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட மக்களாக தமிழக மக்கள் தங்களைத் தகுதியாக்கம் செய்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நிலமானிய உறவுகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக மிகப்பெரிய அளவில் ஜனநாயக எழுச்சி உருவானபோது அதைக் கண்டுகொண்டு நாடகக் கலைஞர்கள் அக் கருத்துகளை சமூக சீர்திருத்தம் என்ற அளவில் மட்டுமாவது அனைத்துக் கொண்டதால் இந்த முன்னேற்றம் இயன்றது.

புராணக் கதைகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த பாய்ஸ் கமெபெனி நாடகங்களை சமூக நாடகங்களை நோக்கித் திருப்பி விட்டதாலேயே இது சாத்தியமானது. இதில் டி. கே. எஸ் சகோதரர்களின் குழுவின் குறிப்பாக அவ்வை சண்முகத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் நவீன ஜனநாயகப்பூர்வ கலை எழுச்சி வரலாற்றிலும், திராவிட இயக்க, பொது உடமை இயக்க வரலாற்றிலும் அவ்வை டி. கே சண்முகம் பெயர் தவிர்க்க இயலாதது. 

"இக் காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது ‘சீர்திருத்த நாடகக் கம்பெனி‘ என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடந்து வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி என சமூக தேசிய நாடகங்களே அதிகமாக நடைபெற்றுவந்தன" என்று டி கே சண்முகம் தனது தன் வரலாற்று நினைவுக் குறிப்புகளில் எழுதிச் செல்கிறார். 

தொடக்க காலத்தில் வரவேற்பு குறைவாக இருந்தாலும் பின்னர் சீர்திருத்த நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. இதன் பிரதிபலிப்புகள் பிற நாடகக் குழுக்களிலும் தமிழ்த் திரைப்படங்களிலும் எதிரொலித்தன. மேலும் இத்தகைய கருத்துகளுக்கு சுயமரியாதை இயக்கத்தவர் மற்றும் பொதுவுடமை இயக்கத்தவரின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்தது. டி. கே. எஸ். சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் மகள்‘ நாடகத்துக்கு அண்ணா அருமையான விமர்சனம் எழுதினார்: 

"குடும்ப பாரம், வறுமையின் கொடுமை, வரதட்சினையின் கொடுமை, மணவறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளைவிட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்‘ தருகிறார். அதாவது இந்த நாடகத்தில் உண்டு.’ 

இது நிரூபமா தேவி என்ற ஆசிரியர் எழுதிய வங்கமொழி நாவலைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். இது திரைப்படமாகவும் வந்து சக்கைப்போடு போட்டது. இதனால் கவரப்பட்ட அண்ணா பின்னர்  இதனைத் தழுவி தொடர் புதினமாகவும் எழுதினார் என்பது தனிச் சிறப்பு. 

சமூக நாடகங்களைப் புதிதாக எழுதுவதிலும் அவற்றை நாடகங்களாகத் தயாரிப்பதிலும் சமூக, விடுதலை இயக்க, பொதுவுடமை இயக்கத்தலைவர்கள் தொடர்பு உதவியது. 1930கள் முதலே ஜீவானந்தம், பெரியார், அண்ணா, பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் போன்றவர்கள் தொடர்பு டி கே எஸ் சகோதரர்களுக்கு இருந்து வந்தது. அதற்குமுன்பிருந்தே சத்யமூர்த்தி, காமராஜர் ஆகிய தேசியத் தலைவர்கள் ஆதரவு இருந்தது. பொதுவுடமை இயக்கப் போர்வாளாகத் திகழ்ந்த ‘ஜனசக்தி‘ நாளிதழ் வளர்ச்சிக்காக சகோதரர்கள் நாடக நிகழ்ச்சிகள் நடத்தி வசூலித்துத் தந்தனர். இதேபோல பல சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் நிதி திரட்டித் தந்தனர். சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால் டி கே எஸ் சகோதரர்கள் குழு ஈரோடு வந்தபோதெல்லாம் பெரியார் நாடகக் கலைஞர்களுக்கு விருந்தளித்தார். 

ஒரு முறை டி கே சண்முகத்தின் மனைவி மீனாட்சி அம்மாள் கடும் நோய்த்தாக்குதலுக்கு ஆளானார். மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். அப்போது ஈரோட்டில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தது. கடைசிக்காலத்தில் மீனாட்சி அம்மாள் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள விரும்பினார். ஆனால் சாகும் தருவாயில் இருந்த அவருக்கு யாருமே வீடு தர முன்வரவில்லை. இதை அறிந்த பெரியார் சுயமரியாதைச் சங்கத்துக்காக வாங்கிய புதிய வீட்டை டி கே சண்முகத்துக்காகத் திறந்துவிட்டார். பொதுவாக யாருக்கும் இஅந்துகாசு தராத கருமி என பெரியாரை இகழ்வது எவ்வளவு தவறு என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது. அந்த வீட்டில்தான் மீனாட்சி அம்மாள் காலமானார். 


இதே காலகட்டத்தில் அண்ணாவின் ‘சந்திரோதயம்‘ நாடகம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியது. டி கே எஸ் குழுவினர்கள் பாரையாளர்களாகச் சென்றனர். இதில் அண்ணாவில் நடிப்பை டி கே சண்முகம் வெகுவாகப் பாராட்டினார். அடுத்துப் பேசிய அண்ணா "நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறும்வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதெல்லாம் டி கே எஸ் சகோதரர்கள் நடிப்பைப் பல காலமாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். 

பொதுவுடமைக் கருத்துகளாலும் அவ்வை சண்முகம் வெகுவாக ஈர்க்கப்பட்டார். கட்டுரையின் முகப்பில் காட்டப்பட்டது போல ப. ஜீவானந்தமும் சண்முகமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விடுதலைப் போராட்டத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும், புரட்சி இயக்கத்திலும் ஜீவா ஊண் உறக்கம் இன்றி ஈடுப்பட்டபோதிலும், பல போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ஏகாதிபத்தியத்தால் நாடுகடத்தப்பட்டபோதிலும் திறமை கொண்ட கலைஞர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் அடையாளம் காண்பதிலும் அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களிடம் முற்போக்குக் கருத்துகளை அவர்கள் மனதில் விதைப்பதிலும் ஜீவா பின்னடைந்ததே இல்லை. இதுபோன்ற தலைவர்களை இன்றைய சமாதானக் காலத்திலும்கூட காண இயலாது. 


"நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்குவார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக்கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும்" என்று டி கே சண்முகம் எழுதுகிறார். இருவருக்கும் 1931 முதலே பழக்கம் இருந்தது. இதனால் அவரது நாடகங்கள் புது வடிவம் பெற்றது. "பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. கேதார கௌள ராகத்த்தில் நான் பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும்" என அவ்வை சண்முகம் நினைவுகூர்கிறார். அந்தப் பாடல் ஏழையின் கண்ணீருக்காக எத்தகைய கொடுமைக்கும், பீரங்கிக்கும்கூட அஞ்ச மாட்டோம் என்பதாக இருந்தது.  


ஜீவாவின் பாடல்களுக்கு நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. பலபாடல்களை ஜீவா எழுதித் தந்தார். அதனை நாடகங்கள் இடையே காட்சிப் பொருத்தத்துக்கேற்ப பாடுவதை டி கே எஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரசிகர்களும் ஜீவா பாடல்களைப் பாடும்படி தொந்தரவு செய்தனர். "ஒருநாள் மயில் ராவணன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையில் இருந்து ‘ஏழைத் தொழிலாளர் வாழ்வு‘ என்று குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் ‘காலுக்குச் செருப்பும் இல்லை‘ என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். ‘இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்‘ என்றேன். மக்கள் என் பேச்சைக் கை தட்டி வரவேற்றார்கள். நாட்கம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக்கலைந்து சென்றார்கள்" என நினைவுகூர்கிறார். இப்படியும் ஒரு காலம் இருந்தது. 
ம. பொ. சிவஞானம் 

ஜீவா உறவின் உச்சக்கட்டமாக தாங்கள் தொடங்கிய புதிய நாடக சபாவின் பதாகையின் முத்திரை வாசகமாக ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்‘ என்ற கார்ல் மார்க்ஸ், ப்ரடரிக் ஏங்கல்ஸின் அறைகூவலை எழுதித் தொங்கவிட்டார். 

இத்தகைய சமூகத் தலைவர்களின் தொடர்பு டி கே சண்முகம் அவர்களைத் தொடர் வாசிப்பும் சமூக அக்கறையும் கொண்டவராக்கியது. இது அவரை ம பொ சிவஞானம் நோக்கிக் கொண்டு வந்தது. ம பொ சியின் தமிழ் உணர்வுக்கருத்துக்களால் கவரப்பட்டு அவது தமிழரசு கழகத்தில் இணைந்து அதன் நிர்வாகியும் நீடித்தார். அக் கட்சி சார்பில் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். 

மட்டுமல்லாமல் வறுமையில் வாடும் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என்ற அவசியம் உணர்ந்து தமிழ் நாடக நடிகர் சங்கத்தையு உருவாக்கினார். 


அப்பணசாமி

ஆதார நூல்கள்

1. நெஞ்சு மற்க்குதில்லையே! & டி கே சண்முகம், இன்ப நிலையம், 1963
2. எனது நாடக வாழ்க்கை & டி கே சண்முகம், வானதி பதிப்பகம், 1972
3. சுதந்தரப் போரில் தமிழ் நாடக் கலைஞர்கள் (கட்டுரை) & முனைவர் ச முருகபூபதி
4. சங்கரதாஸ் சுவாமிகள்& அ. ராமசாமி& நேஷனல் புக் டிரஸ்ட், 2002
5. பரம்பரை& அப்பணசாமி, பாரதி புத்தகலாயம், 2004

திங்கள், 8 ஜூலை, 2013

சோமநாத் படையெடுப்பு ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்

நூல் அறிமுகம்

சோமநாத் படையெடுப்பு 

ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்

- அப்பணசாமி
பழைய சோமநாதர் கோயில் 

தற்போது பெருங்கதையாடலுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய வரலாறு, ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய வரலாற்றாசியர்கள் கட்டமைத்த கருதுகோள்களாகவே உள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது என்று பரப்பிய கற்பிதமாகும். இதற்காக அவர்கள் முன்னிருத்தும் முதன்மையான வரலாற்று நிகழ்வு கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்பு. தங்களது கருதுகோள்களை நிறுவ அவர்கள் தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள் மிகவும் கவனமானவை. தனது படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தின் மீது நடத்திய கொள்ளை மற்றும் தாக்குதலை இந்து மதத்தின் மீதான தாக்குதலாகவும், இந்தியாவில் இசுலாமியப் பேரரசு ஏற்படுவதற்கான அஸ்திவாரமாகவும் உருவகப்படுத்தினர். இதன் பின்னணியிலுள்ள அரசியலை ‘சோமாநாதா ஓர் வரலாற்றின் பல குரல்கள்' என்ற நூலில் இந்தியாவின் முக்கிய வரலாற்றியலாளர் ரொமிலா தாப்பர் விளக்கியுள்ளார். (SOMANATHA The Many Voices of a History, ROMILA THAPAR, PENGUIN BOOKS. Penguin First Edition 2008 ) 

சோமநாதர் ஆலயத்தின் மீதான படையெடுப்பு (முதல் முதலாக!) கி. பி. 1026 இல் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஏராளாமான தங்க - வைர- வெள்ளி நகைகளும், சொத்துகளும் கொள்ளையடிக்கப்பட்டன. விக்கிரகங்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னரான கடந்த 1,000 ஆண்டுகளில் இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கண்ணோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் 'ஒரு நிகழ்வு மற்றும் அதன் வெளி ஆகியன குறித்த பல்வேறான மக்களின் நினைவூட்டல்கள் அல்லது மறக்கடித்தல்களைப் புரிந்துகொள்வதிலுள்ள வரலாற்றுக் குழப்பங்களில் அந் நிகழ்வுக்கு அப்பால் வளர்த்தெடுக்கப்படும் வரலாறு எழுதுதலும், வரலாற்றுக் கதையாடல்களும் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெளிக்கொணர்வதே' தமது நோக்கம் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். 
ஒரு வரலாற்று நிகழ்வு காலத்துக்குக் காலம் அதன் பொருளும், பரிமாணமும் மாறி வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. இங்கு, சோமநாதர் ஆலயப் படையெடுப்பைப் பொறுத்தவரை ஒரு கோயில் அபுனிதப் படுத்தப்படுவது ஆகும். யதார்த்தமாகவோ அல்லது வேண்டுமென்றேவோ அந்த நிகழ்வின் மீதாக எழுப்பப்பட்ட நினைவுகளை நோக்கிய அணுகுமுறைகள் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. ரொமிலா தாப்பரைப் பொறுத்தவரை இங்கு அந்தக் குறிப்பிட்ட நிகழ்வின்மீது எக் கேள்வியும் இல்லை என்கிறார். அதாவது இந்நூலில் தனிப்பட்ட அந்த நிகழ்வை எக் கேள்விக்கும் உட்படுத்தவில்லை என்பதையும், அதன் தொடர் நிகழ்வுகள் அதாவது அந்த நிகழ்வின் தொடர்விளைவுகளை ஒரு வரலாற்றியலாளர் எவ்வாறு மதிப்பிடுகிறார், அந் நிகழ்வின் சமகால மற்றும் பிற்கால வரலாற்றாதாரங்களில் அவை எவ்வாறு பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்பதன் மீது கேள்விகள் உள்ளன என்கிறார். பிற்காலம் என்பது அந்நிகழ்வுக்குப் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீள்வதுதான் வியப்பு என்கிறார். இக்காலங்களினூடாக அந்நிகழ்வின் விளக்கங்கள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதில்தான் அதற்கான அரசியல் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இந்த விளக்கங்கள் எவ்வாறு துவேஷத்தின் வித்துகளைத் தாங்கியிருந்தன; இசுலாமியருக்கு எதிரான இந்து தேசியத்தைக் கட்டமைக்க அவை எவ்வாறு பயன்பட்டன என்பவை நவீனகால அரசியல் வெளிப்பாடுகள். ஓர் வரலாற்றின் பல குரல்களாகச் சிதறியிருந்த ஆதாரத் தொகுப்புகளை இணைத்து அந் நிகழ்வின் மீது புதிய ஒளியை அவர் பாய்ச்சியுள்ளார். 

சோமாநாதர் ஆலயப் படையெடுப்பு குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரத் தொகுப்புகள் உள்ளன. இவை வெவ்வேறு இன, மத, மொழி, பண்பாட்டு ஊற்றுகளில் இருந்து திரள்பவை. நூற்றுக்கணக்கான வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள், ஆதாரங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், பயணக் குறிப்புகள், கதையாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், அரசுக் குறிப்புகள், விவாதங்கள் மற்றும் மக்கள் நினைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இவற்றின் மீது பல ஆண்டுகள் பணியாற்றி இந்நூலை ரொமிலா தாப்பர் எழுதியுள்ளார். இந்த ஆதாரத் தொகுப்புகளை ஆறு பிரிவுகளாக தாப்பர் பிரிக்கிறார். சில ஆதாரங்கள் மட்டுமே விரிவான தகவல்கள் கொண்டவை; மற்ற பெரும்பான்மையானவை போகிறபோக்கில் அந்நிகழ்வு குறித்துக் குறிப்பிடப்படுபவை; அல்லது பல்வேறு இணை நிகழ்வுகளுடன் அல்லது மாற்று நிகழ்வுகளுடன் குறிப்பிடப்படுபவை; மொழி, நடை போன்றவற்றில் வெவ்வேறானவை; இவற்றின் நோக்கங்கள், கண்ணோட்டங்களை நாம்தான் பொருத்திப் பார்க்க வேண்டும்; இவற்றில் பல தகவல்கள் அண்மைக்காலத்தில்  விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேயில்லை. வரலாறு எழுதுவதற்கு இத்தகைய மறு விமர்சனங்கள் மிகவும் இன்றியமையாதவை என்கிறார். 

ஆறு விரிவான ஆதாரத் தொகுப்புகளில் முதலாவதாக துருக்கிய- பாரசீக வரலாற்று வர்ணனைகளை எடுத்துக் கொள்கிறார். இவற்றில் பெரும்பாலானவை பாரசீக மொழியில் அமைந்த வரலாறுகளும், வர்ணனைகளும், இலக்கியங்களும், காவியங்களும் ஆகும். காஜினாவத் பேரரசின் அரசியல், பண்பாடு குறித்தும், வட இந்திய அரசியல், பண்பாடு குறித்தும் அரபி மொழியில் அமைந்த சில வரலாற்றுக் குறிப்புகளும் இதில் அடங்கும். இரண்டாவது ஆதாரத் தொகுப்பில் சோமநாதர் ஆலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அடங்கியுள்ளன. மூன்றாவதாக சமணர்களின் வரலாறுகள், சமண வரலாற்றுக் குறிப்புகள், ராஜ புத்திரர்களின் அரண்மனைக் காவியங்கள் அடங்கியவையாகும். நான்காவதாக கஜினி முகமது  குறித்து வெகுமக்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் வாய்மொழி மரபுகள். 19 ஆம் நூற்றாண்டின்போது இப்பிரச்சனையில் ஆங்கிலேயர் தலையிட்டதன் விளைவாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் ஐந்தாவது சான்றுகள் ஆகும். ஆறாவதாக இந் நிகழ்வு குறித்த இந்திய (இந்து) தேசியவாதிகளின் மறுகட்டமைப்பு ஆகும். 

ஆறு ஆதாரத் தொகுப்புகளில் துருக்கிய- பாரசீக வரலாற்றுக் குறிப்புகளே அதிக ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன. அவை முன்வைக்கும் வரலாறே ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது என முன்னுரிமை கோருபவையாக உள்ளன. அதேசமயம் அவர்கள் முன்வைக்கும் வரலாற்றியலுக்கான நோக்கம் குறித்த விரிவான விவாதத்திற்கோ, அவர்களின் ஆதாரங்களைப் பிற தடயங்களோடு பொருத்திப் பார்ப்பதற்கோ முன்வருவதில்லை. இந்த வரலாறுகள் முன்வைக்கும் விளக்கங்களுக்கு உட்பட்டே வாசிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வளவுக்கும் இந்த வரலாற்றுக் குறிப்புகளும், வர்ணனைகளுமே ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவையாக உள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் தரப்படுவதில்லை. சாதாரண வாசிப்பில் இம் முரண்கள் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்கிறார். 


துருக்கிய - பாரசீக வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை படையெடுப்பின் சமகாலத்தவை; அல்லது அதைத் தொடர்ந்த சில நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அரசவைக் கவிஞர்களாலும், அரச வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டவை. பொதுவாக தங்கள் பேரரசரின் வீர பராக்கிரமங்களை அதீதமாக விதந்து போற்றும் வகையிலே இவை இருக்கும். மேலும், 11 ஆம் நூற்றாண்டில் நிலவிய துருக்கி மற்றும் பாரசீகம் இடையேயான நாடுபிடிக்கும் போட்டியையும் இங்கு மனதில் கொண்டு வாசிக்க வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இசுலாமியமயமாக்கலில் பாக்தாத் மற்றும் காஜானாவித் இடையே ஏற்பட்ட போட்டியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில் தங்கள் பேரரசுதான் இசுலாமியத்தை உலகில் பரப்பியது என்று நிரூபிக்க முயன்றதன் விளைவே இக்கட்டுக் கதைகள் என்பதை நூலாசிரியர் மிக நுட்பமாக உடைக்கிறார்.  குறிப்பாக, இசுலாமிய உள் முரண்பாடுகளைக் களையெடுப்பதற்காக, இசுலாமியத்துக்கு முந்தைய அப்பிரதேச தெய்வ வழிபாட்டு முறைகள் இசுலாமியத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றுவதற்காக, இசுலாமியத்தின் உள்பிரிவுகளை ஒழிப்பதற்காக, சுல்தானுக்கு இணையாக காஜானாவாத் பேரரசைக் காட்டுவதற்காக இந்த வர்ணனைகளும், கதையாடல்களும் உருவாக்கப்பட்டதை நூலாசிரியர் திறம்பட நிரூபிக்கிறார். பிற்காலத்தில்  இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திருப்பிவிட ஆங்கிலேயர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்தினர். இந்தியா இரண்டு தேசங்களை உள்ளடக்கியது என்ற கற்பிதத்தைக் கட்டமைக்கவும் இவை பயன்பட்டன. 

சோமநாத ஆலயப் படையெடுப்பின் சமகாலத்தில் எழுதப்பட்ட வரலாறுகளில், படையெடுப்பின்போது உடைக்கப்பட்ட ஒரு விக்கிரகம் குறித்த கற்பனை கலந்த குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்தின் மதிப்பும் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதையும், அதன் பின்புலத்தில் உள்ள உளவியலையும்  கால வரிசைப்படியான வரலாற்றாதாரங்களை வரிசைப்படுத்தி நிரூபிக்கிறார். இந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்படுவதற்கு கஜினி முகமதுவின் படையெடுப்பே காரணம், அவர்தான் இந்தியாவில் இசுலாமியப் பேரரசை நிறுவினார் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அக்காலத்திய இசுலாமிய வரலாற்றுடன் ஒப்பிட்டால் அக்காலத்தில் இந்தியாவில் இசுலாமியம் ஊடுருவியது என்பதைவிட, அக்காலத்தில் காலிபுக்குச் சவால்விடும் வகையில், இஸ்லாத் மத சம்பிரதாயங்களை நிறுவுவதில் யார் முன்னிலையில் இருந்தனர் என்ற போட்டியே நிலவியது என்று தாப்பர் கூறுகிறார்.  

இங்கு, இந் நிகழ்வுக்கு முந்தைய நிலைமைகளைப் பார்ப்பது அவசியம்.

சோமநாதர் கோயில் அமைந்த பகுதி சோம்நாத் நகர் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ளது. இது முன்னர் பிரபாச பட்டினம் என அழைக்கப்பட்டது. சௌராஷ்டிரா பகுதியின் முக்கிய யாத்திரை தலமாகவும், தீர்த்த தலமாகவும் இருந்தது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே வளர்ச்சியடைந்த பகுதியாக குஜராத் இருந்துள்ளது. கடல் வழியாக நடைபெற்ற வணிகம் இதற்கு முக்கிய காரணமாகும். தரை வழியாகவும் வணிகம் சிறப்புற்றிருந்தது. இதனால் பன்முகப்பட்ட மக்களும், கலாசாரங்களும் வளர்ந்திருந்தன. அருகிலேயே வேரவல்  துறைமுகப் பட்டினமும் இருந்தது. இங்கு மூன்று ஆறுகள் ஓடி கடலில் கலக்கின்றன. இப்பகுதியில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் மூலம் இங்கு கி. மு. 3000க்கு முன்பாகவே சிறிய அளவிலான வேளாண் சமூகங்கள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. குஜராத் சுடுமண் சிறப்புகள் மூலம் வேளாண் பண்பாடு இப்பகுதியில் தொடர்ச்சியாக நீட்சி பெற்றுள்ளதை அறியலாம். கி. மு. 500 காலகட்டத்திலேயே கிரேக்கத்துடன் வணிகமும் நடைபெற்றுள்ளது.

மகாபாரதம் மற்றும் பல புராணங்களில் சோமநாத் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கிறது. தட்சன் சாபத்தால் தனது செயல்பாட்டை சிவன் இழந்ததால் பூமியில் வறட்சி ஏற்படுகிறது. தொடர்ந்து தேவர்கள் முறையீட்டால் சாபம் திருத்தப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு சிவன் பலம் தொடர்ந்து அதிகரிக்கும்; அடுத்த 14 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பலம் குறைந்துவிடும். இதன் காரணமாகவே அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை, தேய்பிறை, கிரகணங்கள் ஏற்பட்டன. இதனால் மழை பெய்து வறட்சி நீங்கி உலகம் வளம் அடைந்தது என்று புராணக்கதைகள் கூறுகின்றன. லூனார் காலமுறை அடிப்படையிலான பருவ நிலைகளைக் குறிக்கும் வகையில் இக்கதை உள்ளது. மகாபாரதத்திலும் சோமநாத் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு சிவன் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, தீர்த்த தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணன் இங்குதான் முதன்முதலாக அர்ஜுனனைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னர் இது ஒரு வைணவத் தலமாகவும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

முக்கியமாக, சோமநாத் ஒரு தீர்த்த தலமாக இருந்துள்ளது. மூன்று ஆறுகள் சந்திக்கும் திரிவேணி சங்கமமாக உள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தமாடுவதைப் புனிதமாகக் கருதியுள்ளனர். இதில் பேதமற்று மக்கள் சங்கமித்துள்ளனர். மௌரியர்கள் ஆட்சியின்போது இப்பகுதியின் வேளாண்மை மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் ஏராளமாக முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. இப்பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கு மௌரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், இந்திய வரலாற்றின் தொடக்க காலத்திலேயே வேளாண் வளர்ச்சிக்குப் பேரரசுகள் முக்கியத்துவம் அளித்ததை அறிய முடிவதாக தாப்பர் கூறுகிறார். இதே காலகட்டத்தில் ஈரான் மற்றும் மேற்கு பகுதிகளுடனான நெருக்கமான உறவும் இருந்துள்ளது. கிறிஸ்து பிறப்பையொட்டிய நூற்றாண்டுகளில் இப்பகுதியும் முக்கிய பௌத்த தலமாக இருந்துள்ளது. இப்பகுதியின் வர்த்தக வாய்ப்புகள் எப்போதும் போலவே அண்டைப்பகுதிகளை ஈர்த்து வந்துள்ளன. சோமநாத் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் குகைக் கோயில்களும், கல்வெட்டு ஆதாரங்களும் இதைக் காட்டுவதாகக் கூறுகிறார். முக்கிய வர்த்தக மையமாகவும், வேளாண் மண்டலமாகவும் உள்ளதாலும், இப்பகுதிக்கு வரும் யாத்ரீகர்களைப் பராமரிக்க வேண்டியிருந்ததாலும் மௌரியப் பேரரசர்களிடம் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் என்கிறார். மௌரியர்கள் காலத்துக்குப் பின்னரும் இப்பகுதி அரசியல், பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாக இருந்துள்ளது. 

ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பௌத்த மதம் மறையத் தொடங்கியது; சைவம், வைணவம், சமணம், சாக்தம் போன்ற மதங்கள் வளரத் தொடங்கின. குப்தர்களுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திராகர்கள் பல மதங்களுக்கும் தாராளமாக உதவியதிலிருந்து இங்கு பல மதங்களின் செல்வாக்கு நிலவியதை அறிய முடிகிறது. சூரிய, சந்திர வழிபாடுகளில் மட்டும் ஈடுபட்டவர்களும் இருந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இங்கு பயணம் செய்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், இங்கு புத்த மதம் தேய்ந்து, சைவ, வைஷ்னவ மதங்கள் செழித்து வருவதை தனது பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்பகுதியில் பல்வேறு சைவ,வைனவத் தளங்களைக்குறிப்பிடும் அவர் பிரபாசாவில் (சோம்நாத்தில்) இந்து கோயில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் பயணம் செய்த ஒரு பயணி, புத்த மதம் மறைந்தபின்னருகூட இங்கு ஒரு புத்த கோயில் இருந்துள்ளதாகவும், பின்னர் அக்கோயில் சோமநாதர் ஆலயமாக சைவர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக இப்புத்தகத்திலேயே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கருத்துதான். இதற்கு ஆதரவு இல்லையென்றபோதும், ஆய்வு செய்வதற்குப் பயனுள்ள தகவல் என்றும் தாப்பர் மேலும் குறிப்பிடுகிறார். புத்த குகைக் கோயில்கள் பின்னர் வேறு மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; ஆனால் இது இணைப்புக்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சண்டையில் கைப்பற்றப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.எட்டாம் நூற்றாண்டில், சௌராஷ்டிரா பகுதியிலுள்ள வாலபி மீது அராபியர்கள் படையெடுத்துள்ளனர். ஆனால், இந்த ஊடுருவலை உடனடியாக உள்ளூர் அரசர்கள் தடுத்துள்ளனர். இங்குள்ள சமன விக்கிரகங்களை சமனர்கள் இக்காலத்தில் பத்திரமான இடங்களுக்கு எடுத்துச் சென்றதாக பிற்கால சமன ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வாலபி தாக்குதலுக்குப் பின்னர் அராபியர்கள் படிப்படியாக வர்த்தக நிமித்தமாக இப்பகுதிகளில் குடியேறினார்கள். இவர்கள் பெரும்பாலும் தெற்கு அராபியப் பகுதியிலிருந்து வந்த, மதப் பழக்கவழக்கங்களில் உள்ளூர்த் தன்மைகள் இணைந்த இசுலாமியர்கள். ராஷ்டிரகுதா மன்னரின் ஆளுநராக நியமிக்கப்படும் அளவுக்கு உள்ளூர் மக்களுடன் கலந்தவர்கள் என குஜராத் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஏராளமான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டும் தாப்பர், முக்கியமாக படையெடுப்புக்கு முந்தைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த  சமஸ்கிருத, சமன ஆவணங்களில் சோமநாதர் கோயில் பற்றி குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டுகிறார். சாளுக்கிய வம்சம் தோன்றிய பின்னரே அங்கு ஒரு கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.
ஆனால், சோமநாதர் கோயில் படையெடுப்பு அல்லது கொள்ளை மத ரீதியான படையெடுப்பு அல்ல. அதேபோல முகமது கஜினி இந்தியாவில் இசுலாத்தைப் பரப்பவோ, இங்கு இசுலாமிய ஆட்சியை உருவாக்கவோ இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. முகமதுவைப் பொருத்தவரை காஜானாவத் பேரரசை பாக்தாத் காலிப்புக்கு போட்டியாக உருவாக்க நினைத்தார். இதனால் அவரது வரலாற்றை எழுதியவர்களும், அவரது அரசவைக் கவிஞர்களும் தங்கள் மாமன்னரின் வீரபராக்கிரமங்களை அதீதமாக மிகைப்படுத்தி எழுதினார்கள். இதற்கு அவர்களது ராஜவிசுவாசமே காரணம். முகமது இந்தியா வரும் முன்னரே இந்தியாவில் இசுலாமியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அராபியர்கள். இந்தியர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்காக அவர்கள் இங்கு குடியேறினர். ஆனால், முகமதுவின் வருகை வியாபாரம் அல்லை. தனது பேரரசுக்கு செல்வம் சேர்க்க கொள்ளைகளை நிகழ்த்தினார். அப்போது மிகவும் செல்வச்செழிப்புள்ள கோயில் நிர்வாகமாக சோமநாதர் ஆலயம் இருந்தது. இந்தியா முழுவதுமிருந்து யாத்திரீகர்கள் வந்தவண்ணமாயிருந்தனர். அவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அரசும் யாத்திரீகர்களிடம் தனியாக வரி வசூல் செய்தது. தவிர அப்பகுதியைச் சேர்ந்த இந்து, சமன, அராபிய வணிகர்களும் வாரி வழங்கினர். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும், அரசுக்குமே கூட மோதல் இருந்தது. சோமநாத்துக்கு வரும் யாத்திரீகர்களிடம் கொள்ளையடிப்பதை உள்ளூர் மக்கள் வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருந்தனர். சில உள்ளுர் அரசர்கள் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டனர். எனவே, இந்தளவுக்கு செல்வமிக்க சோமநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி, சொத்துகள் மொத்தத்தையும் முகமது சுருட்டிச் சென்றார். ஆனால், இந்தத் தொகையை அதீதமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளனர்.பொதுவாக, படையெடுக்கும் மன்னர்கள் வெற்றியை ருசிக்கும்போது அவர்களது அடுத்த நடவடிக்கை கொள்ளைதான். முகமது மட்டுமல்ல, வட இந்தியாவின் அரசர்களும் தங்கள் ராஜீயத்தை விரிவுபடுத்த படையெடுத்துள்ளதை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. அவர்கள் இந்து கோயில்களாக இருந்தாலும் விட்டுவைக்கவில்லை. பட்டவர்த்தனமாகக் கொள்ளையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்கூட சோழர்கள் கடல் கடந்து படையெடுத்தனர். ஆனால், அவர்களும் கொள்ளையடித்த செல்வங்களுடந்தான் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பினர். அத்தகைய பெருமிதம்தான் முகமதுவுக்கு இருந்தது. கோயிலை இழிவுபடுத்தியது தொடர்பாக, அவர் கோயிலை தரைமட்டமாக்கினார். விமானத்தை சுக்குநூறாக உடைத்தார் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். அது படையெடுப்பின் ஒரு அங்கம். ஆனால், விக்கிரக அவமதிப்பைப் பொறுத்தவரையில், சோமநாத் என்ற பெயரில் உள்ள ‘மநாத்' என்பதை ‘மனத்' என்று கஜினி முகமது புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், ‘மநாத்' என்பது குரானில் குறிப்பிடப்படும் ‘மனத்' என்ற தேவதை என்று அடையாளம் கண்டு, குரானில் வரும் ஒரு தேவதைக்கு உருவ வழிபாடு செய்வதாக எண்ணி அதற்கு அவமரியாதை செய்திருக்கலாம் என்றும் ஃபரூக்கி என்பவரை ரொமிலா தாப்பர் மேற்கோள் காட்டுகிறார். 

இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் ‘மனத்' தேவதையை வழிபடாமல் மெக்கா பயணம் முழுமையடையாது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. முகமது நபி உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். எனவே, அவர் அதை அழித்து விட்டார் என்றும், முகமது அலி காலத்தில் அந்தச் சிலை அழிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அராபிய தொல்குடி இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியபோதே தமது பரம்பரை விக்கிரக வழிபாட்டையும் தொடர்ந்தனர். இன்றும் ஓரளவு விக்கிரக வழிபாட்டை ஏற்கிறவர்கள்  இருக்கிறார்கள். உருவ வழிபாட்டை எதிர்ப்பவரான கஜினி முகமது அந்த இசுலாமிய உட்பிரிவுகளை அழிப்பதில் குறியாக இருந்தார்;  எனவே, மதத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிவதில் முகமது கஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் நீட்சியாகவே சோமநாத் விக்கிரக விவகாரத்தைப் பார்க்க முடியும். மற்றபடி, சோமநாத் கோயில் கதவை எடுத்துவந்து தமது கோட்டை வாசலில் பொருத்தினார் என்பது போன்ற கூற்றுகள் ஆதாரமற்ற மிகைப்படுத்தல்கள். மேலும், சோமநாதர் கோயில் மீண்டும், மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதை இஸ்லாமிய மன்னர்கள் மீண்டும், மீண்டும் தரைமட்டமாக்கியதாகவும் கட்டமைக்கப்படுவதும் தவறு. அராபிய வரலாற்றாசிரியர்கள் மிகைப்படுத்திக் கூறிய இக் கூற்றை ஆதாரமாகக் கொண்டு காலனியவாதிகள் பரப்பி வந்தனர். இந்துத்வா சக்திகள் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் சமஸ்கிருத, சமண ஆவணங்களில் இல்லை. இதை, ஒரு தொகுப்பு வாசிப்பின் மூலமே தெளிவுபடுத்த முடியும் என்பதை ரொமிலா தாப்பர் நிறுவியுள்ளார். 

ஒப்பீட்டளவில் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகவும், அதேசமயத்தில் சாளுக்கியர்கள் கால நிர்ணயத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டவையுமான சமஸ்கிருத கல்வெட்டுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்த அரசியலை இரண்டாம் தொகுப்புத் தரவுகளிலிருந்து தாப்பர் முன்வைக்கிறார். சோமநாதர் ஆலயக் கொள்ளையடிப்புக்குப் பின்னர் 4 நூற்றாண்டுகள் வரையான சமஸ்கிருத கல்வெட்டுகளை ஆய்வு செய்து தவறான கற்பிதங்களைக் கட்டுடைப்பு செய்கிறார். சோமநாதர் ஆலயம் மிக வளம் நிறைந்ததாகவும், சக்தி வாய்ந்ததாகவும் திகழ்ந்ததோடு மட்டுமின்றி அப்பகுதி அரசியலிலும் தீவிரப் பங்காற்றியுள்ளதை அவை காட்டுகின்றன. கோயில் பூசாரிகளை முக்கியஸ்தர்களாகக் கொண்ட நகர நிர்வாகக் கவுன்சில் ஒன்று இருந்துள்ளது. கோயில் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள பாரசீக வணிகர் ஒருவருக்கு இந்த நகரக் கவுன்சில் அனுமதி வழங்கிய தகவலையும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு தரப்பிற்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவியதை இந்த உறவு காட்டுகிறது. ஒரு சட்ட ஆவணமாகவும் உள்ள இந்த முக்கியக் கல்வெட்டு கோயில் நிர்வாகம் மற்றும் வணிக சமுதாயத்திற்கிடையே நிலவிய அரசியல் உறவு குறித்த சுருக்கமான சித்திரத்தைத் தருவதாகவும், முதல் ஆதாரத் தொகுப்பில் இருந்து மாறுபட்ட தகவல்களை வழங்குவதாகவும் விளங்குகிறது. சமஸ்கிருத ஆவணங்களில் குறிப்பிடத்தக்கதாகவும், பொதுவாக எங்கும் பயன்படுத்தப்படாததாகவும் உள்ள ஒரு ஆவணம் சோமநாதர் ஆலய அகழ்வுப்பணிகள் குறித்த அறிக்கை ஆகும். 1951 இல் இந்த அகழ்வுப் பணி நடந்தது. இது பல யதார்த்தமான தகவல்களை வழங்குகின்றது. அதாவது கோயிலின் பரப்பளவு, கோயிலின் சொத்து மதிப்பு குறித்து துருக்கிய - பாரசீக ஆவணங்கள் வழங்கும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு தற்கால இந்துத்வா சக்திகள் தரும் சித்திரம் ஆகியவற்றுக்கு மாறாக ஒரு யதார்த்தமான, தெளிவான சித்திரத்தை வழங்குகிறது.  இதனால்தான் இரு தரப்பு மத தேசியவாதிகளும் இந்த வரலாற்று ஆவணங்களை இருட்டடிப்பு செய்து வந்துள்ளனர்.  

மூன்றாவதாக சமண நூல்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஆகும். இவை பெரும்பாலும் மேற்கிந்தியாவைச் சேர்ந்தவை. இப்பகுதியைச் சேர்ந்த சமணப் பிரிவுகள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தருவதாகவும், சமண மதத்தைப் பேணிய ஆட்சியாளர்களின் வரலாற்று நூல்களாகவும் இவை உள்ளன. சமண ஆட்சியாளர்களும், சமண வணிகர்களும் சோமநாதர் ஆலயத்துக்கு வழங்கிய கொடைகளைச் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இத்தகவல்கள் முதல் தொகுப்பில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. அழிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாக முதல் தொகுப்புத் தகவல்கள் கூறுகின்றன.  சோமநாதர் படையெடுப்புக்குப் பின் அங்கு சகஜ நிலை ஏற்படவேண்டும் என்பதில் சமண வணிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் வர்த்தகம் சீர்படும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இக் காலகட்டத்தைச் சேர்ந்த காவியங்கள் சோமநாதர் ஆலய படையெடுப்பு ஏற்பட்டபோதும்கூட ராஜஸ்தான், குஜராத் ஆட்சியாளர்களுக்கும், டில்லி சுல்தான்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதை விளக்குகிறது. 

நான்காவது தொகுப்பு கஜினி முகமது மீதான வாய்மொழி வரலாறு ஆகும். இவை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிவு செய்யப்பட்டவையும், சேகரிக்கப்பட்டவையுமாகும். இவை கஜினி   முகமது மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் எவ்வாறு மக்களால் பார்க்கப்பட்டனர் என்ற வேறுபட்ட முகங்களைக் காட்டுகின்றன. பெருவாரியான மக்கள் மத்தியில் வழங்கப்பட்டுவரும் சமகால தகவல்களாகவும் அவை உள்ளன. பீர்கள், பக்கீர்கள், குருநாதர்கள் என பல்வேறு புனிதர்கள் குறித்து வெகுமக்கள் அளவில் பாடப்படும் பல பாடல்கள் உள்ளன. இவர்கள் பல சமயத்தவர்களாக இருந்தபோதும் கஜினி முகமதுவையும் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவை யாவற்றையும் அதீதமானது என வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளதையும், இவற்றைத் துல்லியமான  வரலாற்றுத் தடயங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அவை தனித்த ஒரு இலக்கிய வடிவத்தை அளிக்கிறது என்பதையும், இவற்றில் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த சமூகங்களின் மதிப்பீடுகள் பிரதிபலிப்பதையும்  தாப்பர் காண்கிறார். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலமே ஒரு நிகழ்வு குறித்த வெகுமக்கள் சமூகத்தின் பிரதிபலிப்பையும், புரிந்துகொள்ளலையும் உணர முடியும். அரசவை ஆவணங்கள், அரச காப்பியங்களில் இவற்றைக் காண இயலாது.

சோமநாதர் படையெடுப்பு நிகழ்ந்ததில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரதிநிதித்துவ அரசியலில் காணப்படக்கூடிய கற்பிதங்கள் சமகால ஆதாரங்களிலும், பிற்கால ஆதாரங்களிலும் விரவியுள்ளன.  இவ்வாறு பெறப்பட்ட பல்வேறு ஆதாரத் தொகுப்புகளையும் ஒன்றிணைத்து ஆய்வுசெய்யப்படும்போதே நிகழ்வின் பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட புரானிகக் கற்பிதங்களைக் களைய முடியும். பல்வேறு ஆதாரங்கள் மத்தியில் ஒரு வரலாற்று நிகழ்வு குறித்த உறவு எவ்வாறு நிலவுகிறது; கூட்டு நினைவுகள் என்று கூறப்படும் இந்தக் கட்டமைப்புகள் எவ்வாறு எதிர்மறையாக அமைகின்றன என்பதற்கு இந்த வாசிப்புமுறை ஒரு சிறந்த பயிற்சியாக அமைவதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.

1951 இல் எடுக்கப்பட்ட அகழ்வாய்வு ஆதாரங்கள் தவிர அனைத்து ஆதாரங்களுமே 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதலே காணக் கிடைப்பவைதான். ஆனால், இவை யாவும் ஒட்டுமொத்தமாக ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்து முடிவுகள் எட்டப்படுவதில்லை. பாரசீக மொழி ஆதாரங்கள் அதிகமாக இருப்பதும், இந்திய வரலாற்றை இந்துக்கள் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, ஆங்கிலேயர் வரலாறு எனத் தவறாகக் கால வரிசைப்படுத்திப் புழங்குவதுமே இதற்குக் காரணம் என சரியாகக் கூறுகிறார். மேலும், இந்து வரலாறு சமஸ்கிருத பிரதிகள் வாயிலாகவும், இசுலாமிய வரலாறு பாரசீக, அராபிய பிரதிகள் வாயிலாகவும், ஆங்கிலேய வரலாறு ஆங்கிலப் பிரதிகள் வாயிலாகவும் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்துப் பேரரசர்கள் ஆட்சிக்காலம் என்று கருதப்படும் கி.பி. 1200 க்குப் பிறகான காலகட்டங்களை அறிவதற்கு - இக்காலகட்டம் இசுலாமிய ஆட்சிக்காலம் என்றும், இதன் தகவல்களைப் பாரசீகப் பிரதிகள் மூலமே அறிய முடியும், சமஸ்கிருத ஆதாரங்கள் பயன்தராது என நம்பப்பட்டு வந்துள்ளது. இது ஒரு தவறான தர்க்க வாதமாகும். இந்திய வரலாற்¨த் துண்டு துண்டாகப் பிரிப்பதும், அவற்றினூடாக எவ்விதமான இணைப்புகளோ, தொடர்புகளோ இல்லை என்பதும் எவ்வளவு தூரம் பிழையானது என்பதையும் கூட்டு வாசிப்பின் மூலம் நிறுவுகிறார். இவ்வாறு துண்டாடுவது வரலாற்றினை ஒரு உறைநிலையில் வைத்துவிடும் என்கிறார். நல்லவேளையாகத் தற்கால வரலாற்றாசிரியர்கள் இந்த உறைநிலையில் இருந்து மீண்டுள்ளனர். 
ஐந்தாவது தொகுப்பாக தாப்பர் முன்வைக்கும் ஆவணம் 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுசபை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) யில் நிகழ்ந்த விவாதமாகும். இந்திய (இந்து) மதத்துக்கு ஆதரவாக வளையும் எண்ணத்தில் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் செயல்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் எழுந்துள்ளது. முகமது கஜினியின் சோமநாதர் ஆலயப் படையெடுப்பு, அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி, தொடர்ந்து உருவான முகமதியர் ஆட்சி ஆகியவற்றினூடாக இந்து வெகுமக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகிவிட்டதாக ஒரு கருத்து வலிந்து உருவாக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் முதன்முறையாக இந்த நீண்ட விவாதம் நடந்துள்ளது. எதிர் விரோத மத சமுதாயங்கள் மற்றும் துவேஷ நினைவுகள் குறித்த பிரச்சனையை இவ்விவாதம் எழுப்பியுள்ளது. 
ஒரு நிகழ்வு தேசியம் குறித்த அரசியலின் குறியீடாக்கப்படுவது 20 நூற்றாண்டில் மேற்கு இந்தியாவில்தான் தொடங்கியுள்ளது. இந்து அடிமைத்தனம் மற்றும் முஸ்லிம் ஆட்சியில் ஏற்பட்ட துயரத்தின் குறியீடாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு பார்க்கப்பட்டது. சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதான் இன்று மதச்சார்பற்ற தேசியவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் மத்தியில் தீவிர விவாதத்துக்குரிய பிரச்சனையாக மாறியது. மத அடையாளத்துடன் கூடிய அரசியலை சுவீகரிக்கும் எண்ணத்துடன் இது தொடங்கப்பட்டது. 1951 இல் சோமநாதர் ஆலயம் மறுபடியும் கட்டமைக்கப்படுவது வரை இது இட்டுச்சென்றது என்கிறார் ரொமிலா தாப்பர்.

ஆனால், இந்த ஆவணங்களை இன்று மறு ஆய்வு செய்யும்போது சோமநாதர் ஆலயப் படையெடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள் குறித்த மாறுபட்ட வாசிப்பு அனுபவமாவதாக அவர் கூறுகிறார். இதில் பல கேள்விகள் எழுகின்றன: சோமநாதர் ஆலய நிகழ்வு குறித்து வேறுபட்ட இந்திய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட வழிகளில் எதிர்வினையாற்றியுள்ளனரா? கோயில் சிதைக்கப்பட்டதற்கு மத வெறுப்பு மட்டும்தான் காரணமா? சேதாரம் பற்றி மிகைப்படுத்திக் கூறப்படுவது அரசியல் காரணங்களுக்காகவா அல்லது மிகைப்படுத்திக் கூறப்படவில்லையா? இந்து - முஸ்லிம் என முத்திரை குத்தப்பட்ட மத சமுதாயங்களாகத்தான் அன்று அவர்கள் வாழ்ந்தார்களா? அல்லது தங்களை எந்த ஒரு தனிச்சமுதாயத்தின் அங்கமாகவும் பாராமல் பல்வேறு சமுதாயங்களிடையே கொடுக்கல் - வாங்கல்கள் மூலமாக உருவான உறவுகள் கொண்ட பன்முகத் தன்மை கொண்டவர்களாக இருந்தார்களா? கடந்த காலம் குறித்து ஒரே விளக்கம் மட்டுமே திரும்பத் திரும்பத் தரப்பட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை நம்முள் திணிப்பது அல்லது கடந்த காலத்தைத் திக்குத் தெரியாத கானகமாக்குவது என்கிற காலகட்டத்தில் இக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அதிலிருந்து விலகி முன்னேற முடியும் என்கிறார்.  

கஜினி முகமது , சோமநாதர் ஆலயம் மற்றும் குஜராத் வரலாறு குறித்து கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தவிர பெரும்பாலானவை சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டவை. குறுகிய நோக்கில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் இந்திய வரலாறு குறித்து காலனிய சக்திகள் கட்டமைத்தவற்றைப் பின்பற்றி எழுதப்பட்டவை. குறிப்பாக கே. எம். முன்ஷி போன்றோர் முன்வைத்த கருதுகோள்களுக்கு அன்றைய பிரதமர் நேரு ஆணித்தரமாக அளித்துள்ள பதில்களைத் தாப்பர் குறிப்பிடுகிறார். இந்திய வரலாறு குறித்த தொடக்ககால நூல்களை காலனிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டே எழுதத் துணிந்தது ஒரு வரலாற்று சோகம். அவை இந்து வரலாறு என்றும், இசுலாமிய ஆதிக்க வரலாறு என்றும், ஆங்கிலேய வரலாறு என்றும், இவற்றில் ஆங்கிலேயர் காலமே சிறந்தது என்றும் காலனிய வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் என்றென்றும் மத மோதல்கள் இருந்தன என்றும், இசுலாமியர் ஆட்சிக்குப் பிறகே இது தொடங்கியது, இதைத் தொடங்கியவர் கஜினி முகமது என்றும் அவர்கள் திட்டமிட்டு வரலாற்றைக் கட்டமைத்தனர். இதிலிருந்தே இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது  என்ற மதவாதக் கருத்துரு உருவாகியது. இதற்கு மையப்புள்ளியாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு நிகழ்வு முன்மொழியப்படுகிறது. எனவே பிற்கால வரலாற்றாசிரியர்களும் இதிலிருந்து மீள முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிச் சுழன்றுள்ளனர்.  

SOMANATHA
The Many Voices of a History
ROMILA THAPAR
PENGUIN BOOKS
Rs. 275/-நன்றி: புதுவிசை காலாண்டிதழ்

சனி, 6 ஜூலை, 2013

நான் ஏன் எழுதுகிறேன்

நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!

எழுதுவதுதான்  எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பலருக்குப் பேசுவதே மிக எளிதான தொடர்பு சாதனமாக இருக்கலாம். சிலருக்கு ஓவியம், வேறு சிலருக்குக் கவிதை, இசை, பாடல், கதை சொல்லுவது, பாட்டுக் கட்டுவது என பல வடிவங்களில் ஒன்று அவரவருக்கானதாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எனது பதின்மப் பருவத்தில் நான் எனக்குள் சுருங்கிப் போனேன். எனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லுவதில் தயங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எழுதினால் மட்டுமே எனது எண்ணங்களைச் சிறப்பாகத் தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கை - நான் ஏழாவது படிக்கும்போதே ஏனோ எனக்கு ஏற்பட்டிருந்தது.

அநேகமாக எனது முதல் எழுத்து எனது 12ஆவது வயதில் எழுதிய போஸ்ட் கார்டு காகிதம் (கடிதம்)தான் என்று என்று நினைக்கிறேன். அது எனது அப்பாவுக்கு எழுதிய முதல் கடிதம். எனது வாழ்க்கையில் எனது அப்பாவுக்கு இரண்டே இரண்டு கடிதம்தான் எழுதியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. முதல் கடிதம் எழுதி சுமார் 25 வருசம் கழித்தே இரண்டாவது கடிதம் எழுத நேர்ந்தது. அக்கடிதத்துக்குப் பிறகு என் அப்பாவை நான் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது.

நான் எனது ஏழாவது வகுப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அங்கேயே பள்ளியும். கிறித்துவ மிஷனரி நடத்திய தர்மப் பள்ளிக்கூடம். ஹாஸ்டலுக்கும் பீஸ் கிடையாது. எனது ஊரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவு. தப்பித்துக்கூட ஓட முடியாது. எந்தப் பக்கம் ஆனாலும் குறைந்தது 5 கி.மீ நடந்து கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிடித்து விடுவார்கள். பிடித்துவிட்டால் காலில் சங்கிலி போட்டு பிணைத்து விடுவார்கள். எனக்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை. இருந்தாலும் இந்த வருசம் எப்படியும் தொலையட்டும், அடுத்த வருசம் இங்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை; இங்கு மட்டும் இருக்கக்கூடாது என்பது எனது வைராக்கியம். கிட்டத்தட்ட அங்குதான் தனிமை நோய் அல்லது தனிமை சுகம் என்னைப் பீடித்து இருக்கலாம்.

எனது வைராக்கியத்தை அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் கடிதம் எழுதும் யோசனை பிறந்தது. மூணு காசுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி நாலே நாலு வரி எழுதிப் போட்டேன். அதுதான் எனது முதல் படைப்பு. எனது நிலையை அப்பா உணரவேண்டும் என்பதற்காக சற்று மிகைப்படுத்தித்தான் எழுதிப்போட்டேன்.
எழுதிப்போட்டேன் என்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. முதலில் எழுதுவதற்கு ஒரு ரகசியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். கார்டு வெளியே தெரியாதபடி உடலுக்குள் மறைத்து வைக்க வேண்டும். சர்ச்சுக்கு எதிர் தெருவில் இருக்கும் போஸ்டாபிஸ் திண்ணையில் ஏறி அதில் தொங்கும் பெட்டியில் போட வேண்டும். அப்போது ஒரு சுடுகஞ்சிகூட பார்த்திருக்கக் கூடாது. அப்படியான சாதனையோடு அந்தக் கடிதத்தை எழுதிப் போட்டேன். எந்த வரிசையிலும் முதலாவது நிற்கும் அளவுக்குக் குள்ளம். இப்போது யோசிக்கும்போது பாதிரியாரின் பார்வையை மீறி எந்தக் கடிதமும் அந்த ஊரைவிட்டுப் போயிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதுஎனது எழுத்தில் மயங்கித்தான், என்னை அப்பா, அங்கிருந்து விடுவித்தார் என  மிகவும் நம்பினேன். அதனால் என்னால் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை அப்போதே துளிர் விட்டிருந்தது.

தொடர்ந்து வகுப்புகளிலும் கேள்விக்கான பதில்களை எழுதும் போது நானே வாக்கியம் அமைத்து எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பதில்களின் நடுவே தந்திரமாக எனது சொந்த வாக்கியங்களைச் சேர்த்துவிடுவேன். தமிழ்க் கேள்வித்தாளில் எனக்குப் பிடித்த கேள்விப் பகுதி வியாசம் (கட்டுரை) எழுதுவதாகவே இருந்தது. அதற்கு எந்த ஆசிரியருக்கும் 10க்கு 6 மார்க்குமேல் போட மனசு வராது.

அப்புறம் வீட்டில் தீப்பட்டிப் பசை நாற்றத்துக்குப் பயந்து தப்பித்து எங்கள் தெரிவில் உள்ள நூலகத்தில் ஒளிந்து கொள்ளும் பழக்கமும் இருந்தது. அங்கு என்னை அறியாமல் வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ராசு நல்லபெருமாள், கு. அழகர்சாமி ஆகியோரின் புத்தகங்களைப் புரட்டிய நினைவும் இருக்கிறது. அவற்றில் என்னை ஆச்சரியப்பட வைத்தது தாகூர் கதைகளின் மொழிப்பெயர்ப்புப் புத்தகம் ஒன்று. அதில் நமது வீடுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் போலவே கூறப்பட்டிருந்தது. வீட்டில நடப்பதை எழுதினால் அதுவும் கதைதான் என்பதை அக்கதைகள் புரியவைத்தன.

வெகுசீக்கிரத்தில் நான் கணக்குப் புலி ஆகி விட்டேன். கணக்குப் பாடம் தவிர எதுவும் ரசிப்பது இல்லை. கடைசி வரை கணித மாணவனாகவே கழித்து விட்டேன். அதனால் பள்ளிக்கூட நாள்களில் கவிஞனாகும் கனவெல்லாம் இல்லை. படிப்பெல்லாம் முடியும் நேரத்தில் நண்பர்களில் பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்தப் புத்தகத்தை நானும் வாசிக்க ஆரம்பித்தேன்.

தண்டவாளத்தைத் தாண்டிப்போனால் சில புத்தகங்களைக் கண்ணில் காண்பிப்பார்கள். அப்படி ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நீல பத்மநாபன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. ஒரு தொகுப்பின் தலைப்பு: சம்மதங்கள். பெரும்பாலும்  நமது குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளே கதைகளாக இருந்தன. எனக்கு ஒரே ஆச்சரியம். இதுதான் கதையா? அப்படின்னா ‘நம்ம கிட்ட எவ்வளவோ கதைகள் இருக்கே! என நினைத்தேன். ஏனென்றால் என் வீடு இது போன்ற சண்டைகளுக்கு ஜில்லாவிலேயே பிரபலமான வீடு. அப்போது நாமும் இதுபோல கதைகள் எழுத முடியும் என மீண்டும் நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி நான் ஏன் எழுதுகிறேன்? நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்? நான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்பன போன்ற எழுத்து குறித்த மார்க்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய். அலெக்சி டால்ஸ்டாய், சோலோகவ், பிளாக்கனோவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் (லியோ டால்ஸ்டாய், சோலகோவ். பிளாக்கனவ் எழுதிய கட்டுரை/புத்தகங்களின் தலைப்புகள் திடீர் என நினைவுக்கு வரவில்லை)  படிக்கக் கிடைத்தன. அந்தப் புத்தகங்களில் எழுத்து என்பது ’பயிற்சிதான்; தொடர்து முயற்சி செய்தாக் யாரும் எழுத்தாளனாகிவிட முடியும் என்பதைத் திரும்ப, திரும்பக் கூறினர். இவ்வாறு எனக்குக் கிடைத்த தொடர் நம்பிக்கை எழுதாமல் முடியாது என்ற நிலையை உருவாக்கியது. எழுதத் தொடங்கினேன்.

மேலும் அது ரகசிய உலகமாக இருக்கிறது. பேசினால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனால் எழுத்தில் திருத்தி எழுத முடிகிறது. எண்ண ஓட்டங்களுக்கும் அதை எழுதிமுடிப்பதற்கும் இடையேயான் இடைவெளி பாதுகாப்பானதாக இருக்கிறது. எழுதுவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் செயலாக இருக்கிறது. எழுத்து. கள்ளுக் குடித்தது போன்ற போதையைத் தருகிறது. அது பத்திரிகையில் பிரசுரமாகும்போது நான் உயரமானவனாக உணர்கிறேன். என் எழுத்தால் வாசக மனதைக் ககக்கிப்பிழிந்துவிட நினைக்கிறேன். அது அழியாது என நினைக்கிறேன்.

இவ்வளவும் தெரிந்தும் நான்  ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது மீதி புராணம்!

- அப்பணசாமி.

நன்றி: கரிசக்காடு