இன்று தமிழ் சாப்ளின் கலைவாணர் பிறந்த நாள்.அண்மையில் ‘இளைய தலைமுறை’ என்ற இதழில் ‘தமிழ் சாப்ளின்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர் தொடங்கினேன். ஆனால் சில இதழ்களோடு நின்றுவிட்டது. நம்பர் தமிழ் சாப்ளின் கலைவாணர் குறித்து மட்டும் அதில் மூன்று வாரங்கள் எழுதினேன். அவற்றை மீண்டும் இங்கு பதிவிடுகிறேன்.
1
பாசிடிவ் கிருஷ்ணன்
தமிழ் சாப்ளின்களில் நம்பர் ஒன் நிச்சயமாக நம்ம கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்தான். நான்கூட இந்தத் தொடரை வித்தியாசமாக தமிழ் சினிமாவின் காலவரிசைப்படி சீனியாரிட்டிபடி வரிசையாக எழுதலாம் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் மனம் வரவில்லை. ஆனால் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் கலைவாணர்தான். கிளவுன், பபூன் என நகைச்சுவை நடிகர்கள் மலிவான விரசமான வசனங்களைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அங்க ஹீனங்களைப் பகடி செய்வதே நகைச்சுவை என்ற மட்டமான புரிதல் நிலவிய காலத்தில் நகைச்சுவையை மிகவும் நாகரிகமான நிலைக்கு மாற்றியமைத்தவர்; அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்ட கலைவாணர். தமிழக நகைச்சுவை உலகின் பிள்ளையார் சுழி அவர்தான்.
நான் மிகவும் சின்ன வயதில் பார்த்த படம்- ’மதுரை வீரன்’. எம்ஜிஆர் நடித்துள்ளார் என்பதற்காகத்தான் அடம் பிடித்து அந்தப் படத்துக்குப் போனேன். தரை டிக்கெட்தான். தரையில் உக்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது நிறைய கஷ்டம். முன்னால் உட்கார்ந்திருப்பவர்களின் தலைதான் தெரியும். இதற்கு ஒரே வழி. அந்தக் காலத்தில் பார்வையாளர்கள் உட்காரும் இடத்துக்கும் திரைக்கும் நடுமே மிகப்பெரிய திண்டு இருக்கும். அதில் குறுக்காக ஒரு மரச்சட்டம் போட்டு அதில் சில கொக்கிகள் இருக்கும். அதில் ‘தீ’ என்று எழுதப்பட்ட வாளிகள் தொங்கும். அதில் மணல் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் எச்சில் துப்பவும், புகைத்து முடித்த பீடி, சிகரட்டுத் துண்டுகளைப் போடவுமே அது பயன்பட்டுக்கொண்டிருக்கும்.
எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்களுக்கு அந்த மேடைதான் சிம்மாசனம். அதில் படுத்துக்கொண்டு, உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு, ஆடிக்கொண்டு, தங்கள் ஹீரோக்கள் வரும்போதெல்லாம் விசில்களாலும், தீப்பெட்டிக்கட்டுத் தாள்களாலும் தூள் கிளப்பிக் கொண்டு படத்தை ரசித்துப் பார்ப்பார்கள். தரையில் உட்கார்ந்து என்னால் சரியாகப் பார்க்க முடியாததால் என்னைத் தூக்கிக்கொண்டு முன்னே வந்தனர். அது படம் பார்ப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வசவு நாறியது. முன்னே வந்து என்னை அந்தச் சிம்மாசனத்தில் தூக்கிப் போட்டார்கள். என் கண் முன்னே பிரமாண்டமாக உயந்து நின்ற திரையை என்னால் நம்பவே முடியவில்லை. எனது இரண்டு கண்களுக்கு வெளியேயும் விரிந்திருந்தது திரை. எம்.ஜி.ஆரும், பாலையாவும் எனக்காகவே சண்டை போட்டார்கள். எம்.ஜி.ஆரும் பானுமதியும் எனக்காகவே சந்தித்துக் கொண்ட மாதிரி இருந்தது. அந்த இருளில் நானும் அவர்களும் மட்டுமே அங்கிருப்பதாக முதல் முதலாக உணர்ந்தேன்.
ஜோசியன் சொன்னான் என்பதற்காக நடுக்காட்டில் அனாதையாகப் போடப்பட்டக் குழந்தையை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளத் தம்பதி (என்.எஸ்.கே - மதுரம்) எடுத்து வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தையே வரே எம்.ஜி.ஆராக வளர்கிறது. வளர்ந்த இளைஞர் எம்.ஜி.ஆரை இளவரசி பானுமதி காதலிக்கிறார். மன்னர் தடுக்கிறார். அரண்மனைக் காவலையும் மீறி எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்துவிடுகிறார். அப்போது எம்ஜிஆரின் அம்மாவை (மதுரம்) ‘அத்தை’ என அழைப்பார் பானுமதி. உடனே, என்.எஸ்.கே டைமிங்காக ‘அத்தே, நீ கண்டிப்பா செத்தே, செத்தே’ என்பார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனைத் தேடி அந்த நாட்டு இளவரசி காதலிப்பதாகச் சொல்லி ஓடிவந்ததால் என்ன ஆகுமோ என ரசிகர்கள் பதற்றத்தில் இருக்கும்போது சர்காஸ்டிக்காக என்.எஸ்.கே அடிக்கும் கமெண்ட் ரசிகர்களுக்கு ஒரு ரிலீஃப். இதுபோல அலட்டிக்கொள்ளாமல், மிகக் குறைந்த கோடுகளில் ஒரு ஓவியத்தை வரைந்துவிடும் தேர்ந்த ஓவியன் போன்று அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகள் நகைச்சுவை வழங்கியவர்கள் என்.எஸ்.கே- மதுரம் இருவரும்.
அந்தச் சின்ன வயசில் அந்தக் காமெடி எனக்கும் புரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ரைமிங்காக ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் வீட்டுக்கு என் அத்தை வந்தார்கள். நான் ‘அத்தே’ என்றேன். உடனே எங்க அப்பா ‘அத்தே, நீ செத்தே, செத்தே’ என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அதில் இரட்டை அர்த்தம் (சிலேடை) இருந்தது. ஆனால் விரசம் கிடையாது. அதை அனைவருமே ஒளிவு மறைவின்றி ரசித்தார்கள். இதுதான் கலைவாணரின் ஸ்பெஷாலிடி.
இதே மதுரை வீரனில் மற்றொரு காட்சி! கலைவாணரும் மதுரமும் எம்ஜிஆரைப் பார்க்க மதுரைக்கு வைகை ஆற்றைக் கடந்து போகிறார்கள். அப்போது, மதுரம் “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லையே?” என்கிறார். உடனே. “ வை அண்டான்னானா? குண்டான்னானா? ‘வை’, ‘கை’ ன்னுதானே சொன்னான்!” என்று கலைவாணர் சொல்வார்.
புகைப்படம் நன்றி: நல்லதம்பி என் எஸ் கே
ஏறக்குறைய சாப்ளினை ஒப்புநோக்கக்கூடிய வகையில் அவரது நகைச்சுவை இருந்தது. இருவருமே சமகாலத்தவர்கள். இருவரது நகைச்சுவையிலும் ஒரு சமூக விமர்சனம் உள்ளீடாக இருக்கும். சமூக அவலங்களின் மீதான வலியில் இருந்து வெடித்துக் கிளம்புவதாக அவர்கள் காமெடி இருக்கும். சொல்லப்போனால் சாப்ளினுக்குப் பிறகு நூறு சதவீதமும் சமுக அக்கறையோடு நகைச்சுவையை வாரி வழங்குவதில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற நகைச்சுவைக் கலைஞன் உலக அளவிலேயே என்.எஸ்.கே. ஆகத்தான் இருப்பார் என நினைக்கிறேன். அதற்குக் காரணம் சாப்ளின் போன்றே கலைவாணரும் ஆளுமை நிறைந்தவர்.
என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தது நாகர்கோயில் அருகில் உள்ள ஒழுகினசேரி கிராமம். அங்கு சுடலைமுத்துப் பிள்ளைக்கும் இசக்கியம்மாளுக்கும் மகனாக 1908 நவம்பர் 29 அன்று பிறந்தார். அது அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. அங்கு நான்காம் வகுப்பு வரை படிக்கத்தான் அவரது குடும்ப வறுமை அனுமதித்தது. அதன்பிறகு வேலைக்குப் போகத் தொடங்கினார். சிறு வயதிலேயே பல வேலைகள் பார்த்தார். அதில் அவருக்குப் பிடித்த வேலை. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் வேலை. இடைவேளை நேரத்தில் சோடா விற்பார். மற்ற நேரங்களில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு நாடகங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். நாடகங்கள் இல்லாத நாட்களில் மற்ற பையன்களை அழைத்துக் கொண்டு கோயில் திடலில் அப்படியே நடித்துக் காண்பிப்பார். பாடல்களை அப்படியே பாடுவார். மற்றவர்களும் பாடவேண்டும். தவறு இருந்தால் திருத்துவார். அதுமட்டுமல்ல சில காட்சிகளை டைரக்டும் செய்வார்.
இப்படியாக அவர் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தபோது அவரது உறவினர் ஒருவர் ஒழுகினசேரி வந்தார். பையன் நாடகக் கொட்டகையே கதி என்று கிடப்பதையும், மற்ற நேரங்களில் கோயில் மைதானத்தில் பாடிக்கொண்டிருப்பதையும் பார்த்தார்; அவர் அங்குவந்ததும் அது மாதிரியான பையன்களைப் பிடித்துப் போவதற்குத்தான். அவர் டி.கே.எஸ் சகோதரர்கள் ஆரம்பிக்க இருந்த புதிய பாய்ஸ் கம்பெனிக்கு ஆள் பிடிக்க வந்தவர்தான். உடனே கிருஷ்ணனைக் கவ்விக் கொண்டுபோய் விட்டார். தனது 17ஆவது வயதில் டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சேர்ந்தார்.
துன்பத்தை மறைக்கும் சிரிப்புக் கலையை இயல்பாகவே கற்றிருந்தார். ஒரு நாள் நாடகக் கம்பெனியில் சங்கரன் அண்ணாச்சி (டி.கே.எஸ். சகோதரர்களில் மூத்தவர்) என்.எஸ்.கே. வுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பாட்டு சரியாக வரவில்லை. அந்தக் காலத்திலெல்லாம் ரிகர்சலில் ஒழுங்காகச் செய்யவில்லையென்றால் முதுகு பழுத்துவிடும். அல்லது நிமிட்டாம்பழம் கிடைக்கும். நிமிட்டாம்பழம் என்றால் தொடையில் கிள்ளுவது. சதையே பிய்ந்து ரத்தம் வருவது போல கிள்ளுவார்கள். என்.எஸ்.கே. வுக்கும் நிமிட்டாம் பழம் கிடைத்தது. வலி தாங்க முடியாமல் அழுதார்; ஆனால் அழுதாலும் பாடிக்கொண்டேதான் அழ வேண்டும். அவர் அழுதுகொண்டே பாடியது மற்ற சிறுவர்களுக்குக் கேலியும் கிண்டலுமாக இருந்தது. சங்கரன் அண்ணாச்சிஅந்தப் பக்கம் சென்றதும் கிண்டல் இன்னும் அதிகரித்தது. இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்று கிருஷ்ணன் யோசித்தார். நிமிட்டாம்பழத்தின் தாக்கம் இன்னமும் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தார். இதையே பாஸிடிவ் அப்ரோச்சுடன் பிளேட்டைத் திருப்பிப் போட்டார். எல்லாரும் அடி வாங்கியதுக்காக சங்கரன் அண்ணாச்சியைத் திட்டுவார் என்றுதான் எதிர்பார்த்தனர்.
ஆனால், "டேய்! ஏண்டா சிரிக்கிறீங்க. அண்ணாச்சிதானே அடிச்சாரு. பரவால்ல. இந்தப் பாட்டைக் கத்துக்கிட சங்கரதாஸ் சுவாமிகிட்ட அவரும் அடி வாங்கித்தானே இருப்பாரு? நானும் இனிமே இப்படி எத்தனையோ பேர அடிக்கத்தான போறேன். இதுக்குப் போயி சிரிக்கிறீங்களே” என்று கூறினார். இதைக் கேட்டதும் சக தோழர்களும் சிரித்தனர். இவ்வாறு சக நண்பர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு பகடியும் இருந்தது. அந்தக் கிண்டல் பார்வைதான் அவரது வாழ் முறையாக இருந்தது. வாழ்க்கை, நாடகம், சினிமா அனைத்துக்கும் இதுதான் அவரது ஃபார்முலா. சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் துயரம் நேரும் சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே பகடி செய்து கொள்வது. அப்போது சோகமும், துயரமும் லேசாகி விடுகிறது. மனிதகுல வரலாற்றில் நகைச்சுவையின் பங்கும் அதுதானே! கலைவாணர் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வெற்றி பெற்றார்.
டி.கே.எஸ் சகோதரர்களின் பால சண்முகானந்தா சபாவில் எம். ஆர். சுவாமிநாதன்தான் நகைச்சுவை வேந்தராகக் கோலோச்சி வந்தார். அவரும் பிறவி நகைச்சுவைக் கலைஞர். அவரைப் பற்றி தனிக் கட்டுரையாகப் பார்க்கலாம். அவர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நேரடியாகப் பாடம் கற்றவர். அவர் எங்கு சென்றாலும் சகல மரியாதையும் தரப்பட்டது, இருந்தாலும் அவரிடம் ஒரு கெட்ட குணம். எப்போது நாடகக் கம்பெனியை விட்டு ஓடிப் போவார் என்பது தெரியாது. இது டி.கே.எஸ் சகோதரர்களுக்கும் தெரிந்தே இருந்தது. அந்தச் சமயத்தில்தான் என்.எஸ்.கே வந்து சேர்ந்தார். அவரது காமெடி சென்ஸைக் கவனித்த டி.கே.சண்முகம் ‘எம்.ஆர்.சுவாமிநாதன் அண்ணாச்சியின் காமெடி பார்ட்டுகளை மனப்பாடம் செய்து வைக்கும்’படி அடிக்கடி கிருஷ்ணனுக்குச் சொல்லி வந்தார். எதிர்பார்த்தபடி அந்த நாளும் வந்தது. அன்று ‘மனோகரா’ நாடகத்தில் வசந்தனாகப் பைத்தியக்காரன் வேடத்தில் நடிக்க வேண்டிய சுவாமிநாதனை ஆளைக் காணோம். டி.கே.சண்முகம் சிபாரிசில் அந்த வேடம் கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் அந்த வேடத்தில் வெளுத்து வாங்கினார். அன்றுதான் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற நகைச்சுவை அரசு பிறந்தார். அன்று முதல் கம்பெனியின் அனைத்து காமெடி வேடங்கள் மட்டுமல்ல, புதிய நாடகங்களில் அவருக்காகவே காமெடி பாத்திரங்களை, ஸ்பெஷலாகத் தயாரிக்கும் நிலையும் உருவானது. இதற்குக் காரணம் சுவாமிநாதன் அண்ணாச்சியும், டி.கே.சண்முகமும் தான் என்பதை கிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தன்னை வளர்த்த கலைக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவராகப் பணியாற்றினார்.
கலைவாணர் வழங்கிய கொடையை எப்படியும் ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிடமுடியாது. அடுத்தவாரமும் கலைவாணர் ஆள்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக