சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வெள்ளி, 12 ஜூலை, 2013

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவு

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நிணைவுக் கட்டுரை
திராவிட இயக்க, 
பொது உடமை இயக்கத் தாக்கத்தில் 

தமிழ் உணர்வாளர் அவ்வை சண்முகம்


1935, ஏப்ரல் 19, உதகமண்டலம்


”பம்பாய் மெயில்‘ நாடகம் நடந்த மறுநாள் பூங்காவுக்குச் சென்றேன். நாடகக் கம்பெனியின் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். இத்தனை சிரமங்களுக்கு நடுவே நாடகக் கம்பெனியை நடத்திக்கொண்டு போவது சிரமம் என்று பட்டது. கடன்கள் நிறைந்தன. எங்காவது ஓடிப்போவது என்று முடிவு செய்தேன்.  திடீரென்று எங்கிருந்தோ தோழர் ஜீவானந்தம் வந்தார். அவரிடம் மனவேதனையைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் பல விஷயங்களைப் பேசினார். நாட்டிற்காகப் பல இன்னல்களைத் தாங்கிக்கொண்ட பல வீரர்களின் கதைகளைச் சொன்னார். மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உறுதி ஏற்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது. ஜீவா போய்விட்டார். தோழர் ஜீவாவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப்போகத் தீர்மானித்த எனக்கு அறிவுரை கூறித்  திருத்த கடவுளே அனுப்பியதாக எண்ணினேன்."

இவை ‘அவ்வை‘ சண்முகம் என்று அழைக்கப்படும் டி. கே. சண்முகம் தனது சுய வரலாற்று நினைவுக்குறிப்புகளாக எழுதியவை. ஜீவா போன்று பெரியார், அண்ணா, சத்யமூர்த்தி மற்றும் ம. பொ. சிவஞானம் ஆகியோரின் தாக்கங்களும் அவ்வை சண்முகத்தை வார்த்தெடுத்தன. 

கூத்தும் பாட்டுமாய் இருந்த தமிழரின் நிகழ்கலை மரபு ஐரோப்பியர் வருகையின் பாதிப்பாலும், பார்சி நாடகக் கலப்பாலும் மேடை நாடகங்களாயின. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த கூத்துகளில் ஆடிப் பாடிக் கதைசொல்லப்பட்ட புராணக் கதைகள், பிரபலமான பெருந்தெய்வக் கதைகளை நாடகங்களாகி மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தன. இதனால் நவீன தமிழுக்கு உரைநடையும் பாடல்களும் கலந்த புதிய படச் சட்டக மேடை நாடக வடிவம் கிடைத்தது. இந்த வெற்றியைச் சாதித்ததில் தவத்திரு சங்கர தாஸ் சுவாமிகளுக்கு ஒரு பெரும்பங்கு உண்டு. 
மேடையில் டி கே சண்முகம்

அதுமட்டும் அல்ல. அதுவரை தமிழ் மண்ணில் மரபுக்கலைகளில் பேணப்பட்டு வந்த பல தடைக்கற்களை படச்சட்டக வடிவம் அகற்றியது என்றால் மிகையல்ல. முதலாவதாக வழிபாட்டுச் சடங்குகளோடு மிகுதியும் பிணைக்கப்பட்டு இருந்த கதைசொல்லும் நிகழ்கலையை முதல்முறையாக வெளியே கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல் இதற்காக நிலவிவந்த பல கட்டுப்பாடுகளையும் அகற்றியது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும்ஆவரது சக ஸ்பெஷல் நாடகக் கலைஞர்கள் பங்களிப்பு முக்கியமானது ஆகும். இந்தக் கலையை யார் வேண்டுமானாலும் பயிற்சி மூலம் கற்றுக்கொள்ளமுடியும் என்ற நிலையை உருவாக்கியது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய பாய்ஸ் கம்பெனிகள் ஆகும். இதில் 5 வயது முதலான சிறுவர்கள் சேர்ந்து 24 மணி நேரமும் பயிற்சி பெற்று புகழ்பெற்ற கலைஞர்கள் ஆனார்கள். இந்த பாய்ஸ் கம்பெனிகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் மிகப் பிரமாண்டமான ஜனநாயகக் கலை எழுச்சியை ஏற்படுத்தியது. அடித்தட்டு மக்களின் வருகை அதிகரிப்பால்தான் இந்த மேடை நாடகங்கள் படிப்படியாக விடுபட்டு சமூக ஜனநாயக, சீர்திருத்த கருக்களங்களை எடுத்தன என்பது இன்னமும் ஆய்வுக்குட்படுத்தப்படாத விழுமியம்தான். அதானால் ஓரளவுக்கு விடுதலை இயக்கமும் பின்னர் உருவான திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் இந்த படச்சட்டக மேடை வடிவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. 20 ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய பல அரசியல், சமூக, கலை ஆளுமைகள் இந்த மரபில் பயிற்சிபெற்று வளர்ந்தவர்கள்தாம். அந்த மரபின் முதல் மாணவர்களில் முதன்மையானவர்தாம் அவ்வை டி. கே. சண்முகம். 

டி.கே.எஸ் சகோதரர்கள் என அழைக்கப்படும் நால்வரில் அவ்வை சண்முகம் மூன்றாவது சகோதரர். இச் சகோதரர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் பிரதான சீடர்கள். சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலும் நடிகர் பஞ்சம் இருந்தது. இதனால் திடீர் திடீர் என நாடகத்தை நடத்த முடியாமல் ஆனது. நடிகர் பஞ்சத்தைப் போக்க அக்கால நாடக மேதைகள் ஜகன்னாதய்யரும், சுவாமிகளும் கண்டுபிடித்த உபாயம்தான் பாலர் நாடக சபா. இத் அக்காலத்தில் பாய்ஸ் கம்பெனி என அழைக்கப்பட்டது. சுவாமிகள் தொடங்கிய பாய்ஸ் கம்பெனியின் பெயர் தத்துவ மீன லோசனி வித்துவ பால சபை. இரு பாய்ஸ் கம்பெனிகளும் 1918 -ல் தொடங்கப்பட்டது. 


சங்கரதாஸ் சுவாமிகள்
இதற்கான தொடக்ககட்ட வேலைகளில் இறங்கிய சுவாமிகள் ஒரு சமயம் மதுரை வந்தார். மதுரைதான் அக்காலத்தில் நாடகக் கலைஞர்களுக்குத் தலை நகராக இருந்தது. மதுரையில் திருவனந்தபுரம் கண்ணுச்சாமிப் பிள்ளை (டி. எஸ். கண்ணுப்பிள்ளை) என்ற ஸ்பெஷல் நாடக ஸ்திரி பார்ட் நடிகராக இருந்தார். பின்னாட்களில் நாடக ஆசிரியராகவும் உயர்வுபெற்ற பி. எஸ். வேலுநாயர் தொடக்க காலத்தில் நாடகங்களில் உயர் வாய்ப்புகள் பெற உதவியவர் கண்ணுப்பிள்ளை. மதுரை வந்த சுவாமிகளைப் பார்க்க கண்ணுப்பிள்ளை சென்றார். அவருடன் அவரது பையன்களும் சென்றனர். பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணுப்பிள்ளையின் பையன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களது துடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த சுவாமிகள் ‘கண்ணு, இந்தப் பிள்ளைகளை அனுப்பிவிடு. நான் கவனித்துக் கொள்கிறேன்‘ எனக் கேட்டார். தயக்கத்துடன்தான் கண்ணு அனுப்பி வைத்தார். அவர்கள் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் என அழைக்கப்பட்ட டி. கே. சங்கரன். டி. கே. முத்துச்சாமி, டி. கே. சண்முகம், டி. கே. பகவதி ஆகியோர். 

சுவாமிகள் கம்பெனியில் சேரும்போது சங்கரனுக்கு வயது 10, முத்துசாமிக்கு 8, சண்முகத்துக்கு 6, பகவதி கைக் குழுந்தை. பாய்ஸ் கம்பெனி தொடங்கிய பிறகு சங்கரதாஸ் சுவாமிகள் நான்கு ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள் அவரால் பட்டை தீட்டப்பட்டு ஏராளமானவர்கள் உருவாகி விட்டனர். அவர்களில் முதன்மையானவர்கள் டி. கே. எஸ். சகோதரர்கள். கம்பெனியில் அப்போது மிகவும் வயது குறைந்த சிறுவன் சண்முகம். ஆனாலும் அனைத்து கலைகளையும் கற்று சுவாமிகள் மனதைக் கவர்ந்தார். அவருக்காகவே ‘அபிமன்யூ சுந்தரி‘ என்ற நாடகத்தை சுவாமிகள் எழுதித் தந்தார் என்றால் அவரது ஆற்றல் எத்தகையது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பின்னாளில் அவ்வையார் நாடகத்தில் அவ்வையாகச் சிறப்பாக நடித்ததால் ‘அவ்வை‘ சண்முகம் என்றே அழைக்கப்பட்டார். 

இடையில் சிறிது காலம் சுவாமிகளின் கம்பெனியைவிட்டு டி கே எஸ் சகோதரர்கள் விலகி இருந்தபோதும் சுவாமிகள் நோய் வாய்ப்பாட்டு இயங்கமுடியாமல் புதுவையில் முடங்கிப்போனார்கள். அக்காலகட்டத்தில் சுவாமிகளின் கம்பெனியும் முடங்கியது. இதனால் வருந்திய சகோதரர்கள் மீண்டும் சுவாமிகளைச் சேர்ந்து, கம்பெனியை தூக்கி நிறுத்தினர். சுவாமிகள் மறைவு ஒரு தந்தையின் மரணத்தைப்போல நாடகக் கலைஞர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கலைஞர்கள் அழுது அரற்றினர். 

சுவாமிகள் மறைவுக்குப் பின்னர் 1925இல் ஸ்ரீபால சண்முகானந்தா சபா‘ என்ற பெயரில் புதிய நாடகக் கம்பெனியை டி. கே. எஸ். சகோதரர்கள் 1925இல் தொடங்கினர். அடுத்த கால் நூற்றாண்டுகாலம் படச்சட்டக அரங்க முயற்சிகளில் மிகப் பெரும் வெற்றிகளையும், படச்சட்டக அரங்க முயற்சிகளையும் டி. கே. எஸ் சகோதரர்கள் படைத்தனர். எஸ். ஜி. கிட்டப்பா, பி. யூ. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன்,
எம். ஆர். ராதா, சாரங்கபாணி, எஸ். வி. சகஸ்ரநாமம், காளி. என். ரத்தினம், எம். ஆர். சுவாமிநாதன், கே. ஆர். ராமசாமி. டி. வி. நாராயணசாமி, எஸ். எஸ். ஆர், எஸ். வி. சுப்பையா, ஆர். எம். வீரப்பன், புளிமூட்டை ராமசாமி, அசோகன். ஏ. பி. நாகராஜன் போன்றோர் இந்த நாடகக் கம்பெனியில் பயிற்சி எடுத்து புகழ் அடைந்தவர்கள். மட்டுமல்லாமல் எம். ஜி. ஆர், சிவாஜி, கே.பி. சுந்தராம்பாள், டி. எஸ். பாலையா, தங்கவேலு, எம். என். நம்பியார், மனோரமா, எம். என். ராஜம் உள்ளிட்டு 1960கள் வரை தமிழ்ச் சினிமாவில் வெற்றிபெற்ற பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குனர்கள், திரைக்கலைஞர்கள் பாய்ஸ் கம்பெனி வழி பயிற்சி பெற்றவர்கள் என்பது சிறப்பான ஆய்வுக்குரியது ஆகும். தவிர விஸ்வநாததாஸ், கே.பி. ஜானகி அம்மாள், பாலாமணி அம்மாள். ராசாமணி, பாஸ்கரதாஸ், வேலு நாயர், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை போன்ற இந்தவகை மேடை நாடகக்கலைக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பனம் செய்த கலைஞர்களும் அடங்குவர். இவர்கள் வெற்றியைப் பின்பற்றி பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் தீரர் சத்யமூர்த்தி போன்ற அரசியல் தலைவர்களும் இந்தவகை நாடகப் படைப்புகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர். குறிப்பாக சுயமரியாதைக் கருத்துகளும், திமுகவின் தொடக்ககாலக் கருத்துகளும் இந்தவகை நாடகம் வழியாக மக்களைச் சென்றடைந்தன.
டி கே எஸ் சகோதரர்கள் 

நாடகம் என்பது காட்சி ஊடகம் ஆகையால் எழுதப் படிக்கத் தெரியாத மக்களும் புகுத்தறிவு மற்றும் முற்போக்கு கருத்துகளை இந்த வடிவம் மூலம் அடைந்து கொண்டனர். இந்தியாவிலேயே பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட மக்களாக தமிழக மக்கள் தங்களைத் தகுதியாக்கம் செய்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நிலமானிய உறவுகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக மிகப்பெரிய அளவில் ஜனநாயக எழுச்சி உருவானபோது அதைக் கண்டுகொண்டு நாடகக் கலைஞர்கள் அக் கருத்துகளை சமூக சீர்திருத்தம் என்ற அளவில் மட்டுமாவது அனைத்துக் கொண்டதால் இந்த முன்னேற்றம் இயன்றது.

புராணக் கதைகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த பாய்ஸ் கமெபெனி நாடகங்களை சமூக நாடகங்களை நோக்கித் திருப்பி விட்டதாலேயே இது சாத்தியமானது. இதில் டி. கே. எஸ் சகோதரர்களின் குழுவின் குறிப்பாக அவ்வை சண்முகத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் நவீன ஜனநாயகப்பூர்வ கலை எழுச்சி வரலாற்றிலும், திராவிட இயக்க, பொது உடமை இயக்க வரலாற்றிலும் அவ்வை டி. கே சண்முகம் பெயர் தவிர்க்க இயலாதது. 

"இக் காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது ‘சீர்திருத்த நாடகக் கம்பெனி‘ என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடந்து வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி என சமூக தேசிய நாடகங்களே அதிகமாக நடைபெற்றுவந்தன" என்று டி கே சண்முகம் தனது தன் வரலாற்று நினைவுக் குறிப்புகளில் எழுதிச் செல்கிறார். 

தொடக்க காலத்தில் வரவேற்பு குறைவாக இருந்தாலும் பின்னர் சீர்திருத்த நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. இதன் பிரதிபலிப்புகள் பிற நாடகக் குழுக்களிலும் தமிழ்த் திரைப்படங்களிலும் எதிரொலித்தன. மேலும் இத்தகைய கருத்துகளுக்கு சுயமரியாதை இயக்கத்தவர் மற்றும் பொதுவுடமை இயக்கத்தவரின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்தது. டி. கே. எஸ். சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் மகள்‘ நாடகத்துக்கு அண்ணா அருமையான விமர்சனம் எழுதினார்: 

"குடும்ப பாரம், வறுமையின் கொடுமை, வரதட்சினையின் கொடுமை, மணவறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளைவிட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்‘ தருகிறார். அதாவது இந்த நாடகத்தில் உண்டு.’ 

இது நிரூபமா தேவி என்ற ஆசிரியர் எழுதிய வங்கமொழி நாவலைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். இது திரைப்படமாகவும் வந்து சக்கைப்போடு போட்டது. இதனால் கவரப்பட்ட அண்ணா பின்னர்  இதனைத் தழுவி தொடர் புதினமாகவும் எழுதினார் என்பது தனிச் சிறப்பு. 

சமூக நாடகங்களைப் புதிதாக எழுதுவதிலும் அவற்றை நாடகங்களாகத் தயாரிப்பதிலும் சமூக, விடுதலை இயக்க, பொதுவுடமை இயக்கத்தலைவர்கள் தொடர்பு உதவியது. 1930கள் முதலே ஜீவானந்தம், பெரியார், அண்ணா, பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் போன்றவர்கள் தொடர்பு டி கே எஸ் சகோதரர்களுக்கு இருந்து வந்தது. அதற்குமுன்பிருந்தே சத்யமூர்த்தி, காமராஜர் ஆகிய தேசியத் தலைவர்கள் ஆதரவு இருந்தது. பொதுவுடமை இயக்கப் போர்வாளாகத் திகழ்ந்த ‘ஜனசக்தி‘ நாளிதழ் வளர்ச்சிக்காக சகோதரர்கள் நாடக நிகழ்ச்சிகள் நடத்தி வசூலித்துத் தந்தனர். இதேபோல பல சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் நிதி திரட்டித் தந்தனர். சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால் டி கே எஸ் சகோதரர்கள் குழு ஈரோடு வந்தபோதெல்லாம் பெரியார் நாடகக் கலைஞர்களுக்கு விருந்தளித்தார். 

ஒரு முறை டி கே சண்முகத்தின் மனைவி மீனாட்சி அம்மாள் கடும் நோய்த்தாக்குதலுக்கு ஆளானார். மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். அப்போது ஈரோட்டில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தது. கடைசிக்காலத்தில் மீனாட்சி அம்மாள் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள விரும்பினார். ஆனால் சாகும் தருவாயில் இருந்த அவருக்கு யாருமே வீடு தர முன்வரவில்லை. இதை அறிந்த பெரியார் சுயமரியாதைச் சங்கத்துக்காக வாங்கிய புதிய வீட்டை டி கே சண்முகத்துக்காகத் திறந்துவிட்டார். பொதுவாக யாருக்கும் இஅந்துகாசு தராத கருமி என பெரியாரை இகழ்வது எவ்வளவு தவறு என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது. அந்த வீட்டில்தான் மீனாட்சி அம்மாள் காலமானார். 


இதே காலகட்டத்தில் அண்ணாவின் ‘சந்திரோதயம்‘ நாடகம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியது. டி கே எஸ் குழுவினர்கள் பாரையாளர்களாகச் சென்றனர். இதில் அண்ணாவில் நடிப்பை டி கே சண்முகம் வெகுவாகப் பாராட்டினார். அடுத்துப் பேசிய அண்ணா "நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறும்வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதெல்லாம் டி கே எஸ் சகோதரர்கள் நடிப்பைப் பல காலமாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். 

பொதுவுடமைக் கருத்துகளாலும் அவ்வை சண்முகம் வெகுவாக ஈர்க்கப்பட்டார். கட்டுரையின் முகப்பில் காட்டப்பட்டது போல ப. ஜீவானந்தமும் சண்முகமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விடுதலைப் போராட்டத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும், புரட்சி இயக்கத்திலும் ஜீவா ஊண் உறக்கம் இன்றி ஈடுப்பட்டபோதிலும், பல போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ஏகாதிபத்தியத்தால் நாடுகடத்தப்பட்டபோதிலும் திறமை கொண்ட கலைஞர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் அடையாளம் காண்பதிலும் அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களிடம் முற்போக்குக் கருத்துகளை அவர்கள் மனதில் விதைப்பதிலும் ஜீவா பின்னடைந்ததே இல்லை. இதுபோன்ற தலைவர்களை இன்றைய சமாதானக் காலத்திலும்கூட காண இயலாது. 


"நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்குவார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக்கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும்" என்று டி கே சண்முகம் எழுதுகிறார். இருவருக்கும் 1931 முதலே பழக்கம் இருந்தது. இதனால் அவரது நாடகங்கள் புது வடிவம் பெற்றது. "பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. கேதார கௌள ராகத்த்தில் நான் பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும்" என அவ்வை சண்முகம் நினைவுகூர்கிறார். அந்தப் பாடல் ஏழையின் கண்ணீருக்காக எத்தகைய கொடுமைக்கும், பீரங்கிக்கும்கூட அஞ்ச மாட்டோம் என்பதாக இருந்தது.  


ஜீவாவின் பாடல்களுக்கு நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. பலபாடல்களை ஜீவா எழுதித் தந்தார். அதனை நாடகங்கள் இடையே காட்சிப் பொருத்தத்துக்கேற்ப பாடுவதை டி கே எஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரசிகர்களும் ஜீவா பாடல்களைப் பாடும்படி தொந்தரவு செய்தனர். "ஒருநாள் மயில் ராவணன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையில் இருந்து ‘ஏழைத் தொழிலாளர் வாழ்வு‘ என்று குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் ‘காலுக்குச் செருப்பும் இல்லை‘ என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். ‘இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்‘ என்றேன். மக்கள் என் பேச்சைக் கை தட்டி வரவேற்றார்கள். நாட்கம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக்கலைந்து சென்றார்கள்" என நினைவுகூர்கிறார். இப்படியும் ஒரு காலம் இருந்தது. 
ம. பொ. சிவஞானம் 

ஜீவா உறவின் உச்சக்கட்டமாக தாங்கள் தொடங்கிய புதிய நாடக சபாவின் பதாகையின் முத்திரை வாசகமாக ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்‘ என்ற கார்ல் மார்க்ஸ், ப்ரடரிக் ஏங்கல்ஸின் அறைகூவலை எழுதித் தொங்கவிட்டார். 

இத்தகைய சமூகத் தலைவர்களின் தொடர்பு டி கே சண்முகம் அவர்களைத் தொடர் வாசிப்பும் சமூக அக்கறையும் கொண்டவராக்கியது. இது அவரை ம பொ சிவஞானம் நோக்கிக் கொண்டு வந்தது. ம பொ சியின் தமிழ் உணர்வுக்கருத்துக்களால் கவரப்பட்டு அவது தமிழரசு கழகத்தில் இணைந்து அதன் நிர்வாகியும் நீடித்தார். அக் கட்சி சார்பில் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். 

மட்டுமல்லாமல் வறுமையில் வாடும் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என்ற அவசியம் உணர்ந்து தமிழ் நாடக நடிகர் சங்கத்தையு உருவாக்கினார். 


அப்பணசாமி

ஆதார நூல்கள்

1. நெஞ்சு மற்க்குதில்லையே! & டி கே சண்முகம், இன்ப நிலையம், 1963
2. எனது நாடக வாழ்க்கை & டி கே சண்முகம், வானதி பதிப்பகம், 1972
3. சுதந்தரப் போரில் தமிழ் நாடக் கலைஞர்கள் (கட்டுரை) & முனைவர் ச முருகபூபதி
4. சங்கரதாஸ் சுவாமிகள்& அ. ராமசாமி& நேஷனல் புக் டிரஸ்ட், 2002
5. பரம்பரை& அப்பணசாமி, பாரதி புத்தகலாயம், 2004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக