நவீன இலக்கிய – நாடக ஆர்வலர்களின் உலகங்கள்….
இப்போதெல்லாம் வீட்டுக்குள் இருந்தே உலகைத் தெரிந்து கொள்கிறோம்.
தேடு பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும், உலகின் அத்தனை தரவுகளும்,
தகவல்களும் உங்கள் கணினியின் திரைக்குள் வந்து விழுந்து விடும். அது புத்தகமாக இருந்தாலும்,
சினிமாவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் சில நொடிகள் காத்திருந்தால் போதும்.
ஆனால் ஒரு காலத்தில் உலக சினிமாவோ, புத்தகமோ உலகப் புகழ் பெற்ற
ஓவியர்களின் ஓவியங்களோ அல்லது வெளி மாநில, அயலகக் கலைஞர்களின் இசை, நடன, நாடக நிகழ்வுகள்
போன்றவை பெருநகரவாசிகள் மட்டுமே அணுகக்கூடியவையாக இருந்தன.
இலக்கிய ஆர்வமும் கலைத்தாகமும் கொண்ட தமிழனுக்கு 1980-களில்
சென்னை மட்டுமே புகலிடமாக இருந்தது. கலை ஆர்வலர்களுக்கு வளர்ந்து வரும் சென்னையின்
வேகம் அலர்ஜியாகத்தான் இருந்தது என்றாலும் அறிவுப்பசிக்கு அதே சென்னைதான் புகலிடமாக
இருந்தது என்பதால் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது சாத்தியமில்லாததாகத்தான் இருந்தது;
இருக்கிறது.
1980-களில் கலை ரசிகர்களின் பாரீஸ் நகரமாக இருந்த சென்னை குறித்த
சில காட்சிகள் – எனது அனுபவத்தில்…
நாடுகளுக்கான பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஐசிசிஆர்
(கலாசார உறவுகளுக்கான இந்தியக் குழு) என்ற அமைப்பு உலகின் தலைசிறந்த இசைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், நடனக் குழுக்களை அழைத்துப் பெரு
நகரங்களில் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்கள்) நிகழ்வுகளுக்கு
ஏற்பாடு செய்வார்கள். சில அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள். மேலும் முதலில் வருபவர்களே முன் வரிசையில் அமர முடியும். இதற்கான
தகவல்களும் பகிரங்கமாக அறிவிக்கப்படாது. அத் தகவலை முன் கூட்டியே அறிந்தால் எல்டாம்ஸ்
சாலையில் இருந்த ஐசிசிஆர் அலுவலகத்தில் கியூவில் நின்று அழைப்பிதழ் பெற்று என்ன தலை
போகிற வேலை இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு முன்னதாகவே இருக்கை பிடித்து உன்னத
நிகழ்வுகளைப் பார்ப்பார்கள். இதேபோல மாக்ஸ் முல்லர் பவன், அல்லயன்ஸ் பிரான்சைஸ், பிரிட்டிஷ்
கவுன்சில், ரஷ்ய கலாசார மையம் போன்ற தூதரகங்களும் அவர்கள் நாடுகளின் உன்னத சினிமாக்கள்,
நாடகங்கள், இசை – நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இவற்றையெல்லாம் பார்க்க, அனுபவிக்கக்
கொடுத்து வைத்த ஒருவன் உண்மையிலேயே உலக ரசிகனாக ஆகிவிட முடியும். எழும்பூர் மியூசியம்
அரங்கு, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வாணி மகால், பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர்
ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற சபாக்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன.
ஊரிலிருந்து சென்னைக்குப் பஸ் ஏறும் இலக்கியவாதியோ இலக்கிய ஆர்வலரோ
சென்னையில் எங்கு தங்குவது என்ற கவலை இல்லாமல் தி.நகரில் இருந்த 14, சாரி தெரு, மயிலாப்பூர்,
4, பிச்சுப்பிள்ளைத் தெரு, பெசன்ட் நகர் வண்ணாந்துறையில் இருந்த குகை என்றழைக்கப்பட்ட
இடம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் போன்ற இடங்களில்
தங்கலாம். வந்த வேலை முடியும் வரை அல்லது ஒரு வேலை கிடைக்கும் வரை டீயோ பன்னோ இருப்பதைப்
பகிர்ந்து கொள்ள நண்பர்கள், தோழர்கள் தயாராக
இருந்தனர். (இவை தவிர வேறு சில இடங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும்.) இந்த இடங்கள்
அன்றைய சென்னையின் கலாசார அரசியலின் செயல்பாட்டுக் களங்களாகவும் விளங்கின.
திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் 16ஆம் எண் மேன்சனின் 6
ஆம் நம்பர் அறையில் வசித்த சின்னக்குத்தூசி அறை, பிரபஞ்சன் அறை, எஸ். வி. இராஜதுரை
வீடு, சென்னை புக் ஹவுஸ், ராசகிளி, வயல், விடியல் அச்சகங்கள் போன்ற இடங்கள் மாலை நேரங்களில்
இலக்கிய – கலை ஆர்வலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களாக இருந்தன.
இன்று புகழ் பெற்ற இயக்குனர்களாவும் திரைக்கலைஞர்களாகவும் வளர்ந்துள்ளவர்களில்
பலர் 1970-களின் பிற்பகுதியில் தொடங்கி 1980கள், 1990களில் இயங்கிய சென்னை திரைப்படச்
சங்கம் (Chennai Film Society) திரையிட்ட உலக சினிமாக்களைப் பார்த்து நவீன சினிமாவை
புரிந்துகொண்டவர்கள்தாம்! ஒரு திரைப்படக் கல்லூரிக்கு இணையான பணியை சென்னை திரைப்படச்
சங்கம் ஆற்றியிருக்கிறது. ஃபிரெஞ்சு புதிய
அலைப் படங்கள், ஐரோப்பிய நவீன சினிமாக்கள் முதல் லத்தீன் அமெரிக்கச் சினிமாக்கள், கீழைய
சீன, ஜப்பானிய, கொரிய இயக்குனர்களின் படங்கள் என சென்னையில் இயங்கும் அனைத்து நாடுகளின்
தூதரகங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது வெளிவரும் சிறந்த உலகப்படங்கள் மட்டுமல்லாது
சிறந்த இந்தியப் படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். அது மட்டுமல்லாது விவாதங்களையும்
ஏற்பாடு செய்தனர். கோடார்ட், பெர்க்மென், தாக்கோவ்ஸ்கி, அகிரோ குரோசவா, ரித்விக் கட்டக்,
நகிஷா ஒஷிமா, ஜான் ஆபிரகாம், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சத்யஜித் ரே, அரவிந்தன்
போன்ற எண்ணற்ற இயக்குனர்களின் தொகுப்பாக ரெட்ராஸ்பெக்டாக திரையிட்டதால் சலனங்கள் இன்னமும்
அடங்கவில்லை. இதெல்லாம் மதுரை தவிர சென்னைக்கு வெளியே அப்போது சாத்தியமில்லை. தமது
ஆதர்ஷ இயக்குனர்களின் ரெட்ராக்ஸ்பெக்ட் படங்களைப் பார்க்க வெளியூர்களிலிருந்து வந்து
பார்த்துப் பிறவிப்பயன் அடைந்து விட்டதாகச் சென்ற சினிமாக் காதலர்களும் உண்டு.
சென்னையில் இயங்கும் கன்னிமரா பொது நூலகம், மாக்ஸ் முல்லர் பவன்
நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை இலக்கிய
சங்க நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.
கண்ணன் நடத்திய மார்க்ஸ் லைப்ரரி, பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம், அண்ணா
அறிவாலய நூலகம், சென்னை பல்கலைக்கழக நூலகம் போன்றவை அறிவுப் பெட்டகங்களாக விள்ங்கின.
இவற்றில் ஒன்றிரண்டு நூலகங்கள் தவிர மற்ற நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை
எடுத்து வந்து வாசிக்க முடியும்.
பேராசை கொண்டு பல நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து தலையணை
சைஸ் புத்தகங்களை எடுத்து ஜோல்னா பை தாங்காமல் சுமந்ததால் உருவான தோள் வலி சுகமான சுமை!
80களில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய லேண்ட் மார்க் புத்தகக்கடை நவீன இலக்கியங்களை
உடனுக்குடன் அறிமுகம் செய்துவைப்பதில் முக்கியப்பங்காற்றியது.
நவீன நாடகங்களின் சோதனை முயற்சிகள் அரங்கேறும் இடமாக சென்னை
இருந்தது. அப்போதெல்லாம் சென்னைக்கு வெளியே நவீன நாடகங்களைப் பார்ப்பது அபூர்வம்.
70களில் தொடங்கிய கூத்துப்பட்டறை 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் சென்னை தீவுத்திடலில்
இருந்த சிற்றரங்கில் வாரம் தோறும் நாடகங்கள் நடத்தியது. இணையாக வீதி, பரீக்ஷா, சென்னைக்
கலைக்குழு, பல்கலை அரங்கம், ஆடுகளம், ஐக்யா போன்ற குழுக்களும் இயங்கின. தவிர உலகப்
புகழ்பெற்ற முக்கிய நாடகக் கம்பெனிகள் இந்தியப் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை நகரை
மறப்பதில்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹே மார்க்கெட் தியேட்டர் கம்பெனி உள்ளிட்ட பல
நாடகக் குழுக்கள் சென்னையில் நிகழ்த்திய நாடகங்கள் நவீன நாடகத்தின் புதிய பரிமாணங்களை
அறிமுகம் செய்து தமிழ் நவீன நாடகங்களை செழுமைப்படுத்தின.
சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கிய லலித் கலா அகாதமி நவீன ஓவியக்
கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். கலை ஆர்வலர்கள் மாலையில் கூடும் இடமாகவும் லலித் கலா
அகாதமி இருந்தது; இருக்கிறது.
ஆனால், முன் சொன்ன பல இடங்கள் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக