சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 5 மே, 2018

மார்க்ஸ் 2.00



1980களின் இறுதியில் சோஷலிச முகாம் சிதறுண்டபோது மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்பது நிரூபனம் ஆகிவிட்டதாக அடித்துக் கூறினர். மார்க்சியத்தை உயிராகக் கொண்டவர்களில் ஒரு பகுதியினர்கூட இதனை நம்பத் தொடங்கினர். மார்க்ஸ் கூறிய வழிமுறைகளில் அல்லாமல் வேறுவழிகளில் மார்க்சியத்தை அடைய முடியுமா என்றெல்லாம்கூட ஆராய்ச்சிகளில் இறங்கினர். ஆனால், மார்க்சியத்துக்கு அழிவில்லை என்பதை மூலதனவாதிகள் வாயாலேயே மார்க்ஸ் நிரூபித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா கடும் பொருளாதார மந்தத்தைச் சந்தித்தபோது முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் கதி கலங்கினர். இந்த பொருளாதார மந்தம் இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் அமெரிக்கா என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று பயந்தனர். அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் சீரழிந்தால் அது தொடர்ந்து வல்லரசாக நீடிக்க முடியாது; சோஷலிச முகாம் அழிவுக்குப் பின் ஒரே ஏகாதிபத்தியமாகக் கோலோச்சிய அமெரிக்காவுக்குத் தொடை நடுங்கத் தொடங்கியது. அப்போது அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து முதலாளிய நாடுகளின் பொருளாதார அறிஞர்களும் தஞ்சமடைந்தது மார்க்ஸிடம்தான். பொருளாதாரம் குறித்து மார்க்ஸும், ஏங்கல்ஸும் எழுதிய புத்தகங்களை வரி, வரியாக வாசித்தனர். முதலாளியம் முழுமையான வடிவம் பெறாத காலத்திலேயே மூலதனத்தின் தோற்றம் அதன் வளர்ச்சிப்போக்குகள், சந்திக்க நேரும் நெருக்கடிகள் குறித்து மார்கஸ் - ஏங்கல்ஸ் கணித்த கணிப்புகள் அப்படியே மெய்ப்பிக்கப்பட்டு வருவதைக் கண்டு மெய் சிலிர்த்தனர். மார்க்ஸியத்தை ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்ட மூலதனவாதிகள் தங்கள் வாயாலேயே மார்க்ஸைப் புகழ்ந்தனர். ஊடகங்கள் திடீரென அளித்த முக்கியத்துவத்தால் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட அமெரிக்க இளைஞர்கள் மார்க்ஸ்மீது கவனம் கொள்ளத் தொடங்கினர். உலகம் முழுவதுமே முதலாளிய வாதிகளும் அல்லாதவர்களும் மார்க்ஸ் மீது கவனம் கொண்டனர்.  
அதுதான் மார்க்ஸின் மேதமை!
அவரது முழுப்பெயர் கார்ல் மார்க்ஸ். அவரது 200 ஆவது பிறந்த நாளை இன்று உலகம் முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அவரது மூலதனம் நூல் வெளியாகி 150ஆவது ஆண்டும், ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டும் ஆகும்.
ஐரோப்பாவில் தொழில் புரட்சி வெற்றிபெற்ற பின்னர் அங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. நிலங்களிலிருந்தும் பண்ணிகளிலிருந்தும் விரட்டப்பட்ட ஏழைகள் தொழிலாளிகளாயினர். முன்னர் இரண்டு வேளை உணவுக்காக போராடியவர்கள் இப்போது ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே போராட வேண்டியிருந்தது. முன்னராவது ஏதாவது உழைப்புக்கருவிகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது உழைப்பைத் தவிர உடமையேதுமற்றவர்களாக மாறினர். முதலாளித்துவம் முந்தைய ஆளும் வர்க்கங்களைக் காட்டிலும் கொடூரமாகத் தொழிலாளர்களைச் சுரண்டியது.
இத்தகைய கொந்தளிப்பான நிலையில் ஜெர்மனியில் டிரையர் என்ற நகரில் ஒரு யூத குடும்பத்தில் கார்ல் மார்க்ஸ் 1818 மே 5ல் பிறந்தார். உண்மையில் மார்க்ஸ் ஒரு மகா உன்னதமான கவிஞனாக உருவாகியிருக்க வேண்டியவர். ஜெர்மானிய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் கடைந்து கிடைத்த அமிழ்தத்தைப் பருகிய போதையில் வெறிகொண்டு கவிதைகள் எழுதினார். அவரது கவிதைகளுக்காக சக இளைஞர்களால் கொண்டாடப்பட்டார். ஆனால் அவரை சுற்றிக்காணப்பட்ட அவலமான சமூக வாழ்க்கை அவரை பொருளாதார, தத்துவம், அரசியல் துறைகளை நோக்கித்தள்ளியது. மார்க்ஸ் பார்வைக்குக் குரூரமானவர் என்று கூறுவதுண்டு. ஆனால், அவரது மனம் முழுவதும் பேரன்பால் நிறைந்திருந்தது. அவரது அன்பு அவருக்கு முன் தோன்றிய மார்க்க ஞானிகளான கிறிஸ்து, புத்தர் போன்ற ஞானிகளின் பேரன்புக்கு  நிகரானது.
மார்க்ஸ் இளம் பருவத்திலேயே உலகளாவிய பார்வை கொண்டிருந்தார். தொழில் புரட்சியைத் தொடர்ந்து உருவான முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவும். முதலாளித்துவம் தன்னை வளர்த்துக்கொள்ள இதற்கு முன் இல்லாத அளவுக்கு சுரண்டல்களில் ஈடுபடும். இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் புரட்சி செய்து தொழிலாளி வர்க்க ஆட்சி அமைக்கும். அதில் தனி உடமை ஒழிக்கப்படும். அது சோஷலிச சமுதாயமாக உருவாகும். சோசலிச சமுதாயத்தில் இருந்து கம்யூனிச சமுதாயம் மலரும். அது ஒரு பொன்னுலகம்; இதை அடைய மக்கள் இழக்கப் போவது அடிமைச் சங்கிலிகளை மட்டும்தான் என்று மார்க்ஸ் கூறினார்.
குறிப்பாக, ஐரோப்பாவில் தொழிலாள வர்க்க நலன்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடினார். பிரெஞ்சுப் புரட்சியை நடத்த பிரான்ஸ் சென்றார். அயர்லாந்து விடுதலைக்காக பிரிட்டன் சென்றார். போலந்து தனிநாடாக விடுதலை பெற ஜெர்மனிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாம் கொழுப்பதற்காக ஆசிய நாடுகளையும் ஆப்பிரிக்க கண்டத்தையும் முதலாளியம் கொள்ளையடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தார். அந்த மக்கள் காலனியாதிக்கத்தை தூக்கியெறிய வேண்டும் என்று முழங்கினார்.
குறிப்பாக, இந்தியா குறித்தும், சீனா குறித்தும் மர்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதினர். பல் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து நவீன தொலை தொடர்பு வசதிகள் இன்றியே இந்திய நிலமைகள் குறித்துத் துல்லியமாக கணித்தது இன்றும் வியப்பளிக்கக் கூடியது.

பிரடரிக் ஏங்கல்ஸ் பற்றிப்பேசாமல் மார்க்ஸ் குறித்துபேச முடியாது. மார்க்சியத்தை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் போராட்டங்களிலும் இருவரும் இணைந்து இயங்கினர். பல சந்தர்ப்பங்களில் தங்களுக்குள் வேலைப்பிரிவினை செய்துகொண்டு இயங்கினர். மார்க்ஸ் துணைவியார் ஜென்னியும், நண்பர் ஏங்கல்ஸும் இல்லையென்றால் மார்க்ஸ் இவ்வளவு பணிகள் ஆற்றியிருக்க முடியாது.

தங்கள் கடைசிமூச்சுவரை மனிதகுல விடுதலைக்காகப் போராடினர். இவர்களின் சிந்தனைகளை மாமேதை லெனின் ரஷ்யாவில் நிறைவேற்றிக் காட்டினார். வளர்ந்த நாடுகளிலேயே முதலில் தொழிலாளி வர்க்கப் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் – ஏங்கல்ஸ் கணித்தனர். ஆனால், மிகவும் பின் தங்கிய நாடான ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கப் புரட்சியை லெனின் நடத்திக்காட்டினார். ரஷ்ய மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை லெனின் கட்டமைத்ததே ரஷ்யப்புரட்சி வெற்றிக்கு காரணமாகும். ரஷ்யப்புரட்சியின்  அலைகள் உலகம் முழுவதையும் தட்டி எழுப்பியது. ’ஆகா’வென்று எழுந்த ரஷ்யப்புரட்சி உலகளாவிய கலைஞர்களையும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் எழுச்சி கொள்ளச் செய்தது.  இதற்கு முன் எப்போது மில்லாத வகையில் பல மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் நாடுகளின் புரட்சிக்குப் பூபாளம் பாடினர். காலம் காலமாக தங்கள் கால்களைப் பிணைத்திருக்கும் அடிமைச்சங்கலிகள் இனி நொறுங்கும் என்று அடிமைப்பட்டுக்கிடந்த மக்கள் நம்பினர். ஒருபக்கம் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளிகள்  கிளர்ந்தெழுந்தனர் என்றால் மறுபக்கத்தில் இந்தியா போன்ற காலனி நாடுகளின் மக்கள் விடுதலைப் போரில் தீவிரமாக இறங்கினர்.
இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் முதல் உலகப் போரால் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்குள் முரண்பாடுகள் முற்றின. இப்போது போட்டிக்கு அமெரிக்காவும் இணைந்துகொண்டது. இந்த நெருக்கடி இரண்டாவது உலகப் போரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஒரு பக்கம் அடிமை நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி சலுகைகளாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டாலும் அச்சுறுத்திக்கொண்டிருந்த உலகப்போர் வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைத்துக் கொண்டிருந்தது.

இத்தகைய புதிய சூழ்நிலைகளின்கீழ் மார்க்சியத்தை பயிலும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் பிராங்க்பர்ட் பள்ளி மார்க்சியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜார்ஜ் லூக்காஸ், அடர்னோ, ஹெர்பர்ட் மார்க்வஸ் வால்டர் பெஞ்சமின், எரிக் பிராம், ஹெபர்மாஸ் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். மார்க்சிய கோட்பாட்டின் முக்கிய கூறுகளில் ஒன்றான அடிக்கட்டுமானம் மேல்கட்டுமானம் குறித்த புதிய சிந்தனைகளை உருவாக்கினர். இவற்றில் பண்பாட்டுக்கூறுகளுக்கும் சமூக உளவியலுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினர். அமைப்பியல்வாத மார்க்சியர்களில் அல்தூசர், பூக்கோ, லீகார்ட் முக்கியமானவர்கள். 
மார்க்சியத்துக்கு மாற்றாக இருண்மை வாதம் (எக்சிஸ்டென்சியலிசம்) போன்ற சிந்தனைகளும் உருவாயின. இவற்றின் பகுதி உண்மைகளால் கவரப்பட்ட மார்க்சிய வாதிகள் அதனூடாகவும்  சிந்திக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் உலகம் முழுவதையும் துவம்சம் செய்தன. இனவெறிகொண்ட பாசிஸ்ட்டுகளின் கொடூர கரங்களுக்குள் வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சீட்டு கட்டுகள் போல் சரிந்தன. ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால் உலகம் முழுவதும் சுடுகாடாக ஆகியிருக்கும். சோவியத் செஞ்சேனை இதனை முறியடித்தது. இதற்கான பெருமைகள் ஜோசப் ஸ்டாலினைச் சாரும்.
ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி அமைந்ததிலிருந்தே உலக முதலாளிய வர்க்கம் அதை சீர்குலைக்க ஏராளமான சதி திட்டங்களை செய்துவந்தன. புதிய சோவியத் அரசுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தன. அதை மீறி உதவி செய்யும் நாடுகள் அச்சுறுத்தப்பட்டன. தமது சொந்தக் கரங்களாலேயே புதிய ரஷ்யாவை மக்கள் உருவாக்கினர். வளர்ந்த நாடுகள் 200 ஆண்டுகளில் அடைந்த அறிவியல் வளர்ச்சியை ரஷ்யா 30 ஆண்டுகளில் சுய முயற்சியால் எட்டியது.
அதே நேரத்தில் உள்நாட்டில் ஸ்டாலினுக்கு எதிரான குரல்கள் ஒலித்தன. கட்சி, ஆட்சி இரண்டிலும் ஸ்டாலின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினர்.
நாஜிகள் வீழ்ச்சியைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவில் ஜெர்மனி (கிழக்கு), போலாந்து, ருமேனியா, செக்கஸ்லோவிக்கியா, யுக்கோஸ்லேவிக்கியா ஆகிய நாடுகள் விடுதலை அடைந்து ஒரு  சோஷலிச முகாம் உருவானது.
இது சமாதான சகவாழ்வு என்ற அதாவது ஆயுதப்புரட்சி அல்லாமல் ஆட்சி மாற்றம் என்ற புதிய பார்வைக்கு வழி வகுத்தது. இதைத் தொடர்ந்து உலக கம்யூனிச இயக்கத்துக்குள் முரண்பாடுகள் எழுந்தன.
அதே காலத்தில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது. தொடர்ந்து பல நாடுகள் விடுதலை அடைந்தன.
1949ல் சீனப் புரட்சி வெடித்தது. ரஷ்யாவது சிறிதளவாவது தொழில்வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் முழுக்க விவசாயிகளைக் கொண்டிருந்த சீனாவில் மாவோ புரட்சியை நடத்திக் காட்டினார். அறிவியல் தொழில்நுட்பங்களில் பின் தங்கியிருந்த புரட்சிகர சீனத்துக்கு வழக்கம்போல வளர்ந்த நாடுகள் தடைகள் விதித்தாலும் சீன மக்கள் தமது சுய முயற்சியில் அனைத்து அறிவியல் துறைகளிலும் சாதனை படைத்தனர்.
இப்போது உலகில் அமெரிக்கா தலைமையில் முதலாளிய முகாம் ஒன்றும் சோவியத் ரஷ்யா தலைமையில் சோஷலிசமுகாம் ஒன்றும் வலுவாக முன்னேறின. புதிதாக விடுதலையடைந்த இந்தியா போன்ற நாடுகள் ஜனநாயகப்பாதையில் சென்றன. இவற்றுக்கும் வளர்ந்த நாடுகள் கைகொடுக்க மறுத்த நிலையில் சோஷலிச நாடுகள் முன்வந்தன. இந்தியா தலைமையில் அணிசேரா நாடுகள் என்ற மூன்றாவது முகாம் உருவானது. இப்போது உலகம் மூன்று முகாம்களாக மாறியது,
இக் காலகட்டத்திலேயே கம்யூனிச இயக்கங்களுக்குள் முரண்போடுகள் முற்றின. இன்னொரு பக்கத்தில் தென் அமெரிக்கக் கண்டத்திலும் கிழக்காசியாவிலும் புரட்சிகள் வெடித்தன. கியூபா, வியத்நாம், கொரியா நாடுகளில் சோஷலிச ஆட்சிகள் அமைந்தன. மற்ற நாடுகளில் புரட்சிகள் கொடூரமாக நசுக்கப்பட்டன. வியத்நாம், கொரியா நாடுகளை அமெரிக்கா பிளந்தது. வியத்நாம் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தது.
ஆயிரம் முரண்பாடுகள், பின்னடைவுகள் கூறப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டு உலகில் ரஷ்ய, சீனப்புரட்சிகள் சாதித்தது ஏராளம். ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம், ஜெனிவா சாசனங்கள் உருவாயின. உலக அமைதி, ஜனநாயகம், வாக்குரிமை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், ஆண்-பெண் சமத்துவம், இன, மொழி ஒதுக்கல்களுக்கு எதிர்ப்பு போன்ற மனித உரிமைகள் எல்லாம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளாயின. இவற்றில் சோஷலிச முகாமின் பங்களிப்பு குறிப்பாக சோவ்யத் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, மூலதனத்தின் ஏகபோக வளர்ச்சி சோஷலிச முகாமால் சிறிதாவது கட்டுப்படுத்தப்பட்டது என்றுதான் கூற வேண்டும். வின்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட அறிவியல் துறைகளிலும் ராணுவ ரீதியாகவும்  சோவியத் ரஷ்யா வலுவாக உயர்ந்ததால் இனி போர்கள் மூலமோ நாடு பிடிப்பதன் மூலமோ கொள்ளையடிக்க முடியாது என்ற நிலை வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டது. குறிப்பாக, மூன்றாவது உலகப்போர் மூள்வதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட புதிய சூலலால் மூலதன நாடுகள் உள் நாடுகளிலும் வெளி நாடுகளிலும் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. உள் நாடுகளிலும் நெருக்கடிகளைச் சந்திக்க சமூக பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களால் மக்கள் நல அரசாக காட்டிக்கொண்டது. வெளியே இனியும் காலனியாக்கமும் பகிரங்கக் கொள்ளையும் சாத்தியமில்லை என்பதால் சிறிய நாடுகளுக்கிடையில் போர்களைத் தூண்டுதல், நாடுகளைக் கூறுபோடுதல், மதம், மொழி, இனம் ரீதியாக உள் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி மத அடிப்படைவாதம், இன வாதம் மொழிவாதம் உள்ளிட்ட தீவிரவாதத்தை வளர்த்தல் மூலம் மூன்றாம் உலகநாடுகளின் அரசுகளைப் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்தும் கொள்கைகளை அமல்படுத்தியது.
மறுபக்கத்தில் சோஷலிசக் கூடாரமும் கலையத் தொடங்கியது. உலக கம்யூனிச இயக்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாடுகள் ஒரு பக்கமும் ஏகாபத்திய உளவு அமைப்புகளின் சதி நடவடிக்கைகள் ஒருபக்கமும் என ஏற்பட்ட பின்னடைவு 1980களின் இறுதியில் சோஷலிச முகாம் என்ற ஒன்றையே இல்லாமல் ஆக்கியது. …
இப்போது உலகம் ஒரே முகாமாக ஆனது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவானது.  இதுவரை கம்யூனிசத்துக்கு எதிராக, முனகிக்கொண்டிருந்தவர்கள்கூட இப்போது கம்யூனிசம் ஒழிந்து விட்டது என உரக்கக் கூறினர். முதலாளியமே உச்சக்கட்டம்; அதற்கும் மேல் சோஷலிசம் என்பது சாத்தியம் இல்லை என்று முதலாளிய பொருளியலாளர்களும் கோட்பாட்டாளர்களும் கூறினர்.
இத்தாலியில் முசோலினியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடிய இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி கிராம்ஷி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு கடும் சித்ரவதைகளுக்கு ஆளாகி சிறையிலேயே உயிரிழந்தார். இவர் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய ரகசியக்குறிப்புகள் அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின்னர் வெளியானது.
நவம்பர் புரட்சிக்குப் பிறகான உலக அரசியல், பொருளாதார, சமூக நிலைகளை ஆராய்ந்து அவர் எழுதிய குறிப்புகள் மார்க்சியத்தை காலத்துக்கு ஏற்ப செழுமைப்படுத்த உதவியது.
தொழிற்புரட்சியின் பலன்களை நூறாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த மூலதனம் தமக்கு எதிரான புரட்சிகளின் அனுபவங்களையும் உள்வாங்கி ஆட்சி, அரசு, நிர்வாகம் ஆகிய தளங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் சமூக மேற்கட்டுமானங்களிலும் அடிக்கட்டுமானங்களிலும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை ஆராய்ந்தார். குறிப்பாக, குடிமைச் சமுதாயம், நீதிமன்றம், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு குறித்து நுட்பமாக ஆய்வுசெய்த கிராம்ஷி பல சமூக விழுமியங்களை முன் வைத்தார்.
நேரடி வர்க்க அரசியல், விவசாயிகள் பிரச்சனை இவற்றுடன் இனம், மொழி, வட்டாரம் சார்ந்த நலன்கள், அடையாளங்களுக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்கும் குடிமைச் சமூகங்களின் பொறுப்புகளுக்கும் கல்வியின் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தன்மை வளரத்தொடங்கியது.
1990களின் தொடக்கத்தில் இருந்தே உலகப்பொருளாதாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் வரத்தொடங்கியது. அதுவரை பல சுற்றுக்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த காட் பேச்சுவார்த்தைகள் புதிய வடிவத்தில் சுறுசுறுப்பாக நடந்தன. உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் ஏழை நாடுகளை அமெரிக்கா மிரட்டிப் பணிய வைத்தது. ஒவ்வொரு நாடும் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தமது சுயசார்பை அமெரிக்காவிடம் அடமானம் வைக்க நிர்பந்திக்கப்பட்டது. இவ்வாறு கையெழுத்திட்ட நாடுகளில் நீதிமூலதனம் பாய்ந்தது. இதில் இந்தியாவும் அடக்கம். இது புதிய காலனியம் என்று அழைக்கப்பட்டது.
இந்த புதிய காலனியத்தை ஏற்காத நாடுகள் பயங்கரவாத நாடுகள் என்ற முத்திரை குத்தப்பட்டன. ஜனநாயகம், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயர்களில்  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக்குழு ஆதரவுடன் இந் நாடுகள் மீது அமெரிக்க நேரடியாகவே நாடக நடவடிக்கைகள் மேற்கொண்டன.
இதே காலத்தில், அமெரிக்காவின் காலடியில் கிடந்த தென் அமெரிக்காவில் புதிய இடது அலை எழுந்தது. இந்த அலை பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் பரவி வருகிறது.
முதலாளியம் எவ்வளவுதான் தொடர்ந்து முன்னேறினாலும் மூலதனத்தின் பண்புகளில் ஒன்று அவ்வப்போது பொருளாதார மந்தம் எனும் அஜீரணத்தால் பாதிக்கப்படுவதும் பின்னர் பெரும்பசியுடன் சுரண்டல்களை அதிகப்படுத்துவதும்தான். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் மிகக் கடுமையானது. இந்த மந்தம் குறித்துதான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது. இதற்கு மருந்து தேடித்தான் மார்க்ஸின் மூலதனத்தைத் தேடித் தேடிப் படித்தனர்.
படித்துப்பார்த்து மார்க்ஸ் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்சியத்தின் செல்வாக்கு அளவிட முடியாதது. ரஷ்ய புரட்சியின் தாக்கம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ்டுகள் என்ற பிரிவே உருவானது. நேரு தன்னை சோஷலிஸ்டாக அறிவித்துக்கொண்டவர். அஹிம்சை வழியில் சோஷலிசத்துக்கு அழைத்துச்செல்வதாக கூறினார். முதலாளிய பொருளாதாரத்தையும் சோஷலிசப் பொருளாதாரத்தையும் இணைத்து கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கினார்.
காங்கிரஸில் இருந்து பிரிந்த பெரியார் சோவியத் யூனியன் சென்றுவந்த பின் அதன் தாக்கத்துக்கு உள்ளானார். அண்ணல் அம்பேத்கரும் மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர்தான். அதனால்தான் ‘பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் இரட்டை எதிரிகள்’ என்றார். 
இந்தியாவில் தற்காலத்தில் மார்க்சிஸ்டுகள் அம்பேத்கரையும் பெரியாரையும் ஆழமாகக் கற்கத்தொடங்கியுள்ளது போலவே அம்பேத்காரியர்களும் பெரியாரியர்களும் மார்க்ஸை நுட்பமாகக் கற்கத் தொடங்கியுள்ளனர்.
ஏடறிந்த காலத்தில் இருந்து உலக அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் குறித்து மார்க்ஸும், ஏங்கல்ஸும் உருவாக்கிய கணிப்புகள் இன்று அறிவியல்பூர்வமாக நிரூபனமாகியுள்ளன. அதேபோல்தான் மூலதனனத்தின் வளர்ச்சி குறித்த மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் கூறிய கணிப்புகள் இன்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.  மார்க்ஸின் உடல்தான் கல்லறைக்குள் உள்ளது. அவரது சிந்தனைகளுக்கும் அழிவில்லை.

-நன்றி: விகடன் இயர் புக் 2018