சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-2

II
பிரான்ஸ்VSஇந்தியா
ஃபுகுஷிமா விபத்துக்குப்பிறகு

யுஎஸ் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் அணு மின் நிலையங்கள் மூலமாகப் பெறப்படும் மின் உற்பத்தியின் பங்கு ஏற்கனவே படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 19% சதவீதமாகமட்டுமே உள்ளது.  2008 நிலவரப்படி அங்கு 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே இயங்கின. ஒரு காலத்தில் அங்கு 253 அணுமின்நிலையங்கள் இயங்கின. அணுக் கதிரியக்க வெளிப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்க, மேலோங்க அங்கு பெருமாபாலன அணுமின் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

2011 இல் ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புகள், தீ மற்றும் புகை ஆகியவற்றால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதனால் யுஎஸ்சிலும் அணுமின்நிலையங்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மேலும் வலுவடைந்து வருகிறது. அமெரிக்க செய்தித்தாள் ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் தொடர்ச்சி இப்பிரச்சனைகளை எழுப்பிவருகின்றன. இதையொட்டி நாட்டில் இயங்கும் 104 அணு மின் நிலையங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்து மிகவிரிவான மறுஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று யுஎஸ் அணுக் கதிரியக்க ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந் நாட்டு அதிபர் ஒபாமா அணு மின் நிலையங்களுக்கு ஆதராவாக உள்ளார். ஆனால் யுஎஸ் பொதுமக்களைப் பொறுத்தவரை அணு மின்சாரத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 1979 இல் அங்குள்ள மூன்றுமைல் தீவு அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பினை ஒப்பிடும்போது ஜப்பான் அணு உலை விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆதரவு 36% ஆகக் குறைந்துள்ளது. அதாவது 64% பேர் அணு மின் நிலையங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் வெற்றி

மேற்குலகிலேயே அணுக் கதிரியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் வலுவாகப் பின்பற்றப்படும் நாடு பிரான்ஸ் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் ஒழுங்குமுறை விதிமுறைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டப்படும் தனித்தன்மை என்னவென்றால் தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதன் பிரிவுகள், விதிகள் மற்றும் அதன் செயல்பட்டு நெறிகள் ஆகியவற்றைத் தனித்தன்மையுடன் கட்டமைத்ததன் மூலம் அந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், பொது மக்கள் பங்கேற்பும் பிரிக்கமுடியாதபடி அதற்கான குறிப்பிட்ட சட்டங்களின்கீழ் பிணைக்கப்பட்டு அனைத்து கூறுகளும் சட்டமாக்கப்பட்டிருப்பது ஆகும். 

பிரான்ஸ் நாட்டில் 19 இடங்களில் சுமார் 58 அணு உலைகள் உள்ளன. அந் நாட்டின் மின் உற்பத்தியில் 80% அணு மின் நிலையங்கள் மூலமே உற்பத்தியாகின்றன. அங்கு 1970 முதல் அணுமின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கடைப்பிடிக்கப்படும் அணுக் கதிரியக்கக் கொள்கைகளுக்கு பிரான்ஸ் மக்களிடமும், ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. முக்கியமாக, அணுக் கதிரியக்க பாதுகாப்பு முகமை உச்சபட்ச சுயேட்சையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதே இந்த மக்கள் அங்கிகாரத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. அவற்றின் சில தனிச்சிறப்பான விதிமுறைகளை இந்தியச் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது இந்திய நிலையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

டிஎஸ் என் சட்டமும் அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு முனையமும் ஏஎஸ்என்)

ஏஎஸ்என்னின் முக்கியத்துவம்

முதல் அணுக் கதிரியக்க பாதுகாப்பு முகமை 1973 இல் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகத்தான் தொடங்கப்பட்டது. இது அதே துறையில் நீடித்தபோதும் 1991 இல் சுற்றுச்சூலியல் அமைச்சகத்துக்குப் பதிலளிக்கப்படும் வகையில் சுற்றுச்சூலியல் அமைச்சகத்தின் செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டது. 2002 இல் குடிரசுத் தலைவர் உத்தரவின்கீழ் அணுப்பாதுகாப்பு மற்றும் கதிரியக்கக் காப்புக்கான தலைமை இயக்குனரகம் (டைரட்க்டரேட் ஜெனரல் ஃபார் நியூக்ளியர் சேஃப்டி அண்ட் ரேடியேசன் புரடக்சன்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் அணு மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பில் தொழிற்துறை மற்றும் சுற்றுச்சூலியல் அமைச்சகங்கள் பொறுப்பாக்கப்பட்டன. பின்னர் ஜூன்13, 2006 அன்று குடியரசுத் தலைவர் முன்மொழிதலின் அடிப்படையில் அணு ஆற்றல் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு முனைய சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (டிஎஸ்என் சட்டம் 2006.)இச்சட்டத்தின் கீழ் அணுக்கதிரியக்க பாதுகாப்பு முனையம் ஒரு சுயாட்சையான அதிகார அமைப்பாக்கப்பட்டது.  இனி இந்த அமைப்பு எந்த அமைச்சகத்துக்கும் கட்டுப்படவேண்டியதில்லை; ஆனால், நாடாளுமன்றத்துக்குப் பதில் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. 
இதன் மூலம் அணு ஆற்றல் துறையை வளர்த்தெடுக்கும் (அணு மின் நிலையங்களுக்குத் துதிபாடும்) எந்த அரசு அமைப்புகளுக்கும் கட்டுப்படாமல் வெளிப்படையாகச் செயல்படும் சுயேட்சைத் திறன் முழுமையாக அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு முனையத்துக்கு வாய்த்தது.  அணுப் பாதுகாப்பு மற்றும் கதிரியக்கக் காப்புத் துறையில் துறைபோகிய வல்லுனர்களைக் கொண்ட ஐந்து உறுப்பினர்கள் இந்த (டிஎஸ்என்) வாரியத்துக்கு சட்டப்படி நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். மற்ற இரு உறுப்பினர்கள் தேசிய சட்டசபைத் தலைவர் மற்றும் செனட் சபைத் தலைவர்களால் முறையே நியமிக்கப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். 

நாடாளுமன்றம், சட்டம் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது இந்திய நிலைகளை நாம் சரியாக மதிப்பிட்டு ஆக வேண்டியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜனநாயகங்களுக்கு இணையாக இந்திய ஜனநாயகமும் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், யதார்த்தத்தில் - குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகால தனியார்மயமாக்க அமலாக்கத்தின் பின்னணியில் நமது ஜனநாயகம் அன்னிய - குறிப்பாக வல்லரசுகளின் பொருளாராத நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு பொருளாதாரமாக மாறிவருகிறோம். அதிலும் குறிப்பாக அணு மின் நிலையங்களை இந்தியாவில் அமைப்பதில் ஆட்சியாளர்களிடம் அசாதரணமான மதிமயக்கம் தென்படுகிறது. வளர்ந்த நாடுகளில் குறிப்பாக தொழிற்புரட்சியின் மூலமாக உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெரமனி போன்ற நாடுகளில் அந்நாடுகளின் குடிமக்களைப் பொருத்தவரை வேறு எங்குமில்லாத அளவுக்கு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அடிப்படையான சமூகப் பாதுகப்புகளுடன் குறிப்பாக தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பு, சூலியல் பராமரிப்பு (உள்நாட்டில் பல்லுயிர்ப் பெருக்கச் சமன்பாடு சீர்குலையாமை) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தற்காலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அங்குள்ள குடிமைச் சமூகங்கள் அரசு நிர்வாகத்துடன் இவ்விஷயங்களில் சமரசங்கள் செய்து கொள்வதில்லை. ஆனால் இங்கு இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடிய சூழல் தற்போது இல்லை. 
இந்நிலையில் இந்தியாவிலும் ஒரு திறனுள்ள, சுயேட்சையான அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பினை அமைக்கமுடியும் என்று கூறினால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகத்தான் இருக்கும். அது மிகுந்த சவால்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். நாட்டில் புதிய அணுமின்நிலையங்கள் அமைக்கப்படுவதற்காகத் தொடர்ந்து லாலி பாடிவரும் முகமை அமைப்புகளின் நடுவே அணுப் பாதுக்காப்புக்காக ஒரு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என்பது பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக இருக்க முடியாது. அணுமின்நிலைய லாபிகளின் நெருக்குதல்களுக்குப் பணிந்துபோகாத ஒழுங்குமுறை வல்லுனர்களைக் கொண்டதாக அந்த அமைப்பு இருக்கவேண்டியதுதான் மிக முக்கியமாகும். திறனுள்ள, சுயேட்சையான ஒழுங்குமுறை அமைப்பு என்பது சட்டப்படியும், நடைமுறைப்படுத்தத்தக்கதாயும் இருக்கவேண்டும். அரசியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கு, நெருக்குதல் அல்லது மறைமுக மிரட்டல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக அந்த ஒழுங்குமுறை அமைப்பு இருக்கவேண்டியது அவசியம். துரதிருஷ்டவசமாக, தற்போது நமது நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டுள்ள அணுக்கதிரியக்கப் பாதுகப்பு அதிகாரமுனைய சட்ட முன்வரைவு, 2011, இந்தத் தார்மிக நெறியை பல வழிகளில் மீறுகிறது. 

யுஎஸ் போன்ற சில நாடுகளில் ஒழுங்குமுறை அமைப்புகள் மிகப் பெரியதாகவும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தமக்குத் தாமே கொண்டதாகவும் இருக்கின்றன. இருந்தபோதிலும், பிரான்சில், ஒப்பீட்டளவில் சிறிய அடக்கமான அமைப்பாகவும் அதேநேரத்தில் அதன் பணிகளை நிறைவு செய்ய தொழில்நுட்ப ஆதரவு அமைப்புகளின் உதவியை நாடக்கூடியதாகவும் இருக்கின்றன. இதையொட்டி, பிரான்ஸ் நாட்டின் ராணுவ, சுற்றுச்சூழல், தொழில்துறை, ஆய்வு மற்றும் சுகாதார அமைப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கதிரியக்கப் பாதுகாப்பு மற்றும் அணு உலைப் பாதுகாப்புக்கான பயிலகத்தின் (இன்ஸ்டிடியூட் ஃபார் ரேடியேசன் புரடக்சன் அண்ட் நுயூக்ளியர் சேஃப்டி - ஐஆர்எஸ்என்) உதவியையே நாடவேண்டியுள்ளது. ஆனால் ஐஆர்எஸ்என்இல் பணியாற்றும்1,650 ஊழியர்களில் 1,000 பேர் பட்டதாரிகள். அவர்கள் ஏஎஸ்என்னுக்கு மட்டுமல்லாது ஏஎஸ்என் உரிமம் பெற்ற ஈடிஎஃப், அரீவா போன்ற அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவேறு தொழில்நுட்ப, அரசு அமைப்புகளுக்கும் சேவைகளை வழங்குபவைகளாக உள்ளன. அணு உலைப் பாதுகாப்பு, கதியக்கக்காப்பு, அணு உலை நிர்மானங்களில் பாதுகாப்பு மற்றும் கதிரியக்கப் பொருள்களை எடுத்துச் செல்வதன் பாதுகாப்பு போன்ற பரப்புகளிலும் சேவைகளை வழங்கிவருகின்றன. 
இச்சூழ்நிலையில் ஏஎஸ்என் மற்றும் அணுமின் நிறுவனங்கள் ஆகிய இருதரப்பிற்கும் ஒரே நேரத்தில் ஐஆர்எஸ்என் சேவைகளை வழங்கியபோதிலும் ஐஆர்எஸ்என் நலன்கள் அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக்கு முரணாகச் செல்லாத அளவுக்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந் நோக்கத்தில் (ஒவ்வொருமுறையும்) இவ் விரு அமைப்புகளுக்கும் இடையே விரிவான புரிந்துகொள்ளல் உடன்பாடுகள் கையெழுத்தாகின்றன. இதன்படி ஏஎஸ்என் உரிமம் பெற்ற எந்த அணு மின் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை ஐஆர்எஸ்என் வழங்கமுடியாது. இது அல்லாத முழுமையும் ஆய்வுப் பணிகளை மட்டுமே ஐஆர்எஸ்என் மேற்கொள்ளமுடியும். மேலும் ஏஎஸ்என் அமப்புக்காகப் பணியாற்றும் எந்த ஐஆர்எஸ்என் ஊழியரும் எக்காலத்திலும் அணுமின் துறைக்காகவோ அமைச்சகத்துக்கோ பணியாற்ற முடியாதபடிக்கு ஐஆர்எஸ்என் தற்காப்பு அமைப்புமுறைகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவிலோ, அணுக்கதிரியக்க ஒழுங்குமுறை அமைப்பு (ஏஈஆர்பி) இத்தனைய அறிவியல் மற்றும் தொழிநுட்பத் தகுதிகள் ஒருங்கமைந்த ஆற்றலையோ அல்லது தேவைப்படும் பாதுகாப்பு மறுசிந்தனைகள் மற்றும் ஆற்றலை வார்த்தெடுக்கப்பதற்கான அனுபவங்களையோ பெற்றிருக்கவில்லை. அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் அணுப்பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழுக்களின் 95% உறுப்பினர்கள் மத்திய அரசின் அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களாகவே நியமிக்கப்படுகின்றனர். அதாவது இத்துறையின் இயங்கும் அணுமின்நிலையங்களுக்கு ஆதரவான பாபா அணு ஆய்வு மையம் அல்லது அணு மின் கழக நிறுவனங்களில் இவர்கள் பணியாற்றிவர்களாக இருப்பவர்கள். 
இந் நிறுவனங்கள் பச்சையாக அணு மின்சாரத்திற்கு ஆதரவாக லாலி பாடக் கூடியவை. இந் நிறுவனங்களில் 30-40 ஆண்டுகள் பணியாற்றி, தனது ஓய்வூதியப் பலன்களையெல்லாம் அவற்றின் தலைமையகமான அணுசக்தித்துறை அமைச்சகத்திடமிருந்து பெற்று அனுபவித்துவரும் அலுவலர்களை அணுப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுக்களில் நியமித்தால் அவர்கள் அணுசக்தித்துறை கூற்றுகளுக்கு முரணாக, பாகுபாடு பாராமல், காய்தல்- உவத்தல் இன்றி செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க இயலாது என்று ஏ.கோபாலகிருஷ்ணன் தமது கட்டுரைத் தொகுப்பில் கூறுகிறார். மேலும் இந்தியாவில் அணுசக்தித்துறை சாராத அணு ஆற்றல் பொறியாளர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் அணுப் பொறியியல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கவோ, இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளவோ நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை இந்திய அணுசக்தித்துறை ஆதரிப்பதில்லை, ஊக்குவிப்பதில்லை, அனுமதிப்பதில்லை என்கிறார் அவர். இத்தகைய நிலைமை அண்மைக்காலத்தில் ஏற்படவும் போவதில்லை. தற்சமயத்தில் அணுசக்தித்துறை சாராத அணு ஆற்றல் பொறியாளர்களையே இதுபோன்ற கதிரியக்கப் பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்களில் பிரான்ஸ் போன்று கடுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்கீழ் நியமிக்கவேண்டும் என அவர் கூறுகிறார்.

அணுக்கொள்கைக்கான கவுன்சில்(சிபிஎன்)

ஏப்ரல் 2008இல் அணுக் கொள்கைக்கான கவுன்சில் (கவுன்சில் ஃபார் நியூக்ளியர் பாலிசி சிபிஎன்) பிரான்சில் உருவாக்கப்பட்டது. அணு ஆற்றல் கொள்கை தொடர்பாக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஏற்றுமதி, பன்னாடுகள் ஒத்துழைப்பு, தொழில் மற்றும் ஆற்றல்துறைக்கான கொள்கைகளிலும், ஆராய்ச்சிகள், ராணுவம், தற்காப்பு மற்றும் சூலியல் பாதுகாப்புக்கான கொள்கைகளிலும் இந்நெறிமுறைகள் உறுதியாக அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் இக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் குடியரசுத் தலைவர் தலைமையிலான இக்குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குவர். பிரதமர், எரிசக்தி, பொருளாதாரம், தொழில், அன்னிய வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் நிதுத்துறை ஆகிய துறைகளின் அமைச்சகர்களுடன் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சரும், ராணுவத் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்புக்கான தலைமை இயக்குனர் மற்றும் அணு ஆற்றல் ஆணையத் தலைவர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். இக்குழுவின் தலைவர் விரும்பும் பட்சத்தில் அணு ஆற்றல் துறையில் தகுதிவாய்ந்த முன்னணி நபர்கள் மற்றும் அணுமிந்துறை தொழிலதிபர்கள் ஆகியோரின் தாக்கீதுகளையும் சிபிஎன் விசாரனக்கு ஏற்கும். நாட்டின் ஒட்டுமொத்தமான ஆற்றல் மற்றும் மின் தேவைகளை நிறைவுசெய்யும் வரம்புக்குட்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த அணு மின் கொள்கையை விவாதிப்பது போன்றவை சிபிஎன்னின் இதர நடவடிக்கைகளில் அடங்கும். 
அணு மின் ஆற்றல் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், தேச நலனை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சியினரை இது தொடர்பான விவாதங்களில் ஆலோசகர்களாக, உறுப்பினர்களாக உட்படுத்திக்கொள்ளும் அதிகாரம், ஏற்கனவே இயங்கும் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்யும் அதிகாரம் போன்றவற்றை இக்குழு அனுபவிக்கிறது. தற்போது இந்தியாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அணுக்கதிரியக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரமுனைய மசோதாவிலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அழுத்தம் தந்திருப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு இத்தகைய அணுப் பாதுகாப்புக் கவுன்சில் ஒன்றை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் யதார்த்தம் என்னவென்றால் அரசு விரும்பும் வகையில் அதன் அணு ஆற்றல் திட்டங்களை நிறைவேற்றித்தரும் குறுகிய நலன்களின் அடிப்படையிலேயே இந்த என்எஸ்ஆர்ஏ உருவாக்கப்பட உள்ளது. அரசின் அணுமின் கொள்கை குறித்து நாடு தழுவிய ஒப்புதல் எதுவும் பெறாத நிலையிலும், அணு உலைகளை இறக்குமதி செய்யும் கொள்கையில் ஒரு அறிவுப்பூர்வமான ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்திட்டம் எதையும் உருவாக்க முடியாத நிலையிலும் ஒரு அரசு இதுபோன்ற அணு பாதுகாப்புக் கவுன்சில் எதையும் உருவாக்கிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது என அணுப்பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ் போன்று இந்தியாவிலும் கேபினட் அமைச்சர்கள் மட்டத்திலான குழு அமைக்கப்பட வேண்டும் என்பதே ஏ.கோபாலகிருஷ்ணன் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் இக்குழு என்எஸ்ஆர்ஏவின் நிர்வாகச் செயல்பாடுகளில் எந்த விதமான கட்டுப்பாடுகளையும் திணிக்கக்கூடாது.

மக்கள் அணுகலும் வெளிப்படைத்தன்மையும்


பிரான்சின் டிஎஸ் என் சட்டம் 2006 இன் விரிவான பிரிவு -3 இன் தலைப்பு 'அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் தகவல்' என்பதாகும். இதன்கீழான 18 ஆவது சரத்து, 'அணுக் கதிரியக்கத் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையாய்வுகளின் முடிவுகளை பொதுமக்களுக்குத் தகவலளிக்கும் பொறுப்பு அரசைச் சார்ந்ததாகும்' என்று கூறுகிறது. அதேபோல, 'உரிமம் பெற்ற எந்தவொரு அணு ஆற்றல் நிறுவனத்திடமிருந்தும் அந் நிறுவனத்தில் வெளியேறும் அயனைஸ்டு கதிரியக்க அபாய வாய்ப்புகள் குறித்தும், இதுபோன்ற கதிரியக்க அபாயங்களில் இருந்து பொதுமக்களைக் காக்க அந்நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைக் கேட்டுப்பெறும் உரிமை ஒவ்வொரு பொதுமக்களுக்கும் உண்டு' என 19-1 கூறுகிறது. இவ்வாறு கோரப்படும் தகவல்களை அளிக்க மறுக்கும் பட்சத்தில் ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளின்படி நிர்வாகவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் பிரிவு 19-2இல் வழங்கப்பட்டுள்ளது.
அணுக் கொள்கையின் வெளிப்படத்தன்மையை முழுமையாகச் செயல்படுத்தும் விரிவான செயல்முறைகள் மற்றும் அதற்கான உபகரனங்கள் குறித்து ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளதே இந்த பிரெஞ்சுச் சட்டத்தின் சிறப்பம்சம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கான பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் ஓட்டைகள் அகற்றப்பட்டு, அணுமின் நிறுவனங்களும், அரசுத் துறைகளும் முழுமையாக அவற்றின் தவறுகளுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளன. இதையொட்டி படிப்படியாக மேற்கொள்ளவேண்டிய சட்டப்பூர்வமான தீர்வுகளை பிரிவு 22 வழங்குகிறது. 
அணுமின் நிலையங்கள் நிறுவப்படும் ஒவ்வொரு பகுதியிலும், அதன் சுற்றுப்புறங்களையும் சார்ந்த உள்ளூர் தகவல் குழுக்களை (லோக்கல் இன்பர்மேசன்ஸ் கமிட்டி) அமைப்பது முதலாவது சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும். அப்பகுதி உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், அந்தப் பகுதி உள்ளடங்கிய நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள், உள்ளூர் பொருளாதார, வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள், உள்ளூர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளூர் மருத்துவர்கள்  மற்றும் அப்பகுதியில் இயங்கும் சுற்றுச்சூலியல் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளிட்ட பரவலான பிரதிநிதிகளிக் கொண்டதாக அக்குழுக்கள் அமைகின்றன.
ஒவ்வொரு குழுவும் மாவட்ட நிர்வாக ஆட்சியர் அல்லது அவருக்கு நிகரான அந்தஸ்தில் அமையும். இவற்றில் ஏஎஸ்என் பிரதிநிதிகளும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆலோசகர் தகுதியில் இக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். இத்தகைய உள்ளூர்க் குழுக்கள் தங்கள் நோக்கங்களை நிறைவுசெய்யும்விதமாக அப்பகுதியில் கதிரியக்கம் மற்றும் அந்நிறுவனம் தொடர்பாக ஏற்படும் நோய்ப்பரவல் அபாய வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், அங்கு இத்தகைய நிறுவனம் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூலியலில் ஏற்படும் பாதிப்புகளை அனுமானிக்கவும் தகுதியான ஆலோசனைச் சேவைகளைப் பெறமுடியும், அதற்கான செலவுகள் அனைத்தையும் மாநில அல்லது உள்ளூர் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர்க் குழுக்களால் கோரப்படும் பொருத்தமான தகவல்கள் அனைத்தும் குறித்த காலவரம்புக்குள் குறிப்பிட்ட அணு உலை நிர்வாகங்களால் வழங்கப்படவேண்டும். 

அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக்கான தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தேசிய அளவிலான உயர்மட்டக் குழு ஒன்று ஒரு சுயேட்சையான அமைப்பாக இச்சட்டப் பிரிவு 23இன்கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியில் அமைந்த அல்லது அமையவுள்ள அணு உலைத் திட்டங்களின் பாதுகாப்பு குறைத்த எந்த அம்சம் குறித்தும் ஆய்வு செய்யும்படி அணுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சகங்கள், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் உள்ளூர்க் குழுக்களால் இக்குழுவினை பணிக்கும் அதிகாரம் இந்த அனைத்து குழுக்களுக்கு சமமாக வழங்க்கப்பட்டுள்ளன. இந்த உயர்மட்டக் குழுவின் கருத்துருக்கள் மற்றும் ஆண்டறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படுகின்றன. இக்குழு கோரும் அனைத்து தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அணு மின் நிலையங்களுக்கு ஆதரவாக செயல்படும் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.

தொடரும்..
இந்தியாVS கனடா
அப்பணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக